Skip to main content

திவ்யப் பிர’பந்தம்’ வெளியீடு

 திவ்யப் பிர’பந்தம்’ வெளியீடு 

இன்று ஸ்ரீராமானுஜரின் 1004 திருநட்சத்திரம். 

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்*- ஈன்ற
முதல்தாய் சடகோபன்* மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்.

என்று நம் அமுதத் திருவாய் ஈரத் தமிழினான சடகோபன் திருவரங்கன் மேல் பாசுரங்களை சொல்லச் சொல்ல தமிழ் சொற்கள் எல்லாம் ஆழ்வாரின் திருவாக்கில் வர வரிசையில் நின்று பணி செய்யத் துடித்தன. நம்மாழ்வாரே இதை “சொல் பணி செய் ஆயிரத்துள்” என்கிறார். இவரிடம் பணி செய்ய கொடுப்பினை இல்லாத சொற்கள் எல்லாம் ‘ஐயோ! நம்மாழ்வார் திருவாக்கில் வரமுடியவில்லையே என்று ஏங்கி அழுதனவாம். 

ஆழ்வாரின் திருவாக்கில் வந்த அந்த ஈரச்சொற்களை ‘நாவினால் நவிற்று இன்பம் எய்தினார்’ மதுரகவிகள்.  நம்மாழ்வார் முதல் தாய் என்றால் அதை வளர்த்த தாய் நம் இராமாநுசன்.  

ஆழ்வாரின் ஈரச் சொற்களை ‘ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்’  புத்தகம் ஆழ்வார் ஆசாரியர்களின் அருளால் இன்று வெளியிடப்படுவதில் அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  வரும் வாரங்களில் புத்தகம் உங்களை வந்தடையும்.. 

புத்தகத்தின் கடைசியில் ’வாழி திருநாமம்’ பகுதியில் ஒரு சிறு பிழை ஏற்பட்டு.. பயப்படாதீர்கள், உடனே சரி செய்துவிட்டோம்… ! எப்படி என்று சொல்லுகிறேன். 

புத்தக வெளியீட்டுக்கு முன் ’பொன் அரங்கமென்னில் மயலே பெருக’ உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாளிடம் ஆசீர்வாதம் வாங்கலாம் என்று பெங்களூரிலிருந்து காரில் கிளம்பினேன்.

 கொளுத்தும் வெய்யில் கோவிட் என்று எங்கும் நிற்காமல் சென்ற அனுபவத்தில் எந்த சுவாரசியமும் இல்லாத காரணத்தால் பிரபந்தத்துடன் அடியேனுக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை சினிமா எடிட்டர்கள் ரஷ் காட்சிகள் தொகுப்பது போல (முடிந்த அளவு) சுருக்கமாக  தந்திருக்கிறேன். 

பெங்களூர் வந்த புதிதில் ஒருவர் தொலைப்பேசியில் அழைத்து  “என் பெயர் புஷ்பா ராகவன் உங்கள் எழுத்தின் ரசிகன். உங்களைச் சந்திக்க முடியுமா ?” என்றார். சந்தித்தேன். “உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும், ஆனால் பழைய புத்தகம் வாங்கிக்கொள்வீர்களா ? என்று அவர் கொடுத்தது ஓரு பழைய நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம். மயிலை மாதவன் பதிப்பு. (அவருடைய அப்பா பழனியில் 1943ல் 1.40 ரூபாய்க்கு வாங்கியது). 


 ‘அன்புள்ள தேசிகனுக்குச் சகல ஐஸ்வரியங்களும் பெற்று வளமுடன் வாழ திருமலையப்பன் அருள் புரியட்டும்’  என்று எழுதி அவர் கொடுத்த. இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். இந்த பதிப்பிலிருந்த சில குறிப்புகள் பதம் பிரித்த பிரபந்தம் புத்தகத்துக்கு உதவியாக இருந்தது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். 

சிறு வயதில் பெருமாள் உற்சவங்களுக்கு என் அப்பாவுடன் செல்லும் போது அங்கே பெருமாளைக் காட்டிலும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் சேவிக்கும் கோஷ்டியை ஆர்வமாக பார்த்து “ஆழ்வார்களின் சொற்கள் அவர்கள் வாயிலிருந்து எப்படி  வருகிறது பார்” என்று என்னையும் பார்க்கச் சொல்லுவார். 

