Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 6


நகை கடையில் தங்க, வைர நகைகள் ஜொலிப்பதை பார்த்திருப்பீர்கள். தங்கமும், ரத்தினங்களும் இயற்கையாகவே ஜொலிக்கும் தன்மை அதனுள் இருந்தாலும் விளக்கு இருந்தால் தான் மின்னுவது நம் கண்களுக்குத் தெரியும். 

ஸ்தோதிரங்களுக்குள் ரத்தினமாக ’ஸ்தோத்திர ரத்தினம்’ என்ற ஒன்றை ஆளவந்தார் அருளியுள்ளார். 

பல வண்ண ரத்தினங்கள் பதித்த மோதிரம் மாதிரி பல ஸ்லோகங்கள் இதில் இருக்கிறது. எல்லா ரத்தினங்களைக் காட்டிலும் வைரத்துக்குப் பிரகாசம் அதிகம். அப்படிப்பட்ட இரண்டு வைரங்களை ’அஞ்சலி வைபவம்’ என்ற விளக்கு போட்டுப் பிரகாசிக்கச் செய்தவர் நம் ஸ்வாமி வேதாந்த தேசிகன். 

அஞ்சலி  -  அகராதிகளைத் தேடிச் செல்லாமல் புரிந்துகொள்ளும் ஓர் எளிமையான வார்த்தை. அதைச் செய்வது மிக எளிமை

சிறுவயதில் நம் பெற்றோர்கள், கோயிலுக்குச் செல்லும்போது ‘கைகூப்பிக்கோ’ என்று சொல்லித் தந்துள்ளார்கள். இன்றும் விஸ்வரூபத் தரிசனக் கதவு திறக்கும்போது அல்லது பெருமாளை வீதியில் பார்த்தாலோ உடனே கைகளைக் கூப்புகிறோம். கைகூப்புவது சுலபம்

வயசான பிறகு கைகூப்புவது பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறோம். இதில் கொஞ்சம் உளவியல்(psychology) அடங்கியிருக்கிறது. ’இவரை எல்லாம் கைகூப்ப வேண்டுமா கூடவே வயது, ஆண், பெண், பிரம்மச்சாரி, குலம் என்று எல்லா எண்ணங்களும் சேர்ந்துகொள்கிறது. 

இதைத் தவிர கையை முழுவதும் ஒட்டியோ அல்லது மேம்போக்காகவோ, நெஞ்சுக்கு நேரே கீழே தலைக்கு மேல் என்று ஒரு பட்டியலே போடலாம். ஆனால் கைகூப்பும்போது எந்த மாதிரி கைகூப்புகிறோம் என்று நம் மனதுக்குத் தெரியும். இதில் புரிந்துகொள்ள வேண்டியது - அஞ்சலி செய்வதில் உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அஞ்சலி செய்தாலும், நம் மனம் அஞ்சலி செய்வதில் ஈடுபட்டு அகங்காரம் அற்று இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். 

ஆளவந்தார் ஸ்தோதர ரத்னம் 27, 28 ஆம் ஸ்லோகங்களில் என்ன சொல்லியிருக்கிறார் என்று அதன் சாரத்தை ஒரு வரியில் தருகிறேன்.  

27ஆம் ஸ்லோகத்தின் சாரம் : பெருமாளின் திருவடிகள் இனிமையைக் கொடுக்கும். தாமரைப் பூவின் உள்ள தேன் போன்ற சுவை மிகுந்தது. தேனி இதை விட்டுவிட்டு ஒரு முள் நிறைந்த கள்ளிச்செடியில் போய் அமருமா ? 

28ஆம் ஸ்லோகத்தின் சாரம் : எவன் ஒருவன் கைகூப்பி உன்னை வணங்கினால் அத்தனை துன்பங்களையும்/பாவங்களையும் போக்கி அளவில்லாத நன்மை தரும். கைகூப்பினால் வீணாகாது. 

இந்த இரண்டு ஸ்லோகத்தின் விரிவுரை தான் தேசிகனின் அஞ்சலி வைபவம். இந்த இரண்டு ஸ்லோகத்தில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது, எளிமையாகப் புரிகிறதே என்று எண்ணலாம். இதைச் சிக்கலாக்கலாம் இப்படி 

பெருமாளின் திருவடியைச் சரணாகதி செய்தால் மோட்சம் நிச்சயம். அந்தத் திருவடியை அடைய மோட்சம் செல்ல வேண்டும்!

