Skip to main content

கடைசியாக வந்த ‘க்ரேஸி’

கடைசியாக வந்த ‘க்ரேஸி’


47  நாட்கள் முன் ( மே-1 அன்று) சென்னையில் இருந்தேன். மதியம் வெயிலில் வெளியே போக முடியாமல் பேப்பரை பார்த்துக்கொண்டு இருந்தபோது “CPL” Crazy Premeir League என்று நண்பர் க்ரேஸி மோகனின் நாடகம் கிருஷ்ண கான சபாவில் மாலை 7 மணிக்கென்று அறிவிப்பு இருந்தது.  க்ரேஸி மோகனிடம்  பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அவருக்குப் போன் செய்தேன். பதில் இல்லை.

பள்ளி படிக்கும்போது எங்கள் வீட்டில் தினமும் க்ரேஸிமோகன், எஸ்.வி.சேகர் நாடகத்தைத் தினமும் இரவு தூங்க போகும்போது கேட்போம். ”க்ரேஸிதீவ்ஸ் இன் பாலவாக்கம்”, அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மீசை ஆனாலும் மனைவி என்ற நாடகன்களின் வசனம் எல்லாம் மன்ப்பாடம். இரவு தூங்க போகும் முன் மிகுந்த மன நிறைவு தந்தது.

நானும் அமுதனும் கிளம்பிகொண்டு இருந்தபோது க்ரேஸிஅழைத்தார்

“தேசிகன்.. எப்படி இருக்கீங்க… சொல்லுங்க” என்றார்.

“சார் இன்னிக்கு உங்க டிராமா பார்க்க வருகிறேன்..”

“என் சீன் எல்லாம் லேட்டாகத் தான் வருது.. அதனால் நான் கொஞ்ச லேட்டா வருவேன்.. அங்கே பார்க்கலாம்” என்றார்.

டிராமாவில் இரண்டு இடத்தில் பலத்த கைத்தட்டல் கேட்டது இன்றும் நினைவு இருக்கிறது. நாடகத்தில் ஒரு காட்சி காது கேட்காத இருவர் பேசிக்கொள்ளும் காட்சி. அப்போது மின்சாரம் தடைபட, மைக் வேலை செய்யவில்லை. உடனே மாது என்ற பாலாஜி இப்ப உங்களுக்கும் காது கேட்காது என்ற டைமிங் ஜோக்கு பலத்த கைத்தட்டல். அடுத்து கடைசியாக க்ரேஸிவந்தவுடன் அதே அளவு கைத்தட்டல். இரண்டு கைத்தட்டலும் நகைச்சுவைக்குக் கிடைத்த பாராட்டு.

க்ரேஸிமோகனை முதன் முதலில் நான் சந்தித்தது சுஜாதா அவர்களின் வீட்டில் தான். சுஜாதவிற்கு உடம்பு முடியாமல்  அம்புலன்ஸ் வந்த சமயம் ” சுஜாதா சார் வீட்டுக்கு முன் ஆம்புலன்ஸ் நிற்கிறதே என்று உள்ளே வந்தேன்” என்று அன்று சுஜாதாவை கீழே அழைத்துச்செல்ல உதவினார். என்ன ஆச்சு என்று என்னிடம் கேட்டு, பதில் சொல்லுவதற்குள் ஆம்புலன்ஸ் கிளம்பியது. 

டிராம முடிந்து அவரைச் சந்தித்தபோது மேக்கப்பை யுடிகோலோன் தடவி வழித்துகொண்டு இருந்தார். அவரைச் சுற்றி யுடிகோலோன் வாசனை போல்  ரசிகர் கூட்டமும் சூழ்ந்திருந்தது.

“வாங்க … சுஜாதா தேசிகன்….”.

“பாலாஜி இவர் தான் சுஜாதா தேசிகன் நல்லா எழுதுவார்…” என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

என் பையனிடம் “என்ன படிக்கிற ?”  என்று கேட்டுவிட்டு சில நிமிஷம் பேசிவிட்டு கிளம்பிவிட்டோம்.

இது தான் நான் அவரிடம் கடைசியாகப் பேசினேன்.

சுஜாதா மறைவிற்குப் பிறகு  டிசம்பர் இறுதியில் சென்னை சென்றிருந்தேன். அப்போது சாக்லெட் கிருஷ்ணாவிற்கு என் மகளையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். போன சமயம் க்ரேஸிமோகன் மேக்கப் இல்லாமல் "வாங்க தேசிகன்," என்று வரவேற்று கெஸ்ட் டிக்கேட் கொடுத்து உட்கார வைத்தார். 

( அன்று 119 வது தடவை !)

கதை ரொம்ப சிம்பிள். மாதுவிற்கு பல பிரச்சினைகள் (தங்கை கல்யாணம், பிரமோஷன், அப்பாவிற்கு கச்சேரி சான்ஸ்...). "கிருஷ்ணா ஒரு வழி சொல்லேன்" என்று வேண்ட, கிருஷ்ணா கிரேஸியாக மூக்கு கண்ணாடி மீசையுடன் வருகிறார்.

