லாக்டவுன் வாழ்க்கை - 1
வீட்டுக்குள் முடங்கி நூற்று ஐம்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதை மறந்தாலும் மாஸ்கை மறப்பதில்லை. பலரைச் சட்டென்று அடையாளம் தெரிவதில்லை. உடல்வாகு வைத்துக் குண்டு மதிப்பாக யார் என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. மாஸ்க் போட்டுக்கொண்டு மணிரத்தினம் படத்தின் வசனம் மாதிரி ஒற்றை வார்த்தை பதில்கள் பேசும்போது மூக்குக் கண்ணாடியில் வரும் பனி மூட்டம் பழகிவிட்டது. பழகிய மூக்கு சொறிவது, நகம் கடிப்பது எல்லாம் மாஸ்க் தடுத்துவிடுகிறது.
இந்த லாக்டவுன் வாழ்க்கை பல புதிய challengeகளை கொடுத்திருக்கிறது என்பது நிஜம். முதல் challenge - “I have been nominated by ------ to take part in this '10 Days ----- Challenge’ to --------- next 10 consecutive days” என்று வரும் பதிவுகள் தப்பிப்பது தான்.
இதிலிருந்து தப்பித்தால், பலர் தங்கள் பழைய கதையை ’ஒன்னாவது படிக்கும்போது உச்சா போனேன்’ என்று எழுத ஆரம்பித்துவிட்டார்கள். ரிடையர் ஆனவர்கள் அல்லது ஆகப் போகிறவர்கள் கேண்டீனில் நடந்த உப்புமா ஜோக், மேஜைக்கு அடியில் குண்டூசியைத் தேடிய படலம் போன்றவற்றை கம்பெனி அனுபவங்கள் என்ற தலைப்பில் எழுதுகிறார்கள். எழுதுவது தப்பில்லை ஆனால் தொடராக எழுதுகிறார்கள். பாட்டுக்கு நடுவில் எஸ்பிபி சிரிப்பது போல இதற்கு எல்லாம் நடுவில் என்னுடைய புதிய கலம்காரி புடவை, தூள் பக்கோடா அல்லது இருக்கவே இருக்கிறது உம்மாச்சி படங்கள்.
கோரானோ குறித்த டாக்டர்களில் ஆலோசனை பதிவுகள் குறைந்து, தினமும் ஏதோ ஒரு துக்க நிகழ்வு கண்ணில் பட்டு, இவ்வளவு தான் வாழ்க்கை என்று தினம் தினம் உணர்த்துகிறது.
முகநூலிலிருந்து தப்பித்து, எப்போது யூடியூப் சென்றாலும் ஏதாவது ஒரு லைவ் ஓடிக்கொண்டு இருக்கிறது. உபன்யாசம், கச்சேரி, கூட்டு விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று சங்கரா சேனல் நடத்துபவர்கள் கலங்கியிருக்கிறார்கள். கர்நாடகப் பாடகிகள் மொட்டை மாடி இல்லை அடுப்படியில் ஏதோ செய்கிறார்கள்.
YTல் இருக்கும் எல்லா விசு படங்களையும் பார்த்தேன். குடும்ப டிராமாக்களை செட் இல்லாமல் நிஜவீட்டில் சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றிலும் விசு ஒரே மாதிரி நடிக்கிறார். அதே சிகப்பு கலர் துண்டு கூட வருகிறது. கிஷ்மு மாதிரி நடிகர் பாண்டியன் அடிக்கடி வருகிறார். மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்கள் சப் டைட்டில் இல்லாமலே புரிகிறது. ஹிந்தி ? நோ லேது நஹி.
அமேசான் பிரைமில் எந்தப் புதுப் படம் வந்தாலும் பார்த்துவிடுகிறோம். இதைத் தவிர நான் பார்த்த எல்லாத் தமிழ், தெலுங்கு(மசாலா) படங்களில் ஆரம்பித்து 7-10 நிமிடங்களில் ஒரு பாட்டும். கிளைமாக்ஸுக்கு 20 நிமிடங்களுக்கு முன் ஒருபாட்டும் வருகிறது. இது ஒரு விதமான ஃபார்முலா! இந்த கடைசி பாட்டுக்குப் பிறகு ஒரு பைட், சுபம். தமிழ்ப் படங்களைவிடத் தெலுங்கு படத்தில் ஆவக்காய் ஊறுகாய் காரம் தூக்கலாக இருப்பது போலப் எல்லாமே தூக்கலாக இருக்கிறது.
ஸ்டார் விஜய் டிவியில் முன்பு வந்த மஹாபாரதத் தொடர் முழுவதும் ஹாட்-ஸ்டாரில் பார்த்து முடித்தேன்(23 சீசன், 267 எபிசோட் ). சூதாட்டத்தால் சரிந்த கதையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நடுநடுவே Ace 2 three- India's No.1 Rummy என்ற சூதாட்ட விளம்பரங்கள் வந்து உசுப்பு ஏத்துகிறது. இப்போது வரும் விளம்பரங்களில் எல்லோரும் மாஸ்க் போட்டுக்கொண்டு தான் நடிக்கிறார்கள். ராமராஜ் வேட்டி போலச் சுத்தமான வெள்ளை மாஸ்க் விளம்பரம் செய்கிறார்கள்!
