Skip to main content

உத்தமன்

உத்தமன்ஓணம் பண்டிகை. கேரளாவில் கோலாகலமாகவும், தமிழர்கள் வாட்ஸ்-ஆப்பில் நுனி இலை சாப்பாட்டு படங்கள் பகிர்ந்து  கொண்டாடுகிறார்கள்.  

பலர் ஆண்டாளின் வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து “ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று இன்று பல்லாண்டு பாடினார்கள்.  ‘அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்’  என்றும் ஆண்டாள் போற்றியிருக்கும் அந்த மூன்றாவது அடியைப் பெருமாள் மாதிரி என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்கள். 

தமிழ்நாட்டில் பொங்கல் போல, கேரளாவில் ஓணம்  உழவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 

மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கர கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ

பெரியாழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழ் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும் தமிழில் எழுதியிருக்கிறார். ஆழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.

பெரும் புகழ் படைத்த மாவலி வேள்வியில் நீ யாசித்தபோது சுக்கிராச்சாரியார் இவனுக்குப் பூமிதானம் செய்யக் கூடாது என்று தடுத்தான். அப்போது அவன் கண்ணை, உன் விரல் தர்ப்பபவித்ரத்தின் நுனியாலே கிளறிக் குருடாக்கினாய். சக்கரக் கையானே சங்கினை இடது கரத்தில் உடையவனே அச்சோ அச்சோ என்கிறார். 

இந்தப் பாசுரத்தில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றும். பொதுவாக நாம் பேசும்போது ”ராமாயணம், மஹாபாரதம்” என்ற வரிசையில் தான் சொல்லுவோம், ’மஹாபாரதம் ராமாயணம்’ என்று சொல்லமாட்டோம். அதே போல ‘சங்கு சக்கரம்’ என்று தான் சொல்லுவோம் ஆனால் ‘சக்கரம் சங்கு’ என்று சொல்லமாட்டோம். ( உதாரணம் :’சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்’ - நம்மாழ்வார் ). ஆனால் இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் வரிசையை மாற்றுகிறார். 

சக்கர கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ” 

கொஞ்சம் ஆராயலாம் - சக்கர கையானே என்பதற்கு முன் ‘‘துரும்பால் கிளறிய சக்கர கையனே ’ என்று ஆழ்வார் சொல்லுவதால் பெருமாளின் திருச்சக்கரமே பெருமாளின் விரும்பிய வடிவத்துடன் அவன் விரும்பிய இடங்களுக்குச் சென்று அவன் விரும்பியதைச் செய்தது. அதனால் தான் பெரியாழ்வார் ‘துரும்பால் கிளறிய சக்கர கையனே’ என்கிறார். இந்தப் பாசுரத்துக்கு ஒரு ஐதீகம் உண்டு. நாலூராச்சான்பிள்ளை நாலூர்பிள்ளையிடம் ஒரு கேள்வி கேட்டார் 

“பெருமாளுக்கு தானே மகாபலி தானம் செய்தான். அதுவும் பெருமாள் என்ன விருப்பப்பட்டாரோ அதையே தானம் செய்தான். இவ்வளவு நல்ல காரியம் செய்தும், மகாபலிக்குப் பாதாள சிறைதானே கிடைத்தது. அதே போலத் தானம் கேட்க வந்தவன் உண்மையில் யாசகனே அல்ல என்று உண்மையைச் சொன்ன சுக்கிராச்சாரியாருக்கு கண்ணே போய்விட்டது. இப்படி தானம் கொடுத்தவன் ராஜ்யத்தை இழந்ததும், உண்மை சொன்னவன் கண்ணை இழந்ததும் நியாயமா ?” என்று கேட்டார் 

இதற்கு நாலூர் பிள்ளை இருவரிடமும் குற்றங்கள் உள்ளது 

 - ‘தானம் கொடுக்காதே’ என்று ஆசாரியன் எவ்வளவோ தடுத்தும் கேளாமல், மகாபலி தானம் கொடுத்தான். எனவே மகாபலியின் குற்றம் தன் ஆசாரியன் சொல்லைக் கேளாமை. அதனால் அவனுக்கு ராஜ்யம் பறிபோனது. 

சுக்கிராச்சாரியார் சொன்னது உண்மை என்றாலும், ஒருவன் தானம் கொடுக்க முன்வரும்போது அதைத் தடுப்பது மிகப் பெரிய பாவம். எனவே தான் அவருக்குக் கண்போயிற்று என்று விடையளித்தார். 

ஆண்டாள் ”ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்ற பாசுரத்தில் “மழை மும்மாரி பெய்து, பெரும் செந்நெல் வளர்ந்து வரப்பில் நீர் உயர அதில் கயல் மீன்கள், வண்டுகள் தேனை உண்டு மயங்கிப் பசுக்கள் வள்ளல்போலக் குடம் நிறைக்க அங்கே நீங்காத செல்வம் என்கிறாள் ஆண்டாள். 

ஔவையார் ‘வரப்பு உயர் நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோ உயர்வான்’ இதனால் நாட்டில் பஞ்சம் நீங்கும் என்று ஆண்டாளின் பாசுரத்துடன் இது ஒத்துப்போவதைக் கவனிக்கலாம். 

