Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 7 ( ஸ்ரீராமர் ஸ்பெஷல் )இன்று பாரத மக்களின் நீண்ட நாள் கனவுக்கு அடிக்கல் நாட்டு விழா, நாட்டு மக்களின் விழாவாக நடந்தது. ராமருக்கு இந்த நாடே பொங்கும் பரிவுடன் பல்லாண்டு பாடியது. 

விட்டுசித்தர் பெருமாளைப் பார்த்துக் ’கண்பட்டுவிட போகிறதே’ என்று பல்லாண்டு பாடினார். அதனால் அவர் ‘பெரியாழ்வார்’ என்று போற்றப்பட்டார். நம்மாழ்வார் கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ ? என்றார். ஆண்டாள் மனதுக்கு இனியான் என்றாள். பெரியாழ்வார் மாதிரி ’பல்லாண்டு பல்லாண்டு’ என்று பாசுரத்தில் வாழ்த்தியது மாதிரி தெரியவில்லை. ராமருக்கு பாசுரத்தில் பல்லாண்டு பாடியிருக்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன். 


ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்று பிரபலமான பெயருடைய மஹாவீர வைபவத்தை இயற்றினார். இயற்றினார் என்று சொல்லுவது மிகத் தவறு, அருளினார் என்று தான் கூற வேண்டும். ஏன் என்று கூறுகிறேன். 

திருவயிந்திரபுரத்தில் ஸ்வாமி தேசிகன் சீதா பிராட்டி, இளைய பெருமாள், திருவடியுடன் ( அனுமார் ), மிக அழகாகசேவை சாதிக்கும் ஸ்ரீராமர் திருமேனி கண்டு அதில் ஈடுபட்டு ‘என்ன அழகு என்ன அழகு’ என்று அவர் மனதில் ஆனந்தம் கொப்பளித்த எண்ணங்களுக்கு வடிகாலாக ‘மாஹாவீர வைபவத்தைப்' பல்லாண்டு பாடி ஆரம்பிக்கிறார். அவர் பார்த்த அதே ஸ்ரீராமர் தான் மேலே படமாக நீங்கள் பார்ப்பது. வாசகர்கள்  சேவித்துவிட்டு தொடரலாம். 

நாரத முனிவர் ஸ்ரீராமரைப் பற்றிக் கூறும்போது “குணவான் கஸ்ய வீர்யவான்” என்கிறார். அதாவது குணத்துக்கும் வீரத்துக்கும் ராமர் என்கிறார். 

கம்பர் ஆரம்பிக்கும்போது ’வாகை சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே’ என்று ராமரின் வீரத்தைக் கூறி ஆரம்பிக்கிறார். ஸ்வாமி தேசிகன் எப்படி ஆரம்பிக்கிறார் ?


ஜய ஜய மஹாவீரா என்று ’பல்லாண்டு வாழ்க வாழ்க’ பெரிய வீரனே என்று ஆரம்பிக்கிறார். பெரியாழ்வார் மாதிரி ஸ்வாமி தேசிகன் ஸ்ரீராமருக்குப் பல்லாண்டு பாடுகிறார். 

மஹாவீர வைபவத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்யக் காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரக் காண்டம், யுத்தக் காண்டம் என்று மிக அழகான ராமாயணத்தை கத்யமாகச் சாதித்துள்ளார் தேசிகன். கத்யம் என்றால் ஒரு விதமான அழகான கவிதை வடிவில் உரைநடை. 

ஸ்ரீராமரின் வைபவத்தை இதே போலப் பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி இராமாயணமாக ஆழ்வார் பாடல்களில் புதைந்துள்ள இராமாயணத்தை வெளிக்கொண்டு வந்தார். ஸ்வாமி தேசிகனோ தன் மனத்தின் புதைந்துள்ள இராமாயணத்தைக் கொண்டு வந்திருக்கிறார். 

பெரியவாச்சான் பிள்ளை, ஸ்வாமி வேதாந்த தேசிகன் அருளிய இராமாயணத்தில் பால காண்டம் மட்டும் இங்கே தருகிறேன். மற்ற காண்டங்கள் வேறொரு சமயம் பார்க்கலாம். 


