Skip to main content

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம் 



மணக்கால் நம்பி “ஆளவந்தாரே ! உம் பாட்டனார் நாதமுனிகள் என் ஆசாரியனுக்கு ஒரு ரகசியத்தைக் கூறியுள்ளார் அதையும் உமக்குச் சொல்லுகிறேன்!” என்றார்

நம்பி என்ன கூறப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார் ஆளவந்தார். 

 ”ஆளவந்தாரே! இப்போது நாம் கூறப் போகிற விஷயங்கள் பல காலமாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரும் அதை பாதுகாப்பீர்!” என்று நாதமுனிகளுக்கு ஆழ்வார்திருநகரியில் சொப்பனத்தில் நம்மாழ்வார் கூறிய விஷயங்கள் அனைத்தையும்  விரிவாக கூறி, “நம் தரிசனத்தை நெடுங்காலம் திருவரங்கத்தில் பலருக்குச் சென்றடையுமாறு செய்வீராக” என்று ஆசி வழங்கினார். 

ஆளவந்தார் “நம்பியே! இந்த மஹா அனுபவத்தை என்னவென்று கூறுவது! அன்று மடுக்கரையிலே கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றிய பெருமாள் போல் எம்மை இந்த அற்பமான ராஜபோக வாழ்க்கையிலிருந்து இன்று காத்தீர்!“ என்றார். 

மணக்கால் நம்பி தன்னை சந்தித்து தூதுவளை கீரையை கொடுத்த நாள் முதல் திருவரங்கம் வரை அழைத்து வந்து திருவரங்கனைக் காட்டிக் கொடுத்து, நாதமுனிகள் அவருக்குக் கூறிய சொப்பன விஷயங்கள் யாவையும் ஒவ்வொன்றாக நினைக்கும் போது அவர் உள்ளம் பிரமிப்பில் ஆழ்ந்தது. மணக்கால் நம்பிக்கு கைமாறு ஏதும் கிடையாது என்று அறிந்து அவரையே பற்றுக்கோடாக கொண்டு திருவரங்கனின் திருவடி நிழலில் மணக்கால் நம்பியோடு ஆளவந்தார் வாழ்ந்து வந்தார். 

அந்த நாளில், தேன் கூட்டைச் சுற்றி மொய்க்கும் தேனீக்கள் போல ஆளவந்தாரைச் சுற்றி பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி தெய்வத்துக்கரசு நம்பி, சிறுபுள்ளூர் ஆவுடைப்பிள்ளை, கோமடத்தை சார்ந்த திருவிண்ணகரப்பன், வேதத்தில் வல்லவரான திருமலையாண்டான், ஈசாண்டான், தெய்வவாரி ஆண்டான், திருமோகூர் அப்பன், திருக்கச்சி நம்பி, வானமாலை ஆண்டான், மாறனேறி நம்பி, ஆளவந்தார் ஆழ்வார், திருமோகூர் நின்றார், திருக்குருகூர்த்தாசர், வகுளாபரணச் சோமாசியார் தெய்வப் பெருமாள், திருமாலிருஞ்சோலைத்தாசர், அம்மங்கிசீயர் ஆண்டான் என்று மேலும் கணக்கற்ற பலர் ஆளவந்தார் திருவடி நிழலில் சிஷ்யர்களாக இருந்தார்கள். 

திருவரங்கத்தில் மணக்கால் நம்பி தமக்கு உபதேசித்த அர்த்தங்களை எல்லாம் தம் சிஷ்யர்களுக்கு உபதேசித்து சூரியனைப் போலப் பிரகாசிக்கும் ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார் ஆளவந்தார். 

ஒரு நாள் ஆளவந்தார் சிஷ்யர்களுக்குத் திருவிருத்தம் பாசுரத்தை விவரிக்க,  சிஷ்யர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள். 

ஆளவந்தார் திருமலை நம்பியிடம் “அடுத்த பாசுரத்தை பாடுங்கள்” என்றார். திருமலை நம்பி 

கடம் ஆயினகள் கழித்து* தன்
கால் வன்மையால், பல நாள்
தடம் ஆயின புக்கு,* நீர் நிலை
நின்ற தவம் இது கொல்**
குடம் ஆடி, இம் மண்ணும் விண்ணும்
குலுங்க உலகு அளந்து,*
நடமாடிய பெருமான்* உரு
ஒத்தன, நீலங்களே?

