Skip to main content

எது சரி ?

 எது சரி ?

 ஸ்ரீவைஷ்ணவத்தில் சில  சமயம் நமக்கு எது சரி என்ற குழப்பம் வருவதுண்டு. கருத்தும், குழப்பமும்  ‘ஈகோ’வுடன் சேர்ந்தால் வேறு வினையே வேண்டாம். அடிதடி கோர்ட் கேஸ் என்று ஆட்டுவிக்கும். 

  இந்திய அரசியலமைப்பு சட்டம் வருவதற்கு முன்பே ஸ்ரீவைஷ்ணவம் இருந்திருக்கு அதனால் சட்டத்தில் தீர்வு கிடைக்காது. அப்படி கிடைக்கும் தீர்வு ஸ்ரீவைஷ்ணவத்தை ஒட்டிய தீர்வாக இருக்காது. நம் ஆசாரியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் ஆராய்ந்தால் பளிச் என்று பதில் கிடைத்துவிடும். 

சமீபத்தில் எனக்கு மிகத் தெரிந்தவர் ஒருவர் சொன்ன சம்பவம் இது. எந்த ஊர், எந்த ஆசாரியன் என்று எல்லாம் கவலைப்படாமல், என்ன நடந்தது என்பதை மட்டும் சொல்கிறேன். 
பல வருடங்களுக்கு முன், அந்த திவ்ய தேசத்தில் கும்பாபிஷேகம். யாகம் போன்ற ஏற்பாடுகள் பலமாக நடந்துகொண்டு இருக்கிறது. கோயிலில் அருளிச்செயல் கோஷ்டி திருவாய்மொழி பாசுரங்கள் சேவித்துகொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே ஓர் ஜீயர் ஸ்வாமி எழுந்தருளுகிறார். அருளிச் செயல் கோஷ்டியில் யாரும் எழுந்துகொள்ளவில்லை. ஜீயர் ஸ்வாமி கைக்கூப்பிவிட்டு சென்றுவிடுகிறார். 

கோஷ்டி முடிந்த பிறகு ஒரு விசாரம் வருகிறது. 
ஜீயர் எழுந்தருளும்போது கோஷ்டியில் இருப்பவர்கள் எழுந்துகொள்ளாதது தப்பு என்று சிலரும், அருளிச்செயல் கோஷ்டியை ஜீயர் சேவித்திருக்க வேண்டும் அதை அவர் செய்யாதது அவருடைய தப்பு என்றும் சிலர் கூறினார்கள். 

அடியேனுக்கு தெரிந்த ஒருவரிடம் கேட்டேன் அதற்கு ”அவர் கோயிலுக்குப் போகும் போது அங்கே கோஷ்டி சேவித்துகொண்டு இருந்தால் அதைத் தான் நாம் முதலில் சேவிக்கிறோம்… ஆழ்வாரின் கோஷ்டிக்கு தான் முதலிடம்” என்றார். பக்கத்தில் இருந்தவர் “ நம்மாழ்வார் திருவாய்மொழியில் தொண்டனைக் கண்டால் வணங்கு என்கிறார் .ஆசாரியன் பெருமாளுக்கு தொண்டு செய்யும் பெரிய தொண்டன் இல்லையா ?” என்றார் 
இரண்டும் பக்கமும் நியாயம் இருப்பதாக அடியேனுக்கு பட்டது. நம் ஆசாரியர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தபோது சில விஷயங்கள் கண்ணில் பட்டது. 

ஸ்ரீவைஷ்ணவர்கள் கீழே விழுந்து வணங்குவதைத் தண்டம் சமர்ப்பிப்பது என்பார்கள். தண்டம் என்றால் தடி. தடியைக் கையிலிருந்து விட்டால் எப்படிச் சாய்ந்து விழுமோ அதே போல விழ வேண்டும். அதனால் அதற்கு அந்தப் பெயர். 

உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என்
அரங்கனுக்கு அடியார்களாய்
நாத் தழும்பு எழ நாரணா! என்று
 அழைத்து மெய் தழும்பத் தொழுது
 ஏத்தி இன்பு உறும் தொண்டர் சேவடி
 ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே

ஒரு வரி விளக்கம் - பெருமாளைவிட அவர்கள் அடியார்கள் முக்கியம். பாசுரத்தில் மீண்டும் மீண்டும் விழுந்து அதனால் உடம்பில் தழும்பு என்று படிக்கும்போது ஆழ்வார் மிகைப்படுத்திக் காண்பிக்கிறார் என்று தோன்றும்.  
 
சிறியாத்தான் என்ற ஆசாரியரைப் உங்களுக்கு அறிமுகம் செய்தால் அந்தச் சந்தேகம் விலகும்.
 