அந்தச் சமயத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப் பிரபந்தத்தை நமக்கு ‘ஆராவமுதே’ என்ற பாசுரம் மூலம் மீட்டெடுத்த கதையைச் சொல்லுவார். பல முறை கேட்டிருந்தாலும் அது எனக்கு அலுக்காத கதையாக இன்றும் இருக்கிறது. சில வருடங்கள் முன் திரு.உ.வே.சா. விற்கும் இதே போல் ஓர் அனுபவம் அதே ஆழ்வார் திருநகரியில் ஏற்பட்டது என்று படித்த போது  மனக்கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. ( அதை தனியே எழுதியிருக்கிறேன்)

“கண்ணிநுண் சிறுத்தாம்பு மிக முக்கியம்”  அதைக் கொண்டு தான் நாலாயிரத்தையும் நாதமுனிகள் மீட்டெடுத்தார் என்று அதை விரும்பி பல முறை சேவிப்பார் என் அப்பா.  பொழுது போகவில்லை, தூக்கம் வரவில்லை, பேருந்துப் பயணம், க்யூவில் நிற்கும் போது இதைச் சொல்லிக்கொண்டு இரு என்பார். 

பெரியாழ்வார் கதையைச் சொல்லும் போது பல்லாண்டும், ஆண்டாளின் கதையைச் சொல்லும் போது திருப்பாவையும், திருமங்கை ஆழ்வார் கதையைச் சொல்லும் போது கலியன் எட்டெழுத்து மந்திரத்தைப் பெற்ற போது “வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்” என்று பெரிய திருமொழியை இழுத்துச் சேவித்துக் காட்டுவார். 

யார் பிரபந்தம் புத்தகம் பிரசுரித்தாலும் அவர்களுக்குக் கைப்பட கடிதம் எழுதி, மணியாடர் அனுப்பி புத்தகத்தைப் பெற்று ”நீ பத்திரமாக வைத்துக்கொள்வாய்’ என்று என்னிடம் கொடுத்த இந்தப் புத்தகங்கள் இன்றும் பல வகையில் உதவியாக இருக்கிறது. ‘The law of diminishing returns’ என்பது பிரபந்ததுக்கு செல்லுபடியாகாது

ஒரு முறை சுஜாதா திருச்சிக்கு வந்த போது “எங்க வீட்டுக்கு வரணும்... என் அப்பா உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்” என்றேன். 

“அதுக்கு என்ன வரேன்” என்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அப்பாவிடம் பிரபந்தத்தைப் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு  

“உங்கள் அப்பாவுடன் பேசியது மிக்க மனநிறைவு தந்தது” என்று என்னிடம் கூறினார். 

என் தந்தையின்  சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு பரிசாக கிடைத்தது. ஸ்ரீராம பாரதி அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு   (1998ல்)  பள்ளிக்கரணை ஜல்லடம்பேட்டைக்கு சென்று அவரை சந்தித்து அவரிடம் ”பிரபந்தம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஆசை என்றவுடன், அவர் திருப்பாவை, நித்யாநுஸந்தாநம் சந்தைமுறை ஒலிநாடாவை எனக்குக் கொடுத்து “இன்று நானே ஆரம்பிக்கிறேன்” என்று எனக்குச் சந்தை முறையில் இரண்டு பாசுரங்களை அவரே சொல்லியும் தந்தார். 
பிறகு ஸ்ரீராமபாரதியின் 25 வருட உழைப்பில் உருவான ஆங்கில உரையுடன் கூடிய பிரபந்தப் புத்தகத்தை (Sacred book) 2000ல் நாதமுனிகளின் திருநட்சத்திரம் அன்று காட்டுமன்னார் கோயிலில் வெளியிட்டார். ( இதைப் பற்றி சுஜாதாவும் எழுதியிருந்தார் ).  அதை பெற்றுக்கொள்ள மீண்டும் பள்ளிக்கரணை சென்று அவரிடம் ஆசிபெற்று வாங்கி வந்தேன். ஸ்ரீவைஷ்ணவ சமூகத்துக்கு அவர் செய்த மிகப் பெரிய கைங்கரியம் இது. சுஜாதா ஆசாரியன் திருவடி அடைவதற்கு சில வாரம் முன் பிரபந்தம் பற்றிய ஒரு குறிப்பு எழுதி அதை அடியேனுக்கு அனுப்பியும் இருந்தார். 

”திவ்ய பிரபந்தப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது கஷ்டமான காரியம். ஏ.கே.ராமானுஜன் Hymns for the Drawning என்று தேர்ந்தெடுத்த சில பாசுரங்களை அழகாகச் செய்திருக்கிறார். அவரது பின்னுரையில் பக்தி இலக்கியத்தைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்றும் இருக்கிறது. காலஞ்சென்ற ஸ்ரீராம பாரதி நாலாயிரம் பாசுரங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இரட்டை மொழி புத்தகமாக கிளேஸ் காகிதத்தில் வெளியிட்டிருக்கிறார். இது ஒன்றுதான் முழுமையான முயற்சி. இந்த ஆர்வத்தை நிச்சயம் பாராட்டவேண்டும். இதன் மறுபதிப்பு வரவேண்டும்.

