Skip to main content

ஸ்ரீராமருக்கு சங்கத்தமிழ் மாலை - பாவைப்படி ஸ்ரீராமாயணம்

ராமாயணம் பிரதான ஆறு காண்டங்களுடையது. அதில் ஐந்து முக்கிய சம்பவங்களைத் தொகுத்து ( 6 காண்டம் x 5 = 30 ) திருப்பாவை சொற்களைப் வைத்துப் பாவைப்படி ராமாயணம் என்று ஒன்றை எழுதினேன் ( பெரியவாச்சான் என்ற மகான் பாசுரப்படி ராமாயணம் என்று அருளியிருக்கிறார் அவர் என்னை மன்னிப்பாராக ! )பால காண்டம்

1.
உத்தமன் யார் என்று நாரதரை வால்மீகி கேட்க முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று உதவ தேவாதி தேவன் சீர்மல்கும் அயோத்தியில் கதிர் மதியமாக பாரோர் புகழ அவதரித்தான். ( கதிரவன் குலத்தில் ; நிலவின் குணத்துடன் )

2. தசரதனிடம் ’யாம் வந்த காரியம் - தவத்தவரை காக்க ஆற்றப் படைத்த மகன் ராமனை கொடு என்று விஸ்வாமித்திரர் கேட்க, தசரதன் அவன் பூவைப்பூ வண்ணா என்று மறுக்க வசிஷ்டர் இளம்சிங்கம் ராமரை அனுப்புங்கள் என்று கூற, ராமனை அனுப்பிவைத்தான் தசரதன்.
3. பொற்றாமரை அடி கல்லில் பட அகலிகையின் மேல் சாபம் இழிந்தது.

4. திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் ராமன் அங்கண் இரண்டும் கொண்டு கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போன்ற சீதையை நோக்க செங்கண் சிறுச் சிறிலே ... செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை நோக்கினாள்.

5. ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல, வில் அரைவில் ஆக, ஜனகரின் புதல்வி சீதை ராமருக்கு செல்வ பெண்டாட்டி ஆனாள்.
அயோத்தியா காண்டம் 6. தசரதன் ராமனுக்கு இளவரசு பட்டத்தை பரிசுரைக்க, தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் இருந்த தசரதனிடம் ஒருத்தி ஓர்இரவில் இரண்டு வரம் வேண்டுவன கேட்க, உன்மகன் தான் என்று கேள்விப்பட்டு ஒருத்தி வாய் நெகிழ்ந்து துடிக்க தாயைக் குடல் விளக்கம் செய்த காகுத்தன் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி, சீதையுடன் மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் என்று கனகம் செல்ல, உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று லக்ஷ்மணன் முன்சென்றான்.

7. கறவைகள் பின்செல்லும் கன்றுகள்போல், நாடெல்லாம் பின் சென்றது.

8.பேய்ப்பெண்ணே!’ என்று அந்த ஒருத்தியைப் பரதன் வசைபாடி, காட்டுக்குச் சென்று ’அண்ணா ! வல்லீர்கள் நீங்களே ! துன்பதுக்கு காரணம் நானே தான் ஆயிடுக என்று எத்தனை யேலும் பிரிவாற்றற் கில்லாயால் தத்துவம் அன்று என்று கூறி, ஆற்றாது வந்து அடிபனிந்து நிற்க, செம்பொற் கழலடியை சம்மானமாக’ கொடுத்தனுப்பினார் ராமர்.

9.கள்ளம் தவிர்ந்து ராமன் உள்ளம் புகுந்த குகனை ‘உம்பியும் நீயும்’ என்று சொந்தம் கொண்டாட, கூடி இருந்து குளிர்ந்தான்.

10.பாதுகா ராணியைக் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே என்று சீரிய சிங்காசனத்தில் அமர்த்தினான் பரதன்.ஆரண்ய காண்டம்
11.
என்றென்றுன் சேவகமே என்று இருக்கும் முனிவர்களும் யோகிகளையும் ராக்ஷசர்களிடமிருந்து ஆழிபோல் மின்னி சீறி அருளினான்.

12. பேய்முலை நஞ்சுண்டு நற்செல்வன் தங்காய் போல் வந்த சூர்ப்பணகையின் அகந்தை அபிமானத்தைப் பங்கமாக்கினார்.

13. போதரிக் கண்ணினாய் (மான் போன்ற கண் உடையவள் ) மாயமானை வேண்டுமெனக் கேட்க, மான்பின் எம்பெருமான் ஓட, வல்லை உன் கட்டுரைகள் கேட்ட இளைய பெருமான் மாற்றமும் தாராமல், வாசல் திறவாதார் என்று சொல்லிவிட்டு சென்றவுடன், சீதையை பொல்லா அரக்கன் அபகரித்தான்.

14. புள்ளரையன் ஜடாயுவைப் பார்த்த ராமர் ஆவாவென்று அழுது, பின் ஆராய்ந்து எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று மோட்சத்தை நல்கினான்.

