(1) அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே !
”சாமி இது அக்ரூரரின் கதை!” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.
ரமானுஜர் அவருடைய சீடர்களும் ஆர்வமாகக் கேட்கப் பெண் பிள்ளை தொடர்ந்தாள்.
கண்ணனின் தந்தை நந்தகோபன். அவருடைய உறவினர் அக்ரூரர்.
அக்ரூரர் என்றால் வடமொழியில் சாது என்று பொருள். இவரும் சாது, நல்லவர். குட்டி கண்ணனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
குட்டி கண்ணனின் மாமா கம்சன். கெட்ட மாமா. கண்ணனைக் கொல்ல நினைத்தான். கெட்ட மாமா கம்சனிடம் அக்ரூரர் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்தார்.
கம்சன் கண்ணனைக் கொல்ல பல சதித் திட்டம் தீட்டித் தோற்றுப் போனான். மீண்டும் ஒரு சதித் திட்டம் தீட்டினான்.
ஒரு விழா ஏற்பாடு செய்தான். அதற்குக் கண்ணனை அழைத்துக் குவலயாபீடம் என்ற மத யானையை விட்டு அழித்துவிடலாம் என்று முடிவு செய்தான். இதிலும் கண்ணன் தப்பிவிட்டால் ? இன்னொரு திட்டம் வைத்திருந்தான். சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களைக் கொண்டு மல்யுத்தத்தில் கொன்றுவிடலாம் என்ற இன்னொரு அதி பயங்கரமான திட்டம். அவனுக்கு ஒரே பிரச்சனை கண்ணனை இந்த விழாவிற்கு எப்படி அழைத்து வருவது? யோசித்தான். கம்சனுக்கு அக்ரூரர் ஞாபகம் வந்தது “அக்ரூரரே உடனே கோகுலத்திலிருந்து கண்ணனை அழைத்து வா” என்று ஆணையிட்டான்.
அக்ரூரர் கண்ணன் மீது மிக்க அன்பு வைத்திருந்தார். கம்சன் சதித் திட்டம் தெரிந்திருந்தாலும் சம்மதித்தார். ஏன் என்றால் கண்ணனுக்கு ஒரு நாளும் எந்தத் தீங்கும் ஏற்படாது என்று அறிந்திருந்தார். அதனால் அவர் பயப்படவே இல்லை. அதைவிட முக்கியமான காரணம் கண்ணனைப் பார்க்க இது ஒரு அருமையான சந்தர்ப்பம். உடனே “இதோ கிளம்புகிறேன்” என்று ரதத்தில் ஏறிக் குதித்து கோகுலத்துக்குப் புறப்பட்டார்..
ரதத்தில் போகும்போது கண்ணனின் நினைவாகவே இருந்தார். கண்ணன் என்ன நிறத்தில் உடை அணிந்திருப்பான் ? அவன் பீதாம்பரம் எப்படி இருக்கும் ? தலையில் மயில் பீலி எப்படி காற்றில் அசையும் ? கண்ணனைப் பார்த்து என்ன பேசலாம் ? என்று யோசித்துக்கொண்டு வரும் வழியில் கண்ணனின் பாத சுவடுகள் மண்ணில் தெரிந்தது. உடனே ரதத்தை நிறுத்திக் கீழே இறங்கினார். பாத சுவடுகள் இருந்த மண்ணில் புரண்டார். ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
மீண்டும் கண்ணன் நினைவு வர, ரதத்தை வேகமாக ஓட்டினார், கோகுலத்தில் நுழைந்தவுடன் சாலைகளில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மகிழ்ச்சிக்குக் காரணம் கோகுலத்தில் எல்லோர் மனதிலும் கண்ணனே இருந்தான். அக்ரூரர் சந்தை வழியே ரதத்தில் வரும் போது
பழம் விற்பவர் பழத்தைக் காண்பித்து “கொஞ்சம் கோவிந்தாவை வாங்கிக்கொண்டு போங்க” என்றார். பூக்காரி “ஒரு கொத்து கேசவனை வாங்கிக்கோங்க” என்றாள்.
அக்ரூரருக்கு கண்ணனை இப்பவே பார்க்க வேண்டும் போல இருந்தது. ரதத்தை இன்னும் வேகமாக ஓட்டி நந்தகோபலான் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார். ரதத்திலிருந்து குதித்து, நந்தகோபாலன் இல்லத்தில் எல்லா அறைகளிலும் கண்ணனைத் தேடினார்.
