Skip to main content

பெரியாழ்வார் ஒற்றிக்கொண்ட, பொறித்துக்கொண்ட சின்னங்கள்

பெரியாழ்வார் ஒற்றிக்கொண்ட, பொறித்துக்கொண்ட சின்னங்கள் 




பெரியாழ்வார்,  ‘பெரிய’ ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றால் கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சி அளிக்கிறார்.  பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது 

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை ஆண்டாளின் தகப்பனார். 

பல்லாண்டு பாடிய ஆழ்வார் 

விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல் 

இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம்.  

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருகமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே” என்று மலையேறி சென்ற ஆழ்வார் சட்டென்று உடனே கீழே இறங்கி அந்த வேங்கடவன் தான் அரங்கத்தில் இருக்கிறான் என்கிறார்.  

பெரியாழ்வாரும் இதையே தான் சொல்லுகிறார். எப்படி என்று கண்டுபிடிக்கக் கீழே உள்ள இந்தப் பாசுரத்தைப் பாருங்கள் 

 சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு
 தன்னை வாழ நின்ற நம்பி தாமோதரா சதிரா
 என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
 நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே

இதில் திருவேங்கடமுடையான் தான் வருகிறார் ஸ்ரீரங்கம் பெருமாள் எங்கே என்று நீங்கள் தேடுவது தெரிகிறது.  முதல் இரண்டு வரியை இப்படிப் பிரித்துப் படிக்கலாம். 

”சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு தன்னை வாழ நின்ற நம்பி” அதாவது ஓங்கியிருக்கும் குளிர்ந்த திருவேங்கடமலையில் உலகோர் வாழ வேண்டும் என்று நின்று கொண்டு இருக்கும் நம்பியே  

”தாமோதரா சதிரா” என்பது அடுத்து வருகிறது. தாமம் - கயிறு; உதரம் - வயிறு இதுவே தாமோதரன்.  இது ஸ்ரீரங்கம் நம்பெருமாளைக் குறிக்கும் சொல் !  யசோதை கண்ணனை உரலோடு சிறு தாம்பினால் சேர்த்துக் கட்டியபோது வயிற்றில் உண்டான தழும்பை (திருவிலச்சினை) - அடையாளமாகத் தரிக்கிறான் என்பது பூர்வர்களின் கருத்து.

அதனால் தான் இன்றும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் (திருமஞ்சனம் நடைபெறும்போது ) உள்சாத்து என்று ஒன்றை அணிந்துகொள்வார். அதைக் களையும்போது மேல்சாத்து ஒன்றை மேலே சாத்தி ( அவனுடைய நிரந்தர தழும்பு வெளியில் தெரியாமல் மறைத்து ) உள்சாத்தைக் களைவார்கள்.  



ஏன் மறைக்கிறார்கள் ? ஒரு முறை கண்ணன் இடைச்சிகளின் துணிகளை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தில் ஏறி மற்றொரு கிளைக்குத் தாவுகிறபோது அவன் ஆடை சற்று விலகியது. வயிற்றிலிருந்த தழும்பைப் பார்த்த இடைச்சிகள் சிரித்துவிட்டார்களாம் அதனால் கண்ணன் வெட்கப்பட்டான். நாமும் கோபியர்கள் தானே அதனால் தான் இன்றும் அதை ஸ்ரீரங்கத்தில் மறைக்கிறார்கள். 

பெரியாழ்வார் வேங்கடம் என்று சொன்னதுடன் உடனே நம்பெருமாளும் அவன் இடுப்பில் தழும்பும் நினைவுக்கு வர உடனே ’தாமோதரா’ என்கிறார்.  

அடுத்த இரண்டு வரியில் 

 என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு

 நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே

ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்குச் சக்கரம் மற்றும் சங்கு முத்திரைகளைத் தோளில் நிரந்தரமாகத் தரித்துக்கொள்கிறோம், நாம் பெருமாளுக்கு அடிமை என்ற அடையாளம்.  

பெருமாளும் தன் அடியவர்களுக்கு ஆட்பட்டவன் என்று சொல்லிக்கொள்ள ஒரு அடையாளம் வைத்துள்ளான் அது தான் இடுப்பில் இருக்கும் தழும்பு. 

அவனை “கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டினால்” உடனே அவன் கட்டுப்படுகிறான். கட்டுப்பட்டு சம்சாரம் என்ற நம் மீது கட்டப்பட்ட கயிற்றை அவிழ்த்தும் விட்டு மீண்டும் பிறவி இல்லாமல் பார்த்துக்கொள்கிறான். 

அடுத்து இன்னொரு  பெரியாழ்வார் பாசுரத்தை அனுபவிக்கலாம். 

பருப்பதத்துக் கயல் பொறித்த
பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என்
சென்னியின் மேல் பொறித்தாய்

எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார். இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.



பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள். அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால் அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத்தில் சமயவாதம் நிகழ்ந்து மாறவர்மன் ஆழ்வாருக்கு அடியவன் ஆனான். செப்பேட்டில் ‘பரமவைஷ்ணவதானாகி’ என்று வருவதே இதற்குச் சான்று. 

இந்தப் பாசுரத்தில் பாண்டியனைச் சிறப்பித்துப் பேசி அவனுடைய இலச்சினையை ஏன் பெரியாழ்வார் பெருமாளின் திருவடிக்கு ஒப்பிடுகிறார் என்று கொஞ்சம் ஆராயலாம்.

பாண்டியரின் இலச்சினை இரண்டு மீன் நடுவில் ஒரு சாட்டை போல இருப்பதைப் பார்க்கலாம். சாட்டை போல இருப்பது பாண்டியரின் செங்கோல். இதைப் பார்த்தவுடன் ஆழ்வாருக்குப் பெருமாளின் திருவடியும், தன் நெற்றியில் இருக்கும் திருமண்னும் (நாமம்) நினைவுக்கு வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மேலே சொன்ன இந்த உதாரணம் எதற்கென்றால், செய்யுளில் சொற்கள் சாதாரணமாக நமக்குத் தெரியும். ஆனால் சரியான பொருள் தெரிந்தால்தான் அதன் அலாதியான சுவை புரியும். 

இன்று ஆனி ஸ்வாதி, பெரியாழ்வார் திருநட்சத்திரம் 

பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 

- சுஜாதா தேசிகன்
21-06-2021 

இன்று எங்கள் இல்லத்தில் சேவை : 

படம் 1 ( முதல் படம்): சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு  நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே  சேவை 

படம் 2( கீழே) :  துளசி வனத்தில் வந்து உதித்த கோதையை திருமகள் போல வளர்த்து,  செங்கண்மாலுக்கு கொடுத்த காட்சி ( பெருமாளுக்கு அவசரம், அதனால் பூமியிலிருக்கும் துளசி கூட அப்படியே இருக்கிறது!)




Comments