Skip to main content

அத்தி வரதனுக்கு ஒரு சின்ன மாலை

அத்தி வரதனுக்கு ஒரு சின்ன மாலை 




சில வாரமாகவே அத்தி வரதர் பற்றிப் பல செய்திகள், படங்கள் எல்லாம் ஊடகங்களில் வரத் தொடங்கி. சக்தி, பக்தி, ஆன்மீகம் என்று கவர் ஸ்டோரிலில் வரதன் இடம்பிடித்துவிட்டார். 

விஷயம் தெரிந்தவர்கள், கல்வெட்டு, பழைய புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டி பெருமாள் திருமேனியைப் பற்றிப் பல விஷயங்களைச் சொல்லுகிறார்கள். பக்தி விஞ்ஞானிகள் அத்தி மரத்தின் தன்மை பற்றியும் அது நீரில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது பற்றிப் பேசுகிறார்கள்.  

சிலர் கல்வெட்டு என்ன சொல்லுகிறது ? கல்வெட்டில் இல்லை  என்றால் நம்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள்.  

இந்த மாதிரி எல்லாம் நாம், அதாவது ஸ்ரீவைஷ்ணவகள் பேசக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டுரை. 

தொடர்ந்து நாம் செய்தித்தாள்களில் ’சிலை திருட்டு’ அதன் மதிப்பு பல கோடி என்று தொடர்ந்து படிப்பதால் நம் மூளை பெருமாளைச் சிலையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.   

எம்பெருமான் திருக்கோயில்களில் இருக்கும் நிலை அர்ச்சை. ஆழ்வார்கள் பக்தியுடன் சேவித்ததால் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாசுரம் பாட முடிந்தது. நாம் ‘சிலை’யாகப் பார்த்தால் பக்தி எப்படி வரும் ? 

நம்பெருமாளை ஸ்ரீரங்கத்திலிருந்து காத்து ஜ்யோதிஷ்குடியில் செந்தாமரைக் குளத்தின் அருகில் பாதுகாப்பாக எழுந்தருளச் செய்தார்கள் பிள்ளைலோகாசார்யர் மற்றும் அவருடைய சிஷ்யர்கள். அப்போது திருமலையாழ்வாரின் திருத்தாயாரிடம் “நம்பெருமாளுக்கு வியர்க்கும் சற்று திருவாலவட்டத்தால்  வீசு” என்றார். அப்போது அவள்  கண்ட காட்சி - நம்பெருமாளின் திருமுகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பியிருந்தன. 

“ஸ்வாமி பெருமாளின் திருமேனியும் புழுங்குமோ ?” என்றாள்.  

அதற்குப் பிள்ளைலோகாசாரியார் 

“வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்போது” என்று ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் கூறியிருக்கிறார் என்றார். 

தொடர்ந்து ஆலவட்ட கைங்கரியம் செய்ததும் வியர்வை அடங்கியது.  

அர்ச்சை  தான் தனக்குப் பிரியமானது என்கிறார் ஆளவந்தார்(சதுஸ்லோகீ). ரஹஸ்யத்ரயஸாரத்தில் வேதாந்த தேசிகன் திருமங்கை ஆழ்வார் தம்மை பெருமாளின் விஷயத்தில் தேஹாத்மவாதியாக ஈடுபடச் செய்வார் என்கிறார். திருமங்கை ஆழ்வாரோ “நெஞ்சு உருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும்” என்றும் “பெருகயல் கண்ணீர் அரும்பப் போந்து நின்று” என்று திருநெடுந்தாண்டகத்தில் உருகிறார்.

பிள்ளை உரங்காவில்லி தாஸர் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளும்போது ஒரு கத்தியைப் பிடித்துக்கொண்டு சேவித்து வருவார். பெருமாள் திருமேனிக்கு ஏதேனும் அசைவு ஏற்பட்டால், அந்தக் கத்தியால் தம்மைக் குத்திக்கொண்டு உயிரை விட்டு விடுவதற்காகவே அப்படிச் செய்வாராம். பரிவு என்று சொல்லுவதைவிட இதைப் பொங்கும் பரிவு என்றே சொல்ல வேண்டும்.

நடாதூர் அம்மாள் பரத்வாதி பஞ்சகம் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். பெருமாளின் ஐந்து நிலைகளைப் பற்றிக் கூறுவது இது - பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை. பயப்பட வேண்டாம் எளிமையாகச் சொல்ல முயல்கிறேன்.

