Skip to main content

19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்

 19. இராமானுசன் அடிப் பூமன்னவே - தமிழ் விழாக்கள்

உய்யக்கொண்டார் சற்று நேர மௌனத்துக்குப் பின் “மணக்கால் நம்பியே ! அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் கிடைத்தால் நிச்சயம் உம் ஆசை ஈடேறும்” என்றார். 

இதைக் கேட்ட மணக்கால் நம்பி “நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் சம்பந்தமும், உங்களுக்கு நாதமுனிகளின் சம்பந்தமும், அடியேனுக்குத் தேவரீர் சம்பந்தம்  கிடைத்திருக்கிறது! அதனால் அந்த மஹாநுபாவரின் சம்பந்தம் நிச்சயம் சித்திக்கும் என்று நம்புகிறேன்!” என்று உய்யக்கொண்டாரின் திருவடியில் விழுந்து வணங்கினார். 

உய்யக்கொண்டார் ”நாதமுனிகளால் நமக்கு ஆழ்வார்களின் சம்பந்தமும் கிடைத்திருக்கிறது! அவர் திருவரங்கத்தில் நிகழ்த்திய அறியச் செயல்களை கூறுகிறேன்” என்று கூற ஆரம்பிக்கச் சிஷ்யர்கள் ஆர்வமாகக் கேட்க ஆயத்தமானார்கள். நம் நேயர்களையும் உய்யக்கொண்டார் கூறிவதை கேட்க அழைக்கிறோம். 

”ஆழ்வார்களில் கடைக் குட்டியானவர் திருமங்கை மன்னன். ஆடல்மா என்ற குதிரையில் சென்று எல்லா திவ்ய தேச பெருமாளையும் மங்களாசாசனம் செய்துவிட்டு, தம்முடைய கடைசிப் பிரபந்தமான திருநெடுந்தாண்டகத்தைப் பாடத் தொடங்கினார். அதன் முடிவில் “புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே” என்று பாட அரங்கன் தம்மை மீண்டும் அழைக்கிறார் என்று திருவரங்கத்துக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்று அங்கேயே வாசம் செய்து, பல திருப்பணிகளைச் செய்துகொண்டு, சிந்தையாலும், செயலாலும் அரங்கன் திருவடிகளே தஞ்சமென்று இருந்தார். 

திருவாய்மொழியை அனுபவித்துக்கொண்டு இருந்த சமயம், நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை நன்குணர்ந்தார்.திருமங்கை ஆழ்வார். வைகுண்டத்தில் சாமகானம் கேட்கும் பெருமாள், இந்தப் பூலோக வைகுண்டத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழியின் கானத்தை கேட்பதையே உகப்பார் என்று எண்ணினார். 

ஒரு கார்த்திகை திருநாளிலே, அழகிய மணவாளன் நாச்சிமார்களுடன் திருமஞ்சனம் கண்டருளியிருந்தார். அப்போது திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகம், முதலான ஆறு பிரபந்தங்களையும் பெருமாள் முன் தேவகானத்தில் அபிநயம் செய்து விண்ணப்பித்தார். 

நம்பெருமாள் இசைப் பிரியன். கலியன் அபிநயம் செய்து பாடினால் கேட்க வேண்டுமா ? மிக உகந்து ’உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்’ என்பது போல ஆழ்வாருக்குச் சகல மரியாதைகளையும், பரிசுகளையும் கொடுத்து “ஆழ்வீர்! நாம் உமக்கு என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்டார். 


திருமங்கை மன்னன் “அடியேனுக்கு ஒரு குறையுமில்லை. ஆகிலும், உம்முடைய வைகுண்டத்தில் சாமகானக் கேட்பது போன்று இந்தப் பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும் மார்கழி மாதத்தில் சுக்ல பக்ஷ ஏகாதசியன்று அத்யயன உத்சவம் நடைபெறும் போது, நம் சடகோபன் அருளிய சாமவேத சாரமான திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருள வேண்டும். வடமொழி வேதத்திற்கு நிகரான பெருமையைத் திராவிட வேதமான திருவாய்மொழிக்கும் தந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்”

அழகிய மணவாளன் மிகவும் உகந்து அப்பொழுதே ‘கலியனே நீர் கேட்ட வரத்தைத் தந்தோம்! வேதத்துக்குச் சமமான  திருவாய்மொழியை அத்யயன உற்சவத்தின் போது வேதங்களுடனே கேட்டருள திருவுள்ளமானோம்!. இக்கலியன் தேவகானத்தில் பாடியதைக் கேட்டு மிகவும் உகந்தேன். நாம் சாத்தியிருக்கிற தைலக்காப்பை அவர்மீது தடவுங்கோள்! என்று தன் பரிசனங்களை நியமித்தார். பிறகு உடனே தாழையிடுவானை(1) அழைத்தர். அவரும் பணிவுடன் வந்து நம்பெருமாள் முன் வணங்கி நிற்க, நம்மாழ்வாருக்கு திருமுகப்பட்டயமும்(2), மாலை, பரிவட்டம், சந்தனம், சுகந்தம் முதலியவற்றை அனுப்பும் என்று கட்டளையிட்டார். 

திருமுகப்பட்டையமும் பிரசாதங்களும் வருகிற செய்தியைக் கேட்டு, சடகோபருடன் மதுரகவியாழ்வார் புறப்பட்டு தாழையிடுவாரை எதிர்கொண்டு பிரசாதங்களைப் பெற்றுச் சூடிக்கொண்டு, திருமுகப்பட்டையத்தைத் தலைமேல் வைத்துக் கொண்டாடி தாழையிடுவாரை உகந்து வணங்கினார்கள். 

மறுநாள், மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் உற்சவரை நன்கு அலங்கரித்து திருக்குருகூரிலிருந்து புறப்பட்டு திருவரங்கத்திற்குப் பல்லக்கில் புறப்பட்டு, மார்கழி மாத சுக்ப பக்ஷ தசமியன்று  அழைத்து வந்தார்(3) 

இச்செய்தி கேட்டு திருமங்கை மன்னன் எதிர்கொண்டு ஆழ்வாரைச் சேவித்து, பெரிய பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளப் பண்ணினார். பெரிய பெருமாள் ஆழ்வாரை நன்கு  கடாட்சித்து ‘நம்மாழ்வார்’ என்று திருநாமம் சாற்றி மாலை, பரிவட்டம் முதலியவற்றை பிரசாதித்து, சந்தியா மடமான திருக்குறளப்பன் சந்நிதியில் விடுதியாக விடச்செல்லி நியமித்தார். அதன்படியே திருமங்கை மன்னனும் நம்மாழ்வாரை திருக்குறளப்பன் சந்நிதியில் எழுந்தருளச் செய்தார். 

மறுநாள் விடியற்காலை, அத்யயன உற்சவம் ஆரம்பித்து வேதங்கள் முதலியவை தொடங்கப்பட்டன. அன்றிரவு அழகிய மணவாளன் மண்டபத்தில் நம்மாழ்வாரை அர்ச்சை வடிவில் எழுந்தருளினார். அப்போது பெரிய பெருமாள் முன் நம்மாழ்வாரின் ஸ்தானத்தில் மதுரகவியாழ்வாரே நின்று திருவரங்கர் திருமுன்னர்த் திருவாய்மொழியை ’பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று தேவகனத்தில் அபிநயத்துடன் இசைத்துப் பத்தாம் நாள் இரவில் பூர்த்தி செய்தவுடன், மதுரகவியாழ்வாரின் இசையில் உள்ளம் பூரித்த நம்பெருமாள் அவருக்கு ‘திருவாய்மொழி விண்ணபஞ் செய்வார்’ என்ற விருதுகளையும் கௌரவத்தையும் வழங்கினார். நம்மாழ்வார் அழகிய மணவாளன் திருவடிகளைச் சேர்ந்ததை அனுகரித்துக் காட்டினர். அதனால் இந்தத் திருவிழாவை மோக்ஷோத்ஸவம் என்று கொண்டாடினார்கள். 

பிறகு அழகிய மணவாளன் நம்மாழ்வாரை ஏக ஆசனத்தில் வைத்துக் கொண்டு, மாலை பிரசாதம், கஸ்தூரித் திருமண்காப்பு முதலியவற்றை அளித்து ஆழ்வார்திருநகரிக்குச் செல்ல விடை தந்தார். 

‘இனி வரும் காலங்களில் கார்த்திகைக்கு கார்த்திகை திருக்கார்த்திகை திருநாளுக்கு நாம் புறப்பட்டருளி அழகிய மணவாளன் திருமண்டபத்தில் சேரபாண்டியன் சிம்மாசனத்தில், சந்திர பாண்டியன் திருமுத்துப் பந்தலின் கீழ் ஹரிஹரராயன் திருப்பள்ளிக்கட்டின் மேல் வீற்றிருந்து கலியன் பாடுவதைக் கேட்டு நிற்கையில் கோவணர், கொடவர், கொருவாள் எடுப்பர், பாடுவார், தாழையிடுவார் மற்றும் உள்ள அடியார்கள் வந்து நம் சடகோபனுக்குச் சகல மரியாதைகளையும் தந்தருள வேண்டும் என்று நியமித்தார். 

திருமங்கை மன்னனின் இந்தத் திருப்பணியை மதுரகவியாழ்வாரும் அவர் மரபில் வந்தவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் செய்து வந்தனர். இப்பத்து நாட்களும் திருவாய்மொழி திருநாள் (4) என்று அழைக்கப்பட்டது. 