பால காண்டம்

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ 
நலமந்தமில்லதோர் நாட்டில் 
அந்தமில் பேரின்பத்தடிய ரோடு 
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவாரார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர 
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோ ருய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்க்
கௌசலை தன் குல மதலையாய்த்
தயரதன் தன் மகனாய்த் தோன்றிக்
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காக்க நடந்து
வந்தெதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீண்டு
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணுக்கிக்
காரார் திண்சிலை யிறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத் தொருகால் அரசு களை கட்ட
மழுவாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றிகொண்டு
அவன் தவத்தை முற்றுஞ் செற்று
அம்பொனொடு மணி மாட அயோத்தி எய்தி

ஸ்வாமி தேசிகன் சமஸ்கிருதத்தில் ரகுவீர கத்யத்தில் சாதித்துள்ள பாலகாண்டத்தை மட்டும் எளிய தமிழில் அதன் சாரத்தைக் கொடுத்திருக்கிறேன். 

வலிமை மிக்க ஸ்ரீராமரை வணங்குகிறேன். உன்னால் தான் இந்த உலகை இருளிலிருந்து நீக்க முடியும். தேவர்களும் அசுரர்களுக்கு இடையே நடந்த பெரும் போரில் தேவர்களின் தோல்வியடைந்து அவர்கள் நாராயணனிடம் சரணடைந்து ராவணனின் கொடுமைக்கு ஆளாகி ராவண வதம் செய்ய வேண்டினர். நீயும் இந்த உலகில் அவதரிக்க முடிவு செய்து சூரிய குலத்தில் தசரதனின் புத்திரனாகக் கௌசல்யையின் திருக்குமரனாக அவதரிக்கத் திருவுள்ள கொண்டாய். உன் பால்ய லீலையாக விஸ்வாமித்திர முனிவரின் யாகத்தைக் காத்தாய். தாடகையை வதம் செய்த நீ அவள் குமாரனான மாரீசனை பிறகு வரப் போகும் காரியத்தை மனதில் கொண்டு வதம் செய்யாமல் விட்டுவிட்டாய். முனிவரின் ஆசியால் பிரம்ம ருத்திரர்களுக்கும் எட்டாத திவ்ய சாஸ்திரங்களை எல்லாம் உன்னை வந்து அடைந்தன. உன் திருவடிகளின் மகிமையால் கௌதமரின் தர்ம பத்தினி கல்லுருவம் தொலைந்து பெண்ணுருவம் பெற்றாள். உன் திருத்தோளின் மகிமையால் சிவ தனுசை முறித்து ஜனக மகாராஜனின் கவலையைத் தீர்த்து அவர் திருமகளை மணந்தாய். திரும்ப அயோத்திக்கு வரும்போது பரசுராமனை வென்று விஷ்ணு வில்லை பெற்றாய். 

ஸ்வாமி தேசிகன், பெரியவாச்சான் பிள்ளை அருளிய இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளை வாசகர்கள் கவனிக்கலாம். ஸ்வாமி தேசிகனின் ரகுவீர கத்தியத்தின் சொற் பிரயோகங்கள் மிக நேர்த்தியாக இருப்பதை சமஸ்கிருதம் தெரியாவிட்டாலும் அதைக்  காது கொடுத்துக் கேட்டால் புரியும். சில இடங்களில் சொற்கள் அம்புகள் பாய்வது போல இருக்கும். இது தேசிகனால் மட்டுமே சாத்தியம். 

 நம்பாரதப் பூமியே ராமர் வாழ்ந்து நடந்த பூமி, அதற்கு மேல் நம் ஆழ்வார்கள், ஆசாரியர்கள், முனிவர்களும், யோகிகளும் தங்கள் ராமாயண சொற்களால் அஸ்திவாரம் போட்ட பூமி. இன்று எதற்கு மேல் அடிக்கல் நாட்டு விழா இனிதாக நடைபெற்றிருக்கிறது.

ஜெய் சீதா ராம் !
- சுஜாதா தேசிகன்
இன்று அயோத்தியில் மீண்டும் இராமர் கோவில் என்ற நெடுநாளைய கனவுக்கு அடிக்கல் நாட்டு விழா 
05-08-2020 


திருவயிந்திபுரம் பிராட்டியுடன் ஸ்ரீராமர் திருமஞ்சனம் முடிந்து அலங்காரத்துடன். 

Comments

Post a Comment