கிருஷ்ணருக்கு மீசை உண்டா என்று கேட்டால், பார்த்தசாரதிக்கு மீசை இருக்கே என்று பதில். இது மாதிரி நாடகம் முழுக்க இந்தக் கிருஷ்ணர் அடிக்கும் லூட்டிதான் சாக்லேட் கிருஷ்ணா. நடுநடுவில் சாக்லெட் கிருஷ்ணர் சர்கார் கிருஷ்ணராக மாறி மேஜிக் பண்ணுகிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு கிளியைக் கர்ச்சீப் ஆக்கி அனுப்புகிறார். குச்சியைப் பொக்கே ஆக்குகிறார். கருப்பு துணியின் கலரை மாற்றுகிறார். இவைகளை என் மகள் விரும்பிப் பார்த்து ரசித்தாள். நாடகம் முழுக்க சிரிப்பு மழை, எதிர் சீட்டில் ஒரு கிழவர் விழுந்து விழுந்து சிரித்தார், அடிபடாமல்.

பிறகு அவருடன் தொடர்பில் இல்லை. பழைய விளம்பரங்கள்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் கோல்ட் ஸ்பாட் விளம்பரம்பற்றி இரண்டு வரி இப்படி எழுதினேன்

 "As crazy as crazy as we’re about, Gold Spot, the Zing Thing. " என்று வரும் ஜிங்கில்ஸ் யார் இசை அமைத்தது என்று தெரியாது ஆனால் க்ரேஸிமோகனின் 'க்ரேஸிதீவ்ஸ் ஆஃப் பாலவாக்கம்'  என்ற டிராமா கேசட்டில் A-சைடிலிருந்து B-சைடுக்கு போவதற்கு முன் வரும்”

அவரிடம் தொலைப்பேசியில் பேசியபோது  “அதை இசை அமைத்தது விஜி மேனுவல்(viji manuel) இவர் இளையாராஜாவிடம் உதவியாளராக( கீபோர்ட்) இருந்தார். இந்த விளம்பரம் பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் செய்தார்கள்" என்றார்.

குமுதத்தில் போராளி என்ற என் சிறுகதையைப் படித்துவிட்டு புத்தகம் என் கைக்கு வருவதற்கு முன்பே அவர் எனக்கு அனுப்பிய வெண்பா இது


"தாராளமாய் சொல்கிறேன் தேசிகன் சார்உங்கள்

போராளி ஸ்டோரி பிரமாதம் -ஏராள

மாக எழுதுங்கள் ,மற்று மொருசுஜாதா

ஆகயென் வாழ்த்துக்கள் அன்பு"....க்ரேஸி மோகன்....

மெயில் அனுப்பிவிட்டு, தொலைப்பேசியில் அழைத்து “ஏதோ தமிழ் ஃபாண்ட் பிராபளம், அதனால் படமாகவே அனுப்பிவிட்டேன் படிக்க முடிகிறதா என்று பாருங்கள்” என்றார்.  இப்படியும் ஒருவர் இருப்பாரா என்று விழித்தேன். 

பிறகு ஒரு முறை பெருமாள் திருப்புகழ் என்று

தனதான தத்தன தனதான தத்தன
தனதான தத்தன -தனதான

"கபவாத, பித்தமும், சளிதோஷ சத்தமும்,
 தலைநோவும் ,ரத்தமும் -வெளியேறும்
 குதமூல பெளத்ரமும், நகம்மீது சுத்தியும்,
 படர்சோகை, மக்கிடும் -விழிபார்வை
சபைநாற வைத்திடும் சனிவாயில் சொத்தையும்,
உமிழ்நீர்தெ றித்திட -உருள்நாவும்,
செரிமானம் அற்றிட பிரிவாய்வ சுத்தமும்,
சொறிநோய்அ ரிப்பதும், -இதுபோக
அபவாத புத்தியும், மமகார சித்தமும்,
அவதூறு ரைத்திடும் -விடநாவும்,
அணுகாது சத்துவ மனமேனி உற்றிட
அலைமேல்ப டுத்திடும் -மணிமார்பா
மதுகேசி, சக்கிரன்,  முலைபூதம், சர்ப்பமும்,
சிசுபால வர்க்கமும், -முறைமாமன்
தரைசாய இத்தரை அவதார முற்றனை,
அருளாய்யெ னக்கரி -பெருமாளே"....
என்று அனுப்பியதை வியந்து படித்தேன்.
இது மாதிரி அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி....

"கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய ,வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய".....  என்று ஒன்றும் அனுப்பியிந்தார். 


க்ரேஸி மோகன் ஒரு தேர்ந்த ஓவியர்.  அவர் வரைந்த ஹனுமார் ஓவியம் ஒன்றே இதற்கு சான்று. சில ஓவியம் அமைய வேண்டும். அப்படி அமைந்த ஓவியம் தான் இது. 