நானும், சுஜாதாவும் அவர் தம்பியும் ( திரு ராஜகோபால் )  ஒரு தனிக் குழுவாகப் பிரபந்தம்பற்றி பேசிய நாட்கள் மறக்க முடியாதவை (பார்க்க கடிதங்கள் - ராஜப்பா  அவர் தம்பி ) சுஜாதா மறைந்த பின் அவர் தம்பியுடன் பிரபந்தம்பற்றி எங்களுக்குள் பல கடிதப் போக்குவரத்து நடந்தது. ஒருமுறை “கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ” என்ற ஒரு வாக்கியத்தை பற்றி நான்கு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தது நினைவிருக்கிறது.


ஒரு முறை சுஜாதாவிடம் நீங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு எளிய உரை மாதிரி எழுத வேண்டும் என்றேன். இனிமே முடியுமா என்று தெரியவில்லை என்றார். வாரம் ஒரு பாசுரம் என்று ராண்டமாக கடைசி வரை விரும்பி எழுதினார். 

திருப்பாவைக்கு 2004ல் அடியேன் எளிய தமிழில் எழுதியபோது அதைப் பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நான் படிக்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு என் அப்பா “எவ்வளவு புத்தகம்  படித்தாலும், கடைசிக் காலத்தில் பிரபந்தம் தான் உனக்குத்  துணையாக இருக்கும்” என்றார்.  இதை சுஜாதாவிடம் சொன்னபோது “என் தந்தையும் அதையே தான் எனக்கு சொன்னார்” என்றார்.

2007 நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரெயின் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புத்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.

அவருடன் 2008, பிப்ரவரி 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது. 

2007ல் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதாவைச் சந்தித்தபோது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகம் இருப்பதைக் கவனித்தேன். என்ன புத்தகம் என்று கேட்டேன். "நாலாயிர திவ்யப் பிரபந்தம். இந்தப் புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்றார். புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற முகவரியைத் தெரிந்துகொண்டு திருவல்லிக்கேணியில் அலைந்து திரிந்து வாங்கினேன். அதைப் பற்றிச் சிறு குறிப்பு ஒன்றை எழுதினேன். 

பல வருடங்கள் கழித்து, இந்த குறிப்பை பார்த்துவிட்டு ஒரு நாள் கடுகு அவர்கள் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். முதல் முறை அவரை சந்தித்த போது அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து நாலாயிரம் முழுக்க தட்டச்சு செய்து, பிழைகள் திருத்திப் புத்தகத்தைக் குறைவான விலைக்குக் கொண்டு வந்ததைப் பற்றிக் கூறி ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். அதை இங்கே தந்துள்ளேன். 

".....கத்திரி வெய்யில். உச்சி வேளை. மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தனர். வெள்ளை  வேட்டி, சட்டை. நெற்றியில் சற்று அகலமான திருமண்.  திண்டிவனம் போன்ற ஒரு சிறிய ஊரிலிருந்து வருவதாகவும்அங்கு வைஷ்ணவ சங்கம் வைத்திருப்பதாகவும்  சொன்னார்கள். எளிமையான விவசாயிகள் போல் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைச்  சங்கத்தில் எல்லாரும் சேர்ந்து படிப்பதாகச் சொன்னார்கள். எல்லாரும் பாராயணம் செய்ய ஒரே பதிப்பு புத்தகத்தை வாங்கிப்போக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

“ எத்தனை காபி?” என்று கேட்டேன்.

“ நூறு காபி.”என்றார்கள். (லேசாக எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.}

“இதன் எடை 100 கிலோ இருக்குமே. எப்படி எடுத்துக் கொண்டு போவீர்கள்?..வேண்டுமென்றால் லாரி மூலம் அனுப்பி விடுகிறேன்.” என்றேன்

“ அதல்லாம் தேவை இல்லை... நாங்கள் தலையில் தூக்கிக் கொண்டு போய்விடுவோம்.” என்றார்கள். மடியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள்.

மூன்று மூட்டைகளாகக் கட்டினார்கள். 30 கிலோ, 30 கிலோ, 40 கிலோ மூட்டைகள்.

சற்று வயதானவர்களாக  இருக்கும் இவர்கள் எப்படி இவ்வளவு கனத்தைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸைப் பிடித்து, ரயிலைப் பிடித்து ஊருக்குக் கொண்டு போகப்போகிறார்கள் என்று  எண்ணினேன்.

என் மனதில் ஓடும் எண்ணத்தை அறிந்தவர்போல் ஒருத்தர் சொன்னார்: 

”புத்தகங்களையா தலையில் தூக்கிக்கொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” என்றார். மூவரும் மூட்டைகளைத் தூக்கி தலை மீது வைத்துக் கொண்டு போனார்கள். இவர்களின் எளிமையையும், பக்தியையும், ஈடுபாட்டையும் பார்த்து என் மனம் நெகிழ்ந்தது....."

