Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 8


பெரிய திருமொழியில் நீண்ட வரிகளைக் கொண்ட பாசுரம் இது.  பதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்,  சில வார்த்தைகள் சுலபமாகப் புரியும், தைரியமாகப் படிக்கலாம். 

தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து,
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை
கோங்கு அரும்பு, சுரபுன்னை, குரவு ஆர் சோலைக்
குழாம் வரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு
தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே. 

கடைசியில் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் என்பதால் திருக்கோவலூர் பெருமாளைப் பற்றிய பாசுரம் என்று புரிந்திருக்கும். பாசுரத்தின் சுருக்கமான பொருள் கீழே 

ஒருவராலும் பொறுக்க முடியாத கொடிய யுத்தம் புரியவல்ல மாலி என்ற அரக்கனைக் கருடன் மீது வந்து உலகோர் குறையைப் போக்கிய பெருமாள், அடியவர்களுக்கு அன்பு மிக்க அமுதம் போல இருந்தான். கொங்கு, சுரபுன்னை, குரவு மலர்கள் சூழ்ந்த சோலையில் கூட்டம் கூட்டமாகக் கூடிய வரி வண்டுகள் இசைபாட அந்த இசையைக் கேட்டு இளம் கரும்புகளின் ஒரு கணு மேல் எழுந்து நிற்கும் அத்தகைய வயல்கள் சூழ்ந்த திருக்கோவலூர் பெருமாளைக் கண்டேன் என்கிறார் திருமங்கை மன்னன். 

திருக்கோவலூர் என்ற உடன் இடைகழி, முதலாழ்வார்கள் , மூன்று திருவந்தாதி, திருக்கண்டேன் என்று இந்நேரம் ஆழ்வார்களுடைய கதை எல்லாம் உங்கள் நினைவுக்கு வந்திருக்கும்.  அந்தக் கதையை ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரபந்த சாரத்தில் எளிமையாகக் கொடுத்திருக்கிறார். நிதானமாகப் படித்தால் புரிந்துவிடும். 

தண் கோவல் இடை கழிச் சென்று
இணையில்லா மூவருமாய் இசைந்தே நிற்க
நடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம்
நள்ளிருளில் மால் நெருக்க நந்தா ஞானச்
சுடர் விளக்கு ஏற்றி அன்பே தகளியான
தொடை நூறும் எனக்கு அருள் துலங்க நீயே

மீண்டும் திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை ஆராயப் போகிறோம், அதற்கு முன் தேசிகனின் ஸ்ரீ தேஹளீச ஸ்துதியில் ஸ்லோகம் ஒன்றைப் பார்க்கலாம்.  

காஸார பூர்வ கவி முக்கய விமர்த ஜந்மா
பண்ணா தடேக்ஷ ஸுபகஸ்ய ரஸோ பஹுஸ்தே
த்வத்பாத பத்ம மதுநி த்வதந்ய போக்யே
நூநம் ஸமாச்ரயதி நூதந சர்க்கராத்வம்

எளிமையான தமிழ் விளக்கம், பெண்ணை ஆற்றுக் கறையில் செழித்து வளர்ந்த கரும்பை ஆலையில் போட்டுப் பிழிந்து எடுக்கும் சாறு சுவையாக இருக்கும். இந்தச் சாறு தாமரையிலிருந்து பெறும் உயர்ந்த தேனுடன் கலந்தால் அதன் இனிமைக்கு எல்லை இல்லை. திருகோவலூர் பெருமாள் பெண்ணையாற்றின் கரையில் செழிப்பாக வளர்ந்த கரும்பு போல நிற்கிறார். இந்தக் கரும்பை முதலாழ்வார்கள் நெருக்கியபடியால் ஆலையில் அரைத்தது போலாயிற்று. அவ்வாறு நெருக்கியதால் பெருமாளின் சௌசீல்யம் என்ற குணம் கரும்புச்சாறாக அவன் திருவடியில் தாமரையின் தேனில் கலந்த போது புதுவிதமான பரமப் போக்கியமான சர்க்கரை கிடைத்தது. 

இதுபோலக் கவி நயத்துடன் விவரிக்க வேறு ஆசாரியன் இல்லை. இப்படி விவரிக்கத் தேசிகனுக்கு எது தூண்டுதல் ? மேலே பெரிய திருமொழி பாசுரம் தான்.  எப்படி என்று பார்க்கலாம். 

மேலே உள்ள திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் கண்வளரும் என்ற வார்த்தையைக் கண்டுபிடியுங்கள்.  இங்கே ஆழ்வார்  ‘வரி வண்டுகளின் இசை ரசத்தால் இளம் கரும்புகளின் ஒரு கணு மேலே வளர்கிறது’ என்று பாடியுள்ளார்.  

