Skip to main content

கோயிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள்

 கோயிலுக்கு வெளியே பிச்சைகாரர்கள்

இரண்டு வருடங்களுக்கு பின் இந்த வாரம் சென்னை வாசம்.  சில நாள் முன் ஸ்ரீ உ.வே மதுரை பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன். 

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிறு அரங்கராஜன் ஸ்வாமிகளை ஒரு மாலை சந்தித்த போது அவர் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை காலட்சேபம் செய்துகொண்டு இருந்தார். ஒரு மணி நேரம் கேட்டது இனிய அனுபவம். 

காலட்சேபத்தின் போது ’சாது ராமானுஜசாரியார் ஜீயர்’ பற்றி சொன்ன கருத்துக்கள் மிக அற்புதமானவை. 

ஜீயர் அவர்கள் கள்ளழகர் கோயிலில் துவாரபாலகர் அருகே திரிதண்டத்தை வைத்துவிட்டுத் தான் பெருமாள் சேவிப்பார் என்றார். சன்யாசம் எல்லாம் பெருமாளிடம் போகும் போது தடையாக இருக்கக் கூடாது என்று நினைப்பாராம். 

ஜீயர் ஒரு சமயம் கோயிலில் அரங்கராஜன் ஸ்வாமியிடம் “பெருமாள் யாருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார் தெரியுமா ?” என்று கேள்வி கேட்டுவிட்டு “உனக்கும், எனக்கும் இல்லை..ரயில்வே நிலையத்தில் மூட்டை முடுச்சுடன்,  பெட்டியை தலையில் தூக்கிக்கொண்டு பெருமாளைச் சேவிக்க வரும் பக்தர்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்” என்பாராம். 

இதை அவர் சொன்ன போது எனக்கு இந்த கதை ஞாபகத்துக்கு வந்தது. 

அன்று விஸ்வரூப தரிசனத்துக்கு நல்ல கூட்டம். எல்லோரும் திரை விலக ஆவலாகக் காத்துக்கொண்டு இருக்க அங்கே இரண்டு பார்வை இல்லாதவர்கள் கையில் குச்சியுடன், கண்களில் கருப்பு கண்ணாடியுடன் இருக்கிறார்கள். 

கூட்டம் பெருமாளை பார்க்கக் முண்டி அடித்துக்கொண்டு "சார் மறைக்காதீங்க..”.. என்று சொல்லி ஒருவர் முன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இருக்க. 

”சார் நீங்க இங்கே ஓரமாக இருங்க…”  என்று அந்த கண் தெரியாதவர்கள் ஓரம்கட்டப்பட்டார்கள்.

கண் தெரியாக இவர்கள் ஏன் விஸ்வரூப தரிசனத்துக்கு வருகிறார்கள் என்று கூட்டத்தில் பலருக்கு தோன்றியது. 

திரை விலக.. எல்லோரும் “கோவிந்தா கோவிந்தா” என்று கோஷம் எழுப்ப...  தீர்த்தம் பிரசாதம் வாங்கிக்கொண்டு கூட்டம் விலகியது.  

ஒரு நபர் பார்வை தெரியாதவர்களிடம் பேச்சு கொடுக்கிறார். 

“உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகிறது... ஆனால் விஸ்வரூப தரிசனத்தை உங்களால் தரிசிக்க முடிந்திருக்காது...”

“ஆமாம்.. என்ன செய்ய.. எங்களால் பார்க்க முடியவில்லை... புகை வாசனை மட்டும் தெரிந்தது”

”கூட்டத்தில் வந்து ஏன் கஷ்டப்பட்டீங்க.. கொஞ்சம் மெதுவாகக் கூட வந்திருக்கலாம்... இப்ப பாருங்க ஃபிரியா இருக்கு”

“உங்க எண்ணம் புரிகிறது... எங்களுக்குக் கண் தெரியாது... ஆனால் திரை விலகும் போது பெருமாள் எங்களைப் பார்த்திருப்பார் இல்லையா ?” 

அரங்கராஜன் ஸ்வாமி இல்லத்திலிருந்து வீட்டுக்கு வந்துக்கொண்டு இருக்கும் போது நல்ல மழையில் 100% சொட்ட சொட்டத் நனைந்துவிட்டு மடியாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நுழைந்த போது அன்ன கூட்ட மகா உற்சவம் நடந்துகொண்டு இருந்தது. 

கோஷ்டி முடிந்த பின் எல்லோருக்கும் பெரிய தட்டு ஒன்று கொடுத்துவிட்டு 

அதில் யானைக்குக்  கொடுப்பது போல ஒரு பெரிய உருண்டை பிரசாதம் கொடுத்தார்கள். ”உலகம் உண்ட பெருவாயா !” என்ற பாசுரம் தான் நினைவுக்கு வந்தது  சிறுவாயில் கொஞ்சம் போட்டுக்கொண்டு மீண்டும் பார்த்தசாரதியை சேவிக்கும் போது மாலை அரங்கராஜன் ஸ்வாமி சொன்னது போல பார்த்தசாரதி எம்பெருமான் யாருக்கோ காத்துக்கொண்டு இருப்பது பொல தோன்றியது. 

சட்டென்று வெளியே சென்று அங்கே மழைக்கு மண்டபத்துக்குள் இருந்த பிச்சைக்கார்களிடம் அடியேனுக்குக் கொடுத்த பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு மன நிறைவுடன் வீடு திரும்பினேன். 

நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்துடன் முடிக்கிறேன் 

கண்ணுள் நின்று அகலான்; கருத்தின் கண் பெரியன்

எண்ணில் நுண் பொருள்; ஏழ் இசையின் சுவை தானே

வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்

திண்ணம் என் மனத்துப் புகுந்தான்-செறிந்து இன்றே.

ஒரு மாறுதலுக்கு ஆங்கில விளக்கம் :

The Lord beyond the intellect is inside my eyes.  He is the subtle essence of the seven Svaras. The Lord of Tirupper is surrouned by jewel-mansions.  He swells and fills my heart today

- சுஜாதா தேசிகன்

31-07-2021

நேற்று ஸ்ரீ பார்த்த சாரதியை சேவித்த போது இது நினைவுக்கு வந்தது.

Comments