இந்தப் புத்தகம் பற்றிய சிறு குறிப்பை 2020 வருடம் மார்ச் மாதம் எழுத உடனே பலர் இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்க ஆரம்பித்தார்கள். பிரபந்தம் புத்தகம் பலரைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேன். அமெரிக்காவில் இருந்த திரு பி.எஸ்.ஆர் என்ற கடுகு அவர்களுக்கும் பலர் மெயில் அனுப்ப அவர் அடியேனுக்கு இரண்டு வரி மெயில் அனுப்பியிருந்தார். 

Dear Sir, 

Your face book post was sent by several readers and friends.
You are free to print copies under any name you prefer and sell.
More over phone.

PSR

இதைப் படித்துக்கொண்டு இருக்கும் போது அடியேனைத் தொலைப்பேசியிலும் கூப்பிட்டு “ரொம்ப  சந்தோஷம் சார். இனிமே இந்தப் புத்தகத்தின் முழுப் பொறுப்பு உங்களுடையது” என்றார் அந்த 88 வயது இளைஞர். 

அதன் பின் சில வாரத்துக்குப் பிறகு அவருக்கு உடம்பு முடியாமல் இருக்கிறது என்று கேள்விப்பட்டு அவருக்குப் போன் செய்தேன்  “நமஸ்காரம் சார்! இனிமே அவ்வளவு தான் சார். எல்லாம் முடிந்துவிட்டது!” என்ற போது,  மேலே என்ன பேசுவது என்று புரியாமல் விழித்தேன். “பிரபந்தப் புத்தகத்துக்கு எல்லா ஃபைலும் உங்களுக்கு அனுப்பிவிட்டேன் பார்த்தீர்களா ? “என்று தன் உடம்பை பற்றிப் பேசாமல் பிரபந்தம் புத்தகத்தைப் பற்றி மட்டுமே கடைசியாக பேசினார். 

இரண்டு நாளில்,  திரு பி.எஸ்.ஆர் என்கிற கடுகு ஆசாரியன் திருவடி அடைந்தார் என்று செய்தி கிடைத்து மிகுந்த வருத்தமாக இருந்தது. 

அவர் முயற்சியில் வெளிவந்த பதம் பிரித்த பிரபந்த புத்தகம் பலரைச் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளைத் மேற்கொண்டு மணக்கால் நம்பி திருநட்சத்திரம் அன்று அறிவித்த போது, பலர் விருப்பம் தெரிவித்து திக்குமுக்கு ஆடவைத்தார்கள். பங்குனி உத்திரம் அன்று அச்சுக்குச் சென்றது. உடையவர் திருநட்சத்திரம் அன்று அதை வெளியிடுவதற்கு  முன் உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாளிடம் ஆசீர்வாதம் வாங்கலாம் ஸ்ரீரங்கத்துக்கு புறப்பட்டேன். 

வழக்கம் போல் முதலில் உறையூருக்குச் சென்றேன். அர்ச்சகரிடம் “நாச்சியார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றபோது அவர் ஆசையுடன் புத்தகங்களை நாச்சியார் திருவடியில் வைத்து தாயாரின் புஷ்பம், மஞ்சள் காப்பு பிரசாதங்களைப் புத்தகம் மீது வைத்துக் கொடுத்தார். அங்கே அவதார ஸ்தலத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சந்நிதி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் மற்றும் நாச்சியார் வீற்றிருக்கும் மண்டபத்தில் புத்தகங்களை வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த போது வெய்யிலில்  பூக்களை விற்றுக்கொண்டு இருந்த பெண்மணியிடம் புத்தகங்களைக் கொடுத்து ஒரு படம் எடுத்தேன். அந்தப் பெண் முகத்தில் பூரிப்பும் மகிழ்ச்சியும் தெரிய அவள்  “இருங்க சாமி என் சார்பா புத்தகத்துக்குக் கொஞ்சம் பூக்கள் தருகிறேன்” என்று புத்தகத்தின் மீது ஆசையுடன் பூக்களை வைத்தாள். அவளிடம் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டேன். தாயார் சந்நிதி வாசலில் நண்பர் கேசவன் காத்துக்கொண்டு, தாயார் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். 


உறையூரில் அந்தப் பெண்மணி கொடுத்த பூக்களுடன் பிரபந்த புத்தகத்தை தாயாருக்கு சமர்பித்து ஆசீர்வாதம் வேண்டி நின்றேன். புத்தகம் தாயார் திருவடிப்பட்டு, அவள் மனம் உவந்து தன் ஆசீர்வாதமாகத் தாமரைப்பூக்கள், மஞ்சள் காப்பு முதலிய பிரசாதங்களை அள்ளிக் கொடுத்து அனுப்பினாள். இரண்டு தாயார் சிபாரிசுடன் நம்பெருமாள் சந்நிதிக்குச் சென்ற போது அவர் ஆசீர்வாதம் தராமல் இருந்துவிடுவாரா ?  