பரத்துவம்- வைகுண்டபதியாக இருக்கிறான். ( நாராயணனே நமக்கே )

வியூகம் - பாற்கடலில் இருந்துகொண்டு ஜகத்ரட்சகனாக இருக்கிறான்.  ( பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி ) 

விபவம் - பெருமாள் அவதாரங்களைக் குறிக்கும் ( வாமன, ராமர், கண்ணன் .. ) ( ஓங்கி உலகளந்த உத்தமன், வடமதுரை மைந்தனை, மனத்துக்கு இனியானை ) 

அந்தர்யாமி - எல்லா உயிர்களுக்குளும் இருக்கிறான் ( ஊழி முதல்வன் - மேகத்தில் நீர் மறைத்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும் அந்தர்யாமியாக உறைத்துள்ளான்; உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே) 

அர்ச்சை - எல்லாக் கோயில்களிலும் நாம் பார்க்கும் பெருமாள். ( புள்ளரையன் கோயில், உன்

கோயில்  ) 

அர்ச்சை கடைசியில் வருவதால் தாழ்ந்த நிலை என்று நினைக்க வேண்டாம். அர்ச்சை என்பது அவதாரமாகத் தான் நம் பூர்வர்கள் கொண்டாடினார்கள். அதனால் தான் அர்ச்சாவதாரம்.  

அர்ச்சாவதாரம் என்றால் எம்பெருமான் நம் அர்ச்சனையை ஏற்றுக்கொள்கிறான். ( அவனுக்கு அர்ச்சனை செய்பவர் - அர்ச்சகர் ).

“ஆழ்வார்கள் பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே” என்கிறது ஸ்ரீவசன பூஷண வாக்கியம்.

“செளலப்பியத்திற்கு எல்லைநிலம் அர்ச்சாவதாரம்” என்றும் “இதுதான் (அர்ச்சாவதாரம்) பர வியூக விபவங்கள் போலன்றிக்கே கண்ணால் காணலாம் படி இருக்கும்” என்கிறது முமுக்ஷுப்படி.  

ராமாவதாரம், கிருஷ்ணாவதாரத்தில் நாம் பெருமாளுக்குச் சென்று புஷ்பம் சேர்க்க முடியாது. ஆனால் அர்ச்சாவதாரத்தில் தேர் ஓட்டிய பார்த்தசாரதிக்கு, வெண்ணெய் திருடிய நம்பெருமாளுக்கு ஓவர் நைட் பஸ், ரயிலில் சென்று புஷ்பம் சமர்ப்பிக்கலாம்.

அவதரங்களிலேயே ராமர், கிருஷ்ணர் அவதாரங்கள் ’பூர்ண அவதாரங்கள்’ என்பார்கள். அதாவது they were complete. இத்தனைக்கும் ராமர் மட்டும் தான் தன்னுடன் எல்லோரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார், கண்ணன் தனியாகத் தான் சென்றான்.

பூர்ண என்ற சொல்லைக் கட்டிலும் பரிபூரணம் ஒரு படிமேல் பரிபூரணம் - Perfect. பரிபூரண அவதாரம் என்றால் அது அர்ச்சாவதாரம் தான். நாம் பெருமாளையே கல், உலோகம் என்று தான் நினைக்கிறோம். அர்ச்சாவதாரத்தில் பெருமாளை ஏதோ அலங்கரித்த பொம்மை இதனால் வாய் திறந்து பேச முடியாது என்று எண்ணுகிறோம். வாய் திறந்து விக்ரகங்கள் பேசலாம் என்று ஆகமங்கள் சொல்லுகிறது. ஆனால் பெருமாளுடன் பேசுவதற்கு நமக்குத் தகுதி வேண்டும். உடையவருக்கு அந்தத் தகுதி இருந்தது, அதனால் ஆண்டாள் அவரை ‘அண்ணா’ என்று அழைத்தார். 

ஸ்ரீபிள்ளைலோகாசாரியார் தனது ஸ்ரீவசநபூஷணத்தில் ஒரு சூத்திரத்தில் “அர்ச்சாவதாரத்தில் உபாதாந நிரூபணம்” அபசாரம் என்கிறார். அதாவது அர்ச்சை நிலையில் இருக்கும் திருமேனி இந்த உலோகத்தில் அல்லது பொருளில் என்று ஆராய்தல் கூடாது என்கிறார். 

