விஜய் அரசியல் பிரவேசம்
விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற குங்குமப் பொட்டு வைத்த மூன்று பக்க அறிக்கையில் பலர் ‘க்’ ‘ப்’ ‘த்’ என்று மெய்யெழுத்து ஆணியைப் பிடுங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துச் சொல்லி சில விஷயங்களைப் பார்க்கலாம்.
குமுதத்தில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற ரீதியில் வந்த சினிமா விமர்சனம் நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து விஜய் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகம். சமீபத்தில் நல்ல பாரு நான் தான் கழுகு என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார். பருந்து காக்கை ஆகாது என்ற பழமொழியை மாற்றினார்.
பல காலம் hibernation இருந்துவிட்டு, படம் வெளியாகும் தறுவாயில் கலக்ஷன் அரசியல் பேசாமல், விஜய் களத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களில் 100% அரசியல் இருந்தது. அவர் அரசியலில் காலடி வைக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால் தன் மார்க்கெட் உயரத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் இனி முழு நேர அரசியல் என்று வந்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. சரியான முடிவோ இல்லையே ஆனால் நிச்சயம் துணிச்சலான முடிவு.
கறுப்பு, கருப்பு எது சரியான சொல் என்று குழம்புவது போல இரண்டு கழகங்களில் எது நல்ல கழகம் என்று தமிழக மக்கள் நீண்ட காலமாகக் குழம்பியிருக்கும் குட்டையில் மீன் பிடிக்க விஜய் களமிறங்கியிருக்கிறார்.
ரஜினி தமிழ்நாட்டுக்கு அரசியலுக்கு வராமல் மறைமுகமாக ஒரு நல்லது செய்திருக்கிறார்.. இல்லை பாஜகவுக்கு அண்ணாமலை கிடைத்திருக்க மாட்டார். விஜய்யின் அரசியல் பிரவேசம் தற்போது அண்ணாமலை உருவாகியிருக்கும் இளைஞர் பட்டாளத்தின் ஓட்டு வங்கியைக் கொஞ்சம் அசைக்கவே செய்யும் என்று நினைக்கிறேன். அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பேசுகிறார் போன்ற விஷயங்கள் சினிமா மோகத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களிடம் எப்படி எடுபடப் போகிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நேற்று பலரும் சொல்லி வைத்தது போல விஜய் வருகையால் யாருக்குப் பாதிப்பு என்று கருத்துக்கணிப்பு நடத்தி அப்பாடா பாஜகவுக்கு அதிகம் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது.
2026க்குள் அதிகாரவர்க்கம் இவருக்குத் தொல்லைகள் பல கொடுக்கப் போகிறார்கள். பல தொண்டர்கள் கைது செய்யப்படுவார்கள். விஜயகாந்துக்கு தங்கள் வேட்டியை மடித்துக்கொண்டு பத்திரிக்கைகள் அவரின் இமேஜை உடைத்தது போல இவருக்கும் நிச்சயம் செய்வார்கள். இவற்றை எல்லாம் விஜய் எப்படி டீல் செய்வார் என்று பார்க்க வேண்டும்.
அவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெ, கார்த்திக், பாக்கியராஜ், டி.ஆர், விஜயகாந்த், ரஜினி... என்று பல நடிகர்கள் அரசியலுக்கு வந்த அனுபவம் குறித்த பாடங்களைப் படிக்கலாம்.
2026க்குள் அண்ணாமலை போல இவரும் நிச்சயம் எல்லாத் தொகுதிகளுக்கும் யாத்திரை செய்வார் என்று நினைக்கிறேன். எது எப்படியோ இனிவரும் காலங்களில் அண்ணாமலையுடன், விஜய் செய்திகளில் சுவாரசியம் குறையாது.
பிகு: மேலே பிக் பாஸ் கமல் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். இரண்டு கழகங்களுக்கும் மத்தியில் மய்யமாக இருப்பேன் என்றார். இந்தியன் படத்தில் ”சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே” என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது!
- சுஜாதா தேசிகன்
3.2.2024
குமுதத்தில் வந்த அந்த விஜய் பட விமர்சனத்தில் விமர்சகர், நசுங்கி போன தகர டப்பா
ReplyDeleteமூஞ்சி ஹீரோ என்று கூறி இருந்தார்.பிற்காலத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ள
நடிகர் ஆகி விட்டார். இவர் அண்ணாமலைக்கு பெருகி வரும் ஆதரவை கருத்தில்
கொண்டே களத்தில் இறக்க படுகிறார். முதலில் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு கொடுக்கப்பட்ட
அதே hype, இவருக்கு மீடியாக்கள் கொடுக்கும். நல்ல ஆட்சியாளர் தமிழ்நாட்டில்
வரக்கூடாது என்பது நமக்கு விதிக்கப்பட்ட விதி போலும்.