திருமங்கை ஆழ்வார் காலத்துக்குப் பிறகு ஆழ்வார்களின் அருளிச் செயல்களைப் பயில்வாரும் பயில்விருப்பாரும் இன்றி மறைந்துபோயின. அதனால் திருவாய்மொழி திருநாள் தடைப்பட்டு நின்று, நம்மாழ்வாரும் திருவரங்கத்துக்குச் செல்ல முடியாதச் சூழ்நிலை ஏற்பட்டது” என்றார் உய்யக்கொண்டார் 

மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்த மணக்கால் நம்பி கண்களில் நீர் வழிய “மறைந்து கிடந்த வேதங்களை மீண்டும் நிலைநாட்டிய வேதவியாசர் போல நாதமுனிகள் நம்மாழ்வாரின் பாடல்களைத் தேடிச் சென்று,  கண்ணிநுண் சிறுத்தாம்பின் மகிமையாலும், அவருடைய யோக பலத்தாலும், நம்மாழ்வாரிடமிருந்து மீண்டும் பிரபந்தங்களை உபதேசமாகப் பெற்று, அடைவு செய்து, பண்ணிசை தாளம் அமைத்து, பிறருக்கும் ஓதுவித்து இன்று நாம் அவற்றை அனுபவிக்கக் காரணமான அந்த மஹானை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது!” என்றார் மணக்கால் நம்பி. 

உய்யக்கொண்டார் “ஆம்! பிரபந்தம் சேவிக்கும் எல்லோரும் நாதமுனிகளின் கருணைக்குப் பாத்திரமானவர்கள். மறைந்து போன பிரபந்தங்களை மட்டும் அல்லாமல், திருவாய்மொழி திருநாளையும் மீட்டெடுத்தார்.

திருமங்கை ஆழ்வாரைப் போலவே நாதமுனிகளும் ஒரு கார்த்திகைத் திருநாளில் திருநெடுந்தாண்டகத்தை தேவகான இசையில் அபிநயத்துடன் திருவரங்கர் முன் இசைத்து மகிழ்வித்து வரம் வேண்டி நின்றார். 

நம்பெருமாள் ‘கேளும்!’ என்று கூற நாதமுனிகள் மற்ற ஆழ்வார் பாசுரங்களுக்கும் வேதத்துக்குச் சமனான  பெருமை வேண்டும் . திருவாய்மொழி திருநாளுக்கு முன்னதாகப் பத்து நாள்களில் மற்ற ஆழ்வார் பாசுரங்களையும் கேட்டருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார். ‘தந்தோம்!’ என்று நம்பெருமாள் அருள, நாதமுனிகள் ‘திருமொழித் திருநாள்’ (5) என்று பத்து நாள் விழாவாக ஏற்பாடு செய்தார். 

தன்னுடைய மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் என்ற இருவருக்கும் நாதமுனிகள் பாசுரங்களைப் பண்ணுடன் கற்பித்து திருவரங்கத்தில் அழகியமணவாளன் முன் இசையுடன் சேவிக்க பெருமாள் உகந்து மேலையகத்தாழ்வானுக்கு ‘மதியாத தெய்வங்கள் மணவாளப் பெருமாள் அரையர்’ என்றும் கீழையகத்தாழ்வானுக்கு ’நாதவிவிநோத அரையர்’ என்றும் சிறப்பு திருநாமங்களை வழங்கினார். அன்று முதல் விண்ணப்பஞ் செய்வார்களை ‘அரையர்கள்’ என்று அழைத்தார்கள். அரையர்கள் என்றால் இசையில் மன்னர்கள் என்று பொருள். அதனால் அதற்கு அடையாளமாகத் தலையில் அரசர்க்குரிய மகுடம், தொங்கல் பரிவட்டமும் அரங்கனால் வழங்கப்பட்டது. 

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருநாளில் திருமங்கை ஆழ்வார் ஏற்பாடு செய்த திருவாய்மொழி திருநாளுக்கு மீண்டும் நம்மாழ்வாரைத் திருவரங்கம் எழுந்தருளிச் செய்து உற்சவம் நடக்குமாறு ஏற்பாடுகளைச் செய்து, மற்ற ஆழ்வார் பாசுரங்களையும் நம்பெருமாள் கேட்கும்படி ‘திருமொழித் திருநாளாக’ ஏற்படுத்தினார். 

மணக்கால் நம்பி வியப்புடன் “ஆழ்வாரின் தமிழ் பாசுரங்களை மீட்டெடுத்து, அதைக் கொண்டாடத் தமிழ் விழாக்களையும் நாதமுனிகள் நிலைநாட்டிய தொண்டு தான் என்னே!” என்றார். 

உய்யக்கொண்டார் “மணக்கால் நம்பியே!  கம்ப இராமாயண அரங்கேற்றம் குறித்து நாளை கூறுகிறேன்” என்றார். 

பயணம் தொடரும்... 
- சுஜாதா தேசிகன்
29-11-2020
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம்
கார்த்திகையில் கார்த்தைகை

------------------------------------------------------------------------------------

(1) திருப்பணிச் செய்பவர்

(2) கடிதம், அழைப்பிதழ் 

(3) தற்சமயம் இந்த வழக்கம் இல்லை 

(4) இராபத்து உற்சவம் என்று தற்போது வழங்கப்படுகிறது 

(5) பகல் பத்து உற்சவமாக இது நடைபெறுகிறது. 


Comments

Post a Comment