புலன் விசாரணை
ஆழ்வார் பாசுரங்களைப் படிக்கும்போது ஆழ்வார்கள் என்ன ‘கான்டெக்ஸ்ட்’ல் சொல்லியிருக்கிறார்கள் என்று படிப்பது மிக அவசியம். பெரியவாச்சான் பிள்ளை போன்ற உரையாசிரியர்களின் உதவியுடன் பாசுரங்கள் தொடர்பான ஐதீகங்களைப் படித்தால் மைக்ரோ ஃபைபர் கொண்டு கண்ணாடியைத் துடைத்த மாதிரி பளிச்சென்று புரியும். தப்பான அர்த்தங்களை இடது கையால் ஒதுக்கிவிடலாம்.
நமக்குத் தெரிந்த திருக்குறள் இது
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
இதற்குப் பலர் உரை எழுதியிருக்கிறார்கள். தப்பில்லை, ஆனால் அத்தாரிட்டி பரிமேலழகர் உரை தான். ஏன் என்று கூறுகிறேன்.
‘அடக்கம்’ என்று படிக்கும் போது பணிவு ( humility ) என்ற அர்த்தம் நமக்கு உடனே தோன்றும். அடக்கமாக இருப்பது நல்ல குணம் தான், ஆனால் அடக்கம் என்பதின் பொருள் அதிகாரத்தின் ஆரம்பத்தில் பரிமேலழகர் ‘அடக்கம் உடைமை - அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன்’ - அதாவது சுயக்கட்டுப்பாடு ( self control ) என்கிறார். இதை மனதில் கொண்டு படித்தால். சுயக்கட்டுப்பாடு உள்ளவன் தேவர்களுக்குச் சமமானவன். அப்படி இல்லை என்றால் அவனுக்கு நரகம் தான் என்று புரியும்.
சுஜாதா எழுதிய ’ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்’ ஆழ்வார்களைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரு ’stepping stone’ என்று சொல்லலாம். இன்றும் பலர் அதை விரும்பி படிக்கிறார்கள். புத்தகத்தில் வரும் ஒரு பகுதி இது:
”அந்தணரான தொண்டரடிப் பொடியாழ்வார்,
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்
அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன் ( 896 )
- என்று சொல்லும்போது தினம் குளிப்பதும் மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வதும் போன்ற rituals முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.
முதலாழ்வாரான பொய்கையாழ்வார்,
புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
அந்தியால் - ஆம்பயன் அங்கென்? ( 2114 )
- என்று பாடும்போது பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று கூறுகிறார். ஆரம்பத்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்கிறது வைணவம்.”
இப்போது மேலே உள்ள பகுதியைப் படிக்கும்போது ’அட ஆழ்வாரே சொல்லிவிட்டார்’ பாருங்கள் என்ற நமக்குத் தோன்றும்.
பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் முதலியவற்றை செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய தர்மம். ஆழ்வார்கள் என்றுமே தர்மத்துக்கு புறம்பாக கூற மாட்டார்கள். முதல் திருவந்தாதி படிக்கும்போது, அதில் உள்ள நூறு பாசுரங்களையும், முடிந்தால் இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று எல்லாவற்றையும் ஒரு முறை நிதானமாகப் படித்தால் நமக்கு வேறு விதமான அர்த்தம் கிடைக்கும்.
சுஜாதா கூறிய இரண்டு லைன் பாசுரத்தின் முழுப் பாசுரத்தை முதலில் பார்க்கலாம் :
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே ( 896 )
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அந்தணர். அவர் சொல்லுகிறார் குளித்து மூன்று முறை அக்கினி ஹோத்திரம் போன்ற எந்தக் கடமையும் செய்யவில்லை. உன்னிடம் பக்தியும் இல்லை, என் விஷயத்தில் இந்தக் குறைகளை எல்லாம் பார்க்காமல் நீ எனக்குக் கிருபை செய்ய வேண்டும் என்கிறார்.
இப்போது போது நமக்குக் கிடைக்கும் பொருள் வேறு அல்லவா ? ( ஆழ்வார் முக்கியமில்லை என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் செய்யமுடியவில்லை அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அருள் செய்ய வேண்டும் என வேண்டுகிறார் )
அடுத்து பொய்கையாழ்வார் பாசுரத்தையும் முழுமையாகப் பார்க்கலாம்.
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என் ( 2114 )
பிரம்மாவிற்கு வேதத்தைத் தந்த பெருமாளின் பெயர்களை மனத்தால் நினைக்காமல், வேறு மந்திரத்தை ஓதி என்ன பயன் ? என்கிறார் ஆழ்வார்.
