பரதனும் நம்பாடுவானும்
திருப்பாவையின் முக்கியமான பாசுரம் நடுவில் இருக்கும் ‘எல்லே இளங்கிளியே’ என்ற இந்த பாசுரம் தான். திருப்பாவையில் மொத்தம் 30 பாசுரம் என்றால் இந்தப் பாசுரம் எப்படி நடுவில் வரும் என்ற கேள்வி எழும். மார்கழித் திங்கள் தொடங்கி சிற்றங் சிறுகாலை முடிய ஆண்டாள் கோபிமார்கள் பாவனையில் பாடுகிறாள். முப்பதாம் பாசுரமாகிய ”‘வங்கக் கடல் கடைந்த” என்ற பாசுரம் ”பட்டர்பிரான் கோதை சொன்ன” என்று கை எழுத்திட்டு ஆண்டாளாகவே பாடுகிறாள். அதனால் இதைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆக 29 பாசுரத்தில் பதினான்கு பாசுரங்களை இப்படியும் அப்படியும் பதினான்கு பாசுரங்களை ஒதிக்கிவிட்டால் நடுவில் இருக்கும் பாசுரம் ’எல்லே இளங்கிளியே’.
இதில் என்ன விஷேச அர்த்தம் ? ஸ்ரீ வைஷ்ணவத்தின் மிக உயர்ந்த லக்ஷனம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. அடியேன், தாசன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது மற்றவர்களின் அபராதங்கள் ( தவறுகளை) தங்கள் மீது போட்டுக் கொண்டு பரஸ்பர நீச பாவத்துடன் இருக்க வேண்டும். இந்த மிக உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தை ஆண்டாள் ‘நானே தான் ஆயிடுக’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டாள்.
ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராமர் காட்டுக்குச் சென்றுவிட. பரதன் வந்து நடந்தவற்றை அறிந்துகொண்டு ராமர் காட்டுக்குச் சென்றதற்குக் காரணம் எது என்று ஒரு பட்டியல் போடுகிறார்.
முதலில் கூனி தன் தாயைப் பார்த்து அவள் மனதைக் கலைத்தது தான் காரணம் என்று எண்ணுகிறார். பிறகு கூனி சொன்னால் என்ன என் தாய்க்கு எங்கே புத்தி போனது அதனால் கைகேயி தான் காரணம் என்று எண்ணுகிறார். தாய் தான் கேட்டாள் என்றால் தன் தந்தை எப்படி இதற்குச் சம்மதித்தார் அதனால் அவர் தான் காரணம். பிறகு ஸ்ரீராமர் ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராமர் தான் காரணம் என்று வரிசையாகச் சொல்லிவிட்டு, கடைசியாக ராமர் காட்டுக்குச் சென்றதற்குக் காரணம் தான் பிறந்தது தான் காரணம் என்று எண்ணி ’நானே தான் காரணம்’ என்று இல்லாத குற்றத்தைத் தன் மீது ஏற்றிக்கொள்கிறார் பரதாழ்வான்.
இந்த சமயத்தில் பரதன் “ராமன் காட்டுக்குப் போவதற்கு நான் காரணமாக இருந்தால் எனக்கு இந்த பாவங்கள் எல்லாம் வந்து சேரட்டும்” என்று தனக்கு தானே சபதமிட்டுக்கொள்கிறர். மொத்தம் 38 பாவங்களைப் பட்டியலிடுகிறான். கைசிக புராணத்தில் நம்பாடுவான் செய்த 18 விதமான சத்தியங்களில் பல பரதன் சொன்னவற்றுடன் ஒத்துப்போகிறது.
நம்பாடுவான் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று இரவு அழகிய நம்பியைச் சேவிக்கக் காட்டுவழியே வரும் வழியில் அவனைப் பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு “நான் உன்னை உணவாகச் சாப்பிடப் போகிறேன்” என்றது. அதற்கு நம்பாடுவான், “நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். அழகிய நம்பியைச் சேவித்துவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்” என்று கூற அதை ராட்சசன் நம்ப மறுக்கிறான்.
அதற்கு நம்பாடுவான் “நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பரம பக்தன். நான் பொய்சொல்லி மாட்டேன். வேண்டுமானால் நான் சத்தியம் செய்துவிட்டுப் போகிறேன்” என்று பதினெட்டு விதமான சத்தியங்களைச் சொல்லி அனுமதிக்குமாறு நம்பாடுவான் ராட்சசனிடம் மன்றாடுகிறான்.
பரதன் செய்த 38, நம்பாடுவான் செய்த 18ம் முழுவதும் பட்டியலிட்டால், இது தான் ஆண்டாள் சொன்ன ‘மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்” பட்டியல்.
பரதன்(ப) செய்த பிரக்ஞைகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போதும் “ராமன் காட்டுக்குச் செல்வதற்கு நான் காரணமாக இருந்தால்…..…… அந்தப் பாவம் என்னை வந்து சேரட்டும் “ என்று சேர்த்துப் படிக்கவும்
அதே போல் நம்பாடுவான்(ந) செய்த பிரக்ஞைகள் படிக்கும் போது “நான் திரும்ப வரவில்லை என்றால் …. அந்த பாவம் என்னை வந்து சேரட்டும்” என்று படிக்கவும்.