என்ற பாசுரத்தை இனிய குரலில் பாட அதை மெய்மறந்து எல்லோரும் கேட்டார்கள். ஆளவந்தார் அந்தப் பாசுரத்தின் அர்த்தத்தைக் கூற ஆரம்பித்தார். 

ஆழ்வார் பராங்குச நாயகியாக பாடும் பாசுரம் இது. இதில் ஆழ்வார் மலர்களைப் பார்த்துக் கேட்கிறார் ‘நீலோற்பல மலர்களே!  குடக்கூத்து ஆடியவன், இந்த மண்ணும் விண்ணும் குலுங்கும்படி உலகை அளந்து விளையாடியவன், அந்தப் பெருமானின் திருமேனி நிறத்தை நீங்கள் பெற்றது எப்படி? காடுகளிலே பூக்காமல், நீர்நிலைகளில் ஒற்றைக்காலில் நின்று,  தவம் செய்து, அந்தத் தவத்தின் பயனாக எம்பெருமானின் திருமேனி நிறத்தைப் பெற்றீர்களோ ?” என்று ஆழ்வார் நாயகியாக தன் ஆற்றாமையை போக்கிக்கொள்ள  தன் கவனத்தைத் திருப்பி உலகில் உள்ள மற்ற பொருள்களைக் காண முற்பட,  அப்பொருள்களிலும் எம்பெருமானையே அவளுக்கு நினைவூட்டி ஆழ்வாரை நலியச் செய்கிறது!” என்றார். (1)

அப்போது ஆளவந்தார் சிஷ்யர்களில் ஒருவர் “எப்படி எல்லாப் பொருட்களும் எம்பெருமானை நினைவூட்டும் ? உலகுக்கும் எம்பெருமானுக்கும் இடையே உள்ள தொடர்பு யாது ? ” என்றார் 

அச்சமயம் மணக்கால் நம்பி உள்ளே நுழைந்தார். எல்லோரும் ஆச்சரியத்தில் எழுந்துகொண்டார்கள். ஆளவந்தார் நம்பியின் திருவடியில் விழுந்தார். 

மணக்கால் நம்பி ”ஆளவந்தாரே! கோஷ்டியை கலைக்க வேண்டமே என்று உம்முடைய ரசனையான விஷயங்களை வெளியிலிருந்து சற்று நேரம் கேட்டுக்கொண்டு இருந்தேன்.  உம் பாட்டனாரான நாதமுனிகளே கூறுவது போல அல்லவா இருக்கிறது!” என்று ஆளவந்தாரை அணைத்துக்கொண்டார்.

மணக்கால் நம்பி ”உம் சிஷ்யன் கேட்ட கேள்விக்கு அடியேன் பதில் கூற அனுமதி உண்டா  ?” என்றார் சிரித்துக்கொண்டு. 

” பெரும் பாக்கியம் அன்றோ எங்களுக்கு!”  என்றார் ஆளவந்தார். 

மணக்கால் நம்பி “இதே கேள்வியை நாதமுனிகளின் சிஷ்யரான குருகை காவலப்பனை நோக்கி ஒருவர் கேட்டார். அதற்கு அப்பன் அவரிடம் ‘எந்த உலகத்துக்கும் எந்த எம்பெருமானுக்கும் உள்ள தொடர்பைக் கேட்கிறாய் ?  ஜீவாத்மாவிற்கும் நம் உடம்பிற்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ அதே போலத் தான் எம்பெருமானுக்கும் இந்த உலகத்துக்கும். 

