17. இராமானுசன் அடிப் பூமன்னவே - வெட்டிவேர் !
நாதமுனிகள் காட்டுமன்னார் முன் அமர்ந்து நம்மாழ்வாரின் பாசுரமான உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்ற பாசுரத்தைத் தாளத்துடன் இசைத்த போது அவருடைய சிஷ்யர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
உய்யக்கொண்டார் நாதமுனிகளை நோக்கி “ஆசாரியனே! ஆழ்வார் பாசுரங்களைக் கற்றுணர்ந்தால், எது எது பெருமாளை மறக்கடிக்குமோ அது அது பெருமாளை நினைக்க வைக்கும் பிரேம நிஷ்டை நமக்கு வந்துவிடுகிறது!” என்றார்
”முற்றிலும் சரி உய்யக்கொண்டாரே! நம்மாழ்வாருக்கு எல்லாம் கண்ணன் தான். அடியேனுக்கு அந்த உணர்வு என்று வரப்போகிறதோ!” என்று நாதமுனிகள் கூறிய அச்சமயத்தில் கோயிலுக்கு நுழைந்த ஒருவர் “ஐயா! நீங்கள் இங்கே இருக்கிறீர்களா ? சற்று முன் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் உங்கள் இல்லத்துக்கு வந்தார்கள்!” என்றார்
“ஓ அப்படியா ?” என்று நாதமுனிகள் எழுந்துகொள்ள, கூடவே சிஷ்யர்களும் எழுந்துகொள்ள எத்தனித்த போது, நாதமுனிகள் அமருங்கள் என்ற சைகை காண்பித்துவிட்டு “நீங்களும் என்னுடன் வந்துவிட்டால், ஆழ்வார் பாசுரங்கள் கேட்க முடியாமல், மன்னாரின் முகம் வாடிவிடும் அல்லவா ? அதனால் மேலும் சற்று நேரம் ஆழ்வார் பாசுரங்களை மன்னார் முன் சேவித்துக்கொண்டு இருங்கள்” என்று நாதமுனிகள் தன் இல்லம் நோக்கி ’யாராக இருக்கும்?’ என்ற சிந்தனையில் நடக்க ஆரம்பித்தார்.
தன் இல்லத்தின் வாசலில் இவருடைய பெண்பிள்ளைகள் ”தந்தையே, நம்மகத்துக்கு இப்பொழுது தான் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் வந்திருந்தார்கள். அவர்களுடன் ஒரு குரங்கும் வந்தது!” என்றாள்.
”அப்படியா அவர்கள் எப்படி இருந்தார்கள் எந்தத் திசை நோக்கிச் சென்றார்கள் ?” என்று தவிப்புடன் கேட்டார்.
“வேட்டைக்கு புறப்பட்ட அரசர்களைப் போல, வில்லுடன் இருவர். அன்னம் போன்ற மென்மையான நடையை உடைய அழகிய பூக்கள் சூடிய கூந்தலை உடையவளுமான ஒரு பெண்ணோடும், கூட ஒரு குரங்கும் நம்மகத்தின் வாசல் திண்ணையின் நின்றுகொண்டு இருந்த என்னைப் பார்த்து ‘நாதமுனிகள் எங்கே அம்மா?’ என்று கேட்டார்கள்’. தந்தை வெளியே சென்றிருக்கிறார் என்று கூற அவர்கள் புறப்பட்டு சென்றார்கள்” என்றாள்.
அதைக் கேட்ட நாதமுனிகள் “ஐயோ ! வில்லேந்தியவர் இருவர் என்றால் அது இராம லட்சுமணர்களாக இருக்க வேண்டும். மணம்மிக்க மலரைச் சூடிய கூந்தலை உடையவள் ஜனகனின் புதல்வியான சீதாபிராட்டி. பக்கத்தில் இருந்த குரங்கு முன்பு சூரியனிடத்தில் கற்று, இராமனுக்குத் தொண்டு புரிந்த அனுமானே ஆவார். ஒப்பற்ற தன்மை படைத்த அவர்கள் எங்கே போனார்கள்?” என்று கேட்க பெண்பிள்ளைகள் அவர்கள் சென்ற திசையை நோக்கி கைகளைக் காட்டினார்கள்.
