Skip to main content

பராசரன் என்ற இராமப்பிரியன்


பதினோராம் நூற்றாண்டு. ஸ்ரீ ராமானுஜர் தன் குருவான ஆளவந்தாரைப் பார்க்கக் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடோடி வருகிறார். வருவதற்குள் ஆளவந்தார் பரமபதித்துவிட,  வட திரு காவிரியில் ஆளவந்தாரின் சரமதிருமேனியை கண்ணீருடன் நோக்கும்போது,  அதில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருப்பதைக் கவனிக்கிறர். 

அவர் உள்ளத்தில் நிறைவேறாத ஆசை இருந்திருக்கிறது என்று ஒவ்வொரு ஆசையாக நிறைவேற்றுவேன் என்று பிரதிக்கினை செய்கிறார். ஆளவந்தாரின் விரல்கள் ஒவ்வொன்றாக விரிகிறது.. 


அதில் ஒரு ஆசை : “விஷ்ணுபுராணம் அருளிய பராசர மகரிஷியின் பெயரையும், மஹாபாரதத்தை அருளிய அவரது குமாரரான வேத வியாசர் பெயர்களைத் தகுதியுள்ளோருக்குச் சூட்ட வேண்டும்” என்பது. 


ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யரான கூரத்தாழ்வானுடைய புதல்வர்களுக்கு இந்தப் பெயர்களைச் சூட்டினார். ஒருவர் ஸ்ரீ பராசரபட்டர் , இன்னொருவர் ஸ்ரீவேதவியாஸ பட்டர். 


ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஸ்ரீ பராசர பட்டர் புலமை மிகுந்தவராகவும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பிரேமையும் வைத்திருந்தார். இவருடைய சிஷ்யர்கள் கண்ணனின் குணங்களைச் சொல்லி ஸ்ரீராமர் இப்படிச் செய்தாரா ? என்று கேள்வி கேட்டால், அதற்குத் தகுந்த பதிலளித்து, சக்கரவர்த்தி திருமகனை என்றும் விட்டுக்கொடுக்கமாட்டார்.


பட்டருக்குப் பிறகு 800 ஆண்டுகளுக்குப் பிறகு, 1927ல் பிறந்த இன்று இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞரான திரு கே. பராசரன் அவர்கள் பட்டரை போலப் புலமையும், ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தியும் வைத்திருந்தார். 


திரு பராசரன் அவர்கள் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்,  அட்டானி ஜெனரல் போன்ற உயர் பதிவிகளை வகித்தவர். 92 வயதில் ராம ஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுத் தந்தவர்.


ஒரு நாள் வழக்கு விசாரணையின்போது அவரிடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “உங்கள் வயதுக்கு மதிப்பளித்துச் சொல்கிறேன். ஒரு நாற்காலி போடச் சொல்கிறேன். அமர்ந்து வாதங்களைச் சொல்லுங்கள்” என்றார்.


அதற்கு, “வக்கீல் நின்று வாதிடுவதுதான் முறை. என் ராமனுக்காக நிற்பேன். நிற்க இயலாது போனால் நீதிமன்றம் வருவதை நிறுத்திக் கொள்வேன்” என்று சொல்லி, 92 வயதிலும் நின்றுகொண்டே வாதாடினார் தமிழகத்தைச் சேர்ந்த முதுபெரும் வழக்கறிஞர். தொழில் பக்தியுடன் இணைந்த இவருடைய 


ஸ்ரீ ராமாயண பக்தியுடன் கூடிய இவருடைய வாதங்களே நீதிபதிகளைத் தர்மத்தை நோக்கி வழிநடத்தின என்று கூறலாம். 


’தர்மத்தை நோக்கி’  என்று போன பத்தியின் கடைசி வாக்கியம் ஏதோ அலங்கார வாக்கியம் என்று நினைக்க வேண்டாம். தர்மத்தைப் பற்றி சிறிது ஆராய்ந்து விட்டு இந்தக் கட்டுரையைத் தொடரலாம். 

 
’தர்ம சாஸ்திரம்’ என்ற சொல் நமக்குப் புதிது அல்ல. இந்த இரண்டு சொல்லும் ஏன் சேர்ந்தே வருகிறது என்று நாம் யோசித்திருக்கிறோமா ? 



