படக் கதை
”காமிக்”(’comic ) என்ற சொல்லுக்குத் தமிழில் ’படக் கதை’ என்று சொல்லுவார்கள். படத்துடன் கூடிய கதை. காமிக் என்ற வார்த்தையிலிருந்து காமெடி என்ற வார்த்தை வந்திருக்கலாம். ‘என்ன வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலெயே' என்று வசனத்துக்குப் பிறகு இது தமிழ் வார்த்தையாகிவிட்டது.
இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் ’சரியான காமெடி பீஸ்’ என்று என்னை நானே சொல்லிக்கொள்வேன். படத்துக்குப் பின் ஒரு கதை இருக்கிறது என்ற உங்கள் யூகத்துக்கு மதிப்பளித்து அந்தக் கதையை உங்களுக்கு ’படக் கதையாக’ சொல்லப் போகிறேன்.
இரண்டு வருடம் முன் பத்ரி யாத்திரை சென்றிருந்தேன். ”மந்திருக்கு முன் படம் எடுத்துக்கொள்ளுங்கள். இன்ஸ்டண்ட் பிரிண்ட் 100 ரூபாய்” என்று பல புகைப்படக்காரர்கள் அந்தக் குளிரில் குல்லாவுடன் அலைந்துகொண்டு இருப்பார்கள். இன்றைய ‘செல்ஃபி’ யுகத்தில் அவர்கள் கூவுவதை யாரும் சட்டை செய்வதில்லை. ஒரு சிலர் படம் எடுத்துக்கொண்டார்கள். படம் எடுத்தபின் பின் நீங்கள் பெருமாள் சேவித்துவிட்டு வரும்போது உங்கள் படம் ரெடியாகப் பிரசாதம் போலக் கிடைக்கும்.
ஒரு நாள் மத்தியம் நாங்கள் எல்லோரும் ஊர்வலமாக ஸ்ரீராமானுஜரைப் பல்லக்கில் ஏளப்பண்ணிக்கொண்டு வீதில் நடந்து பத்ரி கோயில் முன் வந்தடைந்தோம். கோயில் முன்பு முன்னும், பின்னும் ராமானுஜரை ஏளப்பண்ணும் வாய்ப்பு அடியேனுக்கும் கிடைத்தது. நீங்கள் பார்க்கும் இந்தப் படம் அது தான்.
பொதுவாக நான் புகைப்படம் எடுப்பேன் ஆனால் கேமரா முன் நிற்கமாட்டேன். அதனால் இந்த வரலாற்று நிகழ்வை நான் படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. பிரபந்தம் சேவித்துவிட்டு சேவாகாலம் முடிந்து திரும்ப வந்துவிட்டோம். அப்போது ஒருவர் “என்ன நீங்கப் பத்ரியில் ராமானுஜரைப் பல்லக்கில் ஏளப்பண்ணியதை படம் எடுத்துக்கொள்ளவே இல்லை! நிறையப் புகைப்படக்காரர்கள் படம் எடுத்தார்களே!” என்றார்
அட ஆமாம். எடுத்துக்கொண்டிருக்கலாமே என்று தோன்றியபோது ஏளப்பண்ணியபோது ஒரு புகைப்படக்காரர் என்னைப் பார்த்துச் சிரித்தது ஞாபகத்துக்கு வந்தது.கொசுறாக அவர் மஞ்சள் ஜெர்கின் அணிந்து இருந்தார் மங்களகரமாக என்னைக் கவர்ந்திருப்பார் என்று பட்சி கூவியது.
மாலை மீண்டும் பத்ரி பெருமாள் கோயிலுக்குச் சென்று கண்களில் மஞ்சா பில்டர் போட்டுத் தேடினேன். யாத்திரிகர்களின் மஞ்சள் பைத்தான் கண்ணில் பட்டது.. நான் அங்கே இருக்கும் புகைப்பட கார்களுடன் மஞ்சள் கலர் ஆசாமிபற்றி எனக்குத் தெரியாத ஹிந்தியில் பேசி அடிவாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
கூட இருந்தவர்கள் “படம் கிடைத்ததா ?” என்று விசாரிக்க, இல்லை என்றேன். அன்று இரவு நான் எடுத்த பல படங்களை எல்லாம் ஜூம் செய்து ஒவ்வொரு முகமாகப் பார்த்தேன். ஒரு படத்தில் ஒரு ஆசாமி மஞ்சள் ஜர்கின் அணிந்துகொண்டு முகத்தைக் காட்டாமல் திரும்பியிருந்தார். பட்சி மீண்டும் கூவியது. மறுநாள் காலைக் கிளம்பினேன். “மழை வரும் போல இருக்கே !” என்ற அறிவுரையை நிராகரித்துவிட்டு குளிரில் கிளம்பினேன்.
கோயில் முன் புகைப்படக் குழுவினர் முன் நின்றபோது “போலிஹே” என்றார். ஏதோ பேசினேன். என் ஹிந்தி ’போலி ஹே’ என்று கண்டுபிடிக்க அவர் அதிக சிரமப்படவில்லை. இதற்கு மேல் நான் ஹிந்தி பேசுவது ஜீவகாருண்யமாக இருக்காது என்று காமிராவில் எடுத்த படத்தில் அந்த மஞ்சள் ஜாக்ட் ஆசாமியைக் காண்பித்து எங்கே ? என்றேன். குழுவில் ஒருவர் அவரைக் கண்டுபிடித்தார். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். சுமாராக ஆங்கிலம் தெரிந்தவர்பின் பக்கம் திரும்பியவரின் முன் பக்கக் கதையைச் சுருக்கமாகக் கூறினார் “இந்த ஆசாமி ஊருக்கு விடுப்பில் வருவார். வரும்போது புகைப்படம் எடுப்பார். நேற்றே அவர் கிளம்பிவிட்டார்!” என்றார்.
