Skip to main content

ஆசாரியன்

ஆசாரியன் நமக்கு நல்வழி காட்டுபவர்கள், ஞானத்தை அளிப்பவர்களை ஆசாரியர்கள் என்று குறிப்பிடுகிறோம். ஆனால் ஆசாரியர் என்னும் சொல் மிக ஆழமான பொருளைக் குறிக்கும். 

ஆசாரியனுக்கான முதல் தகுதி அரும்பாடுபட்டு அருமறைகளையும், சாஸ்திரங்களையும் கற்று அவற்றின் நுணுக்கங்களில் தெளிவு பெற்று, ‘ஊருக்கு உபதேசம்’ என்று இல்லாமல், தான் அடைந்த ஞானத்தை அனுஷ்டாத்தினால் ஸ்திரப்படுத்தி, . இதைத் தகுதியுடையோருக்கு உபதேசித்து, பலருக்கு ஒளி தரும் கைவிளக்காக இருக்க வேண்டும். 

மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் “ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!” என்று சாதித்தார். 

இவை அனைத்தும் அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் வாழ்க்கையைப் பார்த்தால் அப்படியே பொருந்தும். 

ஓர் நவராத்திரி தினம். சேலையூர் அஹோபில மடத்தில் இருந்தேன். இரவு கிட்டதட்ட 9.45 இருக்கும். அடியேனுடைய ஆசாரியன் அனைவருக்கு நல்லாசி அருளி, அட்சதை, பிரசாதம் தந்துவிட்டு சயனத்துக்குச் சென்றுவிட்டார். 

”அடடா சேவிக்க முடியாமல் போய்விட்டதே… “ என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன். 

“ஆசாரியன் சயனத்துக்கு ( தூங்க ) சென்றிருப்பாரே.... இருங்கள்..” என்று உள்ளே சென்றார். 

கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்து “சீக்கிரம் வாங்கோ.. “ என்று அழைத்துச் சென்றார். 

உள்ளே ஜீயர் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். 

நானும், என் மனைவியும் சேவித்தோம். அவர் அடியேனையே புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். 

“மூக்குக்குக் கீழே கருப்பாக என்னது ?” என்றார். 

ஒரு நிமிடத்துக்குப் பிறகு  அவர் என் ‘மீசையை’ தான் சொல்லுகிறார் என்று புரிந்தது. 

“அது வந்து… “ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து “எடுத்துவிடுகிறேன்… “ என்று ஆசியை வாங்கிக்கொண்டு வேகவேகமாகக் கிளம்பினேன். 

“இங்கே வா” என்று கூப்பிட்டார் 

அருகே சென்றேன்

“…  நானோ சன்யாசி… இப்படி பிராமணன் மீசையுடன் வந்தால்…  நான் திரும்பப் போய் குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்…. என்னால் இந்த வயதில் இந்த நேரத்தில் இதைச் செய்ய முடியுமா ? நான் சொன்னதை… தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. சொல்ல வேண்டியது என் கடமை“ என்றார்.அஹோபில மடத்தின் ஜீயர்களை பெருமாளே காட்டிக்கொடுக்கிறான் என்பதற்கு மடத்தின் குருபரம்பரையைப் படித்தாலே புரிந்துவிடும். 

சரமோபாய நிர்ணயம் என்ற கிரந்தத்தில் இந்தச் சம்பவம் வருகிறது 

மணக்கால் நம்பி ஸ்ரீரங்கத்தில் சரமதிசையில் இருந்த போது, அவருக்குச் சொப்பனத்தில் நாதமுனிகள் தோன்றி  ”ஆளவந்தாரிடம் பவிஷ்யதாசார்ய விக்ரகத்தைக் கொடுத்து, ’நாட்டை அளித்து உய்யச் செய்பவனைத் தேடச் சொன்னேன்’ என்று சொல்லும்” என்று கூறினார். அந்தச் சொப்பனம் முடிந்தவுடன் கதவைத் தட்டிக்கொண்டு ஆளவந்தார் உள்ளே நுழைந்தார். அவரிடம்  நாதமுனிகள் கூறிய வார்த்தயை கூறிவிட்டு, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ஸ்ரீ வைஷ்ணவப் பொறுப்பைக் வழங்கிவிட்டு மணக்கால் நம்பி ஆசாரியன் திருவடியை அடைகிறார். 