“ஆகா! இது பிரணவம் நடந்து சென்ற திசை அல்லவா ! அவர்களைத் தரிசிக்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேனே!” என்று கதறியவாறு அவர்கள் சென்ற திசையை நோக்கி வணங்கி அத்திசையில் ஓட ஆரம்பித்தார். சுற்றி இருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்தார்கள்.
இவ்வாறு ஓட்டமும் நடையுமாகச் சென்ற நாதமுனிகள் வழியில் பூச்சரம் ஒன்றைக் கண்டார். அதைக் கண்டவர் “ஆகா! இது சீதாபிராட்டி சூட்டிக்கொண்டதல்லவா ? என்று அதை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு ஓட ஆரம்பித்தார்.
சற்று முன் பெய்த மழையினால் வழியெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. மரங்களில் மழையின் நீர் இலைகளின் நுனியில் சொட்டிக்கொண்டு இருந்தது. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கப் பறவைகள் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ என்று வழக்கத்துக்கு மாறாக அன்று சீக்கிரமாகவே தங்கள் கூட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தன. மீண்டும் மழை வருவதற்குள் தங்கள் இல்லத்துக்கு செல்ல வேண்டும் என்ற தவிப்பில் ஊர் மக்கள் வேகமாகத் தத்தம் குடிசைகளுக்கு வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள்.
எதிரே வந்தவர்களை நாதமுனிகள் கைகூப்பி “பந்தை ஏந்திய கையை உடைய பெண்மணியும், மந்திர மலையைப் போன்று வலிய வில்லை ஏந்திய இருவர் அவ்வழியே பார்த்ததுண்டா ?” என்று கேட்க அவர்கள் “ஆம் ஐயா! கண்டோம்! கண்டோம்! கம்பீரமும் பிரகாசமும் ஒருங்கே கொண்டவர்கள் இந்த வழியே சென்றார்கள்.(2) கூடவே ஒரு குரங்கும் சென்றது” என்று கூற நாத முனிகள் கைகூப்பியவாறு அவர்கள் கூறிய திசை நோக்கி வேகமாக ஓடினார்.
சிறிது தூரம் சென்றபின் குரங்கின் கால் தடம் சேற்றில் பதிந்திருப்பதைக் கண்டு ” ஐயோ நடந்த கால்கள் நொந்தவோ! என்னைத் தேடிக்கொண்டு தாமரை போன்ற மெல்லிய திருவடிகள் சிவக்க இந்தச் சேற்றில் நடந்து சென்றார்களா ? என்று கண்களில் அருவியாகக் கண்ணீர் சொரிய அந்தச் சேற்றை எடுத்து நெற்றியில் திருமண்ணாகப் பூசிக்கொண்டு நாதமுனிகள் ஓடியது, அன்று பரதன் அடர்ந்த சித்திரகூடம் காட்டுக்குள் ராமனைத்தேடி ஓடியது போலக் காட்சியளித்தது. மீண்டும் சிலர் எதிரே தென்பட அவர்களிடம் “ஐயா ! இங்கே அழகு பொருந்திய இரண்டு வில்லர்கள், ஒரு குரங்கும், வளையளணிந்த கைகளையுடைய பெண்ணையும் பார்த்ததுண்டா ? சொல்வீர்களாக” என்று கேட்டார்
அந்தணரே! நாங்கள் கண்டிலோம்” என்று அவர்கள் கூற நாதமுனிகள் சிற்றன்னையாகிய கைகேயியின் ஆணையைக் காத்த இராமனின் திருவடிகளைக் கண்டு வணங்கப் பெறும் பாக்கியம் இழந்தோமே!” என்று தசரதன் இராமனைப் பிரிந்த ஏக்கத்தில் மயக்கமுற்றது போல், விழுந்து புரண்டு அழுது, அந்த.இடத்திலேயே மயங்கி விழுந்தார். மரங்கள் ஆடாமல், பறவைகள் ஓசை இல்லாமல் எங்கும் அமைதி குடிகொண்டது. நாதமுனிகளுக்கு மேல் ஒரு கருடன் மட்டும் வட்டமிட்டமிட்டுக்கொண்டு இருந்தது.