15. சபரி ராமரைப் பார்த்து உந்தன்னைப் பிறவி பெறுந்துதனைப் புண்ணியம் யாம்உடையோம் என்று முழங்கை வழிவாரக கொடுத்த நற் பழங்களை ராமர் சுவைத்த பின் , ‘உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்று அவள் ஆசாரியன் திருவடியை அடைந்தாள்.கிஷ்கிந்தா காண்டம்
16. ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்த ராமரைப் பார்த்த அனுமார் கோதுகலம் அடைந்து உய்யுமாறு எண்ணி தன் நேய நிலைக்கதவத்தை திறந்து அதில் ராமரைப் பிரதிஷ்டை செய்தார்.

17. சீதை செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிக்கக் கீழே விழுந்த காசும் பிறப்பும் சுக்ரீவன் காண்பிக்க ராமர் மனதில் சீதை பரந்தனகாண் ( இடமெங்கும் பரவியிருந்தது ) என்றென்றும் உன் சேவகமே என்றார் ராமர்.
18. வாலியை ஒரே அம்பினால் அடிக்க அது சார்ங்க முதைத்த சரமழைபோல் வீழ்த்தியது.

19. இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் என்று சுக்ரீவனை எழுப்பி, தென்இலங்கைக் கோமானைச் செற்ற அரி என்ற பேரரவத்துடன் வானரங்கள் கைங்கரியம் செய்ய வந்தது.

20. பாலன்ன வண்ணத்து கணையாழியை ராமர் அனுமானிடம் கொடுக்க சீதையைத் தேட நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டார்.சுந்தர காண்டம்

21.
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி என்பதைப் போல அனுமார் கடலைத் தாண்டினார்.

22. ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே தசரதன் மருகளே ! திருவே என்று சீதையைக் கண்ட நாள் அனுமாருக்கு ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாக’ இருந்தது.

23. ஆழிபோல் மின்னிய கணையாழியைப் பெற்றுக்கொண்ட சீதை ‘மார்கழி நீராட மகிழ்ந்தேலோர்’ என்பது போல மகிழ்ந்தாள்.

24. ராவணன் அனுமார் வாலை தீயினால் குடல் விளக்கம் செய்த போது, இஷ்வாகு குலத்தின் அணிவிளக்கான சீதையின் அருளால் தீ அனுமானுக்கு குளிர்ந்து, இலங்கையைத் தூசாக்கியது.

25. மாமாயன் மாதவன் வைகுந்தனை இப்போதே எம்மை காக்க வரச் சொல்லு என்று சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே என்று எதையும் கொடுக்காமல், கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போன்ற சூடாமணியைக் கொடுத்து அனுப்ப, அனுமார் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப என்பது போலப் பறந்து, ராமனிடம் சமர்ப்பிக்க வருத்தமும் தீர்ந்து நாடு புகழும் பரிசாக அனுமனைக் கட்டித்தழுவிக்கொண்டார்.யுத்த காண்டம்
26.
கடல் வழி விடாமல் தடுக்க உலகினில் ராமர் தோற்றமாய் நின்ற சடர் போல காட்சி அளிக்க, கடலரசன் அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே என்று சரணாகதி செய்ய, பாலம் கட்டபட்டது.

27. பொல்லா அரக்கனை துறந்து, ஆற்றாது வந்து உன்னை அடிபணிந்த என்ற விபீஷணனனை ‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது' என்பது போல உன்தன்னோடு உற்றோமே யாவோம் என்று அபயம் அளித்தார் ராமர்.

28. கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனை கன்று குணிலா எறிந்தாய் என்பது போல வீழ்த்தி, செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலனாக இந்திரஜித்தை வீழ்த்தி, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்து, மண்டோதரிக்கு சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையனாகக் காட்சியளித்தார்.

29. வங்கக்கடல் கடைந்து பாலம் கட்டி ராவணனை வீழ்த்த யாம் வந்த காரியத்தை முடித்த ராமரை, உக்கமும் தட்டொளியும் தந்து தன் மணாளனை மீண்டும் கைபிடித்த சீதையுடன் சீதாராம பட்டாபிஷேகம் அயோத்தியில் நீங்காத செல்வம் நிறைந்து நடைப்பெற்றது.

30. மனத்துக்கு இனியானை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால், எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்யும் பேறு பெற்று எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்.

- சுஜாதா தேசிகன்
15-1-2020


Comments

 1. Dhivyam swamin!!!
  Very much relishing.
  Adiyen,

  ReplyDelete
 2. Sooper oo ..sooper Dear Desi .

  ReplyDelete
 3. பாசுரப்படி இராமாயணம்போல்...
  பாவைப்படி இராமாயணம்..
  அருமை. அருமை

  ReplyDelete
 4. 🌟🙏🙏🙏🙏🙏6 காண்டம் 5 நிகழ்வுகள் 30 (திருப்பாவை பாசுர) படிகளில்
  ஸ்ரீராமயண காவியம் - essence like in time-lapse view - மிக மிக அருமை🌟🌟🌟

  ReplyDelete

Post a Comment