அவருடைய கல்கி கதையை எனக்கு அனுப்பிவிட்டு இப்படி எழுதியிருந்தார் “கல்கியில் எழுதிய சிறு கதை....பிடித்தால் delight....பிடிக்கா விட்டால் இருக்கவே இருக்கு delete.”

என்னுடைய ”அப்பாவின் ரேடியோ” புத்தகத்தை நன்றாக இருக்கு என்று பாராட்டியதைவிட “என் அப்பாவிற்கு உங்க கதைகள் ரொம்ப பிடித்துவிட்டது” என்றார். நகைச்சுவைபோலப் பாராட்டையும் எல்லோருக்கும் யோசிக்காமல் வாரி வழங்கினார் என்றே சொல்ல வேண்டும்.

அவருடைய நகைச்சுவைக்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது அது அவருடைய வெளித்தனம்.  எப்போது பேசினாலும் இந்த வெகுளித்தனத்தை பார்க்க முடியும். 

ஒரு முறை ஏதோ பேச்சில் அவரிடம் “சார் அந்தப் படம் பார்த்தேன்… படத்தில் எல்லாம் உங்க வசனம் ஆனால் உங்க பெயரைப் போடவே இல்லையே ? “ என்றேன்.

“தேசிகன் உங்க அப்பா உங்களிடம் ஒரு பத்து ரூபாய் கொடுக்கிறார் அது உங்க பாக்கெட்டில் இருந்தால் என்ன உங்க தம்பி பாக்கெட்டில் இருந்தால் என்ன ?  எல்லாம் உங்க குடும்ப சொத்து தானே “ என்றார் யோசிக்காமல்.

இந்தக் குணம் நமக்கு இருந்தால் உலகம் நம்மை ”ஆர் யூ க்ரேஸி?” என்று கூறும். அதனால் தான் அவர் க்ரேஸியாக நமக்கு நகைச்சுவையைக் கடைசி வரை வழங்கினார்.


சுஜாதாவின் இறங்கல் கூட்டத்தில் பேசிய க்ரேஸி மோகன் ”தன் நாடகங்களுக்குச் சுஜாதா பெங்களூரில் வந்து குழந்தைபோலக் குலுங்கிக் குலுங்கி சிரிப்பதை நானும் மற்றவர்களும் திரை மறைவிலிருந்து பார்த்துப் பரவசபடுவோம்… , நாடகம் முடிந்தவுடன் குறைநிறைகளை லாயர் கணேஷ் போலச் சுஜாதா அலசுவார்… சுஜாதாவிற்கு  திவ்ய பிரபந்தம்மேல் இருந்த காதலால் தற்சமயம் வைகுண்டத்தில் பெருமாள் பக்கத்தில் இருப்பதை விட ஆழ்வார்கள் அருகே இருப்பதையே அவர் விரும்புவார்” என்றார்.

சுஜாதா ஆழ்வார்களின் பக்கமும், க்ரேஸி மோகன் அவர்கள் சுஜாதாவின் பக்கமும் வைகுடத்தில்  ”உங்க பிறந்த நாள் கட்டுரையைக் கற்றதும் பெற்றதும் படித்துவிட்டு பெரியாழ்வார் பாசுரம் மாதிரி எழுதிய கவிதை நினைவு இருக்கிறதா ?”

“நீங்க அனுப்பியது நினைவு இருக்கு… .. விகடனில் கூட வந்ததே .. ஆனால் நீங்க எழுதியது நினைவு இல்லை” 

“'பால்குடத்தை நோக்கிப் படையெடுக்கும் எறும்புகளாய்
தோல் குடத்தைத் தொத்தவந்த தீவிர வியாதியெலாம்
மால் படுத்த அரங்கன் மணிவண்ணன் பேர்சொல்ல
வால் சுருட்டிக் கொள்ளுமாமே பெருமாளே சரிதானே'

”ஆமாம்... நினைவு இருக்கு ஆனால் அழ்வார் முன்னாடியே ‘ஆழ்வார் பாசுரம் மாதிரி’ என்று இன்னும் உங்க நகைச்சுவையை விடவில்லை… ” 

(சிரிப்பு ) 

க்ரேஸி என்றாலே சிரிப்பு தானே ? 

( பிகு: மேலே சொன்ன அந்தக் கவிதை க்ரேசி மோகன் எழுதிச் சுஜாதாவிற்கு அனுப்பியது, விகடனில் வந்தது  )

- சுஜாதா தேசிகன் 

17.06.2019

Comments

 1. இதமான நினைவுகள்!
  சிரிப்பு ஒரு கொடை.
  மோகன் ஒரு வள்ளல்.
  Thanks for sharing these lovely memories.
  - கிறிஸ்டி நல்லரெத்தினம்

  ReplyDelete

Post a Comment