மனத்தால் அவனை நினைத்தால் நல்லது ஆனால் எவ்வளவு பேருக்கு அப்படி அவனைத் தியானம் செய்ய முடிகிறது ? இதனால் பக்தன் என்று வேஷம் போடுபவர்களுக்கு அவன் அருள் புரிய மாட்டான் என்ற பொருள் கிடைக்கிறது.
மேல் சொன்ன ( 2114) பாசுரத்துக்கு ஏழு பாசுரங்கள் கடந்து வந்தால் இந்தப் பாசுரம் வருகிறது.
குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும்
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான்
திறன் உரையே சிந்தித்திரு ( 2122 )
மலையைப் போலக் குற்றங்கள் செய்தாலும் பெருமாள் அவற்றைப் பார்க்காமல், நாம் மனத்தால் சொல்லாமல், பொய்யாக ’lip service'ல் அவன் திருநாமங்களைச் சொன்னாலும் அவன் நமக்கு அருள் புரிகிறான்.
இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை ஓர் ஐதீகம் சொல்லுகிறார்.
’வைக்கோல் கன்று’ உபயோகித்து பால் கறக்கும்போது, கன்று என்று நம்பி தாய்ப் பசுப் பால் கொடுப்பது போல நாம் வேஷம் போட்டாலும் பெருமாள் அருள் புரிவார் என்கிறார். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்றாகப் பக்தியாக இருந்தாலும், பெருமாளின் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை ! ஸ்ரீராமர் இராவணனே வந்தாலும் அவனுக்கு அடைக்கலாம் தருவேன் என்கிறார்.
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதை ஒன்றில் ஸ்ரீரங்கத்தைச் சுற்றிப் பார்க்க வரும் சிலர் ஓர் ஏழை ஸ்ரீ வைஷ்ணவப் பிராமண வழிகாட்டியிடம் கோயிலில் இருக்கும் erotic சிற்பங்களைக் காண்பித்து பெண்கள் வேண்டும் என்று தப்பான விஷயங்களைக் கேட்க, அவர்கள் கொடுத்த பணத்தை அவர்கள் முகத்தில் வீசி அடித்துவிட்டுச் செல்வார்.
ஸ்ரீரங்கத்தைச் சுற்றிப் பார்க்க வந்த அந்தக் கூட்டம் போல இன்றைய கவிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும், இலக்கியவாதிகளும் தமிழ் தெரியும் என்ற ஒரே காரணத்தால் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரங்களை படிக்க தெரியாமல் படித்து கொச்சைப் படுத்திப் பேசுகிறார்கள்.
வீட்டில் யாருக்காவது உடம்பு முடியவில்லை என்றால் மஞ்சளில் நனைத்த துணியில் ஒத்த ரூபாயை முடிந்து வைத்து திருப்பதிக்கு வருகிறோம் என்று வேண்டிக்கொள்வோம். முடிந்து வைத்த பிறகு அது அவன் சொத்து. பிறகு திருப்பதி போகும் போது அந்த ஒத்த ரூபாயை அவனிடத்தில் சேர்ப்போம்.
சில சமயம் தியரி வேறு பிராக்டிகல் வேறு, அதனால் பணம் முடிந்து வைப்பது இது சரியா, தப்பா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை ஆனால் நான் சொல்ல விரும்புவது வேறு. ஆண்டாள் நாச்சியார் திருமொழியில்
வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே
பாசுர அர்த்தம் இது தான் - தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவைக் காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது என்கிறாள். நாச்சியார் திருமொழியில் பாசாங்கற்ற உடல்சார்ந்த குறிப்புக்கள் தானே உள்ளது பக்தி எங்கே இருக்கிறது ? ஆழ்ந்து நோக்கினால், நாம் பெருமாளுக்கு பணம் முடிந்து வைப்பது போல ஆண்டாள் தன்னையே முடிந்து பெருமாளுக்குக் கொடுத்துவிட்டாள் என்று இதைப் பார்க்க வேண்டும்.
ஆழ்வார்களின் பாசுரங்களின் வீச்சைப் புரிந்துகொள்ளத் திருமாலை முதல் பாசுரத்தை பெரியவாச்சான் பிள்ளையுடன் அனுபவிக்கலாம்.
விஷ்ணு தர்மத்தின் சாரம் தான் திருமாலை. நமக்கு விஷ்ணு தர்மம் தெரியாது அதனால் அதைத் தெரிந்த நம் ஆசாரியர்கள் கூறுவதை நாம் ஒழுங்காகக் கவனிக்க வேண்டும்.
