Skip to main content

பண்டிட் ஜஸ்ராஜ் என்ற இசை

பண்டிட் ஜஸ்ராஜ் என்ற இசை 


பண்டிட் ஜஸ்ராஜ் என்றால் எனக்கு யார் என்று தெரியாது.  சென்னையில் ஒரு முறை நமக்குக் கர்நாட்டிக் சிஸ்டர்ஸ் சகோதரர்கள் இசை போதும் என்று இருந்தவனைக் கிருஷ்ண கான சபாவில் ஜஸ்ராஜ் கச்சேரி ஒரு டிக்கெட் இருக்கிறது என்று என்னை இழுத்துக்கொண்டு சென்றார்கள். இந்த ஹிந்துஸ்தானி எல்லாம் நமக்கு எங்கே ரசிக்கப் போகிறது என்று வேண்டா வெறுப்பாகக் கிளம்பினேன். ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ மாதிரி உள்ளே நுழைய முடியாத கூட்டம். 

மேடையில் அவர் வந்த உடனேயே மொத்தக் கூட்டமும் எழுந்து நின்றது. தொண்டை சரி இல்லை என்று ஆங்காங்கு கனைத்துக் கொண்டு தான் பாடினார். முதல் பாட்டுப் பாடிய போதே இது வேற லெவல் என்று தெரிந்துகொண்டேன். முதல் பாட்டு முடிந்த பின் மொத்த ஆடிட்டோரியமும் எழுந்து கைதட்டியது. இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் எழுந்து கைதட்டினார்கள்.  பாசாங்கு இல்லாத எழுத்துபோல் அவர் பாடும் பாடல்கள் பாசாங்கு இல்லாத இசை. 

அன்று ஏதோ பிரம்மத்தை அறிந்துகொண்ட திருப்தி ஏற்பட்டது. அதற்குப் பிறகு எந்தக் கர்நாடகச் சங்கீதக் கச்சேரிக்கும் இசை கேட்க போகவில்லை.  

பிறகு ஜஸ்ராஜ் காஸட், சிடி என்று தேடி அலைந்து வாங்கிக்கேட்டேன். 

2016ல் பிருந்தாவனத்தில் ஏதோ ஒரு கடையில் எதையோ பார்த்துக்கொண்டு இருந்த சமயம், பக்கத்தில் ஒரு கோயிலில் பண்டிட் ஜஸ்ராஜ் பாடிய ஸ்ரீ மதுராஷ்டகம் ஒலித்தது. கடையில் இருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து பாடினார்கள். மதுராஷ்டகம் ஆரம்பிக்கும்போது அந்த ஒரு சின்னத் துண்டு எப்போது கேட்டாலும் mesmerizing.  பல தடவை கேட்டிருக்கிறேன். ஆனால் பிரந்தாவத்தில் இதைக் கேட்டது மதுரையில் ஜிகர்தண்டா சாப்பிட்டதற்கு சமம். 

இந்த மாபெரும் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைந்தார் என்று சற்றுமுன் கேள்விப்பட்டேன். அவர் மறைந்தாலும் அவர் பாடல்களுக்குப் பாடல்கள் என்றும் நம்முடன் இருக்கும். க்ளிஷே தான் இருந்தாலும் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

- சுஜாதா தேசிகன்
17-08-2020


Comments