Skip to main content

அகடிதகடனா சாமர்த்தியம்

சிறுவயதில் கடவுள் மறுப்பு கோஷ்டியினர் கேட்கும் கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். எப்படி டிவிஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில் “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும் ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்!” 

இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும். 

“நீ ஏதோ டாப்ய்க்கிற!” என்பேன்

“நீ சயன்ஸ் படிக்கிற அதனால் இதை எல்லாம் கேட்கிற நானும் பிஸிக்ஸ் ஸ்கூடண்ட் தான்” என்பார். 

அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும், மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார் அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது  “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ” என்பார்.  இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது. 

சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது. 

புளி டப்பாவைத் திறந்தபோது, அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது. ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது. அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன். நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா ?” என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று மேலும் பலமாகச் சொறிந்துகொண்டேன்.  ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள்.  குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன்.  சின்ன ஓட்டையில் எப்படியொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும் ? என்று யோசித்தேன். மீண்டும் குழப்பம்.  

கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்று தெரியாமல் இருக்கத் தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும் ? பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்துகொள்ள முடியுமா ? 

இந்தக் கேள்விகளுக்கு ஆழ்வார் பாசுரங்களையும் ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.  ஸ்வாமி தேசிகன் நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், அதனால் அவருடைய தாய் அந்தத் தூண் தான் என்கிறார். தேசிகன் கூறிய பிறகு அதை மறுத்துப் பேச முடியுமா ? 

(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம். 

வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்கிறார். இதற்குப் பொருள் “எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு” . அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்த அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும். எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார்.  கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப் பேசுகிறேன் என்று அவர்களின் பி.எச்.டியை வைத்துக்கொண்டு கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. நம் அறிவு என்பது எவ்வளவு சின்னது என்று ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré "சிந்தனைப் பரிசோதனை என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார். இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. அதனால் நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்:

இன்று தூங்கி நாளை எழுந்துகொள்ளும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் ..உங்கள் அப்பா, அம்மா, நாய்க்குட்டி, விடு, கோயில், செடி, தட்டு, அரிசி, பேனா, பென்சில், சட்டை, அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில் ஏன் நீங்களும் பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

மறுநாள் காலை நீங்கள் எழுந்தபிறகு எல்லாம் பெரிசாகிவிட்டது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ?

விடை முடியாது. அவ்வளவு தான் உங்கள் அறிவு.

சாதாரணமாக இதையே உங்களால் அளக்க முடியாதபோது பெருமாளை இப்படித் தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ.  நிறை கொண்டது என் நெஞ்சினையே.

- திருப்பாணாழ்வார்

எழு உலகையும் உண்டு ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது உலகை உண்ட பிறகு அந்த இலையில் எப்படிப் படித்துக்கொள்வான் என்று கேள்வி எழும்.

கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்தபோது அதில் உள்ள நீ நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம். அதே போல மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்.

( உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை ! )

எப்படி என்று இதை எல்லாம் யோசிக்கவே முடியாது. முயற்சியும் செய்யாதீர்கள் ! இது தான் அகடிதகடனா சாமர்த்தியம். (லிஃப்கோ தமிழ் அகராதியில் - “perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள். ). 

நம் நம் இரைப்பையில் ‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும்! ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி!  இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை ?  பேன் தலையில் இருந்தால் அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம். இச்சிங்கோ, டச்சிங்கோ நாம் அதை உணர்வது எப்படி ? உணர்த்துவது யார் ? என்று கேட்கும் கேள்விகளுக்கு  விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது. 

நாம் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும், தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டிவிடுகிறோம். ‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல ஓடிக்கொண்டு இருக்கிறோம்.  ஆனால் என்றாவது எனக்கு ’அறிவு இல்லை அது வேண்டும் என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா ? கேட்டதில்லை காரணம் நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்கிறோம்.

இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தைப் பார்க்கலாம். 

அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய*
நெறி எல்லாம் எடுத்து உரைத்த, நிறைஞானத்து ஒரு மூர்த்தி*
குறிய மாண் உரு ஆகி, கொடுங் கோளால் நிலங் கொண்ட*
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே

நிறை ஞானத்து மூர்த்தியான கண்ணன் உலகில் உள்ள அறிவு படைத்த நமக்குக் கீதையை அருளினான் என்று இதற்குப் பொருள் கூறினால் அது தப்பு.  ‘அறிவில் குறைவில்லை’ என்று சொல்லும் அறிவில்லாதவர்களுக்குக் கீதையை உரைத்தான் என்று படிக்க வேண்டும்.

கட்டுரையின் கடைசிக்கு வந்துவிட்டோம். மீண்டும் நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்
மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்
துயர் அறு சுடர்-அடி தொழுது எழு என் மனனே !

என்ற பாசுரத்தைப் படிக்கும்போது, நம்மாழ்வாரும் நம்மைப் போலக் கேள்விகள் தான் கேட்கிறார் என்று தோன்றும். ஆனால் இந்தப் பாசுரத்திலேயே பதில் இருக்கிறது!  இந்தப் பாசுரத்தை எப்படிப் படிக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவனோ,
அவனே மயர்வு அற மதி-நலம் அருளினன் எவனோ
அவனே அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவனோ
அவனையே துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே !


ஏன் நம்மாழ்வார் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேள்விக்கு அதே பாசுரத்தை இப்படிப் படிக்க வேண்டும் 

உயர்வு அற உயர் நலம் உடையவனான அவனே,
அயர்வு அறும் அமரர்களுக்கு அதிபதியான அவனே நம்மாழ்வாருக்கு
மயர்வு அற மதி நலம் அருளினான் ஆகையால் நம்மாழ்வார் கூறும்
அறிவுரைகளின் படி அவனைத் துயர் அறு சுடர் அடி தொழுது எழு வேண்டும். 

சில சமயம் கேள்வியே பதிலாக இருக்கும் !
- சுஜாதா தேசிகன்
8-8-2020
படம் : நன்றி கேஷவ் 

Comments

  1. Aesthetic ecstasy Swamy. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
  2. Enthralling elucidation of there is more to it than meets the eye. Aazhwaars Paasurams are eye openers to unravel treasure of wisdom. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
  3. அற்புதமான கட்டுரை. ஆனால் மதி மயக்கத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இவை என்றும் பதில் தெரியா கேள்விகளே! முழு நம்பிக்கை வர அவன்தான் அருளவேண்டும். உங்களைப்போன்றோர் எழுதுவதை அதிகம் படிக்கவேண்டும். தாசன்.

    ReplyDelete
  4. Came here after a long time. What a treat that was. Had sweaty eyes at the end of the read.🙏

    ReplyDelete
  5. நீங்கள் எழுதியது சில சயின்ஸ் கட்டுரைகளோடு ஒத்துச் செல்கிறது. அதில் 4வது பரிமாணம் பற்றி கூறுகிறார்கள். கடவுள் என்பவர் பல பரிமாணங்கள் கடந்து இருப்பவர். 3வது பரிமாணத்தில் உள்ள நம்மால், நம்முடைய சிற்றறிவினால் புரிந்து கொள்ள முடியாது. அது இங்கு இருக்கும் பகுத்தறிவு மர மண்டை களுக்கு புரிவதில்லை. அருமையான பதிவு

    ReplyDelete

Post a Comment