தொண்டரடிபொடியாழ்வாரின் திருமாலை முதல் பாசுரம் இது
காவலில் புலனை வைத்து கலி தன்னை கடக்க பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூஉலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மாநகருளானே
தமிழ் தெரிந்தவர்கள் முதல் முறை சாதாரணமாக படிக்கும் போது கிடைக்கும் பொருள் இது
மூவுலகையும் பிரளய காலத்தில் உண்டு காத்தவனே! நாங்கள் புலன்களை அடக்கி (காவலில் புலனை வைத்து), ‘ரங்கா’ என்று உன் திருநாமத்தை (நின் நாமம் - அரங்க மாநகருளானே) கற்ற செருக்கினால் (ஆவலிப்பு உடைமை) நாவலோ நாவல் என்று(நாவலிட்டு)*, பாவங்களைக் கடந்து(கலியைக் கடந்து), யமன் அவனுடைய பணியாளர்களின் தலைகள் மீது பயம் இல்லாமல் காலடி வைத்துத் திரிகின்றோம்.
உரையை வைத்துப் படித்தால் இன்னொரு பொருள் கிடைக்கிறது. காவலில் புலனை வைத்து என்பதை - ’காவல் இல் புலனை வைத்து’ என்று பிரித்துப் படிக்க வேண்டும் அப்போது புலன்களைக் காவலில் வைக்காமல் என்று பொருள் கிடைக்கும். இப்போது அதே பாசுரத்தின் பொருளை இப்படிக் கூறலாம்.
மூவுலகையும் பிரளய காலத்தில் உண்டு காத்தவனே! நாங்கள் புலன்களை அடக்காமல் (காவல் இல் புலனை வைத்து) கண்டபடி இருந்த போதும், ‘ரங்கா’ என்று உன் திருநாமத்தை (நின் நாமம் - அரங்க மாநகருளானே) கற்ற செருக்கினால் (ஆவலிப்பு உடைமை) நாவலோ நாவல் என்று(நாவலிட்டு), பாவங்களைக் கடந்து(கலியைக் கடந்து), யமன் அவனுடைய பணியாளர்களின் தலைகள் மீது பயம் இல்லாமல் காலடி வைத்துத் திரிகின்றோம்.
புலனடக்கத்துடன் பெருமாளின் திருநாமத்தைச் சொன்னால், எமனுடைய பயம் இருக்காது என்பது சாதாரணமாகப் படிக்கும் போது கிடைக்கும் பொருள். பிரித்துப் படித்தால் புலனடக்கம் இல்லாமல் இருந்த போதும், பெருமாளின் திருநாமம் நமக்கு உதவும். அது தான் நாமத்தின் மகிமை.
பெரியவாச்சான், ஆசாரியர்கள் வியாக்கியானங்களை ஏன் படிக்க வேண்டும் என்று கீழே உள்ள உரையைப் படித்தால் புரியும். .
ஒரு காலத்தில் புலன்கள் என்னைக் காவலில் வைத்தது, திருநாமத்தின் அந்தரங்கக் கிருபையால் (அஜாமிளன் - நாமம் என்னைக் காத்தது என்று கூறவில்லை, என் நாக்கில் அவன் நாமம் வந்ததற்கு அவன் கிருபையே காரணம் என்கிறார் ) இன்று நான் அவைகளை(புலன்களை) சிறை பிடித்தேன். அதற்குப் பிறகு அந்தப் புலன்களை எல்லாம் எம்பெருமானிடமே ஈடுபடச் செய்து அவனை அனுபவித்தேன்( நாச்சியார் திருமொழி ). பிறகு அந்தப் புலன்களுக்கு எம்பெருமானே காவலாக இருக்க எல்லாப் பாபங்களையும் அனுமார் மாதிரி தாவிய பொழுது. ( பாய்ந்து ) எமன் என்னை தலையில் தாங்க காத்துக்கொண்டு இருக்கிறான் ( துருவன் எமன் தலையில் கால் வைத்துச் சென்றது போல )
இதை மனதில் வைத்து நாச்சியார் திருமொழியையும், திருக்குறளையும் படித்தால் ஒழுங்கான அர்த்தம் புரியும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
- சுஜாதா தேசிகன்
13-11-2020
-------
* நாவலிட்டு - வெற்றிக்கு அறிகுறியாக அல்லது மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘நாவலோ நாவல்’ என்று பண்டை தமிழர்கள் கூறுவார்கள். தோற்றவர் முன்னே ஜயித்தவர்கள் தமது வெற்றியை ‘நாவலோ நாவல்’ என்று கூறிக் கோஷமிடுவார்கள்.
அருமை 👌
ReplyDelete