Skip to main content

"இப்போது, நடுவில்" சில ஆழ்வார்கள், ஆசாரியர்கள்!

"இப்போது, நடுவில்" சில ஆழ்வார்கள், ஆசாரியர்கள்!

இந்தக் கட்டுரை தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கலாம். படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். "இப்போது, நடுவில்" என்ற இந்த இரண்டு சொற்களும் எப்படி எல்லாம் இந்தக் கட்டுரையில் வருகிறது நீங்கள் கவனிக்க வேண்டும் ! 

இன்று சித்திரையில் சித்திரை நாள். ஏன் முக்கியம் ?

இன்று
ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மற்றும்
ஸ்ரீ மதுரகவியாழ்வார்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ நடாதூர் அம்மாள்

முதலில் நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம்.‘நடு செண்டர்’, ‘நட்ட நடுவில்’ என்ற வார்த்தைகளை நாம் அடிக்கடி உபயோகிப்போம்.  விழா மேடையில் ‘சீப் கேஸ்ட்’ நடுநாயகமாய் இருப்பார். நரசிம்ம அவதாரம் காலையும் இல்லாமல், இரவும் இல்லாமல் நடுவில் தான் நடந்தது. கஸ்தூரி மானின் வயிற்றின் நடுப்பகுதியில் தான் கஸ்தூரி கிடைக்கும்…

அறிவியலில் center of gravity, center for attraction, epicenter என்ற வார்த்தைகள் உங்களுக்கு நினைவு இருக்கலாம். உயிரணு நடுவில் தான் DNAவின் பெரும் பகுதி இருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘nucleus’ என்பதற்கு ‘the central and most important part of an object, movement, or group, forming the basis for its activity and growth’ என்று சொல்லுகிறது தமிழில் ‘‘உட்கரு’. எல்லா உயிர்களுக்கும் கரு மிக முக்கியம்,

திருவாய்மொழியில் முதல் பாசுரமான ”'உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்” என்ற பாசுரம் அவன் குணங்களைச் சொல்லச் சொல்ல cell multiplication மாதிரி பலவாராகப் பெருகியது என்று சொல்லலாம். ஆகத் திருவாய்மொழிக்கு உட்கரு முதல் பாசுரமே.

பன்னிரண்டு ஆழ்வார்களில் நம்மாழ்வார் உடலாகவும், ஏனைய மற்ற ஆழ்வார்களை அவயவங்கள் (அங்கங்கள்) என்பார்கள் நம் பூர்வர்கள். இந்த ஆழ்வார் தான் என் தெய்வம் வேறு தெய்வங்கள் இல்லை ‘ என்று ’கண்ணிநுண் சிறுதாம்பு’ மூலம் அடித்துச் சொன்னவர் மதுரகவி ஆழ்வார்.

மதுரகவி ஆழ்வாருடைய கண்ணிநுண் சிறுதாம்பு பிரபந்தத்தின் நடுவில் இருக்கிறது.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேசரத்தினமாலையில்

ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த
சீராரும் சித்திரையில் சித்திரைநாள் - பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்
உற்றது எமக்கென்று நெஞ்சே ஓர்

மதுரகவியாழ்வார் அவதரித்த சித்திரை மாதத்தில் சித்திரை திருநட்சத்திரம் மற்ற ஆழ்வார்கள் அவதரித்த நட்சத்திரத்தைவிட விஷேசமானது என்கிறார்.அடுத்து வருவது மிக முக்கியமான ஒன்று.

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை - ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து

திருமந்திரத்தின் மத்தியப் பதம் நம: ஜீவாத்மாக்களின் ஸ்வரூபமாகிய பாகவத சேஷத்வம் சொல்லப்பட்டிருக்கிறது ( பாகவத சேஷத்வம் = அடியார்க்கடிமை ). இதனால் தான் நம் பூர்வர்கள் ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்ய பிரபந்தங்களுக்கு நடுவிலே சேரும்படி இதை அமைத்திருக்கிறார்கள். .

திருப்பாவையின் முக்கியமான பாசுரம் நடுவில் இருக்கும் 15வது பாசுரமான ‘எல்லே இளங்கிளியே’ என்ற பாசுரம் தான். அதே பாசுரத்தில் நடுவில் வரும் ’நானே தான் ஆயிடுக’ என்ற அந்த ஒரு வார்த்தையின் மெய்ப்பொருளை உணர்ந்துகொண்டால் போதும் ஸ்ரீ வைஷ்ணவன் வேறு எதுவும் கற்றுக்கொள்ள வேண்டாம். அங்கேயும் பாகவத சேஷத்வம்( = அடியார்க்கடிமை) தான் சொல்லப்பட்டிருக்கிறது.

மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண்  சிறுத்தாம்ப்பு பாசுரத்தில் நடுவில் உள்ள பாசுரத்தைப் பார்க்கலாம்.

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாட திருக்குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே

இன்று முதல் ( இப்போது முதல் ) இனி வரும் காலம் எல்லாம் நம்மாழ்வாரின் புகழைத் துதிக்கும்படி ஆழ்வார் எனக்குக் கிருபை புரிந்தார். திருகுருகூர் தலைவரான நம்மாழ்வார் எந்தக் காலத்திலும் என்னைப் புறக்கணிக்கமாட்டார். இதனை என் அனுபவத்தால் கண்டுகொள்ளுங்கள்.

பெரியாழ்வார் ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே’ என்று நமக்காக அரங்கனிடம் கைக்குட்டை போட்டு இடத்தை ரிசர்வ் செய்துவிட்டார்கள்.

அந்தத் திருவரங்கன் “திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்” என்று காவிரிக்கு நடுவில் இருக்கிறார். அதாவது காவிரி திருவரங்கனுக்கு  இரண்டு பக்கமும் மாலைபோல இருக்கிறது. 

திருவரங்கத்திலிருந்து  திருமலைக்குச் சென்ற மாலாகாரர் அனந்தாழ்வான்.

திருவரங்கத்தில் அன்று எம்பெருமானார் காலட்சேபம். “வேங்கடத்து எழில்கொள் சோதி” என்ற பாசுரத்தைச் சொல்லும்போது அவர் கண்களில் கண்ணீர். காலட்சேப கோஷ்டியில் நூற்றுக்கணக்காக எழுந்தருளியிருந்த சீடர்களுக்கு ஏன் என்று புரியவில்லை. அதில் ஒருவர் “ஏன் கண்களில் கண்ணீர் ?” என்று கேட்க அதற்கு எம்பெருமானார் “வேங்கடத்து எழில்கொள் சோதி என்று ஆழ்வார் பாடிய இந்தத் திவ்யதேசத்தில் நித்திய கைங்கரியம் செய்ய இப்போது யாரும் இல்லையே ! என்று வருத்தமாக இருக்கிறது.. உங்களில் யாரேனுமுண்டோ ?” என்று கேட்க ”குளிரருவி வேங்கடமாகையாலே எல்லாரும் குளிருக்கு அஞ்சியும், உடையவரை விட்டுப் பிரிய மனம் இல்லாமலும்” அங்கே ஒரு அமைதி நிலவியது.

திருமலை ஸ்ரீ அனந்தாழ்வான்


அனந்தாழ்வான் எழுந்து அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றார். இது கேட்டு உகந்த எம்பெருமானார் நீரொருவரே ‘ஆண் பிள்ளை' என்று அவரைக் கொண்டாடித் தழுவியருளி விடை கொடுத்தருளினர். அனந்தாழ்வான் இப்போதே கிளம்புகிறேன் என்று கிளம்பினார் திருமலைக்கு.

உடையவர் கைகாட்டிய திசையில் சென்ற அனந்தாழ்வான், திருமலையில் புஷ்ப கைங்கரியம் செய்து மிக அழகான மாலைகளைத் தொடுப்பார். மொட்டுக்களை கட்டி அது பெருமாள் மீது சாத்தும்போது அவை மலர வேண்டும் என்பதில் குறியாய் இருப்பார். அப்படியொரு நேர்த்தியான கைங்கரியம் இவருடையது. ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் - தொடை ஒத்த துளவமும் ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற திருத்துழாய் மாலை). பெருமாளுக்கு மாலைகளை அணிவித்து அழகு பார்ப்பார்.  “அழகான மாலை! என்ன அருமையான கைங்கரியம்” என்று யாராவது பாராட்டினால் அதற்கு அனந்தாழ்வான் ’இல்லை இல்லை’ என்பது போலத் தன் இரு கையையும் காட்டி இது அடியேன் செய்தது இல்லை, இந்தப் பெருமை எல்லாம் ஸ்ரீ ராமானுஜருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பாராம்.