நான் ஹிந்தி தெரியாமல் மூன்றாம் பிறை படத்தின் கடைசிக் காட்சியில் கமல் ஸ்ரீதேவியிடம் நடித்துக் காண்பித்த மாதிரி ராமானுஜரை ஏளப்பண்ணிய படம் வேண்டும் என்றேன் . என்மீது பரிதாபப்பட்டு ( நடிப்புக்கு மொழி தேவை இல்லை ! ) இந்த அக்மார்க் தமிழனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று ஒருவர் அந்த மஞ்ச ஆசாமிக்குப் போன் செய்தார். சிக்னல் கிடைக்கவில்லை. இன்னொருவர் முயற்சி செய்தார். கிடைத்தது. அவரிடம் பேசிவிட்டு இன்னொரு மு.க.சுருக்கம் ”கேமராவுடன் சென்றுவிட்டார். படங்கள் டெலிட்டட். நஹி நோச்சான்ஸ்!” என்றார்.
நான் அவரிடம் அந்தப் படம் எனக்கு மிக முக்கியம். மீண்டும் பேசினார். சார் அவர் வேறொரு படம் பிரிண்டவுட் எடுக்க அவர் காமிராவில் இருப்பதை ஒரு கடையில் கொடுத்துப் பிரிண்ட் எடுத்தார். அப்போது உங்கள் படமும் அங்கே காபி ஆகியிருக்கலாம். கேட்டுச் சொல்லுகிறேன். மாலை வாங்க என்றார். போகும்போது ‘ஒன்லி டிரை!’ என்றார்.
மழை எச்சரிக்கை மாமாவைக் கடந்து மாலை ஆறு மணிக்குச் சென்றபோது குளிர் நடுக்கியது. ரங்கநாதன் தெரு மாதிரிக் கோயில் முன் கூட்டம். நான் அந்தப் புகைப்படக் கலைஞனைத் தேடினேன். கிடைக்கவில்லை. இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் நாளைக் காலைக் கிளம்பப் போகிறோம் இன்னொரு முறை பத்ரி பெருமாளைச் சேவித்துவிட்டுத் திரும்பலாம் என்று உள்ளே சென்று சேவித்துவிட்டு, பல மணி நேரம் கழித்து வெளியே வந்தேன். மழை தூரல் மேலே விழுந்தது.
அந்தப் புகைப்படக் காரைப் பார்த்தேன். கடைசி பால் சிக்ஸரா ஜாக்கெட்டா மன்னிக்கவும் விக்கெட்டா என்று அவர் முகத்தைப் பார்த்தேன் அவர் சிரித்துக்கொண்டு என் படத்தை அவர் ஜாக்கெட் உள்ளிருந்து எடுத்து என் வயிற்றில் சிக்ஸர் வார்த்தார்.
இந்த இடத்தில் பெருமாளின் கருணையே கருணை என்று பக்தி படம் மாதிரி சுபம் என்று முடிக்கலாம்.
’விழியே கதை எழுது’ என்பது போல ’விதியும் கதை எழுதும்’ மீண்டும் அறைக்கு நடந்து செல்லும்போது இன்னொரு விஷயம் நடந்தது. என் பின்னாடி ஒன்று நடந்தது. கருப்பு நாய். பத்ரி நாய்களுக்கு முன் ஒ சேர்க்க வேண்டும் அவை ஓநாய்கள்.
என் பின்னாடி வந்தது பெரிய ‘ஓ’ அதனால் வேகமாக நடந்தேன். அந்த இருட்டில் நான் வேகமாக நடந்தது ஓடியது போல அந்த ’ஓ’க்கு தெரிந்திருக்க வேண்டும் என் பின்னாடி ஓடி வந்தது. துரத்தியது என்று கூடச் சொல்லலாம். நானும் ஓடினேன். சினிமா காட்சிபோல மழை வர ஆரம்பித்தது. இடது பக்கம் சலசல என்று கங்கை என்னுடன் கூட ஓடியது.
மலைச்சரிவில் ஒரு சாய்ந்த மரத்தின் கீழே ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். அவரிடம் அடைக்கலம் அடைந்தேன்.அவரைப் பார்த்துவிட்டு ரிவர் கியரில் ஓடியது ‘ஒ’. அவரை நிதானமாகப் பார்த்தான். அவர் சிரித்தார். பற்கள் வெள்ளையாக இருந்தது உள்ளேயிருந்து புகையோ பனியோ வந்தது. சடாமுடியுடன் பெரிய மணி மாலைகள் கையில் ஒரு கமண்டலம். நான் கடவுள் படத்தில் வரும் அகோரி மாதிரி இருந்தார்.
“ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர் கரு நாய் கவர்ந்த காலர்” என்ற நம்மாழ்வார் பாசுரம் நினைவுக்கு வந்தது. அவர் மீண்டும் சிரிப்பதற்குள் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நாய் வருகிறதா என்று மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தேன்.
வரவில்லை. நிஜமாகவே சுபம்.
- சுஜாதா தேசிகன்
26-05-2020
(திருவாதிரை)
காமெடி பீஸ் படம் : நன்றி மஞ்சள் ஜாக்கெட் !
படம் ஏற்கனவே முக்திநாத் யாத்திரை கட்டுரையின்போது வெளியிட்டுவிட்டீர்கள்!
ReplyDeleteமஞ்சள் ஜாக்கெட்டுக்கும், மஞ்சள் துண்டுக்கும் சம்பந்தம் இல்லைபோல!😊😊