‘Venn diagram Intersection of two sets மாதிரி பரதன், நம்பாடுவான் செய்த சத்தியங்கள் B(arathan) ∩ N(ambaduvan)’ சில இடங்களில் ஒத்துப் போகிறது அவை கீழே…
(ப) ஆசாரியன் உபதேசித்த நல்வழி உபதேசம் அனைத்தும் எனக்குச் சிறிதும் பயன்படாது மறந்து போகட்டும் ( அதாவது சத்தியம் தவறுதல் )
(ந) சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ
(ப)மலமூத்திரங்களைச் சூரியனை நோக்கி எவன் கழிக்கிறானோ
(ந) எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் உணவு உண்ணுகிறானோ
(ப) எவன் ஒருவன் தூங்கும் பசுவைக் காலால் உதைக்கிறானோ, இளங்கன்றுக்குப் பால்விடாமல் ஒட்டக் கறந்து பருகுகிறானோ
(ந) தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவைக் குடிக்கவிடாமல் தடுக்கிறானோ
(ப) வேலையாட்களிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் அனுப்பும் எஜமானனுக்கு
(ந) ஒரு பொருளை தானமாகக் கொடுப்பதாகக் கூறி பின் மறுக்கிறானோ
(ப) குருவை அவமதிப்பவன். குருவைப் பற்றி வம்பளப்பவன்.
(ந)எவன் ஒருவன் குருவின் பத்தினி, அரசனின் பத்தினியை அபகரிக்கின்றானோ
(ப) நண்பனுக்குத் துரோகம் நினைப்பவன்
(ந) எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபகரிக்கின்றானோ
(ப)மக்களிடம் வருமானத்தில் ஒரு பங்கை வரியாக வசூலித்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்யாத அரசன்
(ந) எவன் ஒருவன் பூமி தானம் செய்துவிட்டு அதைத் திரும்பவும் அபகரிக்கிறானோ
(ப)தனக்காகவே உண்ணும் ஒருவன்
(ந) எவன் ஒருவன் சாப்பிடும் போது மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிட்டு, பந்தி வஞ்சனம் செய்கின்றானோ
(ப) பிறர் செய்த உதவியை மறப்பது மட்டுமின்றி அவரையே இகழ்ந்து பேசுவது
(ந) எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ
(ப) எவன் கள், இறைச்சி, விஷம் போன்றவற்றை விற்பதால் வரும் வருமானத்தில் ஜீவிக்கிறானோ
(ந)எவன் கள்ளைக் குடிக்கிறானோ
(ப) எவன் ஒருவன் மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யத் தவறுகிறானோ
(ந) தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் புறக்கணிக்கிறானோ
இதில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். நம்பாடுவான் ‘கைங்கரியம் செய்துவிட்டு வருகிறேன்’ வரவில்லை என்றால் எனக்கு இந்தப் பாவங்கள் வந்து சேரட்டும் என்கிறார். பரதனோ ‘நானே தான் ஆயிடுக’ என்று சொல்லுகிறார். இரண்டும் ஸ்ரீவைஷ்ணவத்தின் மிக முக்கியமான ஒன்று.
மேற்கூறிய பட்டியலில் கிடைத்த பிரசாதத்தை எல்லோருக்கும் பகிர்ந்து அளித்துப் புசிக்க வேண்டும் என்பது. ஆண்டாள் ‘பெருமாள்’ என்ற பிரசாதத்தை ‘செல்வச் சிறுமீர்காள்’ என்று ”வையத்து வாழ்வீர்காள்!” என்று உலகத்தில் இருக்கும் எல்லோரையும் வாருங்கோள் என்று கூப்பிட்டு “கூடியிருந்து குளிர்ந்து” அனுபவிக்கிறாள்.
நம்பாடுவான் பல சத்தியங்கள் செய்து ”வாசுதேவனை விட்டு மற்ற தேவதைகளை வணங்குபவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, ஸ்ரீமந் நாராயணனைத் தவிர மற்ற தேவதைகளோடு சமமாக நினைப்பவர்கள் பாவத்தை நான் அடையக்கடவது” என்று கடைசி சத்தியம் செய்கிறார். ஆண்டாள் இப்படி எல்லாம் கஷ்டப்படவே இல்லை முதல் பாசுரத்திலேயே ’நாராயணனே நமக்கே’ என்று சொல்லிவிட்டாள்.
- சுஜாதா தேசிகன்
26-11-2020
கைசிக ஏகாதசி
( முன்பு எழுதிய சீதாராம திருப்பாவையிலிருந்து ஒரு பகுதி )
👌
ReplyDeleteNaane dhaan aayiduha enbadhrku innum vilakkam alithal nalladu.
ReplyDelete