எல்லா ஆழ்வர்களுக்கும் பக்தியை தூண்டிய பெரிய பெருமாளை மணத்தூணைப் பற்றி நின்று ஆசீர்வாதங்களை வாங்கிக்கொண்டு  வெளியே வந்து விஷ்வக்சேனர் சந்நிதி வாசல் முன் துப்புரவு பணி செய்யும் பெண்மணியிடம் புத்தகத்தைக் கொடுத்து படம் எடுத்தேன். நம்பெருமாள் போல் அவள் முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது!


ஸ்ரீரங்கத்தில் ரங்கவிலாஸ் மண்டபத்துக்கு அருகில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதிக்குச் சென்ற போது மணி ஒன்று. பூட்டியிருந்தது. வெளியிலிருந்து சேவித்துவிட்டு, உடையவர் சந்நிதியும்  மூடியிருக்கும் என்று நினைத்து உள்ளே நுழைந்த போது உடையவர் இரண்டு கதவுகளையும் திறந்து காத்துக்கொண்டு இருந்தார். 

உடையவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு திருவரங்கம் கோதண்ட ராமர் சந்நிதிக்கு ஆண்டாள் ‘மனத்துக்கு இனியான்’ என்று கூறிய பிரபந்தப் புத்தகத்துக்கு ஸ்ரீராமருடைய திருவடி ஆசீர்வாதம் வேண்டும் என்று அர்ச்சகரிடம் கூற  “தாராளமாக” என்று ஸ்ரீராமர் திருவடியில் வைத்து அவர் விரல் இடுக்கில் இருந்த துளசிகளை எல்லாம்  திரட்டி புத்தகம் மீது வைத்து, பிறகு சீதாபிராட்டி, இளைய பெருமாள் ஸ்ரீ அனுமார் திருவடிகளில் வைத்து கொடுக்கும் போது  “நாங்கள் நாதமுனிகள் வம்சம், நாலாயிரம் கொடுத்த நாதமுனிகள் வம்சத்துக்கே நாலாயிரத்தை இன்று கொடுத்திருக்கிறீர்கள்” என்றார் வேடிக்கையாக கூற, 

அப்போது அடியேனுக்கு காட்டுமன்னார் கோயில் சென்று ஸ்ரீமந் நாதமுனிகளிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் எண்ணம் தோன்றியது. மறுநாள் காட்டுமன்னார் கோயில் புறப்பட்டேன். 

மறு நாள் காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்த்ததை கொடுத்தது.  


காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார். 


அங்கே இருந்த தீர்த்தம் ஸ்தானிகர் ( ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி ) “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்றால் நாதமுனிகளின் சந்நிதி வாசல் படியில் வைத்துச் சேவித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார். 


இவ்வளவு தூரம் வந்துவிட்டு …. புறப்படலாமா என்று பாதி மனசுடன் இருந்த சமயம் அங்கே சாந்தமாக வீற்றிருந்த ஒரு பெரியவரைக் காண்பித்து “இவர் எம்.எஸ். வெங்கடாச்சாரி இவரும் தீர்த்தம் ஸ்தானிகர் தான். பெரிய பண்டிதர், இவரிடம் புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரீநிவாசாச்சார். 

அவரிடம் புத்தகங்களைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டேன். அவர் புத்தகத்தைத் திறந்து பார்த்து “அழகாக அச்சடித்திருக்கிறீர்கள். புத்தகமே ஞானத்தின் வடிவம். இரண்டு சம்பிரதாய விஷயங்களையும் அழகாக கொடுத்திருக்கிறீர்கள். சம்பிரதாயத்தில் வித்தியாசம் இருந்தாலும், ஆழ்வார் பாசுரங்கள் எல்லோருக்கும் பொது,  அது எல்லோர் நாவிலும் தவழ வேண்டும். நாலாயிரம் பலரைச் சென்று அடைய வேண்டும் என்ற உங்கள் நோக்கம் நிறைவேறப் பல்லாண்டு” என்று ஆசிர்வதித்தார். 


அந்தச் சமயம் நாதஸ்வரம் ஒலிக்க வீர நாராயணப் பெருமாளுக்கு திருவராதனம் மங்கள ஆர்த்தி நடைபெற ஆரம்பிக்க அங்கே சென்று பெருமாளைச் சேவித்துக்கொண்டு இருந்த சமயம், நாதமுனிகளின் சந்நிதியிலிருந்து வெங்கடாச்சாரி ஸ்வாமி என் அருகே வந்து “புத்தகத்தை கொஞ்சம் கொடுங்கள் பார்த்துவிட்டுத் தருகிறேன்” என்று வாங்கிக்கொண்டு நாதமுனிகள் சந்நிதிக்குள் சென்றார். 

பெருமாள் சேவை முடிந்த பின், அவர் என்னை நாதமுனிகளின் சந்நிதிக்குள் அழைத்து “இந்த புத்தகத்தில் சிறு திருத்தம் செய்ய வேண்டும்!” என்றார்  “என்ன செய்ய வேண்டும்?”  என்றேன்.