இப்போது இன்னொரு சம்பவத்தைக் கொடுக்கிறேன். இதில் உள்ள ஒற்றுமையை பாருங்கள். 21.10.91ல் 45ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கராக ஸ்நயாஸாஸ்ரமத்தை ஸ்வீகரித்தார்.  18 வருடம் பாரத தேசம் முழுவதும் ஸ்ரீமாலோலனுடன் சஞ்சாரம்  பல கைங்கரியம், மங்களாசாசனம் செய்தார். பிறகு இந்த உயர்ந்த சம்பிரதாயத் தீபத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற சிந்தனையுடனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியபோது அவருக்குத் திருமேனி நோவு சாற்றிக்கொண்டது. ( உடம்பு முடியாமல் போய்விட்டது ) 

ஒரு நாள் இரவு அவருக்கு ஒரு ஸ்வாமியின் திருநாமம் தோன்றியது. யோசிக்க யோசிக்க ஸ்ரீமத்அழகிய சிங்கருக்கு இது தானாக தோன்றியது இல்லை என்று தெரிந்தது. இதை உதிக்க வைத்தது ஸ்ரீமாலோலன் என்று புரிந்துகொண்டார்.  மறுநாள் அதே ஸ்வாமியே ஸ்ரீமதழகியசிங்கரைத் தெண்டன் ஸமர்பிக்க நேரில் வந்தார். அப்போது ஸ்ரீமாலோலன், ஸ்ரீமதழகிய சிங்கர் அந்த ஸ்வாமி இவர்களுக்குள் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. சொன்னாலும் புரியாது. அந்த ஸ்வாமி தான் இன்று 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர்.

கிருமிகண்ட சோழன் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பிரச்சனை கொடுக்க,  கூரத்தாழ்வான் ஸ்ரீ ராமானுஜரைத் தப்பிக்க வைத்து, தன் கண்களை இழந்தது எல்லாம் பெருமாளின் சங்கல்பம். அதை யாராலும் மாற்ற முடியாது. ஏன் ஸ்ரீ ராமானுஜர் எல்லாம் தெரிந்த மகான் அவர் ஏன் சோழ ராஜாவுக்குப் பயந்து கொண்டு ஓட வேண்டும் தன் மந்திர வலிமையால் ஏதாவது செய்திருக்கலாமே என்று பல கேள்விகள் கேட்கலாம் ஆனால் மேல்கோட்டையில் திரு நாராயணனாக, செல்லப்பிள்ளையாக ஸ்ரீ ராமானுஜர் திருக்கரங்களால் எழுந்தருள வேண்டும் என்பது. அவனுடைய சங்கல்பம் !

2017ல் அழகிய சிங்கர் திருப்புல்லாணியிலிருந்து திரும்பும் வழியில் மதுரையருகில் சாக்குடி என்ற கிராமத்துக்கு அடிட்டர் ஒருவர் எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்க ஸ்ரீமதழகியசிங்கர் அங்கே எழுந்தருளினார். 

அங்கே கிராமவாசிகள் அனைவரும் அவரிடம் ஆசி பெற்றனர். 

“சாமி என்ன முயன்றும் பயிர் செய்ய முடியவில்லை” என்று ஒரு நிலப்பரப்பைக் காட்டி உங்கள் திருவடி பட்டால் அந்த நிலம் நல்ல விளை நிலமாக மாறும் என்று கோரிக்கை வைத்தார்கள். 

ஸ்ரீமதழகிய சிங்கர் அந்த நிலத்தருகில் சென்று இங்கே ஆறு ஏதும் உள்ளதா ? என்று வினவ, முன்பு எப்போதோ ஒரு ஆறு இருந்ததற்கான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகக் கிராமவாசிகள் கூறினார்கள். 