இது ஸ்ரீரங்கத்துக்கு வழி கேட்டால் ஸ்ரீரங்கத்தில் தான் போய்க் கேட்க வேண்டும் என்று சொல்லுவது போல. 

பெருமாளின் திருவடியைச் சரணாகதி செய்தால் இனிமையான மோட்சம் நிச்சயம் - இது ஆளவந்தாரின் 27 ஆம் ஸ்லோகம் சொல்லும் விஷயம். 

அந்தத் திருவடியை அடைய மோட்சம் செல்ல வேண்டும் ஆனால் அது எளிமை - இது ஆளவந்தாரின் 28 ஆம் ஸ்லோகம். 

இனிமை, எளிமை இது இரண்டும் நமக்குத் தருவது அஞ்சலி. சும்மா கைகூப்ப வேண்டும் அவ்வளவு தான்.ஆனால் நம் மனம் கைகூப்புவதில் ஈடுபடவேண்டுமே ? அதற்கு என்ன செய்ய வேண்டும் ? அதற்கும் அஞ்சலியே செய்ய வேண்டும். 

முதலில் அர்த்தம் புரியாமல் சாதாரண  உடல் செயல்பாடாக அஞ்சலி செய்தாலும் பெருமாள் அதைக் கண்டுகொள்ளாமல், ஏதோ செய்கிறானே என்று நமக்கு அருள் புரிகிறார். அந்த அருளே போகப் போக சாதாரண வணக்கம், வணங்கிய வணக்கம் என்று ஆகி அதுவே நாளடைவில் வளைந்து சாஷ்டாங்கமாக விழுவோம். 

கோயில்களில் எல்லா ஆழ்வார் ஆசாரியர்களையும் பார்த்தால் அவர்கள் எல்லாம் கைகூப்பிக்கொண்டு தான் இருப்பார்கள். தூப்புல் வேதாந்த தேசிகன் வரதன் முன் செல்லும்போது கைக்கூப்பிக்கொண்டு தான் இருப்பார். 

”அஞ்சலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ” என்ற வாக்கியங்களைப் படித்தால் இனி சுலபமாக அர்த்தம் புரியும். காகாசுரன், விபீஷணன் எல்லாம் செய்தது இந்த அஞ்சலி தான். 

நம்மாழ்வாரின் இந்தப் பாசுரத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகப் பாருங்கள்

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே

நம்மாழ்வார்  பெருமாளுக்குப் பூசும் சந்தனம் என் நெஞ்சம் ; என் பாட்டு அவருக்கு மாலை ; கைகூப்புவது அவனுக்கு அணிகலன் என்கிறார்! 

இன்னொரு நம்மாழ்வார் பாசுரம் இது 

கண்ணன் கழல் இணை நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம் நாரணம் ஏ திண்ணம்.

அடியவருக்கு எளியவனான அவனுடைய திருவடிகளை  அடையே வேண்டும் என்கிற ஆசை உங்கள் நெஞ்சத்தில் இருந்தால் நாராயணின் நினைத்து அவன் நாமத்தைச் சொல்லுங்கள். 

நம்மாழ்வார் கூறிய அந்தக் கண்ணன் கழலை அடையத் திண்ணமாக என்ன செய்ய வேண்டும் என்று ஸ்வாமி தேசிகன் அமிருதாசுவாதினியில் இப்படிக் கூறுகிறார். 

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இதுவென்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பழம் தொழில் பற்றினமே

கண்ணன் திருவடிகளைத் தொழுவதற்குக் கூப்பிய கையின் பெருமை அளக்க முடியாத ஒன்று என்று ஆளவந்தார் ஒரு ஸ்லோகத்தில் கூறுவதால் இதுவே நமக்குத் திடமான ( திண்ணமான ) சித்தாந்தம். இந்த அஞ்சலி பெருமாளை நீர்ப் பண்டமாக உருக்கச் செய்யும். அஞ்சலி செய்தால் நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். 

யார் நல்ல வழியைக் காட்டுகிறாரோ அவரே ஆசாரியன். ஆசாரியனுக்கு இன்னொரு பெயர் தேசிகன். இருளை போக்குவது மட்டும் அல்லாது  ரத்தினங்களை மினுக்கவும் செய்பவர் நம் தேசிகன். 

- சுஜாதா தேசிகன்
2-08-2020
ஆளவந்தார் திருநட்சத்திரம் 

Comments

  1. மிக அருமை ஸ்வாமி. 🙏🙏🙏

    ReplyDelete
  2. You are Desikan too and the way shown is lofty.

    ReplyDelete
  3. அருமை. நிகமாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment