Skip to main content

ஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்கு போகும் ஊர் !

ஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்குப் போகும் ஊர் !


ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார்திருநகரியில் பெருமாளைச் சேவித்துவிட்டு திருக்கோளூருக்குச் சென்றார்.  ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பிறந்த இடம். அவருடைய சிஷ்யர் மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர் திருக்கோளூர் 

ஸ்ரீ ராமானுஜர் திருக்கோளூருக்குள் நுழையும்போது, எதிரே ஒரு சின்னப் பெண் வந்தாள். ராமானுஜரை வணங்கினாள். 

ராமானுஜர் “பெண்ணே எங்கிருந்து வருகிறாய் ?” என்று கேட்டார்.

“சாமி நான் திருக்கோளூரிலிருந்து வருகிறேன்” என்றாள் அந்தக் கிராமத்துப் பெண். 

”அடடா..! இப்பொழுது தான் நம்மாழ்வாரைச் சேவித்துவிட்டு வருகிறேன்.. நம்மாழ்வார் இந்த ஊரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?

“தெரியும் சாமி... எல்லோரும் போக வேண்டிய ஊர் திருக்கோளூர் என்கிறார் ஆழ்வார்” என்று அந்தப் பெண் சட்சென்று பதில் கூறினாள். 

“ஆனால் பிள்ளாய் ! நீ அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறாயே ?” 

“இந்த ஊரில் இருக்கும் தகுதி எனக்கு இல்லையே!” 

“அப்படி என்னமா தகுதி வேண்டும்?”

“நான் ஒன்றும் அறியாதவள்! பெருமாளிடம் பக்தி கொண்ட பெரியவர்களை நினைக்கும்போது நான் ஒன்றும் இல்லை சாமி.. நான் ஊரை விட்டுப் போகிறேன்!” 

“அவ்வாறு என்ன நினைத்தாயென எனக்குச் சொல்ல முடியுமா ?”

உடனே அந்தப் பெண் பிள்ளை 

“அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே! ”

“பிள்ளாய் ! இதற்கு என்ன அர்த்தம் ?”  என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தப் பெண் பிள்ளை அர்த்தம் கூற ஆரம்பித்தாள். 

அடுத்த பகுதியில் அதைப் பார்க்கலாம். 

- சுஜாதா தேசிகன்


Comments