எளிய உரை - அமலனாதிபிரான்(7)
கையின் ஆர்* சுரி சங்கு அனலாழியர்* நீள் வரை போல்
மெய்யனார்* துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார்**
அணி அரங்கனார்*அரவின் அணைமிசை மேய மாயனார்*
செய்ய வாய், +ஐயோ!* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே! (933/7)
வலம்புரிச் சங்கையும், தீபோன்ற சக்கரத்தையும் பொருந்தின திருக்கையையும்,
நீண்ட மலை போன்ற திருமேனியையும்,
துளசி பரிமளம் கமழும் திருமுடியும் உடைய
திருவரங்கத்துக்கு ஆபரணமாய் விளங்கும் அரங்கன்
இனிய ஆதிசேஷ படுக்கையில் மன்னியிருக்கும் மாயனின்
சிவந்த திருவாய்… ஐயோ என்ன அழகு என்ன அழகு !
என் நெஞ்சைப் பறித்துக் கொண்டது
+ஐயோ - என்று ஆழ்வார் இங்கே ஆச்சரியத்தில் கூறுகிறார். ஆழ்வார்களின் சிந்தை முழுவதும் எம்பெருமான் இருக்க அவர்கள் என்ன வார்த்தையைக் கூறினாலும் அது நாம சங்கீர்த்தனம் தான். ஐயோ என்பதும் நாம சங்கீர்த்தனம்!
கொசுறு: ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் தான். அதில் சங்கும் சக்கரமும் கிடையாது அப்படி இருக்க, திருப்பாணாழ்வாரோ திருக்கைகளில் சங்கு சக்கரம் இருக்கிறது என்று பாடியுள்ளாரே ? அது எப்படிப் பொருந்தும் ?
ஒரு முறை திருக்கோட்டியூரில் பட்டர் இருந்த சமயம், அனந்தாழ்வான் அங்கே வருகிறார். அவர் பட்டரிடம் பரமபதத்தில் பெருமாளுக்கு இரண்டு திருக்கையா ? அல்லது நான்கா ? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்குப் பட்டர் இரண்டாகவும் இருக்கலாம். நான்காகவும் இருக்கலாம் என்றார். அனந்தாழ்வான் விடவில்லை. இரண்டு திருக்கை அழகா ? நான்கு அழகா ? என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். பட்டர் விடுவாரா ? இரண்டும் அழகு தான். இரண்டு திருக்கரங்களுடன் எழுந்தருளியிருந்தால் பெரிய பெருமாள் போலக் காட்சி கொடுப்பார், நான்குடன் எழுந்தருளியிருந்தால் நம்பெருமாளைப் போலக் காட்சிகொடுப்பார்! என்று விடையளித்தார். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி இருந்தாலும் திருவரங்கனைப் போலத் தான் இருப்பார் என்பது பட்டரின் கூற்று.
கொசுறுவின் கொசுறு: பட்டர் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருந்த சமயம் தான் ’நீளாதுங்க’ என்ற திருப்பாவை தனியனை அருளினார்.
- சுஜாதா தேசிகன்
Comments
Post a Comment