 

அவர் புத்தகத்தைத் திறந்து கடைசியில் வாழி திருநாமம் பக்கத்தைக் காண்பித்தார். 

ஸ்ரீமத் நாதமுனிகள் வாழி திருநாமத்துக்குப் பதில் உய்யக்கொண்டார் வாழி திருநாமம் தவறுதலாக இரண்டு முறை  அச்சாகியிருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன்.

 “புத்தகம் நல்லவேளையாக இன்னும் விநியோகிக்க ஆரம்பிக்கவில்லை. நிச்சயம் சரி செய்துவிடுகிறேன். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை!” என்றேன். அதற்கு அவர்  “இது நான் சொல்லவில்லை, உள்ளே இருக்கும் நாதமுனிகள் என் மூலமாக உம்மிடம் இன்று கூறியிருக்கிறார்” என்று உள்ளே இருக்கும் நாதமுனிகளைக் கைகாட்டினார். 

அப்போது அங்கே கைங்கரியம் செய்பவர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரிடம் புத்தகத்தைக் கொடுத்து முதல் பக்கத்தில் இருக்கும் ஸ்டாம்ப் சைஸில்  நாதமுனிகள் படத்தை காண்பித்து

“இவர் பெங்களூர் வரை கார் ஓட்டிக்கொண்டு  போக வேண்டும், திருவாராதனம், கோஷ்டி எல்லாம் முடிய நேரம் ஆகும். ’நம் நாதமுனிகள்’ படத்தை அச்சடித்து நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகத்தைப் போட்டிருக்கிறார். இவருக்காக இன்று நம் நாதமுனிகள் சந்நிதியைத் திறந்து திருவடியில் இந்தப் புத்தகத்தை வைத்து கொடு” என்றார். 

“அதற்கு என்ன” என்று புத்தகத்தை அவர் என்னிடமுருந்து பெற்றுக்கொண்டு தன் தலைமீது ஸ்ரீசடாரி போல் சுமந்துகொண்டு நாதமுனிகள் சந்நிதியைத் ஒரு கையால் திறந்தார். 

அங்கே ஆழ்வார்கள் புடைசூழ ஆளவந்தார் வீற்றிருக்க, புத்தகத்தை நாதமுனிகளின் திருமடியின் மீதே வைத்து,  மங்கள ஆர்த்தி, ஸ்ரீசடாரி சாதித்து, புஷ்பம், துளசிகளை புத்தகத்துடன் கொடுத்து அனுப்பினார். 

வெளியே வந்த போது வெங்கடாச்சாரி ஸ்வாமி “இந்த திவ்ய தேசத்து பெருமாள் காட்டும் மன்னார், நாலாயிரத்தை நாதமுனிகளுக்கு காட்டிக்கொடுத்த மன்னார். இன்று  உங்களுக்கும் காட்டிக்கொடுத்துள்ளார் !” என்றார். 

பிரஸுக்கு போன் செய்து என் நண்பர் திரு ராஜன் அவர்களை தொடர்புகொண்ட போது “ஒரு நாள் வேலை, கவலைப்படாதீர்கள் சரி செய்துவிடலாம்” என்று மறுநாளே அதை செய்தும்விட்டார். ’சீலங்கொள் நாதமுனியை  நெஞ்சால் வாரிப் பருகும்’ என்பது போல பயணம் முழுவதும் நாதமுனிகளே நெஞ்சில் நிறைந்திருந்தார். 

ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் சந்நிதி அர்ச்சகர் ஸ்ரீமந் நாதமுனிகளைப் பற்றி கூற, அடியேனுக்கு காட்டுமன்னார் கோயில் செல்ல வேண்டும் என ஆவல் பிறக்க, காட்டுமன்னார் கோயில் நாதமுனிகளின் சந்நிதியிலிருந்து ஸ்ரீநிவாசாச்சாரியார்  ஸ்ரீ எம்.எ.ஸ்.வேங்கடாச்சாரி ஸ்வாமியிடன் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூற, அவர் என்னிடம் வந்து  இரண்டாவது முறையாக அடியேனிடமிருந்து  புத்தகத்தை வாங்கி பிரிக்க, அந்த அச்சுப்பிழை அவர் கண்களில் தென்பட்டு, ‘நாதமுனிகள் உங்களுக்கு கூறுகிறார்’ என்று சுட்டிக்காட்ட, அப்போது ஒருவர் அங்கே வந்து ஸ்டாம்ப் சைஸ் நாதமுனிகளின் படத்தை பார்த்து, ஸ்பெஷலாக நாதமுனிகள் சந்நிதியை திறந்து புத்தகத்தை நாதமுனிகள் திருமடி மீது வைத்து ஆசீர்வதித்ததை எல்லாம் நினைக்கும் போது 

பெருமாள்
ஒரு சிறந்த புரோகிராமர்
எந்த மொழியில் எழுதுகிறார் ? தெரியாது !
என்ன எழுதுகிறார் ? தெரியாது !
எழுதியது எப்படி இயங்கும் ? தெரியாது !
தெரிவதெல்லாம் அவுட்புட் மட்டுமே !