நாதமுனிகளை இந்த நிலையில் விட்டுவிட்டு நாம் மீண்டும் காட்டு மன்னார் கோயிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக நேயர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
ஈஸ்வர முனிகள், உய்யக்கொண்டார், குருகை காவலப்பன் அடங்கிய சீடர்கள் கோயிலில் ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அனுபவித்துவிட்டு நாதமுனிகளின் திருமாளிகையை அடைந்த போது, அங்கே சற்று முன் நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட போது, பதட்டத்துடன் ஆசாரியருக்கு என்ன ஆனதோ என்ற பரிதவிப்புடன், எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று தெரியாமல் ஒவ்வொருவரும் ஒரு திசை நோக்கி ஓடினார்கள்.
மதுரகவிகள் அன்று ஜோதியைத் தேடி ஓடியது போல, உய்யக்கொண்டார் தூரத்தில் கருடன் ஒன்று வட்டமிடுவதைக் கண்டு அதை நோக்கி ஓடினார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலைய வைத்தது. ஒரு மரத்தடியின் கீழ் நாதமுனிகள் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அருகில் சென்று அவரை தன் மடியில் தலைசாய்த்து “தெளிந்த ஞானத்தையும், ஆழ்வார்கள் அருளிய தமிழ் அமுதை அள்ளி அள்ளி அளித்த பெருமானே! எழுந்திருங்கள் எழுந்திருங்கள்!” என்று தவிப்புடன் எழுப்பினார். அவரின் சூடான கண்ணீர் நாதமுனிகளின் திருமேனியில் பட, மெல்லக் கண்களைத் திறந்து “இராமபிரான் என்னை அழைக்கிறான். நான் புறப்படுகிறேன். அதற்கு முன் அடியேன் பாதுகாத்த சொத்து ஒன்றை உம்மிடம் அளிக்க வேண்டும்!” என்றார்
உய்யக்கொண்டார் “ஆழ்வார்கள் அமுதம் என்ற ஒப்பற்ற சொத்தையும், யோக சாஸ்திரம் என்ற மற்றொரு சொத்தையும் அளித்தீர்கள்! இதைத் தவிர மூன்றாவதாக என்ன சொத்து இருக்கிறது ? ” என்றார்
நாதமுனிகள் “இருக்கிறது உய்யக்கொண்டாரே! விரைந்து அடியேனின் அகத்துக்குச் சென்று திருவாராதனம் செய்யும் பெருமாளின் திருவடிக்குக் கீழ் மரப்பெட்டி ஒன்று இருக்கிறது. அதை உடனே எடுத்துவாரும்! அதுவரையில் இங்கேயே ஆழ்வார்கள் பாசுரங்களைத் தியானித்துக்கொண்டு இருக்கிறேன்! ” என்றார்
உய்யக்கொண்டார் வேகமாக ஓடிச் சென்று அந்தப் பெட்டியைத் தலையில் சுமந்துகொண்டு திரும்பி வந்தார்.
நாதமுனிகள் அவரை அன்புடன் அழைத்து அந்தப் பெட்டியைத் திறந்து அதில் உள்ள பட்டுத் துணியை விலக்க, விளக்கு போலப் பிரகாசமான, கற்பகம் போல் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும் கூடிய பவிஷ்தாசாரியார் காட்சி கொடுத்தார்.
நாதமுனிகள் அந்த திவ்யமங்கள விக்கிரகத்தை வெளியே எடுத்த போது, முன் கையில் ஏந்திய முக்கோல் தன்னழகுடன் கூடிய அந்த வடிவழகு இதயத்துள் தேனாக பாய்ந்தது. அழகில் ஆழங்காற்பட்டு தள்ளாடினார் உய்யக்கொண்டார்.
நாதமுனிகள் உய்யக்கொண்டாரை நோக்கி “ஒருவருக்கும் இதை வெளியிடாதீர்!” என்று சூளுறவு கொண்டு ஆழ்வார் தமக்கு எப்படி நம்மாழ்வார் பவிஷ்யதாசார்ய விக்கிரகத்தை பிரசாதித்தருளினார் என்ற முழுக் கதையையும் கூறி, இனி இந்த நிதி உம்முடைய சொத்து. இதை ஈஸ்வர முனிகள் குமாரரான என் பேரன் யமுனைத்துறைவனுக்குப் பாட்டனான நாதமுனிகள் விரும்பிய விஷயமென்று சொல்லி தஞ்சமாக காட்டிக்கொடும்” என்று கூறி கண்களை மூடிக்கொண்டு அழகு பொருந்திய அவ்விக்கிரகத்தை மனதில் தியானித்து அவ்விக்கிரகத்தின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு ”ஆழ்வார் திருவடிகளே சரணம்” என்ற போது, மேலே வட்டமிட்ட கருடன் நாதமுனிகளின் ஆன்மாவை திருத்தோள் மேல் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பரந்த அழகிய அண்டங்களைத் தாண்டி அந்தமில் பேரின்பத்து அடியரோடு ஒரு கோவையாக. கலங்கா பெரு நகரம் காட்டுவான் இலங்காபுரி எரித்தபிரான் திருவடிகளை அடைந்தார்.
உய்யக்கொண்டார் கையில் பவிஷதாசார்யர் பிரகாசித்தார். எம்பெருமானின் ஆயுதங்கள் ஒவ்வொரு ஆழ்வார்களாக அவதரித்தன. எம்பெருமானின் ஆயுதங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து வடிவுகொண்ட அவதாரமா என்று வியந்தார்(1) ஆழ்வார்கள் அவதரித்த நாள்களைக் காட்டிலும் இவர் அவதரிக்கப் போகும் நாளே அனைத்து உயிர்களும் கரையேறும்படியாக இருக்கப் போகிறது. அந்த நாளை நாம் பார்க்க முடியாதே என்று ஏங்கினார்(2) அந்த விக்கிரகத்தை பத்திரமாக மரப்பெட்டிக்குள் வைத்து மூடினார். அந்தச் சமயம் ஈஸ்வர முனிகள், குருகைக் காவலப்பன் அடங்கிய சிஷ்யர்கள் குழாம் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
நடந்த விஷயங்களை உய்யக்கொண்டார் மூலம் தெரிந்துகொண்டு, நாதமுனிகள் விமல சரமத் திருமேனியைச் சேவித்து, தங்கள் கண்களிலும் நெஞ்சிலும் சோகத்தைத் தேக்கிக் கொண்டு, சொல்வதற்கரிய செயல்களைச் செய்த இத்திருமேனி இவ்வாறு பூமியின் மண்ணில் கிடப்பதை நினைத்து நினைத்துத் துடித்து அழுது ஒருவாறு தேறி ஈஸ்வர முனிகள் கைகளால் வேதவிதிப்படி சரமக் கைங்கரியங்களைச் செய்வித்து(4), பெருந்திரளான அடியார்கள் சூழ திருப்பள்ளி படுத்தி அங்கே ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்தனர். உய்யக்கொண்டார் நாதமுனிகள் ‘ஒருவருக்கும் வெளியிடாதீர்’ என்று தமக்கு அளித்த பவிஷ்தாசாரியர் விக்கிரகத்தை யாருக்கும் கூறவில்லை!
நாதமுனிகளை பிரிய மனம் இல்லாமல், அவருடைய திருவரசுக்கு அருகில் அவருடைய பேரனான யமுனைத் துறைவன் வரும் போது யோகத்தைக் கற்றுக்கொடுக்க, குருகை காவலப்பன் தர்பத்தை கீழே பரப்பி வலிமைக்கு மேல் வலிமை கொடுக்கக் கூடியதான மான் தோலை அதன் மேல் விரித்து அதன் மேல் பத்மாசனத்தில் வீற்றிருந்து எம்பெருமானை தன்பக்கம் நிலைத்திருக்குமாறு செய்து யோகத்தில் ஆழ்ந்தார்.