பெருமாள் சிலையோ, பொம்மையோ இல்லை.  ஆண்டாள் போல அன்புடன் dating  செய்தால் உங்களுடன் பேசுவான். Carbon dating எல்லாம் அவனிடத்தில் அபசாரம். 

பூத்ததழ்வார் 

என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை

வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய்

ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்

ஆழியான் அத்தியூரான்

பாற்கடலில் இருப்பவன் தான் அத்தியூரான, அவனே என் நெஞ்சிலும் இருக்கிறான் என்கிறார். 

கூரத்தழ்வான் வரதராஜ ஸ்தவத்தில் ‘ஹஸ்தி பூஷணா’ என்கிறார். திருவாலவட்ட கைங்கர்யம் செய்த திருக்கச்சி நம்பிகள், வரதப் பெருமாளோடு தினமும் பேசினார். 

இதே பெருமாளுக்குத் தான் நம் ராமானுஜரை காத்து கொடுத்தார். 

இதே பெருமாளுக்கு தான் ஸ்ரீராமனுஜர் தினமும் தீத்த கைங்கரியம் செய்து வந்தார். ஸ்வாமி தேசிகன்  அவரின் மீது பிரேமையுடன் இருந்தார். 

அப்பேர்பட்ட இந்த பெருமாளை நாம் சேவிக்க போகிறோம் என்று நினைத்து அத்தி வரதரைச் சேவிக்கச் செல்லும் முன் அவருக்குச் சின்ன மாலை ஒன்றை எடுத்துச் செல்லுங்கள். அதன் பெயர் ‘திரு சின்ன மாலை’ ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியது.  இதற்கு எந்த அகராதியும் தேவை இல்லை ! 