இந்த உலகமே அவனுடைய சாரீரம். உடலுக்குள் உயிர் இருப்பது போல், உயிருக்குள் எம்பெருமான் உறைகிறான்!’ என்றார் குருகைகாவலப்பன்.  கேள்வி கேட்டவர் குருகைகாவலப்பனிடம் இன்னொரு கேள்வி கேட்டார் “எனக்கு எம்பெருமானை நினைப்பதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்” என்றார் அதற்கு காவலப்பன் “நான் அதற்குப் பதில் சொல்லுகிறேன். நீ எனக்கு எம்பெருமானை மறப்பதற்கு ஒரு வழி சொல்லு பார்க்கலாம்!” என்றார். அதாவது எல்லா பொருள்களுக்குள்ளும் எம்பெருமான் உறைகின்றான். எனவே எந்தப் பொருளைக் கண்டாலும் அப்பொருளில் எம்பெருமான் நினைவு வருகிறது! இதை தானே பராங்குச நாயகியும் சொல்லுகிறார் அன்றோ !” என்றார் 

எல்லோரும் மணக்கால் நம்பியின் பதிலைக் கேட்டு வியந்த சமயம், மணக்கால் நம்பி ஆளவந்தாரைக் கருணையுடன் அருகில் அழைத்து மெதுவாக ”உம் பாட்டனாரான நாதமுனிகள் இன்னுமோர் ரகசியத்தை குருகைகாவலப்பனிடத்தில் கொடுத்துள்ளார்! அது யோக ரகசியம். நீர் அதை அவரிடம் சென்று கற்றுக்கொள்ளும்!” என்றார் 

“ஸ்வாமி ! அது உங்களிடம் இல்லாமல் போனதன் காரணம் என்ன ?” என்று ஆளவந்தார் கேட்க அதற்கு நம்பி ”நாதமுனிகள் அதை அடியேனுடைய ஆசாரியான உய்யக்கொண்டாருக்கு அதை உபதேசிக்க அழைத்த போது, மக்கள் உய்ய ஆழ்வாருடைய அருளிச் செயல்களே நிலையானது என்று கருதினார். அவருக்கு இல்லை என்பதால் அடியேனுக்கும் அது இல்லாமல் போயிற்றி! ஆனால் நீர் அதை அறிந்துக்கொள்ளும்!” என்றார்(2)

அறிந்துகொள்ள வழி ஏதும் உள்ளதா ?” என்றார் ஆளவந்தார் 

“நாட்டை ஆளும் அரசன் ஒருவன் தனது அரசி கருவுற்றிருக்கும் சமயம், குழந்தை பிறப்பதற்கு முன்னே தான் இறந்துவிடக் கூடிய சூழ்நிலை ஏற்படும் போது தான் இறக்கும் தருவாயில் தனது செல்வங்களை எல்லாம் பத்திரமாக ஒரே இடத்தில் வைப்பது தவறு என்று எண்ணி  பற்பல இடங்களில் வைத்துவிட்டுச் செல்லுவது போல உம் பாட்டனார் நாதமுனிகள் வேதாந்தக் கருத்துக்களை எல்லாம் உமக்கு உபதேசிக்குமாறு பலரிடத்தில் கொடுத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்! யோக ரகசியமானது வீரநாராயணபுரம் அருகில் குருகைகாவலப்பனிடம் இருக்கிறது”  என்றார். 

ஆளவந்தார் “நம்பியே! இப்பொழுதே புறப்பட்டுச் சென்று அந்த யோகரகசியத்தைக் அறிந்துகொள்ள விடை கொடுத்தனுப்ப வேண்டும்!” என்றார் 

நம்பியும் “ஒப்பற்ற ஆளவந்தாரே சென்று வாரும்!” என்றார் 

ஆளவந்தாரும் அவருடைய சீடர்களும் திருவரங்க நகரை விட்டுப்புறப்பட்டு வீர நாராயணபுரம் நோக்கி  தன் பயணத்தை தொடங்கினார்கள்.

சோலைகள் நிறைந்த காட்டுமன்னார் கோயிலை அடைந்து அங்கே மன்னாரை வழிபட்டு, பிறகு குருகைகாவலப்பன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார்கள்.  மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம்அங்கே  புதர்கள் நிறைந்த ஒரு சிறு குகைக்குள்ளே முனிவர் ஒருவர் யோக நிலையில் இன்புற்று இருந்த காட்சியை ஆளவந்தார் கண்டார். 

