Skip to main content

26. இராமானுசன் அடிப் பூமன்னவே - உய்ய செய்பவனை தேடு

 26. இராமானுசன் அடிப் பூமன்னவே - உய்ய செய்பவனை தேடு 


வானம் மப்பும் மந்தாரமுமாக சூரியன் மேகங்களுக்குள் ஒளிந்துகொண்டது.  மரங்கள் அசையாமல் இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் எங்கோ ஒரு பறவை ஒலி அந்த நிசப்தத்தைக் குலைத்தது. 

ஆளவந்தார் திருவரங்க மாநகரை நோக்கி பயணத்தில், அவர் மனம் சஞ்சலம் அடைந்திருந்தது. காரணம் என்ன என்று அறியமுடியாமல், அவர் மனம் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் மணக்கால் நம்பியிடம் இருந்தது. மனதின் வேகத்துக்குக் கால்கள் ஈடுகொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு வேகமாக நடக்க தொடங்கி,  சிஷ்யர்களை நோக்கி “சற்று வேகமாக நடக்கலாம்” என்றார்.  

ஆளவந்தாரும் அவருடைய சிஷ்யர்களும் நடந்து சென்ற காட்சி, உயர்ந்த ஜாதிக் குதிரைகள் கம்பீரமாக நடந்துசென்றது போல் காட்சியளித்தது. 

மாலை யசோதை  ’காப்பிட வாராய்’ என்று அழைத்த கண்ணன் வசிக்கும் இடமான திருவெள்ளறை வந்தடைந்தார்கள்.  திசை எல்லாம் கமழும் குருக்கத்தி மலர்கள் வாசனையைக் காற்றுடன் கலந்து வீதிகள் எங்கும் நறுமணம் சுமந்தது. நல்லோர்கள் வாழும் திருவெள்ளறையில் அன்றைய இரவு அங்கே ஒரு மண்டபத்தில் படுத்துக்கொண்டார்கள். 

அவர்கள் படுத்துக்கொண்ட அதே சமயம், சற்று தூரத்தில் இருந்த திருவரங்கத்தில் மணக்கால் நம்பி ஆளவந்தார் வருகைக்குக் காத்துக்கொண்டு இருந்தார். அவர் மேனியின் தளர்ச்சியும் சோர்வும் அவர் கண்கள் காட்டிக்கொடுத்தது. 

”அரங்கா! ஆளவந்தார் வரும் வரை அடியேனைத் திருவரங்கத்தில் வைத்திரு!” என்று பிரணவாகார விமானத்தை நோக்கி வணங்கி அழகியமணவாளனை மனதில் தாங்கிக்கொண்டு நித்திரைக்குச் சென்றார். 

நள்ளிரவு கடந்து சூரியன் உதிப்பதற்கு நில நாழிகளுக்கு முன் ஆளவந்தார் தன் சீடர்களுடன் திருவரங்கம் நோக்கி இருட்டையும் பொருட்படுத்தாமல் வேகமாக நடக்க தொடங்கினார்கள்.  விரைந்து ஓடி வந்த காவிரியே இவர்கள் நடையைக் கண்டு திகைத்து இவர்களுக்கு வழிவிட்ட அதேசமயம், திருவரங்கத்தில் மணக்கால் நம்பியின் சொப்பனத்தில் நாதமுனிகள் பிரவேசித்தார். 

கைகூப்பிக்கொண்டு நம்பி “அடியேன்!” என்றார் பணிவுடன். 

அங்கே இருந்த மரப் பெட்டியைக் காட்டி “நம்பியே ! அந்தப் பெட்டியில் இருக்கும் விக்ரகத்தை நீர் ஏன் யமுனைத்துறைவரிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை ?” என்றார் நாதமுனிகள்  

நம்பியும் உடனே ”நாதமுனிகளே! காலம் கனியவில்லை என்று எண்ணியிருந்தேன். ஆனால் தற்போது அடியேனின் உடல் தளர்ச்சி ஏற்பட்டு,  யமுனைத்துறைவரிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் வருகைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறேன்!” என்றார். 

“நம்பியே! யமுனைத்துறைவரிடம் நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து நடத்துபவர் இவர் தான் என்று இந்த விக்ரகத்தை அவர் கையில் கொடுத்து, நாம் இவரைத் தேடச் சொன்னோம்! என்று கூறும்” என்றார். 

வியப்புடம் இருந்த மணக்கால் நம்பியிடம் நாதமுனிகள் 

”அனைத்து உலகமும் வாழ அவதரிக்க போகும் இந்த மாமுனியை நான் சொப்பனத்தில் தான் தரிசித்திருக்கிறேன். அவரைக் கண்கூடாக தரிசிக்கும் பாக்கியம் என் பேரனுக்குக் கிடைத்தால் என் நெஞ்சில் தேங்கியிருக்கும் குறை தீரும்! ” என்றார் 

நம்பியும் உடனே நாதமுனிகள் கூறியதை உணர்ந்து, நமக்கு எப்பேர்ப்பட்ட பேறு கிடைத்திருக்கிறது என்று எண்ணியவாறே சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்த சமயம்,  கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

தள்ளாடிக்கொண்டு மணக்கால் நம்பி கதவைத் திறக்க அங்கே சூரியனைப் போல் பிரகாசித்தார் ஆளவந்தார். தன் குரு மணக்கால் நம்பியைப் பார்த்த சந்தோஷத்தில் கீழே விழுந்து வணங்கினார். 