ரிக்வேதத்தில் பல இடத்தில் தர்மம் பற்றிப் பேசப்படுகிறது. வேதம் தான் எல்லாவற்றிருக்கும் ஆதாரம். ஸ்மிருதிகள், ராமாயணம், மஹாபாரதம் முழுமையாக வேதத்தை அங்கீகரித்தவை. பாரத தேசத்துக்கு வேதமே வேர் என்றால் மிகையாகாது.

எப்படி ’தர்ம சாஸ்திரம்’ பிணைத்துள்ளதோ அதே போல ‘இந்தியாவும் கலாச்சாரமும்’. தர்மம் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கும் அடித்தளமான விளங்குகிறது, இதுவே சனாதன தர்மம். இதுவே பாரதத்தின் தர்மம். நம் தேசத்தில் ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீ மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் இந்த நல்லிணக்கத்தைப் போதிக்கிறது.  அதுவே நம் கலாச்சாரமாகப் பிரதிபலிக்கிறது. 


இந்தியத் தேசத்தின் ‘motto’ பொன்மொழி முண்டக உபநிஷத் வாக்கியமான ’சத்யமேவ ஜெயதே’ என்பது. இதுவே நம் தேசிய சின்னத்தில் கீழே பொறிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் முக்கிய வாக்கியம் “யதோ தர்ம: ததோ ஜெய” என்ற அதாவது ‘தர்மம் உள்ள இடத்தில் வெற்றி இருக்கும்’ என்பது தற்செயல் இல்லை. இந்த வாக்கியம் ஸ்ரீ மஹாபாரதத்தில் பல இடங்களில் வருகிறது. 

‘சில்வர் டங்’ என்று போற்றப்பட்ட  வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் ஸ்ரீ ராமாயணத்தை “It is essentially a human document” என்கிறார்.


ஸ்ரீமத் ராமாயணத்தில் தசரதனுக்கு மூத்த மகனான ஸ்ரீராமர் தான் முடிசூட வேண்டும் என்பது ராஜ நீதி தரசதனும் அறிவித்துவிட்டார்,  அது மட்டும் இல்லை, அயோத்தி மக்கள் அனைவரும் ஸ்ரீராமர் தான் தங்களுக்கு அடுத்த அரசனாக வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ’மக்கள் குரலே மகேசனின் குரல்’  என்று ஸ்ரீராமர் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.  ஆனால் தன் தந்தை செய்துகொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற, ஸ்ரீராமர் பதவியை ஏற்றுக்கொள்ளாமல், தர்மத்தை நிலைநாட்டினார். சட்டம் எப்போதும் தர்மத்துடன் இணங்க வேண்டும். அப்போது தான் நாட்டில் நல்லாட்சி நடைபெறும். 

திரு கே. பராசரன் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கேசவ ஐயங்காருக்கும் திருமதி ரெங்கநாயகி அம்மாளுக்குப் பிறந்தவர். 

கேசவ ஐயங்கார் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தார் வேத விற்பன்னரும் கூட.

தன் தந்தையின் வழக்குகளுக்குத் தட்டச்சு செய்து செய்து உதவ ஆரம்பித்த பராசரனுக்குச் சட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சட்டம் படித்து, பல விருதுகளைப் பெற்று, திருமணமாகி சென்னையில் ஒரு‘கார் ஷெட்டில்’ குடும்பம் அமைத்து ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார். 

நீதிமன்ற ‘டிராப்டிங்’ வேலை, கல்லூரியில் பேராசிரியர் வேலை என்று தேடி எதுவும் கிடைக்காமல் வாழ்கையில் கஷ்டப்பட்ட சமயம் சிபாரிசு என்று எங்கும் போகாமல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று இருந்தார்.  பார்த்தசாரதி என்ற கீதாசாரியன் இவருக்கு வழி காண்பித்தார். 

திருவல்லிக்கேணியில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் ஸ்ரீமத் ஸ்ரீ ராமாயண உபன்யாசத்தைக் கேட்க ஆரம்பித்தார். அப்போது அந்த உபன்யாசகர் ஸ்ரீமத் ராமாயணம் படித்தால் கை ரேகை கூட மாறும் என்று அவர் சொல்லத் திரு பராசரன் அவர்கள் தினமும் ஸ்ரீமத் ராமாயணம் படிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவருக்கு எல்லாம் ஏறுமுகம் தான் ! 