சிறியாத்தான் என்பவர் பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் வாழ்ந்த ஒரு மகான். சிறியாத்தான் மிகச் சாதுவானவர். அவர் ஸ்ரீரங்கம் தெருவில் நடந்து செல்லும்போது பார்த்துப் பார்த்துப் பயந்துகொண்டு செல்வார். எங்காவது ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த ஒரு புல்லை மிதித்துவிடுவோமோ, எங்காவது ஏதாவது எறும்பை மிதித்துவிடுவோமோ என்று பயந்துகொண்டு செல்வாராம்.
 
அப்படிச் செல்லும்போது நெற்றியில் திருமண் தரித்துக்கொண்டு யார் வந்தாலும் ‘படக்’ என்று கீழே விழுந்து வணங்குவாராம். அப்படி கீழே விழுந்து விழுந்து தண்டம் சமர்பித்துக் கொண்டே பெருமாளை சேவிக்க செல்வாராம்.
 
குலசேகர ஆழ்வார் சொல்லுவது போல “மெய் தழும்ப” சேவிப்பாராம். அப்படிச் சேவிக்கும்போது அவர்மீது ஒட்டிக்கொள்ளும் மண், தூசு இவற்றை நம்மைப் போலத் தட்டி விட்டுக்கொள்ள மாட்டாராம். இப்படிச் சேவித்துக்கொண்டே இருப்பதால் அவர் உடம்பு எல்லாம் காயம்பட்டு, அவர் உடம்பு, வேஷ்டி எல்லாம் அழுக்காகி அது தான் அவர் அடையாளம். That was his identity !
 
ஸ்ரீரங்கத்தில் இன்னொரு சம்பவத்தையும் பார்க்கலாம். நம்பெருமாளைச் சேவிக்க வருகிறார் ஆட்கொண்டவில்லி ஜீயர்.
 
பெருமாளைச் சேவித்துவிட்டு வருகிறார் நஞ்சீயர். இருவரும் எதிர் எதிரே சந்தித்துக்கொள்கிறார்கள். நஞ்சீயர் யோசிக்காமல் படக் என்று கீழே தண்டம் மாதிரி விழுந்து வணங்குகிறார். உடனே அட்கொண்டவில்லி ஜீயர் நடுங்கிப் போய் 
 
 “அடியேன் ஒரு அபராதி. இவ்வளவு நாள் பகவத் சம்பந்தம் இருக்கு என்று நினைத்தது எல்லாம் பொய். பகவத் சம்பந்தம் எப்போது உறுதியாகிறது என்றால் ஒரு அடியாரைப் பார்க்கும்போது கீழே விழும்போது தான். இது தான் மெய். உம்மைப் போல எனக்குச் சட்டென்று விழத் தோன்றவில்லையே… அடியேனுக்கு முன் நீர் விழுந்துவிட்டீரே” என்று வருத்தப்பட்டாராம்.
 
அதற்கு நஞ்சீயர் அப்படி எல்லாம் இல்லை நீர் எம்பேருமானார் சிஷ்யர், மற்றவர்களுக்கு ஆசாரியராக இருக்கிறீர் என்று சமாதானம் செய்தாராம்.
 
பெரியாழ்வார் திருமொழியில்
 
நம்பனை நரசிங்கனை நவின்று
 ஏத்துவார்களைக் கண்டக்கால்
 எம்பிரான் தன சின்னங்கள் இவர்
 இவர் என்று ஆசைகள் தீர்வனே.
 
ஸ்ரீவைஷ்ணவ அடியார்களை நடந்து வருவதைக் கண்டால் சங்கம், சக்கரம் வருகிறது என்று நினைக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார். 
 
நஞ்சீயர் பட்டரை விட வயதில் மிக மூத்தவர் ஆனால் அவர் பட்டர் காலில் விழுவார். நஞ்சீயர் சன்யாசி, பட்டரோ குடும்பஸ்தர். இன்று இந்த மாதிரி இருப்பவர்களை நாம் பார்க்க முடிவதில்லை. 
 
நம் அன்பு அடியார்களிடம் செல்லாமல், பெருமாளுடன் நின்று விட்டால் அது பொய். அடியார்களிடம் செல்லும்போது தான் மெய் ! 
 
குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில்  “தேட்டு அருந் திறல் தேனினைத் தென் அரங்கனை” என்று ஆரம்பிக்கும் இரண்டாம் திருமொழி பாசுரங்கள் மிக முக்கியமானவை. ஸ்ரீரங்கத்தில் முதல் குலோத்துங்கன் ஆட்சியில் ( 1070-1112 ) ஒரு கல்வெட்டு இப்படி இருக்கிறது ”ஐப்பசி தேர்த்திருநாளிலும் பங்குனித் திருநாளிலும் தீர்த்தம் பிரசாதிதருளின அன்று இரா, திருப்புன்னைக்கீழ் [ ஸ்ரீரங்கநாத பெருமாள் ] எழுந்தருளியிருந்து ‘தேட்டருந்திறல்’ கேட்டருளும்போது” என்று கூறப்பட்டுள்ளது.
 