ஈர் உலகைப் படைக்க எண்ணி இருந்தார் வந்தார்

எழில் மலரோன் தன்னை அன்றே ஈன்றார் வந்தார்

 மாருதம் மண் நீர் ஆகும் மாயோர் வந்தார்

வானோடு எரி தாம் ஆகும் மறையோர் வந்தார்

சூரியர் தம்முடன் துலங்கு தூயோர் வந்தார்

சுரர்களுக்கு அன்று அமுது அருள் சுந்தரனார் வந்தார்

வாரிதி சூழ் வையகம் வாழ்வித்தார் வந்தார்

வண்மையுடன் வரம் தருவார் வந்தார்

அருமறையை ஊழி தனில் காத்தார் வந்தார்

அது தன்னை அன்று அயனுக்கு அளித்தார் வந்தார்

தரும வழி அழியாமல் காப்பார் வந்தார்

தாமரையாள் உடன் இலங்கும் தாதை வந்தார்

திரு உரையாய்த் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்

திரு அருளால் செழும் கலைகள் தந்தார் வந்தார்

மருவலர்க்கு மயக்கு உரைக்கும் மாயோர் வந்தார்

வான் ஏற வழி தந்தார் வந்தார்

தாமே. அனைத்து உலகும் காக்கும் அருளாளர் வந்தார்

அனைத்துக்கும் அதிபதியாய் நிற்பார் வந்தார்

தினைத் தனையும் திருமகளை விடாதார் வந்தார்

தேசு ஒத்தார் மிக்காரும் இல்லார் வந்தார்

நினைக்க நமக்கு இன் அறிவு தந்தார் வந்தார்

நிலை நின்ற உயிர் தோன்ற நினைந்தார் வந்தார்

எனக்கு இவர் நான் இவர்க்கு என்ன இனியார் வந்தார்

எழுத்து ஒன்றில் திகழ நின்றார் வந்தார்

தாமே நாம் வணங்கத் தாம் இணங்கா நிற்பார் வந்தார்

நம்மை அடைக்கலம் கொள்ளும் நாதர் வந்தார்

நாம் எமக்கு ஆம் வழக்கு எல்லாம் அறுத்தார் வந்தார்

நமக்கு இது என்று உரையாமல் வைத்தார் வந்தார்

சேமம் எண்ணி எம்மை அன்பர்க்கு அடைத்தார் வந்தார்

செழும் தகவால் திண் சரண் ஆம் ஈசர் வந்தார்

தாம் அனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார் வந்தார்

தமக்கேயாய் எமைக் கொள்வார் வந்தார் தாமே 

உலகு எல்லாம் உள்ளே வைத்து உமிழ்ந்தார் வந்தார்

உலகு உடம்பாய்த் தாம் உயிராய் நின்றார் வந்தார்

அலைகடலாய் ஆனந்தம் அடைந்தார் வந்தார்

அளவு இல்லா அருள் ஆழிப் பெருமாள் வந்தார்

திலகம் எனும் திருமேனிச் செல்வர் வந்தார்

செழும் குணங்கள் இருமூன்று உடையார் வந்தார்

இலகு சுடர் முழு நலம் ஆம் இனியார் வந்தார்

எல்லார்க்கும் கதி ஆனார் வந்தார் தாமே 

அருளாலே விலங்கு இரண்டும் அழிப்பார் வந்தார் 

அம் சிறையைக் கழித்து அருளும் அன்பர் வந்தார்

மருள் வாரா வகை நம்மைக் காப்பார் வந்தார்

வான் ஏற வழி நடத்தி வைப்பார் வந்தார்

தெருள் ஆரும் தெளி விசும்பு தருவார் வந்தார்

திண் கழல் கீழ் வாழ நமக்கு அருள்வார் வந்தார்

பெரு வானில் அடிமை நமைக் கொள்வார் வந்தார்

பிரியாமல் காத்து அளிப்பார் வந்தார் தாமே 

அகலகிலாத் திருமகளார் அன்பர் வந்தார்

அடி இரண்டும் ஆறு ஆகத் தந்தார் வந்தார்

புகல் இல்லார் புகல் ஆகும் புனிதர் வந்தார்

பொன் உலகில் திரு உடனே திகழ்வார் வந்தார்

அகிலம் எலாம் ஆனந்தம் ஆனார் வந்தார்

அடி இணைக் கீழ் வைத்து அடிமை கொள்வார் வந்தார்

பகல் நடுவே இரவு அழைக்க வல்லார் வந்தார்

பகல் ஒன்றாய் இரவு அழித்தார் வந்தார் தாமே 

தருமன் விடத் தாம் தூது போனார் வந்தார்

தரணி பொறாத் திண் பாரம் தவிர்த்தார் வந்தார்

அருமறையின் பொருள் அனைத்தும் விரித்தார் வந்தார்

அஞ்சின நீ என்னை அடை என்றார் வந்தார்

தருமம் எலாம் தாம் ஆகி நிற்பார் வந்தார்

தாமே நம் வினை அனைத்தும் தவிர்ப்பார் வந்தார்

பரம் எனது நீ புலம்பல் என்றார் வந்தார்

பார்த்தனுக்குத் தேர் ஊர்ந்தார் வந்தார் தாமே 

வஞ்சனை செய் பூதனையை மாய்த்தார் வந்தார் 

மல்லர் மதகரி மாள மலைந்தார் வந்தார்

கஞ்சனைப் போர் கடும் சினத்தால் கடிந்தார் வந்தார்

கண் நுதல் முன் வாணன் தோள் கழித்தார் வந்தார்

வெம் சொல் தர வீடு கொடுத்து உகந்தார் வந்தார்

விலக்கு இல்லா வழி நடத்த விரைந்தார் வந்தார்

பஞ்சவரைப் பல வகையும் காத்தார் வந்தார்

பாஞ்சாலி குழல் முடித்தார் வந்தார் தாமே 

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்

 ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்

கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்

கருத வரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்

முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்

மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்

உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்

உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே 

மறைத்தலையில் இசை எழுத்தில் வணங்கும் வாக்கில் 

மந்திரத்தில் நாலு எழுத்தாம் திருநாமத்தில் 

நிறைத்து இலகு வேற்றுமையில் இரண்டாம் ஒன்றில் 

நெடுமால் தன் கீதை எலாம் நிறைந்த சொல்லில்

உறைத்தவர் கண்டு உரைத்த பொருள் ஆன எல்லாம் 

உயர் விரத அருளாளப் பெருமாள் தேசின்

திறத்தில் இயை திருச்சின்னமாலை பத்தும் 

செவிக்கு இனிது ஆம் சிற்றின்பம் இசையாதார்க்கே

பிகு: வரதராஜப் பெருமாள்  புறப்பாட்டின்போது  இரண்டு திருச்சின்னம் ஊதுவது வழக்கம், ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும்போது ஸ்ரீதேசிகனுக்கு வரதனின் அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார். அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச்சின்னம் போதும், இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.

- சுஜாதா தேசிகன் 

1.7.2019 

Comments