சற்று நேரம் கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். எல்லோரும் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கக் கண்களைத் திறந்த ஸ்ரீமத் அழகிய சிங்கர் இந்த நிலத்தடியில் ஒரு கோயில் புதைந்து கிடப்பதாக அறிவித்தார். மேலும் நிலத்துக்கு அடியில் அழகான தெய்வ திருவுருவங்கள் இருப்பதும் தமக்குப் புலப்படுவதாகக் கூறினார். மிக ஜாக்கிரதையாகத் தோண்டினால் நிச்சயம் கோயிலும், விக்ரகங்களும் வெளிவரும் என்பதை உறுதியாகக் கூறினார். அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி வழிபட்டால் கிராமம் இழந்த செல்வத்தைத் திரும்பப் பெறும் என்று கூறிவிட்டுச் சென்றார். 

இன்றைய உலகில் எது நிஜம் எது போலி என்று மக்கள் குழம்பியிருக்கப் பலர் அழகிய சிங்கர் வார்த்தையை நம்பினார்கள், அரை நூற்றாண்டுகளாக வெறும் மணல் வெளியாகப் பார்த்தவர்களுக்கு இங்கே இப்படி ஒரு கோயிலிருந்திருக்க முடியும் என்று அவர்கள் நம்பவில்லை. 

நம்பிக்கை உள்ளவர்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, நிலத்தை மிக ஜாக்கிரதையாகத் தோண்டியபோது புதையுண்ட பழைய கோயில் இடிந்த நிலையிலும், உபய நாச்சிமார்களுடன் கூடிய அழகான மஹாவிஷ்ணும், போனஸாக சக்கரத்தாழ்வாரும் கிடைத்தபோது கிராம மக்கள் மகிழ்ந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமா ? ஸ்ரீமத் அழகிய சிங்கர் இதற்கு முன் இந்தக் கிராமத்துக்குச் சென்றதில்லை. அன்று சென்றதே முதல் முறை. இருந்தாலும் அந்த இடத்துக்குச் சென்ற சில நிமிடங்களில் எவருக்கும் புலப்படாத நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நிலத்தடியில் புதையுண்ட கோயில் பெருமாள் என்று எப்படி துல்லியமாக அவரால் கூற முடிந்தது ?

பெருமாள் சாக்குடி கிராமத்தில் நிலத்துக்கு அடியில் வாசம் செய்தது போதும், என்று ஸ்ரீமத் அழகிய சிங்கரை வரவழைத்து வெளியே வந்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும் என்பது - அவன் சங்கல்பம் ! 

ஸ்ரீ ராமானுஜர் திரு நாராயண பெருமாள் வெளியே கொண்டு வந்ததை நாம் கதையாகப் படித்திருக்கிறோம் ஆனால் கண்டதில்லை. ஸ்ரீ ராமானுஜரின் சித்தாந்தத்தை நிலை நிறுத்த வந்த அழகிய சிங்கர் மீண்டும் அதைச் செய்துகாட்டினார் என்றால் மிகை ஆகாது. 

ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியர்கள் வாழ்கையில் இதுபோலப் பல அருட் செயல்கள் நடப்பதுண்டு ஆனால் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. எல்லாம் அவன் சங்கல்பம் என்று அவர்கள் அருளிச் செயல்களிலும், பூர்வாசாரியர்களின் வாக்குகளிலும் தான் ஈடுபடுவார்கள்.”நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்” என்று குலசேகர ஆழ்வார் வேண்டுவதைப் போல இன்றும் நமக்கு ஆசாரியனாக அருளிக்கொண்டு உள்ளார். 

இன்று ஆனி மகம் அடியேன் ஆசாரியன் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கரின் 66வது   திருநட்சத்திரம் 

- சுஜாதா தேசிகன்
13-07-20212019ல் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர மஹோத்சவத்தில் ’ஸ்ரீராமானுஜருடன் ஒரு நாள்’ என்று அடியேன் எழுதிய புத்தகத்தை ஆசிர்வதித்தார். 


Comments

  1. Write more examples like this only then neechan like me can understand greatness of the Azhagiya Singar 🙏

    ReplyDelete
  2. ஆச்சார்யார் திருவடிகளே சரணம்

    ReplyDelete

Post a Comment