சற்று அருகில் நெருங்கி அவரை வணங்கிய ஆளவந்தார் அவர் முன்னாலே நின்றால், இருமுதல், தும்முதல், அடியோசை, போன்ற ஓசை அவரின் யோக நிலையைக்  கலைத்துவிடும் என்று எண்ணி தன் சிஷ்யர்களை சைகையால் கைகாட்டி மௌனமாய் இருக்க வேண்டினார். 

பின் ஒரு பெரும் பாறைக்கு  பின் மறைவாக நின்று குருகைகாவலப்பன் கண் விழிக்க காத்துக்கொண்டு இருந்தார்கள். எங்கும் அமைதி குடிகொண்டு இருக்க அப்போது கனீர் என்ற ஒரு குரல் கேட்டது. 

“இங்கே சொட்டைக் குலத்தைச் சார்ந்தவர் எவரேனும் இருக்கிறீர்களா ? ”

அந்த குரல் குருகைகாவலப்பனுடையது என்று சொல்லவும் வேண்டுமோ? 

மறைவிலிருந்து வெளிப்பட்ட ஆளவந்தார் ”அடியேன்! யமுனைத்துறைவன். சொட்டை குலத்தில் அவதரித்த ஒப்பற்ற நாதமுனிகள் என் பாட்டனார்!” என்று சொல்லி அவர் திருவடியில் விழுந்து எழுந்து “இங்கு வந்திருப்பதை எவ்வாறு அறிந்தீர்?” என்றார் ஆச்சரியத்துடன். 

குருகைகாவலப்பன் ”எம் ஆசாரியனின் குல கொழுந்தாக விளங்கும் யாமனரே! கரிய நிறத்து திருமால் என்னுடம் சேர்ந்து அனுபவிக்கும் சமயத்தில் திருமகள் அவனை அணைத்துக்கொண்டாலும் அவளை ஏறெடுத்தும் பாராமல் என்னோடு இன்புற்று இருப்பான். இன்று எனக்கு பின்னாலே நீர் நிற்பதை, அந்த அழகிய கண்ணன் என் தோளை அழுத்தி, எட்டிப் பார்த்து மகிழ்ந்து,  என் கழுத்தையும் திருப்பிப் பார்க்க செய்தான்! இவ்வாறு அவன் சொட்டைக் குலத்தைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு எவர்க்கும் செய்ய மாட்டான். அதனால் அந்த குலத்தில் பிறந்தவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா என்று வினவினேன்!” என்றார் 

ஆளவந்தார் “ஒப்பற்ற அப்பனே! நீங்கள் அடியேனுக்கு யோக ரகசியத்தை உபதேசிக்க வேண்டும்!” என்றார் பணிவுடன். 

”அப்படியே செய்கிறோம். நீரும் உம்முடைய சிஷ்யர்களும் இன்று புறப்பட்டு சென்று வருகிற குருபுஷ்ய மாசத்திலே குருபுஷ்ய யோகத்திலே அபிஜித் முகூர்த்தத்தில் என் குருவாகிய நாதமுனி எனக்கு பரமபதத்தை அருளுவார். அதனால் அதற்கு முன்னதாக வாரும்! அன்றைய தினம் அவர் முன்பு என்னிடத்தில் ஒப்படைத்துள்ள யோக ரகசியத்தை உமக்கு உபதேசிக்கிறேன், இப்போது புறப்பட்டு செல்வீராக” என்றார் 

ஆளவந்தாரும் அவர் சிஷ்யர்களும் அவர் கூறியவற்றை ஓலையில் எழுதிக்கொண்டு மீண்டும் திருவரங்கம் நோக்கி புறப்பட்டார்கள். 

திருவரங்கன் ஆளவந்தாருக்கு வேறு திட்டம் ஒன்றை வகுத்து வைத்திருந்தான்!

- பயணம் தொடரும்.. 

- சுஜாதா தேசிகன்
12-06-2021

----------------------------------------------------------------------------
(1) திருவிருத்தம் - குருகைகாவலப்பன் ஐதீகம். 
(2) பிணம் கிடக்க மணம் புணராலாமோ”  என்றது குருபரம்பரை 

Comments

Post a Comment