Skip to main content

ரோஜாவுடன் பார்த்தசாரதி

ரோஜாவுடன் பார்த்தசாரதி



பல வருடங்களுக்கு முன் புகுந்த வீட்டுக்குள் காலடி வைக்கும் புதுமணப்பெண் போல் முகநூலில் நுழைந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பன்னீர் ரோஜாவுடன் பிரமாதமாகக் காட்சி அளித்தார்.

யாரோ ஓர் அன்பர் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். படத்தை ஆராய்ந்ததில் ஓரத்தில் ’Vishnumayam’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. படத்தை யார் எடுத்தார் என்று விசாரித்தேன். யார் என்று தெரியவில்லை.

பிறகு சில வருடங்கள் கழித்து ’Vishnumayam’ முகநூல் பதிவரிடம் “உங்கள் படங்கள் அருமை” என்று மெசேஜ் அனுப்பினேன். பதிலுக்கு “மிக்க நன்றி. உங்கள் எழுத்தை நான் விரும்பிப் படிப்பேன் என்றார்”

பிறகு அவர் பகிரும் படங்களை ரசித்து “படங்கள் அருமை” என்று இரண்டு வார்த்தைப் பாராட்டுவேன். ஒரு நாள் இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவரிடம் அந்த ரோஜா பார்த்தசாரதி படங்களைக் குறித்துச் சொன்னேன். அதைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து அறையில் மாட்டிக்கொள்ள ஆசை என்றேன். சந்தோஷமாகக் கேட்டுக்கொண்டார்.

பிறகு பல வருடங்கள் அவ்வப்போது அவர் படங்களை ’லைக்’ செய்து அவருடைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டேன்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதம் திடீர் என்று என்னை அழைத்து “சென்னைக்கு வருவீர்களா?” என்று கேட்டார். வருகிறேன். எப்போது என்று சொன்னேன். உங்களைச் சந்தித்தது இல்லை. சந்தித்து சில படங்கள் கொடுக்க வேண்டும் என்றார்.

முகநூலில் மட்டுமே பார்த்த ஒருவரை முதல் முதலில் அன்று நேரில் முகக் கவசத்துடன் பார்த்தேன்.
“எனக்கு புற்றுநோய்” என்று முகக்கவசத்தைக் களைந்து, அலட்டிக்கொள்ளாமல் தான் எடுத்த படங்களைக் குறித்துப் பேசினார்.

கையில் இருந்த பையிலிருந்து “உங்களுக்குப் பிடித்த ரோஜா மாலையுடன் பார்த்தசாரதி” என்று பெரிய அளவு பிரிண்ட் ஒன்றைக் கொடுத்தார் கூட தெள்ளிய சிங்கர் ( அதுவும் ரோஜா மாலையுடன்), மன்னார்குடி ராஜகோபாலன் நாச்சியார் கோலத்தில் என்று வாழைத்தண்டு உரிப்பது போலப் படங்கள் வந்துகொண்டே இருந்தது.

உங்களைச் சந்தித்ததில் மிகுந்த சந்தோஷம் இந்தப் படங்களை உங்களுக்குத் தர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை என்று விடைபெற்றுக் கொள்ளும் முன் ஒரு புத்தகத்தை கையில் கொடுத்து, ”என் படங்கள் என் மனைவியின் ஆங்கிலக் கவிதைகள்”; இதைக் குறித்து உங்களுக்குச் சமயம் கிடைக்கும் போது நான்கு வார்த்தை எழுதுங்கள் என்று கிளம்பினார்.

இன்று அந்த ரோசாப்பூ படம் எடுத்த ’Vishnumayam’ சங்கர் நம்முடன் இல்லை என்று தகவல் கிடைத்தவுடன் துயரம் சுற்றிக்கொண்டு நினைவுக்கு வந்தவை இரண்டு - அந்தப் புத்தகம் குறித்து நான்கு வார்த்தை இன்னும் எழுதவில்லை.

மற்றொன்று சந்தித்த அன்று அவருக்கு “படங்களுக்கு மிக்க நன்றி. நாம் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கலாம்” என்று அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

”நானும் மறந்து போனேன். அடுத்த முறை சந்திக்கும் போது நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம்" என்று பதில் அனுப்பியிருந்தார்.

அஞ்சலி

- சுஜாதா தேசிகன்
23.2.2024

Comments

Post a Comment