கண்வளரும் என்றால் ’உறங்கும்’ என்று ஒரு பொருளும் இருக்கிறது. ’தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்’ என்று திருப்பாவை பாசுரம் அதற்கு உதாரணம். 

இசையைக் கேட்டு மெய்மறந்து போவதுண்டு. கண்ணன் குழலோசையினால் பிருந்தாவனமே மெய்மறந்து நின்றதை பெரியாழ்வாரே 

சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
ஊதுகின்ற குழல் ஓசை வழியே*
மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர*
இரண்டு பாடும் துலங்காப் புடைபெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே. 

மேக நிறத்தையுடைய கண்ணனின் குழலோசையைக் கேட்டதும்  மான் கூட்டங்கள் அறிவிழந்து மேய்ச்சலை மறந்தன. வாயில் கவ்விய புல், கடைவாய் வழியே விழ, அசையாமல் சித்திரம்போலச் செயலற்று நின்றன என்கிறார் பெரியாழ்வார். 

திருக்கோவலூர் பெருமாளும் கண்ணன் தான். கோபாலன் என்பதே கோவலன் அதனால் அந்த ஊரின் பெயர் திருக்கோவலூர். கண்ணன் ஆயர் குலத்தவன் அதனால் அவனை ஆயனார் என்றும் இடைகழி ஆயன் என்றும் அந்தப் பெருமாளுக்குத் திருநாமம். 

இந்த வண்டுகள் கண்ணன் குழலிசை போல இசைக்க, அங்கே இருக்கும் கரும்புகள் மயங்கிக் கண்வளர்ந்து ( அசைவற்று ) நின்றன. 

கோங்கு அரும்பு, சுரபுன்னை, குரவு என்ற மூன்று மலர்கள் நிறைந்த சோலையில் வண்டுகள் மூன்று ஆழ்வார்களைக் குறிக்கும். அந்த வண்டுகள் பாடும் இசையே அவர்கள் பாடிய மூன்று திருவந்தாதிகள். ஆழ்வார்கள் பாடிய இன்னிசையால் மயங்கிக் கண்வளர்ந்து நின்ற தீங்கரும்பு திருக்கோவலூர் பெருமாள். இப்போது இந்த ஆழ்வார்கள் என்ற வண்டுகள் நெருக்கத்தால் பெருமாள் என்ற கரும்பு பிழியப்பட்டு அவனுடைய சௌலப்பிய குணம் சாறாகக் கிடைத்தது. அதாவது ‘அடியவர்கட்கு அராவாமுதன் ஆனான்’ என்பதைத் தான் தேனில் கலந்த கரும்புச் சாறு என்கிறார் தேசிகன். 

அடியவர்கட்கு என்ற சொல்லில் மூன்று ஆழ்வார்கள் உள்ளார்கள். அடியவன் ( ஒருவர் படுக்கலாம்), அடியவர் ( இருவர் உட்காரலாம் ), அடியவர்கள் ( மூவர் நிற்கலாம் ).  

இதை எல்லாம் திருமங்கை ஆழ்வார் வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே ஏன் இப்படி மறைத்துக் கூற வேண்டும் ? இப்படிக்  கூறுவது தான் ரசமான விஷயம். அது ஆசாரியர்களுக்குப் புரியும்.  ”ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்தன்பு கூருமடியவரான முதலாழ்வார்கள்” என்று மணவாள மாமுனிகள் வியாக்கியானத்தில் தேசிகன் கூறியுள்ள கருத்தை எடுத்துக் கூறியுள்ளார். ஆழ்வார்களின் திருவுள்ளம் ஆசாரியர்களுக்குத் தெரிகிறது.  இதைத் தான் திருவுள்ளம் பற்றியிருந்தார்கள் என்பார்கள். நாம் அவர்களைப் பற்றி இருக்க வேண்டும். 

- சுஜாதா தேசிகன்
18-08-2020

Comments

  1. Migavum arpudham. Neengalum anubhavitha engalaiyum udan azhaithu senrirukireergal

    ReplyDelete
  2. 🙏🙏 அற்புதம். ஆழ்வார்களும் தேசிகனும் என்னதான் அழகிய தீந்தமிழில் எழுதி இருந்தாலும் பாமரர்களாகிய எங்களுக்கு உரை தேவைப்படுகிறது. பதம் பிரித்து எழுதியதில் கால், அரை பாகம் புரிவதுபோல் இருந்தாலும், உங்கள் விளக்கம் தாம் முழுதும் ரசிக்க உதவுகின்றன. எள், எண்ணெய் நாம் உபயோகிக்கும் உபமேயங்கள். நல்ல வார்த்தைகளாக கரும்பின் சாற்றையும், திருவடித்தாமரை தேனையும் சொல்வது எவ்வளவு அழகு!
    அடியேன்.

    ReplyDelete

Post a Comment