திருமலை ஸ்ரீ அனந்தாவன் ஸ்ரீ எதிராஜருடன்

நட்ஒரு சமயம் பெருமாளுக்கு மாலைக் கட்டிக்கொண்டு இருந்தபோது ஒருவர் பெருமாள் கூப்பிடுகிறார் என்று அவரை அழைத்தார். அதற்கு அனந்தாழ்வான் “நான் ராமானுஜ கைங்கரியத்தின் நடுவில் இருக்கிறேன். இப்போது என்னால் வர முடியாது பின் வருகிறேன்” என்று சொல்லி திருப்பி அனுப்பினார். 

ஆசாரிய பக்தியில் மதுரகவி ஆழ்வாருக்குச் சற்றும் சளைத்தவர் இல்லை அனந்தாழ்வான்.  இன்றும் அனந்தாழ்வான் பரம்பரையில் ‘அடியேன் மதுரகவி தாஸன்’ என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். திருமலையில் மதுரகவிகள், அனந்தாழ்வான் இருவரும் ஒரே சந்நிதியில் தான் எழுதருளியிருக்கிறார்கள். 

ஆசாரியர்கள் என்னும் நவரத்தின மாலையிலே நடுநாயகமாய் உள்ள மணி போன்ற பெருமையுடையவர் எதிராசர் என்கிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகன். அந்த எதிராசர் செய்த மிக முக்கியமான விஷயம் ஸ்ரீபாஷ்யம்.

ஸ்ரீராமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், ஸ்ரீபாஷயத்தை பலரிடம் கொண்டு சென்றவர். இவருடைய பேரன் நடாதூர் அம்மாள். 

தன் பேரன் நடாதூர் அம்மாளுக்கு  ஸ்ரீபாஷயம் சொல்லித்தர ஆரம்பித்தார் நடாதூர் ஆழ்வான்.  நடாதூர் அம்மாள் துடிப்புடன் பல சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தார். “எனக்கு வயதாகிவிட்டது, அதனால் நீ எங்கள் ஆழ்வானிடம் கற்றுக்கொள் அவர் தான் உன் சந்தேகங்களுக்குத் தக்க விளக்கம் சொல்லுவார்” என்று அனுப்பினார்.


ஸ்ரீ எங்கள் ஆழ்வான். திருவடியில் நடாதூர் அம்மாள்  (திருவெள்ளறை)

காஞ்சியிலிருந்து புறப்பட்டு, நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வானின் வீட்டுக் கதவைத் தட்டியபோது உள்ளேயிருந்து யார் ? என்று கேட்க அதற்கு அம்மாள் “நான் தான்” என்று பதில் கூற அதற்கு உள்ளிருந்து “நான் செத்த பின் வரவும்” என்று பதிலுரைத்தார் எங்கள் ஆழ்வான்.

குழம்பிய நாடாதூர் அம்மாள் தன் தாத்தாவிடம் வந்து கேட்க அவர் “நான்” என்ற சொல்லாமல், நான் என்ற மமதை இல்லாமல் “அடியேன்” என்று சொல்ல வேண்டும் என்று அறிவுரைத்தார்.

அம்மாளும் திரும்பச் சென்று “அடியேன் வந்திருக்கிறேன்” என்று சொல்ல எங்கள் ஆழ்வானுக்கு அபினான சிஷ்யனாக விளங்கினார் நடதூர் அம்மாள்.

குருபரம்பரையில் ஸ்ரீ ராமானுஜர் - எங்கள் ஆழ்வான் - நடாதூர் அம்மாள் என்ற வரிசையைக் காணலாம். நடாதூர் அம்மாளுக்கு ஆசாரியனாக இருந்ததால் எங்கள் ஆழ்வானை “அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர். மாணவன் பெயரில் ஆசாரியன் !

ஒரு நாள் காஞ்சி வரதாரசப் பெருமாளின் சன்னதியில் நடாதூர் அம்மாள் தம் சீடர்களுக்குக் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் சாதித்துக்கொண்டு இருக்கிறார்.

அங்கே நல்ல தேஜ்ஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறார்கள். கால்டஷேபத்தை நடதூர் அம்மாள் நிறுத்துவிட்டு குழந்தையின் அழகைப் பார்த்து “யார் இந்தக் குழந்தை ?” என்று கேட்க ”என்னுடைய மருமகன்” தான் என்கிறார் அப்புள்ளார் கூடவே இந்தக் குழந்தைக்குப் பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.

அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு, தொடர்ந்து காலட்சேபத்தை தொடர முற்படும்போது நிறுத்திய நடுவில் எந்த இடத்தில் நிறுத்தினார் என்று நினைவுக்கு வரவில்லை. அப்போது சிறுவன் உள்ளே நுழைந்தபோது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான்.  நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக் மடியில் வைத்துக்கொண்டு


நடாதூர் அம்மாள் மடியில் ஸ்வாமி தேசிகன்

 ”ஸ்ரீவைஷ்ணவ கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்” என்று ஆசிர்வதிக்கிறார். அவர் ஆசீர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

அனந்தாழ்வான் திருமலை கைங்கரியம் போல நடாதூர் அம்மாளுக்கு பெருமாள் கோயில்(காஞ்சிபுரம்) கைங்கரியம். இவருடைய கைங்கரியத்துக்கு வரதனே சர்டிபிகேட் கொடுத்தான். ஒரு தாய் தன் குழந்தைக்குப் எப்படிப் பரிவுடன் சரியான பதத்தில் பாலை ஊட்டுவாளோ அதே போலத் தேவப் பெருமாளுக்கும் பக்குவமாக இளம் சூடான பாலமுது சம்பர்ப்பிக்கும் சேவை செய்தார். “எனக்குத் தாய் தந்தை கிடையாது ஆனால் நீர் என் தாய் போல் என்னைக் கவனித்துக்கொள்கிறீர்” என்று தேவ பெருமாள் இவரை ”அம்மாள்” என்று அழைத்தார். அதனால் இவருக்கு ‘நடாதூர் அம்மாள்’ என்ற திருநாமம்.


ஆழ்வார்கள் வரிசையில் நடுநாயகமாகத் திகழ்பவர் குலசேகரப் பெருமாள். ஒரு புறம் முதல் மூன்று ஆழ்வார்கள், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் (அதில் மதுரகவியும் அடக்கம்) என்ற ஐவர், மறுபுறம் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி, திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் என்ற ஐவர். 


குலசேகர ஆழ்வார் திருமார்பிக்கு நடுவில் திகழும் கௌஸ்துப மணியின் அம்சம்.  ஜீவாத்மாக்கள் கௌஸ்துப மணியாகத் திகழ்கிறார்கள். பெருமாள் தாயார் வசிக்கும் இடத்தில் நமக்கும் இடம் கொடுத்திருக்கிறார்.


திருமலை அனந்தாழ்வானுக்கு ஸ்ரீ ராமானுஜர் தானுகந்து அளித்தது

மதுரகவி ஆழ்வாருக்கு  நம்மாழ்வார் தன் விக்ரகத்தைக் கொடுத்தார். அதே போல ராமானுஜர் இருந்த காலத்திலேயே அவருடைய அர்ச்சா மூர்த்தியைத் தானுகந்து அனந்தாழ்வான் பூஜிக்கக் கொடுத்தார். நடாதூர் அம்மாள் கடாக்ஷித்து நமக்குத் தேசிகனைக் கொடுத்தார். ராமானுஜர் 74 சிம்மாசனாதிபதிகளுக்கு நரசிம்மர் விக்ரகத்தைக் கொடுத்தார்.மதுரகவி ஆழ்வாருக்கு நம்மாழ்வார் கொடுத்தது அழவார் திருநகரி


நடாதூர் அம்மாள் கடாஷித்து நமக்கு அளித்த ஸ்ரீ வேதாந்த தேசிகன்

இந்த ஆழ்வார்களையும் ஆசாரியர்களையும் பற்றினால் ”கடவுளை இப்போது காட்டு, அவன் எங்கிருக்கிறான்' என்று யார் சொன்னாலும்...அவன் தூண் நடுவிலிருந்து பிளந்து நரசிம்மராக வர ரெடியாக இருக்கிறான். 

- சுஜாதா தேசிகன்
26-4-2021 

ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மற்றும்
ஸ்ரீ மதுரகவியாழ்வார்
ஸ்ரீ அனந்தாழ்வான்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் இவர்களுடைய திருநட்சத்திரம்

Comments

 1. நடுவில் ஆழ்வார்களும், ஆசார்யர்களும். அப்பப்பா!! எவ்வளவு விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். அற்புதம் ஸார்.

  ReplyDelete
 2. இருவரையும் சேர்த்து அழகான மாலை ஆக்கியுள்ளீர்.சுருங்கச்சொல்லி விளங்க வைத்தீர.ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம்.

  ReplyDelete
 3. When are you bringing out 2nd edition of 4000 prabandam pl ? Aramudhan

  ReplyDelete
 4. Radha parthasarathyMay 4, 2023 at 7:36 AM

  Arpudham🙏adiyen

  ReplyDelete

Post a Comment