18. இராமானுசன் அடிப் பூமன்னவே - வண்டு
நாதமுனிகள் பரமபதம் அடைந்த சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து செல்வோமாக.
காவிரி தீரம் அமைதிகொண்டு எல்லா இடங்களுக்கும் கதிரவனை ஆபரணமாக அணிந்துகொண்டு விரைவாக வாய்க்கால் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று தன் ஈரத்தால் பயிர்களைச் செழிக்கச் செய்வதைப் போல் உய்யக்கொண்டார் ஆழ்வார்களின் ஈரத் தமிழ் பாசுரங்களைக் கொண்டு சென்ற இடங்களில் எல்லாம் பக்தி மரம் துளிர்விட்டுக் கூடுகட்டி நிற்கும் இடமானது(1)
இளங்காற்று தவழ்ந்த ஒரு நாள், சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோடு ஒன்று மோதி விளையாட, மீன்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டு இருந்த பொன்னி என்ற புண்ணிய நதியான காவிரியிலிருந்து பிரிந்த கொள்ளிட ஆற்றின் வடகரையில் திருவரங்கத்துக்கு அருகில் அன்பில் என்ற திவ்யதேச கோயிலுக்கு வெளியே ஓர் ஆலமரத்து நிழலில் உய்யக்கொண்டார் இராமனின் குணங்களை எடுத்துரைத்துக்கொண்டு இருந்தார்.
”இராமனின் குணங்களைப் பட்டியலிட முடியாது. கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்று ஆழ்வார் இராமனைக் கொண்டாடுகிறார்!” என்று கூறிய போது அவர் கண்களிலிருந்து நீர் விழுந்தது. சற்று நேரம் மௌனமாகக் கண்களை மூடிக்கொண்டு அமைதியானார்.
பறவைகள் உணவு தேடும் பொருட்டு மரங்களில் அமர்வது போல அந்தக் கூட்டத்தில் ஓரத்தில் நின்றுகொண்டு இருந்த பதினைந்து வயது மதிக்கத்தக்க பாலகனுக்கு உய்யக்கொண்டார் ஏன் கண்கலங்குகிறார் என்று புரியவில்லை.
உய்யக்கொண்டார் இராமாயணத்தை முடித்துவிட்டுக் கிளம்பும் போது அச்சிறுவன் அவர் அருகில் சென்று வணங்கி “ஐயனே! இராமபிரானைப் பற்றிக் கூறும் போது தங்களின் கண்கள் கலங்கியது. அதன் காரணத்தை அறிய ஆவலாக உள்ளேன்!” என்றான்
உய்யக்கொண்டார் அந்தச் சிறுவனை நோக்கி “அப்பா! என் ஆசாரியனான நாதமுனிகளின் நினைவு வந்தது, அதனால் கண்கலங்கினேன்” என்று தன் ஆசாரியன் எப்படி இராமனைத் தேடிச் சென்று பரமபதம் அடைந்தார் என்ற முழுக் கதையும் விவரித்த போது அந்தச் சிறுவனின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டு இருந்தது.
உய்யக்கொண்டார் அச்சிறுவனைப் பார்த்து “அப்பா உனக்கும் இந்த ஊர்தானா ? உன் திருநாமம் என்ன ?” என்று கேட்டார்
“ஐயனே! இப்படியே வட திருக்காவேரி என்ற கொள்ளிடம் வழியாகச் சென்றால் ஒரு யோசனை தூரத்தில் அழகிய சிறு கிராமம் ஒன்று இருக்கிறது. அதில் உள்ள அக்கிரகாரத்தில் வசிக்கிறேன். என்னை ‘ராமமிச்ரர்’ என்று அழைப்பர்” என்றான்.
“ஆகா! அந்த இராமனைக் குறித்துக் கூறியவுடன் அந்த இராமனே அடியேனைத் தேடிவந்தது போல இருக்கிறதே!” என்று அச்சிறுவனைப் பார்த்துக் கைகூப்பினார் உய்யக்கொண்டார்.
அந்தச் சிறுவன் அவர் திருவடிகளில் விழுந்து “உங்களுக்கு கைங்கரியம் செய்துகொண்டு உங்களின் அறிவுரைகளைக் கேட்க ஆவலாக உள்ளேன். என்னை உங்களின் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூற உய்யக்கொண்டார் அவனைத் தழுவி ஏற்றுக்கொண்டார்.
உய்யக்கொண்டாருடன் புறப்பட்ட ராமமிச்ரர் என்ற அச்சிறுவன், அவருக்குப் பணிவிடை செய்துகொண்டு அவரிடம் வேதாந்தார்த்தங்களை கற்றுக்கொண்டு இருந்த சமயம், உய்யக்கொண்டாரின் தேவியான ஆண்டாள் பரம பதித்துவிட, அன்று முதல் உய்யக்கொண்டாரின் இல்லத்தில் தளிகை கைங்கரியத்தை ராமமிச்ரர் செய்யத் தொடங்கினார்.