பிறவியாகிய பெருநோய் தீர்க்கும் நம்மாழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமாகிய திருவாய் மொழியாலே உலகிலே திருந்தாதவர்களையும் நன்கு திருந்தச் செய்து வைணவ சம்பிரதாயத்தை விளக்கிக் கூற ஆழ்வார்களின் பெருமையை அறிபவர்கள் யார்? அவர்கள் அருளிய பாசுரங்களின் பெருமையை அறிபவர்கள் யார்? என்று நாதமுனிகள் கற்பித்த விஷயங்களை கற்பிக்க உய்யக்கொண்டாரும் மற்ற சீடர்களும் புறப்பட்டார்கள்(3)
சரித்திரச் சம்பந்தமான சில நிகழ்வுகளை இந்தக் கதையைப் படித்து வரும் வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்
* ”வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விகரத்தோட ஆதரிக்கும்” என்பர். அதாவது வெட்டிவேரைச் சூடிக்கொள்ளும் போது, வேரிலுள்ள மண்ணை கழுவி தனியாகப் பிரித்து எடுக்காமல், அப்படியே சூடிக்கொள்வார்கள்.(5) அது போல எம்பெருமான் ஞானிகளின் அத்மாவை மட்டும் தன்னுடன் வைத்துக்கொள்ளாமல், அவர்களுடைய திருமேனியைப் பலாப்பழத்திலே ஈமொய்க்குமாபோலே ஞான பரிமளத்துடன் விளங்கும் தேகத்தை விடமாட்டாத எம்பெருமான் அதை உகந்து காக்கிறான். ஆகவே ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களின் திருமேனியைப் பள்ளிப் படுத்தி அந்த இடத்தில் ஞானிகளின் நல்லாட்சி என்ற நல்லாசி என்றும் நிலைத்து அரசாட்சி செய்வதால் அவ்விடம் திருவரசு என்று பெருமை பெறுகிறது. நாதமுனிகள் வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆணி வேர். அந்த வேரின் மகிமையால் தான் இன்று மரமாகப் பல விழுதுகளுடன் வைணவம் வளர்ந்திருக்கிறது.
1200 வருடத்திற்குப் பிறகு இந்த நூற்றாண்டில் நாதமுனிகளின் திருவரசு குறித்து சில குறிப்புகளைப் பார்க்கலாம். (6)
காலச்சுழற்சியில் நாதமுனிகளின் திருவரசு தன் அடையாளத்தைத் தொலைத்து மண்ணுக்குள் புதையுண்டு போனது. சில வைணவர்கள் மட்டும் விசேஷ நாட்களில் அங்கே சென்று வழிபட்டு வந்தனர். ஆனால் அங்கே கோயிலோ அல்லது திருவரசுக்கான எந்த அடையாளமோ இல்லை.
புதையுண்ட பெருமாள் |
வெளியே வந்த பெருமாள் ! |
ஸ்ரீ திருக்கோவிலூர் ஜீயர் ஸ்ரீ திருவேங்கட ராமானுஜசாரியார் ஸ்வாமி இந்த இடத்தில் தனது முன்னோர்கள் வழிபட்டனர் என்று கூறிய போது அவ்விடம் 1993ஆம் வருடம் முக்கியத்துவம் பெற்றது. அதற்குப் பிறகு புலவர் ஹரி தாஸ் என்பவர் தரிசு நிலமான, இந்தக் காட்டுப் பகுதியை நாதமுனிகளுக்கு திருவரசு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வாங்கினார். அங்கே ஓர் அதிசயம் காத்துக்கொண்டு இருந்தது. அந்த நிலத்தில் தேவியருடன் ஆள் உயர பெருமாள் சிலை ஒன்று பாதியளவுக்கு மண்ணுக்குள் புதையுண்டிருந்ததை கண்டார். அதற்குப் பிறகு பலர் உதவிட ஈஸ்வர முனிகள் அன்று நிறுவிய திருவரசு மீண்டும் உயிர்பெற்றது !
திருவரசில் கைத்தாளத்துடன் நாதமுனிகள் |
ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணன், சீதாபிராட்டி, அனுமார் - நாதமுனிகள் திருவரசு |
* திருவரசுக்கு அருகில் குருகை காவலப்பன் அன்று யோகத்தில் அமர்ந்த இடத்தில் 'குருகை காவலப்பன் கோயில்’ இருக்கிறது. 1976ஆம் வருடத்துக்குப் பிறகு 2014ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கே இருக்கும் பெருமாளும் வீர நாராயணப் பெருமாள் தான்!