1958ல் உச்ச நீதிமன்ற வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டார். அப்போது மோகன் குமாரமங்கலம் போன்ற பல முக்கிய பிரமுகர்களுடன் பழக்கம் ஏற்பட்டு தொழிலதிபர்கள் பலருக்கு ஆலோசனைகள் செய்து, 1971ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் ஸ்டாண்டிங் கவுன்சில் அவர் நியமிக்கப்பட்டார். 

கோயில் அர்ச்சகர் நியமனம் செல்லாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்த சமயம் காஞ்சி மஹா பெரியவர் இவரைக் கூப்பிட்டு ”சட்ட நிபுணர், பொருளாதார மேதை நானி பால்கிவாலாவை நான் இந்த வழக்கில் ஆஜராகச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அவருடன் சேர்ந்து நீங்களும் உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது பால்கிவாலாவுடன் அவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் கட்டணம் எதுவும் வாங்காமல் அதைக் கைங்கரியமாக அந்த வழக்கை ஜெபித்துக் கொடுத்தார்கள்.  

இந்திராகாந்தி எமர்ஜன்சி கொண்டு வந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த சமயம். எஸ்ல்பிரஸ் செய்தித்தாள் வழக்கில் கட்டிடங்களை இடிக்க அரசு மேற்கொண்ட ‘ஷோகாஸ் நோட்டீஸ்’ நடவடிக்கையை அரசாங்கத் தலைமை வழக்குரைஞரான பராசரன் ஒத்துக்கொள்ளவில்லை.  அரசு இவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. 

தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தர்மத்தின் பக்கம் நின்றார். பலர் அரசுக்கு எதிராக இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு அவர் தைரியமாகத் தர்மத்தின் பக்கம் நின்றதற்கு ”don't sell your heritage for a mess of pottage" என்ற அவர் தந்தையின் அறிவுரை தான் காரணம் என்கிறார். வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்று அலுவலகத்திலிருந்து வந்து தன் தந்தையின் படத்தின் முன் விழுந்து வணங்கினார். 

இவருடைய நீதிமன்ற வாதங்கள் பலநேரங்களில் இந்து வேதங்களிலிருந்து பெறப்பட்டது. இந்திய நீதிமன்றங்களில் வழக்காடும் பிதாமகன் இவர் என்றும் தர்மங்களிலிருந்து நெறி பிறழாமல் வாதாடும் திறமை கொண்டவர் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பராசரனைப் பாராட்டியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விவகாரத்துக்குப் பிறகு இந்திராகாந்தி இவரை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் பதவி உயர்வு கொடுத்தார்.

முதல் குழந்தை பிறந்த சமயம், அவருடைய மனைவிக்கு அது கஷ்டமான பிரசவமாகி உயிர் பிழைத்தே கடவுளின் ஆசி என்று கூற வேண்டும். அப்போது மருத்துவர்கள் இனிமேல் உங்களுக்குக் குழந்தை பிறப்பது கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். 

ஒரு சமயம் இவருடைய ஆசாரியன் அஹோபில மடம் முக்கூர் அழகியசிங்கர் சேலத்தில் எழுந்தருளியிருந்த  சமயம், அவரை வணங்கியபோது மருத்துவர் சொன்னதைப் பராசரன் ஆசாரியனிடம் கூறியதற்கு 

“லக்ஷ்மி நரசிம்மனைவிடப் பெரிய டாக்டர் இருக்கிறாரா ? “ என்று சொல்லிவிட்டு அட்சதை கொடுத்து ஆசீர்வாதம் செய்து அனுப்பினார் ஆசாரியன்.  அதற்குப் பிறகு அவருக்குக் குழந்தைகள் பிறந்தார்கள். 

ஒரு முறை ஒரு பெரியவரிடம் வழக்கறிஞராக இருக்கிறேன் வழக்குகளில் வாதாடுகிறேன். நான் யாரை வணங்க வேண்டும் என்று கேட்க அதற்கு அந்தப் பெரியவர் அனுமார் என்று பதில் கூற அன்றிலிருந்து அவருடைய கோட் பாக்கெட்டில் சின்ன சந்தன சிற்ப அனுமாரும், பார்த்த சாரதி படமும் நிரந்தரமாயின. 