உய்யக்கொண்டாருக்கு செண்பகவல்லி, பங்கயச் செல்வி என்ற இரண்டு பெண் பிள்ளைகள். தாய் இல்லாத அந்தக் குழந்தைகள் ராமமிச்ரரை ‘அண்ணா அண்ணா’ என்று சுற்றிச் சுற்றி தங்களுக்கு வேண்டியவற்றை அவரிடம் கேட்பார்கள். ராமமிச்ரரும் தன் ஆசாரியனிடம் வைத்துள்ள அதே பக்தியை அந்தச் சிறுகுழந்தைகளிடமும் வைத்திருந்தார். பெற்ற தாய் போல் கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து நீராட்டி பூ வைத்துவிடுவார். நல்ல இனிப்பு பிரசாதங்களைச் செய்து தருவார். அவர்களுடன் விளையாடுவார். இரவு அவர்களுக்குக் குட்டிக் கதைகளைக் கூறி தூங்க வைப்பார்.
ஒரு நாள் ஊர் குழந்தைகள் எல்லாம் கூடி காவேரிக்குச் சென்று அதில் நீராடி, கட்டுச் சோறு எடுத்துச் சென்று அவ்விடத்தில் சாப்பிட்டுவிட்டு விளையாடிவரச் சென்றார்கள். உய்யக்கொண்டாரின் இரண்டு பெண் பிள்ளைகளும் அவர்களுடன் செல்ல ஆசைப்பட்டார்கள்.
உய்யக்கொண்டார் ராமமிச்ரரை அழைத்து தன் பெண் பிள்ளைகளுக்குச் சகாயமாகச் சென்றுவர நியமிக்க, குழந்தைகளை அழைத்துச் சென்றார்.
காவிரியில் நீராடிவிட்டு, கரையில் சாப்பிட்டுவிட்டு விளையாடிய பின், அவரவர்கள் இல்லம் திரும்பினர். திரும்பிவரும் சமயம் உய்யக்கொண்டாரின் குமாரத்திகள் வழிதப்பி ஒரு சிறு வாய்க்கால் சேறாயிருக்க அதைக் கடக்க முடியாமல் திகைத்து ”ராம அண்ணா! சேறும் சகதியுமாக வழுக்குகிறது .இந்த வாய்க்காலைத் தாண்ட பயமாக இருக்கு. ! மரப் பாலம் ஒன்று இருந்தால் சுலபமாக கடக்கலாம்” என்றார்கள்.
“அதற்கென்ன பாலம் கட்டிவிட்டால் போகிறது! பயப்படாதீர்கள்! ” என்று கூறிய ராமமிச்ரர் உடனே வாய்க்கால் குறுக்கே படுத்துக்கொண்டு “என் முதுகு பாலத்தின் மீது நடந்து செல்லுங்கள்” என்றார்
முகத்தில் புன்னகையும் சந்தோஷமும் குடிகொண்ட அக்குழந்தைகள் அவ்விதமே ராமமிச்ரரின் முதுகின்மீது நடந்து கால்வாயைக் கடந்தார்கள். சேது பாலம் கட்டும் போது இராமர் அணிலை அன்புடன் தடவிய போது உண்டான சுவடுகளைப் போல, ராமமிச்ரர் முதுகில் உய்யக்கொண்டாரின் பிஞ்சுக் குழந்தைகளின் காலடிச் சுவடுகள் பதிந்தது.
இல்லத்துக்குத் திரும்பிய குழந்தைகள் ஓடிச் சென்று, தந்தையான உய்யக்கொண்டார் மடியில் உட்கார்ந்து “தந்தையே ! நாங்கள் வரும் வழியில் சேறும் சகதியுமாக எங்களுக்கு வாய்க்காலைக் கடக்க முடியவில்லை. ராம அண்ணா என்ன செய்தார் தெரியுமா ? வாய்க்கால் குறுக்கே பாலம் போலப் படுத்துக்கொண்டு முதுகு பாலம் அமைத்துக் கொடுத்தார். நாங்கள் அண்ணாவின் முதுகின்மேல் நடந்து வாய்க்காலைக் கடந்தோம்!” என்றனர்.
இதைக் கேட்ட உய்யக்கொண்டார் ராமமிச்ரரின் உடை முழுவதும் ஈரமும் சேறுமாக இருப்பதைக் கண்டு “ராமா இப்படிப் படியாக்கிடந்து உம் முதுகை அடிவிடச் செய்யலாமா ?” என்று அன்புடன் கேட்டார்.