"திவ்யப் பிர’பந்தம்’" என்ற வார்த்தையின் உள்ளே ‘பந்தம்’ அடங்கியிருக்கிறது. அந்தப் பந்தம் திவ்வியமாக இருக்கிறது. 

இன்று ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், திருவாலி திருநகரி திருமங்கை மன்னன், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜர் ஆகியோருக்கும், அடியேனின் ஆசாரியன் 46ஆம் பட்டம் ஸ்ரீமந் அழகியசிங்கர் அவர்களுக்கும் புத்தகம் அனுப்பிவைக்கப்படுகிறது. 

பெருமாள், ஆழ்வார், ஆசாரியன் ஆசிர்வாதம் பெற்ற புத்தகம் வரும் வாரங்களில் எல்லோருக்கும் அனுப்பிவைக்கப்படும். 

- சுஜாதா தேசிகன்
18-4-2021
சித்திரை திருவாதிரை - ஸ்ரீராமானுஜர் 1004 திருநட்சத்திரம் 


பிகு: புத்தகம் பெற விரும்புகிறவர்கள் இந்த பதிவை பார்க்கவும் https://sujathadesikan.blogspot.com/2021/02/blog-post_27.html 

Comments

 1. மிக அருமை ஸ்வாமி

  ReplyDelete
 2. Excellent effort swamin. Blessed to release this book on Udayavar Thiru nakshatram.

  ReplyDelete
 3. அருமை அருமை!
  பெருமையாக இருக்கிறது தங்கள் சேவையை நினைத்து!

  ReplyDelete
 4. அருமை அருமை!
  பெருமையாக இருக்கிறது தங்கள் சேவையை நிணைத்து!

  ReplyDelete
 5. ஸ்வாமி நேரில் சஸ்பென்ஸுடன்சொன்ன நாதமுனிகள் சன்னிதான அனுபவம் உங்கள் எழுத்தில் வந்து அதனைப் படிக்கும் பேறும் பெற்றது அடியேன் பாக்கியம்.
  இளம் வயதில் சம்ப்ரதாயத்திற்காக தாங்கள் புரியும் பணியும் அடுத்த தலைமுறையினரை தங்கள் எழுத்தால் வசீகரித்து ஆட்கொள்ளும் இயல்பு எம்பெருமானாரே அளித்த கருணை.
  அத்புத அவதாரிகை.
  புத்தகம் ஏந்தி வரும் கொரியர்காரனை தேடும் மனது மால் தேடும் மனதுக்கொப்பது.
  சிறப்பு

  ReplyDelete
 6. சுவாமி...எனக்கும் இப்பொக்கிஷம் வேண்டும்....எப்படி பெறுவது?

  ReplyDelete
  Replies
  1. பதிவின் கடைசியில் லிங்க் கொடுத்திருக்கிறேன். பார்க்கவும்

   Delete
 7. When I am reading I will remember all your journey, for us you are making great effort

  ReplyDelete
 8. படிக்கும்போதே ஒருபந்தம்உண்டாகிறதே.. எல்லாவற்றையும் அவன்தானேசெய்துகொள்கிறான்.. ஒவ்வொருசிறியநிகழ்வையும்எப்படிஎல்லாம்செய்துவைக்கிறான்.. அவன் தாள் பணிந்து உய்வோமாக..

  ReplyDelete
 9. How to get a copy in Chennai swami!? Adiyen Ramanuja Dasan

  ReplyDelete
 10. How to get a copy in Chennai swami!? Adiyen Ramanuja Dasan

  ReplyDelete
 11. மிக அருமை ஸ்வாமி. ஆழ்வார்கள் ஆசார்யர்கள் அனுக்ரஹம் உங்களுக்கு பரிபூர்ணமாக உள்ளது.

  ReplyDelete
 12. மிகவும் அருமை 🙏🙏👌👌

  ReplyDelete
 13. பெருமாள்
  ஒரு சிறந்த புரோகிராமர்
  எந்த மொழியில் எழுதுகிறார் ? தெரியாது !
  என்ன எழுதுகிறார் ? தெரியாது !
  எழுதியது எப்படி இயங்கும் ? தெரியாது !
  தெரிவதெல்லாம் அவுட்புட் மட்டுமே !


  "திவ்யப் பிர’பந்தம்’" என்ற வார்த்தையின் உள்ளே ‘பந்தம்’ அடங்கியிருக்கிறது. அந்தப் பந்தம் திவ்வியமாக இருக்கிறது.