மணக்கால் நம்பி பூரிப்புடன் ”ஆளவந்தாரே! உம் திருப்பாட்டனார் இப்போது தான் அடியேனின் சொப்பனத்தில் சேவை சாதித்து உமக்கு ஒரு வார்த்தையை விண்ணப்பம் செய்யச் சொல்லி அடியேனை நியமித்தர். சொப்பனத்திலிருந்து முழித்தவுடன் நீர் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தீர்!” என்றார். 

அது என்ன வார்த்தையாக இருக்கும் என்று ஆளவந்தார் யோசிக்க, நம்பி “நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து நடத்துபவரை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும்! என்ற வார்த்தை தான் உம் திருப்பாட்டனார் கூறியது!” என்றார் 

ஆளவந்தார் யாரை எப்படி தேடுவது என்று புரியாமல் விழிக்க,  மணக்கால் நம்பி மெதுவாக மரப் பெட்டி இருக்கும் திசை நோக்கி நடந்து சென்று, அதைத் திறந்தார். அதிலிருந்து விக்ரகத்தை எடுத்து அதன் மீது போர்த்தியிருந்த பட்டுத்துணியை விலக்கிய போது அதன் திருமுகத்தைப் கண்ட ஆளவந்தார் திகைத்து நின்றார். 

“யமுனைத்துரைவரே! உம் திருப்பாட்டனார் நாதமுனிகள் விரும்பிய விஷயம் இது. நம்மாழ்வாரே ’இவரே எதிர்கால ஆசாரியன்’ என்று இதை உம் பாட்டனாருக்கு பிராத்தித்தது. பவிஷ்ய ஆசாரியன்! இவரை உம் திருப்பாட்டனார் நாதமுனிகள் சொப்பனத்தில் கண்டுள்ளார். நீர் நேரில் தரிசிக்க போகிறீர்! என் குருவான உய்யக்கொண்டாரும் அடியேனும் சொப்பனத்திலும் காணவில்லை, நேரிலும் பார்க்கும் பேறும் கிட்டவில்லை. திரிஜடை சொப்பனம் பார்த்து அதை சீதாபிராட்டிக்குச் சொல்லி மன நிறைவு அடைந்தது போல நாதமுனிகள் சொல்லக் கேட்டு நாங்கள் மனநிறைவு அடைந்தோம்!” என்றார் 

ஆளவந்தார் பவிஷ்ய ஆசாரிய விக்ரகத்தைத் தன் இரு கையால் பெற்றுக்கொண்டர். அப்போது நம்பி ”இந்த மாமுனியை நீர் நேரில் தரிசிக்க போகிறீர். இவரால் நம் தரிசனம் நெடுங்காலம் நிலை நிற்க போகிறது. உம் திருப்பாட்டனார் இந்த விக்ரகத்தைத் தஞ்சமாக பற்றியிருக்க நியமித்துள்ளார். நீரும் இந்த அவதார ரகசியத்தைப் பேணிப் பாதுகாக்கவும்” என்றார் 

“உங்கள் அருளாசியுடன் இப்போதே நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து நடத்துபவனைத் தேட ஆரம்பிக்கிறேன்” என்று மணக்கால் நம்பியை வணங்கினார். 

“உன் திருப்பாட்டனாரின் ஆசீர்வாதமும் நம் அரங்கனும் உனக்குத் துணை இருப்பார்கள். இனி எனக்கு ஏதும் கவலை இல்லை.  என் மனம் நிறைவடைந்தது!” என்று வாழ்த்தினார் நம்பி. 

சில தினங்களில் மணக்கால் நம்பி ஆசாரியன் திருவடியை அடைந்தார். 

மணக்கால் நம்பியின் அருள் பெற்ற ஆளவந்தார், வைணவ நெறியை வளர்ப்பவராய், ஞானத்தில் முதிர்ச்சியை உடைய அடியார்கள் கூட்டத்துடன்  திருவரங்கத்தில் அழகுற வீற்றிருந்தார். அவர் எண்ணம் எல்லாம் அந்த மகானுபாவன் எங்கே அவதரித்துள்ளார் ? அவரை எப்படி நாம்  எங்கே தேடுவது ? என்ற சிந்தனையிலேயே இருந்தது. 

வாசகர்களுக்கு சில குறிப்புகள்: 

ஆசாரியர்கள் அவதாரம் செய்த ஆண்டு, பரமபதம் எய்திய ஆண்டு போன்றவற்றுக்கு அதிக நம் பூர்வர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.இந்தத் தொடரில் நாம் எங்கே பயணிக்கிறோம் என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வசதியாக கீழே ஓர் அட்டவணை கொடுத்திருக்கிறோம். இதில் நம் பவிஷ்யதாசாரியர் நாதமுனிகளிடமிருந்து, உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி மூலம் ஆளவந்தார் கைகளுக்கு 88 ஆண்டுகள் பயணம் செய்து வந்துள்ளது. இதற்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்துத் தான் இராமானுசன் அவதாரம். 

அடுத்த பகுதிகளில் இந்த 11 ஆண்டுகளில் என்ன நடந்தது என்று ஒரு வேகமான பயணத்துக்குக் காத்திருங்கள். 



பயணம் தொடரும்.. 

- சுஜாதா தேசிகன்
23-07-2021 
நாளை ஆளவந்தார் திருநட்சத்திரம் ஆடி உத்திராடம்

Comments