திருவாய்மொழி கூறும் உட்பொருள்
‘Coloring base’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓவியத்தில் வண்ணங்களைத் தீட்ட அதனுடன் கலந்து அடிப்பார்கள். வாட்டர் கலருக்கு தண்ணீர் தான் பேஸ்.
அதுபோல ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு ‘பேஸ்’ திருவாய்மொழி.
ஸ்ரீவைஷ்ணவத்தில் தத்துவங்களை ஐந்து விதமாகப் பிரிக்கலாம் தமிழ்மொழியில்
1) இறைநிலை
2) உயிர்நிலை
3) நெறிநிலை
4) தடைநிலை
5) வாழ்வுநிலை
இதையே வடமொழியில்
1) பரமாத்ம சொரூபம்
2) ஜீவாத்ம சொரூபம்
3) உபாய சொரூபம்
4) விரோதி சொரூபம்
5) புருஷார்த்த சொரூபம்
ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் அவர்கள் பதினெட்டு ரகஸ்யகளில் அர்த்த பஞ்சகம் ஒன்று. அதே போல் ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஶ்ரீரஹஸ்யத்ரயஸாரத்தில் அர்த்தபஞ்சாதிகாரம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. இவை எல்லாம் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து விஷயங்களை விவரிக்கிறது.
இந்த ஐந்து விஷயங்களும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கூறுகிறார் அதனால் தான் திருவாய்மொழி ஸ்ரீவைஷ்ணவத்துக்கு அடிப்படை என்று எல்லா ஆசாரியர்களும் கொண்டாடுகிறார்கள்.
பட்டர் அருளிய திருவாய்மொழி தனியன் இது
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்*
தக்க நெறியும் தடையாகித்-தொக்கியலும்*
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்*
யாழினிசை வேதத்து இயல்.
இதை இப்படி எழுதிக்கொண்டால் அர்த்த பஞ்சகமாகிவிடும்.
1)மிக்க இறைநிலையும்
2)மெய்யாம் உயிர்நிலையும்
3)தக்க நெறியும்
4)தடையாகித்-தொக்கியலும்
5)ஊழ்வினையும் வாழ்வினையும்
ஓதும் குருகையர்கோன் யாழினிசை வேதத்து இயல்.
சுலபமாக இதன் பொருள் கீழே: :
மிக்க இறைநிலை - இங்கே ‘மிக்க’ என்பது மிக முக்கியம். பல இறை நிலைகள் இருந்தாலும், ஆண்டாள் போல அனுகாரத்துடன் பக்தி செய்வது தான் ‘மிக்க’ இறைநிலை. பெண்மை கலந்த பக்தி.
மெய்யான உயர்நிலை என்பது பெருமாள் அடியார்களுக்கு அடியவன் என்பதே
உலக பிணிப்பிலிருந்து விடுபட்டு, பெருமாளிடம் ஆட்படுவதே தக்க நெறி
இதைக் கிடைக்க முடியாமல் என்ன என்ன தடைகள் ஏற்படுகிறது
நல்வாழ்வு என்பது எது ?
இதை இப்படிப் படித்துப் பாருங்கள் இன்னும் சுலபமாகப் புரியும் :
‘உயர்வு அற உயர் நலம் உடையவனாகிய’ ’ திருமகள் கேள்வனாகிய நாராயணனே அறப்பெரிய முதல்வன் முழுமுதல் (இறைநிலை);
‘மூவுலகுக்கும் நாயகன் தன் அடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்’ என்று ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன்
என்பதே (உயிர்நிலை);
‘அலர் மேல் மங்கை உறை மார்பா புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே’ என்று சரணாகதியே இறைவனைப் பெறுதற்குரிய
வழி (தக்கநெறி);
‘பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும்’ ஆகிய இவையே விரோதிகள்(தடை);
‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே’ குறிக்கோள் என்னும் பேற்றுநிலை
(வாழ்வு).
மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன்
என்று மதுரகவியாழ்வார் சொல்லுவதில் என்ன வியப்பு ?
- சுஜாதா தேசிகன்
13.06.2019
#நம்மாழ்வார்
Beautiful! Very well connected the five stages with five apt paasurams. Thank you.
ReplyDelete