  🙏 படிக்க படிக்க கண்கள் கலங்குகிறது.
  உங்கள் பணி மிகப்பெரியது.
  புத்தகம் கைகளில் கிடைக்க காத்திருக்கிறேன்.
  -அடியேன் 🙏

  ReplyDelete
 14. சுவாமி...எனக்கும் இப்பொக்கிஷம் வேண்டும்....எப்படி பெறுவது

  ReplyDelete
 15. April 18, 2021 at 2:03 PM
  How to get a copy in Chennai swami!? Adiyen Ramanuja Dasan

  ReplyDelete
 16. நாமோ நாராயணா
  வணக்கம். ஐயா எமக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நூல் தொகுப்பு ஒன்று வேண்டும் அது சார்ந்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டுகிறேன் ஓம் நமோ நாராயணா.

  ReplyDelete
 17. அடியேன் தாசன்... எனக்கு ஒரு copy கிடைக்குமா? 🙏

  ReplyDelete
 18. எல்லாம் 'அவன்' செயல்! அவன் அருளாலே அவன் தாள் வணங்கி🙏🙏
  தங்கள் உழைப்பிற்கு மிக்க வந்தனம்.🙏🙏

  ReplyDelete
 19. ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்🙏

  மிக சிறப்பான பணி ஐயா. படிக்கும் போதே புத்தகத்தை எப்பொழுது கையில் பெறுவோம் என்ற ஆவலை தூண்டுகிறது. காத்திருக்கிறேன் ஐயா🙏

  ReplyDelete
 20. 🙏🙏 தாசன். பெருமாள் அனுக்கிரஹம் முழுதும் உங்களுக்கு இருப்பதாலேயே இது சாத்தியமாயிற்று. தந்தையின் சொல் கேட்டு வளர்ந்த தனயன், ரங்கநாதனின் (PSR) அவர் உகந்து அளித்த அனுமதியுடன் (அதுவும் நீங்கள் கேட்காமலேயே) , எல்லா பெருமாள், ஆழ்வார்கள், பெரியோர், பாகவதாள் அனுகிரங்களும் பெற்று
  பதிப்பித்து சாதனை பெற்று விட்டீர்கள். உங்கள் தாய், தந்தை, PSR, சுஜாதா அனைவரும் மேலிருந்து உங்களுக்கு அட்சதை தூவியிருப்பார்கள், நிச்சயம். அடியேன்.

  ReplyDelete
 21. எப்போது அடைவேனோ என்று இருக்கிறது

  ReplyDelete
 22. காட்டும் மண்ணார். அற்புதம்

  ReplyDelete
 23. I would like to receive this in usa . Do you ship abroad ?

  ReplyDelete
  Replies
  1. Please follow the link at the end of the post and send a mail to trust.

   Delete
 24. இந்த பதிவை வாசிக்கும் பொழுது, என் மனது தேவரீர் சென்ற இடங்கள் மனதில் வந்து சென்றது. மூன்று மாதம் முன்பு ஒரு உத்வேகம், காட்டு மன்னார்குடி சேவிக்கும் பாக்யம் கிடைத்தது. தேவரீர் எழுதிய நடையிள் சுஜாதா சுவாமிகளின் அனுகிரகம் தெரிகிறது. அவசியம் என்னோட கிரகத்தில் இருக்க வேண்டிய பொக்கிஷம். பிரதி கிடைக்க விவரம் தெரிவிக்கவும். அடியேன் தாசன். பொ. ஶ்ரீதரன், மடிப்பாக்கம்.

  ReplyDelete
 25. Great great great 🙏🙏🙏

  ReplyDelete
 26. பலர் விவரம் கேட்டிருக்கிறார்கள். புத்தகம் தேவைப்படுவோர் https://sujathadesikan.blogspot.com/2021/02/blog-post_27.html இந்த பதிவை வாசிக்கவும். நன்றி

  ReplyDelete
 27. Egarly awaiting the day to receive the thamizh vedam. Had goosebumps while reading your blog and the experience you had. Praying the almighty for your continued journey and sharing your knowledge with us. Namperumal will be with you always

  ReplyDelete
 28. இந்தப் புனிதமான பொக்கிஷத்தை அச்சில் கொண்டு வர நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை மறக்க முடியாது. ஆச்சாரியார் திருவடிகளே சரணம். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.  = அன்புடன், ராம் ஸ்ரீதர் 

  ReplyDelete
 29. Sir,
  I am not getting any mail address from the above given link. Requesting you to kindly post the mail id, which will be easy to make request for the book.
  Thanking you.

  ReplyDelete
  Replies
  1. Everything is explained in detail here https://sujathadesikan.blogspot.com/2021/02/blog-post_27.html

   Delete
 30. மிகவும் அருமை. உண்மையில் பெருமாள் ஒரு சிறந்த programmer தான். உம்மை கொண்டு எங்களுக்கு இது கிடைக்க வித்திட்டமைக்கு!! 🙏🙏🙏🙏

  ReplyDelete

Post a Comment