Skip to main content

(4) தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

(4) தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே 


சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள். இது ராமாயண கதை. தசமுகன் என்றால் பத்து தலை ராவணன். சீதையை ராவணன் இலங்கைக்குக் கொண்டு சென்று சீதையை ஒரு அழகிய வனத்தில்  சிறை வைத்தான். அந்த இடத்துக்கு அசோகவனம் என்று பெயர். 

ராமனைப் பிரிந்த துக்கத்தால் சீதை  முகம் வாடி அழுதுகொண்டு இருக்கிறாள். ராவணன்  “சீதை நீ ராமரை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடு, நான் பலசாலி, என்னிடம் பல தெய்வங்கள் தோற்றுவிட்டது. உனக்கு என் சொத்து முழுவதும் தருகிறேன். பல வேலையாட்களை உனக்குப் பணிவிடை செய்யச் வைக்கிறேன். என் பட்டத்து ராணியாக்குகிறேன்.” என்று ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்கப் பார்க்கிறான்.  சீதை கண்கள் சிவந்து கண்களிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. அப்போது ராவணனைப் பார்த்துக் கீழே ஒரு கிடக்கும் புல்லை எடுத்து அவன் முன்னே போடுகிறாள் ஏன் தெரியுமா ? என்று அந்தப் பெண் ராமானுஜரைப் பார்த்துக் கேட்டாள். 


“பிள்ளாய் ! நீயே சொல்லு, உன் வார்த்தையில் கேட்கவே விரும்புகிறேன்” என்கிறார்
அந்தச் சின்னப் பெண் தொடர்கிறாள்.
“ராவணா நீ இந்தப் புல்லுக்குச் சமானம்!”
ராவணனுக்குக் கோபம் வருகிறது, அப்போது சீதை கூறுகிறாள் 
“உன்னைப் பார்த்துப் பேசக்கூட நீ தகுதியற்றவன், அதனால் இந்தப் புல்லைப் பார்த்துப் பேசுகிறேன்.. கேள்”
ராவணனுக்குக் கோபம் கூடுகிறது 
“இந்தப் புல் கூட உன்னைவிட உயர்ந்தது, ஏன் தெரியுமா ? இன்னொருவனின் மனைவிமீது இந்தப் புல் ஆசைப்படவில்லை”

ராவணனுக்குக் கோபம் இன்னும் கூடுகிறது

“நீ பணம், ராணி என்று ஆசை காட்டுகிறாய், அவை எல்லாம் இந்தப் புல்லுக்குச் சமம்!”

ராவணனுக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது 

“ராமர் இந்தப் புல்லைக் கிள்ளி எறிவது போல உன்னைக் கிள்ளி எறியப் போகிறார்”

ராவணனுக்குக் கோபத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. 

சீதை தொடர்கிறாள் “நானே என் சக்தியால் உன்னை எரிக்க முடியும். நானே என்னைக் காப்பாற்றிக்கொள்ள மாட்டேன்.  நீ திருந்துவாய் என்று நம்புகிறேன்.  என் கணவர் ராமர் இருக்கும்போது நான் அவரை மீறி உன்னைத் தண்டிக்க மாட்டேன்.. அவரே வந்து என்னைக் காப்பார். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது”

இப்படி எல்லாம் சீதை ராவணனை வெறுத்துப் பேசினாள் என்று அந்தப் பெண் சொன்னபோது ராமானுஜர் ஆழ்ந்து சிந்தனையுடன் “அருமையாகச் சொல்லுகிறாய் பெண்ணே ! ராமர் இந்தப் புல்லைக் கிள்ளி எறிவது போல உன்னைக் கிள்ளி எறியப் போகிறார் என்று நீ சொன்னபோது எனக்கு ஆண்டாள் தான் நினைவுக்கு வந்தாள்” என்றார். 

“சாமி ஏன் என்று சொல்ல முடியுமா ?”

“ஆண்டாள் திருப்பாவையில் ’பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை’” என்கிறாள் அது நினைவுக்கு வந்தது என்றார். அந்தப் பெண் ராமானுஜரைச் வணங்கி, சாமி நான் கிளம்புகிறேன்” என்றாள். 

ராமானுஜர் “குழந்தாய் ஏன் போக வேண்டும் ?”

“விட்டில் பூச்சிகள் விளக்கில் தானாக விழுந்து செத்துப் போகிறது. அது போல ஆசைகளை நோக்கி நாம் செல்கிறோம். ஆனால் சீதையை பருங்கள்.  பல ஆசைகளைக் காட்டியும் ராமரே எனக்கு எல்லாம் என்று இருந்தாள். அது போல என்னால் இருக்க முடியவில்லையே!” 



“ராவணன் கெட்டவன் அதனால் சீதை போகவில்லை” என்று ராமானுஜர் கூற அதற்கு அந்த பெண் “சாமி, உங்களுக்குத் தெரியாதது இல்லை, அனுமார் சீதையைக் கூப்பிட்ட போதும் ராமர் வந்து காக்க வேண்டும் என்று அனுமாரையும் திருப்பி அனுப்பிவிட்டார். அந்த மாதிரி எனக்கு மனோதிடம் இல்லையே சாமி!” என்றாள். 

“எழுந்திருங்கள் நாம் திருக்கோளூர் போகலாம்” என்று தன் சிஷ்யர்களை  பார்த்து ராமானுஜர் கூற உடனே அந்தப் பெண்

“பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!”

“சரி, இன்னொரு கதையா ? “ என்று ராமானுஜர் அடுத்த கதையைக் கேட்க ஆயத்தமானார்.

- சுஜாதா தேசிகன்

Comments