கண்ணனைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளினார். கண்ணன் அக்ரூரரைப் பார்த்தவுடன் குடுகுடு என்று ஓடி வந்தான். அக்ரூரர் கண்ணனைக் கட்டித் தழுவிக்கொண்டார். கண்ணனின் புன்னகை அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது.
கண்ணனிடம் விஷயத்தைச் சொன்னார். கண்ணன் சிரித்துவிட்டு “அதுக்கு என்ன தாராளமா வருகிறேன்” என்று பலராமனுடன் அக்ரூரரின் ரதத்தில் மதுராவிற்கு புறப்பட்டனர்.
கண்ணனும் பலராமனும் சின்னக் குழந்தைகள். அதனால் அக்ரூரருக்கு மனதின் ஓரத்தில் இவர்களுக்குக் கம்சனால் என்ன தீங்கு வருமோ என்று பயந்தார்.
போகும் வழியில் யமுனை ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. . அக்ரூரர் குளித்துவிட்டு பூஜை செய்ய விரும்பினார். குளிக்கும் போது இந்தக் குழந்தைகள் கீழே இறங்கி யமுனையின் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டால் ?
“கண்ணா, பலராமா… நான் குளித்துவிட்டு வருகிறேன். இங்கேயே ரதத்தில் இருக்க வேண்டும் கீழே இறங்கக் கூடாது சரியா ?” என்று இறங்கி நதிக்குச் சென்றார். ஆனால் உள்ளூர அவருக்குப் பயம் இருந்தது. தண்ணீரில் மூழ்கினார்.
இதை அறிந்த கண்ணன் அக்ரூரரின் பயத்தைப் போக்க நினைத்தான்.
அக்ரூரர் மூழ்கிய போது. தண்ணீருக்குள் அவர் கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்தது என்று கதையைக் கொஞ்சம் நிறுத்தினாள் திருக்கோளூர் பெண்.
ராமானுஜர் “பிள்ளாய்! அப்படி என்ன பார்த்தார் ? ” என்று ஆவலுடன் கேட்டார்.
தண்ணீருக்குள் பலராமன் பல தலைகளுடன் கூடிய ஆதிசேஷனாகத் தரிசனம் கொடுத்தார் ஆதிசேஷன் மடியில் கண்ணன்!
“கண்ணன் எப்படி காட்சி கொடுத்தான் தெரியுமா ?” என்று முகத்தில் பூரிப்புடன் அந்த குட்டி பெண் கேட்க
“குழந்தாய்! இதையும் நீயே சொல்லிவிடு” என்றார் ராமானுஜர்.
“ சங்கு சக்கரங்களுடன், முத்து, மாணிக்க மாலையுடன், மஞ்சள் பீதாம்பரம், தலையில் மயில் பீலி … உடனே அக்ரூரர் நீரிலிருந்து எழுந்து ரதத்தைப் பார்த்தார். அங்கே கண்ணனும் பலராமனும் சமத்தாக உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள்.
மீண்டும் நீரில் மூழ்கினார். மீண்டும் ஆதிசேஷன்.. மடியில் கண்ணன். வெளியே பார்த்தால் ரதத்தில் கண்ணனும் பலராமனும்… அக்ரூரருக்கு பயம் நீங்கியது. கண்ணனே நாராயணன். அவனே எல்லா இடத்திலும் இருக்கிறான் என்று புரிந்தது.
”இந்த அக்ரூரர் போல் கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் நான் இல்லையே, அதனால் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள் அந்தச் சின்னப் பெண்.
ராமானுஜர் “பிள்ளாய்! அக்ரூரர் போல விதுரரும் கண்ணன் மீது அன்பு கொண்டு இருந்தார்!” என்று ராமானுஜர் கூற உடனே அந்தப் பெண் “அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே!” என்றாள்.
ராமானுஜர் சிரித்துக்கொண்டு “பிள்ளாய், இது என்ன புது கதை ? சரி கம்சன் போட்ட சதித்திட்டம் என்ன ஆச்சு ?” என்று சொல்லி முடிப்பதற்குள்
“குவலயாபீடம் என்ற மத யானையும், மல்லர்களையும் வதம் செய்தான் என்று சொல்லவும் வேண்டுமா ? ” என்றாள் அந்தப் பெண் சிரித்துக்கொண்டே.
ராமானுஜர் புன்னகையுடன் அடுத்த கதையைக் கேட்க ஆரம்பித்தார்.
- சுஜாதா தேசிகன்
அருமை..!
ReplyDeleteSuper I like thirukolur pen pillai ragasiyam
ReplyDeleteமிக மிக அருமை
ReplyDeleteமிக மிக அருமை🙏
ReplyDelete