குருகை காவலப்பன் கோயில் |
வீர நாராயணப் பெருமாள் - குருகை காவலப்பன் கோயில் |
குருகை காவலப்பன், நாதமுனிகள், ஆளவந்தார் ( குருகை காவலப்பன் கோயிலில்) |
* நாதமுனிகள் இராமனைத் தேடிக்கொண்டு சென்ற இடங்கள் இன்றும் இருக்கிறது. அவருக்கு பூ கிடைத்த இடம் பூவிழுந்த நல்லூர் என்றும், குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்த இடம் குறுங்குடி ( குரங்கடி குறுங்குடியாக திரிந்தது ). வழியில் கண்டீர்களா என்று கேட்க ‘கண்டோம் கண்டோம்’ என்று கூறிய இடம் ‘கண்டமங்கலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நாதமுனிகள் பள்ளிப்படுத்தப்பட்ட இடம் சொர்க்கப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. (கூகிள் மேப் கொண்டு அந்த இடங்களை குறித்திருக்கிறேன்).
பயணம் தொடரும்…
- சுஜாதா தேசிகன்
முகப்பு படம் நன்றி : Saravanakumar Ramachandran
---------------------------------------------------------------
(1) ஸ்ரீ தேசிகன் அருளிய யதிராஜஸப்ததி
(2) ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை
(3) உபதேசரத்னமாலை
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மையறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் அருள்பெற்ற
நாதமுனிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமனமே உண்டோபேசு
(4) தாது வருடம் மாசி மாதம் சுக்லபட்ச ஏகாதசி தினத்தன்று தனது 93 வயதில் திருநாடு அலங்கரித்தார்.
(5) ”வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விகரத்தோட ஆதரிக்கும்” - ஸ்ரீவசனபூஷணத்தின் வாக்யம்; ”வேர் சூடுவார் மண்பற்றுப் போலே” - ஆசார்ய ஹ்ருதய வாக்கியம்
ஸ்ரீமத் பாகவதத்தில் கோபியர் கச்சித் துளஸி கல்யாணி கோவிந்த சரணப்ரியே என்று ராதையும் கண்ணனும் சென்ற திசை தேடிச்சென்றதையும் பௌரஜனவாஸிகள் நித்திரையுற்ற போது அவர்களை விட்டு இளையானோடும் தேவியுடனும் சக்கரவர்த்தித்திருமகன் சென்ற பின்னர் பௌரஜனவாஸிகள் ஆங்கிருந்த கக ம்ருக தருக்களிடம் எங்கள் பெருமான் எங்கு சென்றார் என்று கதறியதும் நினைவுக்கு வந்து விட்டது நாதமுனிகள் தேடியலைந்து அலைந்தது. அவருடைய சம்பந்தத்தால் மட்டிலுமே வீட்டுப் பெண்குழந்தைகளுக்கும் சென்ற வழிகாட்டிய க்ராமத்தார்க்கும் இளையோனுடனும் தேவியுடனும் சிறியதிருவடியுடனும் கூட காட்சியளித்த ராகவனின் சௌலப்யமும் கூடச் சொல்லித்தான் மாளுமோ. ஆழ்வார் திருவடிகளையும் ஆசார்யன் திருவடிகளையும் பற்றிக்கொள்வோர்க்கு கண்டறியாதன காணும் பேறு கிட்டும் என்றே இந்த வ்ருத்தாந்தம் சொல்லுகிறது எனப் புரிந்து கொள்கிறேன். ஹரி :
ReplyDeleteAahaa! Reading and reading again with tears swelling! You are giving such a treasure of details. Heart brimming with emotions and ecstasy. For some time nothing around me distracted by attention, while reading.
ReplyDeleteThank you Desikan for this indescribable, very poignant reading.
Something went wrong with Tamil Sellinam.
Thank you.
அத்புதம்
ReplyDelete🙏🙏
ReplyDelete