இந்தப் பாசுரத்தில் ஏன் இந்தச் செழிப்பு என்று பார்த்தால் பெருமாள் திருப்பாதம் பூமியில் பட்டவுடன் செல்வச் செழிப்புடன் விளங்கி..  உழவர் திருநாளானது! ( என்றும் கொள்ளலாம் ) . 

ஸ்வாமி தேசிகன், தனது தசாவதார ஸ்தோத்திரத்தில் மூவுலகமும் நலவாழ்வு பெற உலக மக்களைக் காப்பதற்கே வாமன அவதாரம் என்று போற்றுகிறார். 

ஆண்டாள் மட்டும் தான் இப்படிச் சொல்லியிருக்கிறாளா அல்லது மற்ற ஆழ்வார்களும் சொல்லியிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடியபோது கலியன் அகப்பட்டார். 

திருமங்கை ஆழ்வார் புள்ளம் பூதங்குடி என்ற திவ்ய தேசத்துக்கு வருகிறார். மகாபலியை வஞ்சித்து மூவுலகையும் அளந்த பெருமாளும், முதலையின் வாயிலிருந்து யானையின் துயர் தீர்த்த புனிதனும் எழுதருளியிருக்கு இடம். பெருமாளைக் காணச் வேகமாகச் செல்லும்போது ஆழ்வர் கழனிகளில் நீர் நிறைந்து தேங்கியிருக்கிறதைப் பார்க்கிறார். அங்கே கயல் மீன்கள் செருக்குடன் துள்ளுகிறது. ஒன்றின் மீது மற்றொன்று நெருக்கித் தள்ளுகிறது. அங்கே ஒரு நாரை மீன்களைத் தேடுகின்ற காட்சியும் ஆழ்வார் பார்க்கிறார். 

ஆண்டாள் உத்தமன் என்கிறாள், திருமங்கை ஆழ்வார் புனிதன் என்கிறார். இருவரும் திரிவிக்கிரம அவதாரத்தை நினைவு கூர்ந்து அவன் காலடி பட்ட இடம் செழிப்புடன் இருக்கும் காட்சியைப் பாடுகிறார்கள் ! 

கள்ள குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம்
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய்
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே

ஆலவாயுடையான் என்ற தமிழ்ப்புலவர். இந்தப் பாசுரத்தைக் கேட்டபோது ஒரு சந்தேகம் வந்தது - ‘பள்ள செறுவில் கயல் உகள’ என்று சொல்லும்போது வயல்களில் மீன்கள் அளவற்று கிடக்கிறது என்று தெளிவாகியது. அப்படி இருக்க அடுத்த வரியில் ஒரு நாரை ஏன் தன் இரையை தேட வேண்டும் ? இது பொருந்தவில்லையே என்று கேட்க அதற்குப் பட்டர் இவ்வாறு பதில் அளித்தார் 

”புலவரே, இங்கே நன்றாகக் கூர்ந்து பாசுரத்தைப் பார்க்க வேண்டும் “புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்” என்று ஆழ்வார் சொல்லுகிறார். அங்குள்ள மீன்கள் செழிப்பால் ஒவ்வொரு மீனும் தூண்போலத் தடித்திருக்கும். அவை பறவை குஞ்சுகளின் வாய்க்குக் கொள்ளாது. ஆகையால் தாய் பறவைச் சிறிய மீன்கள் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடுகிறது” என்று பதில் கூறினார். 

மகாபலி தாரை வார்த்தபோது மூவுலகிலும் அவன் திருவடி படாத இடமே இல்லை. இவர்கள் நல்லவர்கள், இவர்கள் கெட்டவர்கள் இவை நல்லவை, இவை கெட்டவை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து உயிர்களின் மீதும் திருவடிகளை வைத்தான். 

ஸ்ரீராமர் மனிதர்களைப் போல் துக்கப்படும்போது,  அவர்களைக் காட்டிலும் அதிகமாகத் துக்கம் அடைந்தார். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போது ஒரு தந்தையைப் போல ஆனந்தப்பட்டான் ( அயோத்தியா காண்டம்) 

தன் உடைமையைப் பெறுவதற்கு வாமனனாய் குறுகிப் போனான். தானம் பெற்ற நொடியிலேயே மகிழ்ந்து பூரித்து ஓங்கி வளர்ந்தான். மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்ற உவப்பிலேயே உயர்ந்தான், உலகளந்தான். திருப்பாணாழ்வார் ‘உவந்த உள்ளத்தனாய் உலகமளந்த’  அந்தத் திருப்பாததுக்கு ஆண்டாள் ’அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி’ என்று பல்லாண்டு பாடுகிறாள்.

- சுஜாதா தேசிகன்
12-09-2019
படங்கள் நன்றி : Keshav 

Comments

 1. It is very nice to read all in one combined thing.

  Very few spelling mistakes(please don't mistake) please edit before you submit. Since you say Sri ramar then finishing should be 'ir'. Ayodhya kaandam instead of kaandaam.
  Nodi instead of nedi.

  ReplyDelete
 2. மிக அருமை ....
  ஆழ்ந்து பல கருத்துக்களை புரிய செய்கிறீர்கள் நன்றி..

  ReplyDelete

Post a Comment