ஸ்ரீ ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில், ஸ்ரீராமர் லக்ஷ்மணனிடம் அனுமாரைப் பற்றி இப்படிக் கூறுகிறார். 


“ரிக் வேதத்தை கிரமப்படி அறியாவிட்டால் இவன் இப்படிப் பேசமுடியாது. யஜூர்வேதத்தைப் பூர்ணமாக அறிந்து மனத்தில் தரிக்காவிட்டால் இப்படிப் பேசமாட்டான். ஸாம வேதத்தின் ரஹஸ்யத்தை அறியாதவன் இப்படிப் பேசமாட்டான். இவன் சகல வியாகரணங்களையும் பூர்ணமாகப் பலமுறை கற்றிருந்திருக்கிறான் என்பது நிச்சயம். அவன் பேசும் வாக்கியங்களில் ஒரு பிசகான சப்தத்தைக் கேட்கமுடியவில்லை முகத்திலும், நெற்றியிலும் புருவத்திலும் மற்ற அவயங்களிலும் யாதொரு தோஷமும் பேசும்பொழுது காணப்படவில்லை. அவன் பேசும் வாக்கியங்கள் அதிக வேகமில்லாமலும், இருதயத்தில் தோன்றி, கழுத்தில் ஒலித்து மத்யம ஸ்வரத்தில் உச்சரிக்கப்படுகின்றன. இவனைப் கொல்ல கத்தியுடன் பாயும் சத்துருவும், கோபம் தணிந்து சாந்தம் ஏற்பட்டு இவனுக்கு வசப்படுவான்” என்கிறார். 

திரு பராசரனுக்கு அந்த அனுமாரே வந்து சில இடங்களில் வாதாடினாரோ என்று கூடத் தோன்றுகிறது.  ஒரு வழக்கில் இவர் சரியாக வாதாடவில்லை. பராசரனுக்கு என்ன ஆயிற்று என்று பலர் குழம்பினார்கள். அப்போது பராசரன் தன்  கோட்டு பாக்கெட்டில் கையை விட்டுப் பார்த்த போது அங்கே அந்தச் சந்தன அனுமாரைக் காணவில்லை. உடனே தன் ஜூனியரை அழைத்து தன் அறையிலிருந்து அந்த அனுமாரை எடுத்து வரச் சொன்னார். அதற்கு பிறகு அவர் செய்த வாதங்களைப் பார்த்து நீதிமன்றம் பிரமித்துப் போனது. 

சேது சமுத்திர திட்டம் வந்தபோது அதற்குப் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. வழக்கு நீதிமன்றம் சென்றபோது, சிலர் அதைத் தடுக்க வேண்டும் என்று இவரிடம் வந்தார்கள். அரசு தரப்பும் இவரை அணுகி வழக்கை நடத்த வேண்டும் என்றார்கள். என்ன செய்வது என்று குழம்பினார். அன்று இரவு இவருக்குத் தூக்கம் வரவில்லை.


ஸ்ரீராம சேது என்பது ஸ்ரீ ராமாயணத்தில் முக்கியமான இடம். விபீஷணருக்குச் சரணாகதி கிடைத்த இடம். ஸ்ரீ ராமாயணத்தைப் படித்து நாம் முன்னேறியிருக்கிறோம் என்று ஸ்ரீராம சேதுவை இடிக்கக் கூடாது என்ற பக்கம் இவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். 
 
வாதங்களை எல்லாம் முடித்தபிறகு ஒரு நீதிபதி  பராசரனிடம் 
“எல்லா வழக்கிலும் அரசு தரப்புக்குத் தான் நீங்க வாதாடுவீர்கள் ஆனால் இந்த வழக்கில் மட்டும் எதிராக வாதாடுகிறீர்களே ?”  என்றதற்கு 
 
”வாழ்கையில் ராமாயணம் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன் “This is the least I owe to Lord Rama" என்று நீதிமன்றத்தில் பிரகடனப்படுத்தினார். 
இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக இருந்த பிறகு சில  தனியார் வழக்குகளில் வாதாடி ஒரு மந்திரியின் வழக்கை மும்பையில் ஜெயித்து கொடுத்தார். அப்போது உங்களின் கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்குக் கட்டணம் வாங்க மறுத்துவிட்டு, ஏதாவது நன்கொடை கொடுக்க வேண்டும் என்றால் ராஜிவ் காந்திக் குண்டு வெடிப்பில் இறந்த காவல்துறையில் உயிரிழந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

( ராமஜென்ம பூமி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு வி.எச்.பி ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் திரு.கே பராசரன் )
 
ஸ்ரீராம ஜன்ம பூமி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது “தாய், தாய்நாடு சொர்கத்தை விடப் பெரியது” என்று வாதத்தைத் தொடங்கினார் இந்த 92 வயது வழக்கறிஞர். 