வாட்ஸ் ஆப் போன்ற சத்துருக்களைத் திறந்தால் ஒரே ஃபார்வர்டை பலர் பல குழுக்களுக்கு அனுப்பி மொபைல் போன் முழுக்க கிட்டத்தட்டக் கொரோனா போலப் பரவசெய்கிறார்கள். இன்று ஏகாதசி என்பதைக் கூட மக்கள் தினமும் ஃபார்வர்ட் செய்கிறார்கள். ராமாயணத் தொடர் முழுவதும் அந்த அந்த எபிசோட் கிளிக் செய்தால் பார்க்கலாம் என்று பிடிஎஃப் இன்று ( இதுவரை )வரவில்லை.
நேற்று என் மனைவி ’லாக்டவுனில் தான் உங்கள் ஸ்வரூபம் தெரிகிறது என்றாள். டைரியில் எழுதாத ரகசியங்கள் தெரிந்து விட்டதோ என்று மெதுவாக “என்ன சொல்றே?” என்றேன். ஐந்து மாசமா தினமும் பஞ்ச கச்சத்துடன் ஸ்வரூபத்துடன் இருக்கிறீர்கள் என்று சொன்னவுடன் தான் கொஞ்சம் மூச்சும் பேச்சும் வந்தது.
யோசித்தால் ஒரே மாதிரி இரண்டு செட் 9x5 தான் தினப்படி என் உடை. ஒரே மாதிரி வேட்டியாக இருந்தாலும் வித்தியாசம் கண்டு பிடிப்பது சுலபம். ஒரு வேட்டியில் சின்ன ஓட்டை இருக்கிறது ( ஓட்டை நடுவில் இல்லை அதனால் பயப்பட வேண்டாம் ). இதைத் தவிர இந்த லாக்டவுனில் பாத்திரம் சுத்தம் செய்வது, துணி மடிப்பது போன்ற கைங்கரியங்கள் செய்கிறேன். அப்படிச் செய்யும்போது காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு ’டங்கா மாரி’ போன்ற பாடல்களைக் கேட்டால் பாத்திரங்களில் பிசுக்கு நன்றாகப் போகிறது.
வீட்டுக்கு வெளியே அதிகம் செல்வதில்லை அதனால் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் நேரம் கம்மியாகியிருக்கிறது. சில சமயம் தலையை வாரிக்கொள்வது கூட இல்லை. வீட்டுக்கு வெளியே புல்வெளியில் யாரும் நடக்காதால் புல் காடு மாதிரி வளர்ந்திருக்கிறது. அதே போல் தலை மயிர், சிலருக்குத் தாடி. இப்படித் தாடி வளர்த்தவர்கள். என் தாடி எப்படி வளர்ந்திருக்கு பார் என்று profile மாற்றும்போது அதில் பலர் பாலகுமாரன் மாதிரியே இருக்கிறார்கள். தாடி படம் போட முடியாதவர்கள் எங்கள் வீட்டு பால்கனியில் இன்றைய சன்செட் படம் போடுகிறார்கள் ( யாரும் சன்ரைஸ் படம் போடுவதில்லை ! ) பெட்ரோல் பங்க், மால், திருமால்(கோயில்) சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது. வீட்டுக்கு எது வந்தாலும் முழுசாக அதை கைகுழந்தை மாதிரி குளிப்பாட்டிச் சீராட்டிவிட்டுத் தான் மறு வேலை.
காதலிக்கும்போது இருக்கும் சுவாரசியம் திருமணத்துக்குப் பிறகு ”?” என்பது போல ஒர்க் ஃப்ரம் ஹோம் எல்லாம் அலுத்து, எப்படா அலுவலகம் செல்வோம் என்று ஆகிவிட்டது.
இந்த லாக்டவுனில் உருப்படியாகச் செய்தது, திருக்கோளூர் பெண் பிள்ளை கதைகள் எழுதியது தான். லாக்டவுன் இல்லை என்றாலும் எழுதியிருப்பேன்.
- சுஜாதா தேசிகன்
15-08-2020
ஒரு சாதாரண ஏகாதசி தினம்.
அர்த்தமுள்ள நகைசுவை படைப்பு😀😀
ReplyDeleteஅருமை. லாக்டவுணில் நான் தான் இப்படி என்று நினைத்தேன். எல்லோருமே இப்படித்தான் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteலாக் டவுண் மெல்ல மெல்ல போரடிக்க ஆரம்பித்து விட்டது. போதும்டா சாமி!
ReplyDeleteROLF! சுயருபம் அருமை. From Smt.Sujatha. And a hole in veshti- சுஜாதா சாயல் 👍
ReplyDeleteLovely and interesting to read. Indha maadiri aathil safarnama irukira vishayathai arpudamaga padam pidithu kaati irukireergal
ReplyDeleteSarvam sujatha touch. Waiting for part 2
ReplyDeleteSame here Desikan ... that 2 * 9X5 + unshaven face + some you tube .. only difference I am perfect with WFH - it's more productive this way - no time in traffic !
ReplyDelete