Skip to main content

அமலன் உவந்த மந்தி

 அமலன் உவந்த மந்தி




அமலன் ஆதி பிரான் என்ற பாசுரத்தில் முதல் மூன்று பாசுரங்களின் முதல் மூன்று எழுத்துகள் பிரணவத்தை குறிக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

அதே போல் முதல் மூன்று வார்த்தைகளை சேர்த்தால் 

”அமலன் உவந்த மந்தி”  

என்று வரும்.  இதுவும் மிக அருமையான பொருளை கொடுக்கிறது !  

முதலில் திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.

வாத மா மகன், மர்க்கடம், விலங்கு

மற்றோர் சாதி என்று ஒழிந்திலை* உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச்

செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*

கோது இல் வாய்மையினாயொடும் உடனே

உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும்

ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன்

அணி பொழில் திருவரங்கத்து அம்மானே!

அனுமானை ஒரு விலங்கு என்று பாராமல் அவனிடம் கடல் போலக் காதல் அன்பையும் பொழிந்தாய். ”உன் உதவிக்கு என்ன கைமாறு செய்வேன் என்று எண்ணி “உன்னுடன் உடனிருந்து யான் உண்பேன்” என்று அனுமானைக் குறித்து கூறிய மாதிரி அடியேனுக்கும் அமைதல் வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

இராவண வதம் முடிந்த பின் சுக்ரீவன் முதலிய வானரங்களோடும், விபீஷணன், லக்ஷ்மணர், சீதா பிராட்டியுடன் புஷ்பக விமானத்தில் ஸ்ரீராமபிரான் அயோத்தி நோக்கிப் போகும் போது கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை தாண்டும் போது பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்று அவரைத் தரிசித்துவிட்டு அயோத்திக்குச் செல்லலாம் என்று முடிவு செய்கிறார்.

பரத்வாஜ முனிவர் மகிழ்ந்து “இரவு இங்கே தங்கிவிட்டு நாளை உணவு உண்டு செல்ல வேண்டும்” என்பதை ராமரால் தட்ட முடியவில்லை.

பரத்வாஜ முனிவரின் விருப்பத்தின் படி அவருடைய ஆசிரமத்தில் சேனையுடன் அங்கு விருந்துண்ணச் சம்மதித்து அங்கே தங்கினார் ஆனால் ராமர் கவலையாக இருந்தார். காரணம் பரதன். 

காலம் கடந்து சென்றால் பரதன் வருந்தி தீக்குதித்து உயிரை விட்டுவிட்டால் ?

அனுமானை அனுப்பி ”எல்லோரும் வந்துகொண்டு இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வா என்று சொல்லி முடிக்கும் முன் அனுமானும் புறப்பட்டார். 

பரதனைக் காப்பாற்றினார்.

மறுநாள் இலை போட்டு விருந்து ஆரம்பிக்கிறது. எல்லோருக்கும் இலை போட்டு பரிமாறப்படுகிறது. அப்போது அங்கே அனுமார் வருகிறார். பரத்வாஜ முனிவர் அனுமாருக்கு ஒரிலையை வருவிக்க வேண்டாதபடி ராமர் ஒரு காரியம் செய்தார்.

ஸ்ரீராமன் அனுமானத் அன்புடன் அழைத்து, தன்னுடைய இலைக்கு எதிர்புறம் அமரச்செய்து, அனுமாருக்குக் காய், கனிகளை பரிமாறி இருவரும் ஒரே இலையை பகிர்ந்துகொண்டார்கள்.

இதைப் படிக்கும் நமக்கு ராமர் எச்சிலைச் சாப்பிட்டார் என்று தோன்றும். அனுமாருக்கும் அது தோன்றியது. 

அனுமார் முதலில் யோசித்தார் “ராமா அடியேன் ’கோதுடைய வாய்’ உடையவன்” இருவரும் சேர்ந்து சாப்பிடுவதா ? என்று மறுத்தார்.

அதற்கு ஸ்ரீராமர் “உன்னுடைய வாய் ’கோது இல்’ வாய் ” என்கிறார். உன்னுடைய வாய் குற்றமில்லாதது. எதனாலே ? சதா சர்வகாலமும் ஸ்ரீராம நாமம் சொல்லும் வாய் எப்படி குற்றம் செய்யும் ?



இதில் சாப்பாடு முக்கியமில்லை. அனுபவம் தான் முக்கியம். ஸ்ரீராமருடைய ஆனந்தம் எதுவோ அதை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். ராமானந்தம், பிரமானந்தம் இது தான்.

உயர்ந்த பக்திக்கு அவன் தரும் பரிசு இது - நாடு புகழும் பரிசு”

திருப்பாணாழ்வாருக்கும் அனுமாரை போல அனுபவம் கிடைக்க அவர் ”நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே... என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று முடித்துவிட்டார்.

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ அனுமார் சன்னதியில் தான் திருப்பாணாழ்வாரும் இருக்கிறார் ! 

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்ற போது  “சிவந்த ஆடையின் மேல்சென்றதாம் என் சிந்தனையே” என்பது போல அன்று ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் சிவந்த ஆடை சாத்திக்கொண்டு சேவை சாதித்தார் ! 

- சுஜாதா தேசிகன் 

27.05.2019

Comments

  1. Alwar Thirvadigaley Charanam, Aanjenyan Thiruvadigaley Charanam, Shri Seethai Samedha Ramachandra Prabhu Thiruvadigaley Charanam.

    ReplyDelete

Post a Comment