“தேட்டு அருந் திறல்” என்று தொடங்கும் இரண்டாம் திருமொழியில் அரங்கனின் அடியார்க்கு அடியேன் என்கிறார். அவர்களே எனக்கு உயர்நிலை. பெருமாள் திருமொழியிலேயே இந்தத் திருமொழி தான் சிறப்புமிக்க பதிகமாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் தான் என்னவோ கல்வெட்டிலும் இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 அந்தத் திருமொழி பாசுரங்கள் சிலவற்றிருக்கு ஒரு வரி பொருளைப் பார்க்கலாம். 
 
- அரங்கன் அடியார்களைக் காண்பது தான் கண்படைத்த பயனாகும். 
 - கோயில் முற்றத்தில் அடியார்களின் திருவடிகளால் ஏற்படும் சேறு என உடம்புக்கு அணிகலன். 
 - ’நாராயணா’ என்று அழைக்கும் அடியார்களை உடம்பு தழும்பேறுபடி தொழ வேண்டும். 
 - அடியார்களை நினைத்து நினைத்து உடம்பு சிலிர்க்கின்றது. 
 - அடியார்களுக்கு எப்பிறப்பிலும் அடிமை செய்ய வேண்டும்.
 
  
பாசுரங்களில் ’சேறுசெய் தொண்டர்’, ’இன்புறும் தொண்டர்’, ’காதல்செய் தொண்டர்’ ’மலையுற்றிடும் தொண்டர்’ என்று தொண்டர்களின் பெருமைகளையே ஆழ்வார் பேசுகிறார். 
 
 கடைசியாக இந்தத் திருமொழியை கற்பதால் உண்டாகும் பலனைப் இப்படிக் கூறுகிறார்
 
“சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்
 தொண்டர் தொண்டர்கள் ஆவரே”
 
அதாவது ”அடியார்களுக்கு அடியராவர்” என்பது மெய்யான பக்தி உங்களுக்குக் கிடைக்கும் என்பதாகும்.
 
 நாம் சேவிக்கும் முன் பல விஷயங்களை யோசிக்கிறோம். அவர் பிரம்மசாரியா, கல்யாணம் ஆனவரா, நம்மைவிட அவருக்கு வயது அதிகமா, அவர் ஆணா, பெண்ணா எனப் பல விஷயங்களை ஆராய்ந்து பிறகே காலில் விழுகிறோம்.
 
 ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும்போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் பழகி அவர்களை வணங்கினால் தான் நாம் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம். இது entrance test மாதிரி !
 
ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோ: 
 ஆராதனம் பரம்தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதனம்
 
எல்லா தேவதைகளை ஆராதிப்பதை காட்டிலும் விஷ்ணுவை ஆராதிப்பது சிறந்தது. விஷ்ணுவை ஆராதிப்பதை காட்டிலும் அவருடைய அடியார்களை ஆராதிப்பது அதைவிடச் சிறந்தது. 
 
"அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி ” என்று என்றோ தூக்கிய  திருவடியை நோக்கி ”பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்” என்று அவன் திருவடிக்கு ”தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது” திருவாய்மொழியை “வாயினால் பாடி மனத்தினால் சிந்திப்பது” தான் ஆராதனம்.  இதனால் பெருமாள் உள்ளம் குளிருகிறான். நம்மாழ்வாருக்கு இன்னொரு பெயர் இன்பமாரி ; திருவாய்மொழிக்கு இன்னொரு பெயர் இன்பப்பா. 
 
பெருமாளுக்கு உவப்பாக, அவனுக்கு இன்பம் பயக்கும் எது செய்தாலும் அது ஆராதனை. 
 
கணவனுக்கு உபசரித்துக்கொண்டு இருக்கும் மனைவியிடம் குழந்தை வந்தால் உடனே கணவனை உபசரிப்பதை விட்டுவிட்டு குழந்தையை உபசரித்தால் கணவனுக்குக் கோபம் வருமா ? அதுபோல நாம் அடியார்களை உபசரித்தால் பெருமாள் கோபப்படாமல், சந்தோஷப்படுவார் ! 
 
நீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுக்கும்போது இதே மாதிரி வழக்கில் முந்தைய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தது என்று பார்த்துவிட்டு அதே போலத் தான் கொடுப்பார்கள். 
 
ஆண்டாள் ”மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” என்கிறாள். அதாவது முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறாள். 
 
 ஸ்ரீவைஷ்ணவர்களின் குழப்பத்துக்கும், பிரச்சனைகளுக்குக் கோர்ட்டுக்கு சென்றால் பிறகு ஆண்டாள் சொன்னதற்கு என்ன மதிப்பு ? 

- சுஜாதா தேசிகன்
29-07-2021

Comments