அதற்கு ராமமிச்ரர் “ஆசாரியரே! ‘அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை’ என்று பரகாலநாயகியாக நம் கலியன் மகிழ்ந்தது போல இன்று அடியேன் மகிழ்ந்தேன்” என்றார்.
உய்யக்கொண்டார் அவரை வியப்புடன் நோக்க ராமமிச்ரர் தொடர்ந்தார் “தூது செல்லும் வண்டு பறப்பதற்குச் சிறகுகள்தான் சாதனம். கால்கள் இல்லை. அப்படி இருக்க ஆழ்வார் அதன் ஆறு கால்கள் தொழுகிறார்! பெருமாளிடம் தூது சென்று திரும்பும் வண்டிற்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்று எண்ணி, உன் ஆறு கால்களையும் என் தலை நிறைய வைத்து தலையல்லால் கைம்மாறிலேன் என்று கூத்தாடிக் குதூகலித்தது போல, அடியேனுக்கு இந்த ஆறு கால்கள்!
இரண்டு கால்கள் தேவரீருடைய திருவடிகள், மேலும் இரண்டு தேவரீருடைய பத்தினி ஆண்டாள் அம்மையாருடையது. இன்னும் இரண்டு தேவரீருடைய குழந்தைகளுடையது.
தங்கக் கட்டியிலிருந்து இரண்டு குண்டு மணி தங்கமும் தங்கம் தானே! அது போல் செண்பக வல்லி, பங்கயச் செல்வி(6) என்ற தங்களின் குமாரத்திகளும் அடியேனுக்கு தங்கமே!” என்றார்.
உய்யக்கொண்டார் பேரானந்தம் பொங்கப் பெற்றவராய் சீடனாகிய ராமமிச்ரரைத் தழுவிக் கொண்டு “இதுவரை அடியேனுக்குப் பரசுராமர், தசரதராமன், பலராமன் என்று மூன்று இராமர்களைத் தெரியும். இன்று நீ எனக்கு நான்காவது ராமராகத் தெரிகிறாய் .பரசுராமருக்குப் பொறுமையில்லை. சக்கரவர்த்தி திருமகன் அரக்கர்களைச் சாய்த்தார். பலராமனோ மதுவைப் பருகினார். அந்தக் குறைகள் எதுவும் இல்லாத நான்காவது ராமராகச் சிறந்து விளங்குவாய்! (2).
முற்பிறவியிலே செய்த புண்ணியத்தின் பயனாகத் தோன்றும் அதிர்ஷ்டசாலிகள் இந்த உலகத்தில் என்னைப் போன்று யாரும் இல்லை. வைணவ சம்பிரதாயத்தில் தலை சிறந்த நெறியே ஆசாரிய தொண்டைப் பற்றி நிற்கும் நெறி ஆகும்.
கைங்கரியத்தை அடையாளமாகக் கொண்டு தான் இந்தச் சம்பிரதாயத்தில் பெருமை. ஜெயன் விஜயன் என்று பெயர் இருந்தாலும் அவர்களைக் கோயில் காப்பான், வாசல் காப்பான் என்று கோதை கைங்கரியப் பெயரால் தான் சிறப்பிக்கிறாள். ஆசாரிய புத்திரிகளின் மணற்கால் பட்ட திருமேனியைத் தரித்து பரிபூரணக் குணங்களை உடையவராய் இருப்பதால் இன்றிலிருந்து உம் பெயர் ’மணக்கால் நம்பி!’ என்று அழைக்கிறேன். இதே பெயருடன் நீரும் உம்மூரும்(7) புகழ்பெற்று விளங்கும், என்று அருகில் அழைத்து தம் திருவடிகளை மணக்கால் நம்பியின் திருமுடியில் வைத்து ஆசீர்வதித்து, “உமக்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?” என்று கேட்க
மணக்கால் நம்பி “உற்றேன் உகந்து பணிசெய்து உன்பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் என்று தேவரீர் திருவடிகளில் சேவையே அடியேன் வேண்டுவது” என்றார்
உய்யக்கொண்டார் உகந்து அந்த உகப்பின் மிகுதியால் மணக்கால் நம்பி வலது காதில் ”நாதமுனிகள் அடியேனுக்கு உபதேசித்த பெருமைமிக்க த்வயத்தை பரிசாக உமக்கு உபதேசிக்கிறேன் கேட்பாயாக” என்று நாதமுனி தமக்கு உபதேசித்த பொருள்கள் என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் உய்யக்கொண்டார் மனம் மகிழ்ந்து உபதேசித்தார்.
பின்பு சில நாள் கழித்து மணக்கால் நம்பி திருவாய்மொழி காலட்சேபத்தில் "திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே"(3) என்ற பாசுரத்தை விவரித்தார்.