“பரா: – என்றால் எதிரிகள் என்று பொருள், சர: என்றால் அம்புகள். ஸ்வாமி தேசிகன் ‘பராசரா’ என்றால் எதிரிகளை தன் வாதங்களின் அம்பு மழையால் தோற்கடிக்கும் வீரர் என்கிறார். 


”என் ராமனுக்காக நிற்பேன்” என்று நின்று கொண்டு வாதாடிய இந்த 92 வயது மூதறிஞர் இந்த வழக்கிற்காக ஒரு ரூபாய்கூட ஊதியம் பெற்றுக்கொள்ளவில்லை. இதுவே தனது கடைசி வழக்கு என்றும் அறிவித்திருந்தார். 

நவம்பர் 23 அன்று, அயோத்தி சென்று தீர்ப்பின் நகலை ஸ்ரீராமருக்கு அளித்துவிட்டு அவர் எழுதிக்கொடுத்த வாசகம் இது 


“The genuine bhakti of the Bhaktas of Lord Ram has brought back Ram Janmabhumi with a temple long due."

K Parasaran
A Bhaktha of Sri SitaRam

”கோயிலுடன் கூடிய ராமஜென்ம பூமி என்ற நீண்ட நாள் கனவு ராம பக்தர்களின் தூய பக்தியினால் திரும்பக் கிடைத்து இருக்கிறது” 

கே பராசரன்
ஸ்ரீ சீதாராமின் பக்தன் 

வாஜ்பாய் அரசு அவருக்கு பத்மபூசன் விருது வழங்கியது. மன்மோகன் சிங்கின் அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கியது. 

தன் வாதங்களால் ராம ஜன்ம பூமியை மீட்டுக்கொண்டுத்து இராமப்பிரியனானார்
 
- சுஜாதா தேசிகன்

Sri Parasaran blessing with his signature on Ramayana Book



 
உதவியவை :
K.PARASARAN - PAR EXCELLENCE. EXCELLENCE AT THE BAR - ஆவணப்படம் Sanskriti வெளியீடு
Law & Dharma: A tribute to the Pitamaha of the Indian Bar by SASTRA University
நன்றி: வலம் டிசம்பர் 2019 இதழில் வந்த கட்டுரை 

Comments

  1. Excellent tribute to modern day’s Parasara Bhattar on thIs holy occasion with appropriate photos and records. Thanks. - Lakshminarayanan K S 🙏🙏🙏

    ReplyDelete
  2. க.வெங்கடேசன்August 5, 2020 at 4:45 PM

    ராமர் இருந்திருந்தால் பராசரனைக் கட்டித் தழுவி இன்றுடன் நாம் எண்மரானோம் என்று கூறியிருப்பார்.

    ReplyDelete
  3. supreb. Read with tears flowing un consciously. As Gurumurthy mentioned- legend . Folded hands- Namaskaram sir

    ReplyDelete
  4. Ram Ram 🙏 my father used to talk very often about this great man . We are all lucky and blessed to be living during this great period and lovely people. Jai Shri Ram

    ReplyDelete
  5. ஸ்ரீரங்கத்தில் பிறந்து அயோத்தி ராமனையும, ராமஜன்ம பூமியையும் மீட்ட ஸ்ரீ.பராசரன் பெயர் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். ஸ்ரீ ராமானுஜரைப் போல அவருக்கும் நீண்ட ஆயுளைத் தர அந்த ராமனையேப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. I just endorse the words of"unknown" above. We are blessed to be in this era to see and awe at the blessings to get Ram Janmastan" back to our fold Through the sheer bakthi and belief of great Sir Shri. Parassran Sir

    ReplyDelete
  7. A general sage in the garb of an Advocate...

    ReplyDelete
  8. Hon advocate Parasaran has proved to be a venerable stage...

    ReplyDelete

Post a Comment