ஆயிரம் !
மதுரகவி ஆழ்வார் ’கண்ணி நுண் சிறு தாம்பு’ என்று தன் பிரபந்தத்தை ஆரம்பிக்கிறார்.
இதை
சின்னஞ்சிறு முடிகளையுடைய 'கண்ணி' தாம்பு
உடலில் அழுந்தும்படியான 'நுண்' தாம்பு
நீட்டமில்லாத 'சிறு' தாம்பு கயிறு
இப்படிப் புரிந்துகொள்ளலாம்.
ஒரு சாதாரணக் கயிறு அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா ? என்ற எண்ணம் எழலாம். கண்ணன் திருமேனி மீது அழுந்தி அவனுக்கு தாமோதரன் என்ற திருநாமம் பெற்றுக்கொடுத்து, அவன் சம்பந்தம் பெற்று, அதனால் அந்த ஏற்றம் பெற்றது.
பொதுவாக இந்த பிரபந்தத்தைப் படிக்கும் போது இதைக் கவனிக்க மாட்டோம்.
இதே போல இன்னொரு வார்த்தை ஆயிரம். ஆயிரம் என்ற வார்த்தை நம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக மிக முக்கியமான வார்த்தை. ஏன் என்று சொல்லுகிறேன்.
உங்களுக்குத் தெரிந்த கதை தான்.
ஒரு சமயம் வீர நாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாட, அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, அந்த ஆயிரம் பாசுரங்கள் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்தப் பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறி, அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற ஆவல் குடிகொண்டு அதைத் தேடிச் சென்றார்.
நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம் இருக்கும் திருக்குருகூருக்குச் சென்று அங்கு விசாரித்ததில் அந்த பிரபந்தம் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் சீடரான பராங்குச தாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பிரபந்தத்தை உபதேசம் பெற்று அதை பன்னீராயிரம் முறை சேவித்த பின் நம்மாழ்வார் தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த பிரபந்தங்களையும் தந்தருளினார்!
நம்மாழ்வார் அருளிய ஆயிரம் பிரபந்தங்களும், நூறு நூறு பாசுரங்களாக முதல் பத்து, இரண்டாம் பத்து,... பத்தாம் பத்து வரை, பத்துப் பத்துப் பாசுரங்களாக தொகுகப்படுள்ளது.
ஒவ்வொரு பத்துப் பாசுரத்தின் முடிவிலும் ‘ஆயிரத்துள் இப் பத்து’ என்று ஆழ்வார் முடிக்கிறார். மொத்தம் எவ்வளவு முறை ‘ஆயிரம்’ என்ற வார்த்தையைச் சொல்லுகிறார் என்று ஒரு சின்ன கணக்குப் போட்டால் நூறு முறை ! ( ஒரு பாசுரத்தில் மட்டும் பத்து நூற்றுள் இப் பத்து என்கிறார் )
’ஆயிரம்’ என்ற வார்த்தை கடைசியில் ஒட்டிகொண்டு இருந்த காரணத்தால் தான் நாதமுனிகள் ஆழ்வார் பாசுரங்களைத் தேடிச் சென்றார். அதனால் தான் நமக்கு ஆயிரம் பாசுரங்களுடன் மற்ற ஆழ்வார்களின் மூவாயிரம் பாசுரங்களும் கிடைத்தது !
இந்த ‘ஆயிரம்’ என்ற வார்த்தையை மதுரகவியாழ்வார் ”அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்” என்று அந்த ஆயிரத்தைக் போற்றுகிறார்.
பெருமாளுக்கு ’ஆயிரம்’ திருநாமங்கள்!
திருவாய்மொழியில் ’ஆயிரம்’ ஒட்டிக்கொண்டு இருக்கிறது!
கண்ணிநுண் சிறுத்தாம்பில் ஆயிரம் இருக்கிறது!
நாதமுனிகள் பன்னிரண்டாயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு சேவித்த போது அதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது !
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்ற வார்த்தையிலும் ஆயிரம் இருக்கிறது!
எல்லா பத்து பாசுரங்கள் முடிவிலும் ஆயிரம் என்ற வார்த்தை இருப்பதால், எந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடியிருந்தாலும் நாதமுனிகள் தேடிச் சென்றிருப்பார். ஆனால் அந்தப் பெருமையை அமுதன் தட்டிச் சென்று ஆராவமுதாழ்வார் ஆனார். அதனால் அவருக்குப் பிரத்தியேகமாக திருவேழுகூற்றிருக்கை அருளினார் திருமங்கை ஆழ்வார்.
பிரபந்தம் கிடைக்க வழிசெய்த திருவாய்மொழியை அருளிய நம்மாழ்வார் ’காரிமாறப் பிரான்’ ஆனார், அவருக்குப் பிரத்தியேகமாக கண்ணிநுண் சிறுத்தாம்பு அருளினார் மதுரகவிகள்.
இதை எல்லாம் இன்று நாம் அறிந்து அனுபவிக்க உதவி, நம் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு பிரத்தியோக ஆசாரியனானார் ஸ்ரீமந் நாதமுனிகள்.
நாதமுனிகள் திருவடிகளே சரணம்.
- சுஜாதா தேசிகன்
ஆனி அனுஷம்
ஸ்ரீமந் நாதமுனிகள் திருநட்சத்திரம்
ஓவியம் : நன்றி ஸ்ரீ பாலாஜி ரவி
பிரபந்தம் பொருளுடன் கூடிய புத்தகம் பரிந்துரை செய்யவும்
ReplyDeleteஅடியேன்