”பிரமனையும் மற்ற தேவதைகளையும் இந்த உலகையும், உயிர்களையும் எம்பெருமான் உருவாக்கினான். அந்த எம்பெருமானே திருக்குருகூரிலே ஆதிப்பிரானாக நிற்கிறான், பிறகு எதற்கு நீங்கள் வேறு தெய்வங்களை நாடுகிறீர்கள்? என்று ஆழ்வார் உபதேசம் செய்தவுடன் அதைக் கேட்ட எல்லோரும் திருந்தினார்கள்.
திருந்தியவர்கள் எல்லோரும் ஆழ்வாரிடம் நன்றி கூறி அவர் திருவடி தொழ அவர் முன் வந்த நின்றார்கள்.வந்தவர்களில் திருக்குருகூர் மக்களுடன் ஸ்வேதத்தீப வாசிகளும் அங்கே குழுமியிருந்தார்கள். அதைக் கண்டு ஆழ்வார் ‘பொலிக பொலிக’ என்று அவர்களை வாழ்த்தினார்.
அப்போது அங்கே குழுமியிருந்தவர்கள். “ஆழ்வாரே நீர் இப்போது பாசுரம் பாடினீர் அதைக் கேட்டு நாங்கள் திருந்தினோம். உமக்குப் பிறகு என்ன நடக்கும் ? கலி தொடக்கத்தில் இருக்கிறோம்.பல காலம் கழித்துக் கலி முற்றும் போது நம்முடைய சந்ததியினர் எல்லோரும் எப்படி உய்யப் போகிறார்கள் ?” என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு ஆழ்வார் ”அஞ்ச வேண்டாம்! ’பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் கலியுங் கெடும் கண்டு கொண்மின்’ கலியின் கொட்டத்தை அடக்க ஓர் ஆசாரியர் அவதரிக்கப் போகிறார்!” என்று ஆழ்வார் பதில் கூறினார் என்ற உய்யக்கொண்டார் நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் அந்த வருங்கால பவிஷ்யதாசாரியரை கனவில் காட்டிக்கொடுத்தார் என்று கூறிய போது மணக்கால் நம்பி
”அந்த பவிஷ்யதாசார்யர் பற்றி மேலும் விவரித்து கூறுங்கள்” என்றார்
”பொலிவும், கருணையும் உடைய . சந்திரனைக் கண்டு கடல் பொங்குவது போல இவரைக் கண்டு வைணவர்கள் மகிழ்ச்சியில் பொங்கப் போகிறார்கள். தம்முடைய குணங்களாலும், திருமேனி ஒளியாலும் எல்லோருடைய உள்ளத்தையும் தம்மிடம் ஈடுபடச் செய்யப் போகிறார்(4). இந்த பவிஷ்யதாசார்யர் நினைத்தே பார்க்க முடியாத பொலிவுடன் அவரை விவரிக்க வார்த்தைகளே கிடையாது என்று நாதமுனிகள் அடிக்கடி கூறுவார்!” என்றார் உய்யக்கொண்டார்.
“நாதமுனிகள் பெற்ற பேறு யார் தான் பெறப்போகிறார்கள்? அவர் கனவில் கண்டு அனுபவித்ததை நாம் அனுபவிக்க இயலாது. பெருமாளை நாம் அனுபவிக்கக் கோயிலில் அர்ச்சாரூபத்தில் இருப்பது போல, பவிஷ்யதாசார்யர் திருமேனி விக்ரகம் இருந்தால் இந்த உலகமே அதன் மீது விழுந்து உய்ய வழி இருக்குமே!” என்றார் மணக்கால் நம்பி
உய்யக்கொண்டார் மௌனமாக இருந்தார்.
பயணம் தொடரும்...
- சுஜாதா தேசிகன்
23-11-2020
--------------------------------------
(1)கூடுகட்டி நிற்கும் இடம் - உறையுமிடம் தேவதேவன் அருள் செய்ய மறுத்தாலும் அவன் கையிலுள்ள சக்கரம் உறுதியாக அருள்புரியும் ஏனெனில் அஃது அருள்கூடுகட்டி நிற்குமிடம்
(2) (4) ஸ்வாமி தேசிகனின் யதிராஜஸப்ததி.
(3) ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்,
குன்றம்போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே.
(5) பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.
(6) கற்பனை பெயர்கள் - திருவெள்ளறை தாயார் பெயர்கள்.
(7) மணக்கால் என்ற ஊர் இன்றும் லால்குடிக்கு அருகில் இருக்கிறது. இந்த ஊரின் பழைய பெயர் என்ன தெரியவில்லை.
ஆஹா! மிக அருமையான தெளிவான கோர்வையான விஷயங்கள்.தன்யோஸ்மி!
ReplyDeleteதாஸன். 🙏🙏
ReplyDeleteEthirajasapthathi quote was wonderful.
ReplyDelete