Skip to main content

(2) அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே !

(2) அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே !


”சாமி ! இது விதுரரின் கதை” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தக் குட்டி பெண். 

விதுரர் திருதராஷ்டிர மன்னனின் தம்பி. சிறந்த அறிவாளி. எது சரி, எது தப்பு என்று நன்றாகத் தெரிந்தவர். விதுரர் எது சொன்னாலும் அது நீதி. கண்ணனிடம் ஆழ்வார்களைப் போல மிகுந்த அன்பு அவருக்கு. அதனால் இவரை விதுராழ்வான் என்பார்கள். துரியோதனனுடைய சபையில் மந்திரி.

பாண்டவர்கள் கௌரவர்களிடம் சூதாட்ட பந்தயத்தில் ராஜ்யத்தை இழந்தார்கள்.  பந்தயப்படி பன்னிரெண்டு வருடம் காட்டிலிருந்துவிட்டு மீண்டும் ராஜ்யத்தைக் கேட்டபோது துரியோதனன் மறுத்துவிட்டான். பாண்டவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள்.  கண்ணனைத் தூதாக அனுப்பினார்கள். கதை சொல்வதை நிறுத்திவிட்டு அந்தக் குட்டிப் பெண் ராமானுஜரைப் பார்த்து

“சாமி, விதுரர் உங்களைப் போல நல்ல முகப் பொலிவுடன் இருப்பார் என்று நினைக்கிறேன்” என்றாள்

ராமானுஜர் ”பிள்ளாய் என்னைப் போல் முகப் பொலிவா ? புரியவில்லையே!” என்றார்

அந்தப் பெண் ராமானுஜரைப் பார்த்து “சாமி, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள்.. உங்கள் உள்ளத்தின் வெளிச்சம் முகத்தில் பிரகாசிக்கிறது” என்றாள்.

அகம் என்றால் உள்ளம் என்று பொருள். விதுரர் தன் உள்ளத்தில் தீய எண்ணம் என்ற எந்த அழுக்கும் இல்லாமல், சுத்தமாக வைத்திருந்தார். அதனால் அவர் உள்ளம் தூய்மையாக இருந்தது.  தன் மனத்தைச் சுத்தமாக்கி, கண்ணன் அங்கே தங்க அதை ஒழித்துக் கொடுத்தார். மனம் தூய்மையாக இருந்தால் முகம் பிரகாசமாகத் தானே இருக்கும் ?” என்றாள். 

“சின்னப் பெண் என்று நினைத்தேன் ஆனால் ஆண்டாளைப் போலப் பெரிய தத்துவம் எல்லாம் உனக்குத் தெரிகிறதே! ” என்றார் ராமானுஜர் 

“சாமி! ஆண்டாள் என்று சொன்னதும் தான் நினைவுக்கு வருகிறது, 'தூயோமாய் வந்தோம்’ என்று திருப்பாவையில் வருகிறது சரியா ? ” என்றாள் அந்த சுட்டிப் பெண். 

ராமானுஜர்  “பெரியாழ்வார் சொன்னதை ஆண்டாள் போலச் சுலபமாக விளக்கிவிட்டாயே!” என்றார்.

“சாமி, பெரியாழ்வார் என்ன சொல்லியிருக்கிறார் அதைச் சொல்ல முடியுமா ?” என்றாள் அந்த சின்னப் பெண். 

ராமானுஜர் “பிள்ளாய்! என்னுடைய அகங்காரம், சுயநலம், பொறாமை போன்ற தீய குணங்கள் எல்லாம் பெருமாள் என்னிடமிருந்து அகற்றினான். பிறகு என் நெஞ்சில் வந்து புகுந்து, நிலையாக இருந்தான்” என்று சொல்லி முடிக்க அந்தப் பெண் பூரிப்பில் ராமானுஜரை வணங்கினாள். 

“குழந்தாய்! கண்ணன் தூது போன விஷயத்தைச் சொல்லு” என்றார் ராமானுஜர்  

கண்ணன் அஸ்தினாபுரத்துக்குத் தூது சென்றார். கண்ணன் வருவதை அறிந்த எல்லோரும் பல ஏற்பாடுகள் செய்தார்கள். திருதராஷ்டரன்  பொன்னால் ஆன தேர், ரத்தினம் பரிசாகக் கொடுக்க ஏற்பாடு செய்தான். விதுரர் ”கண்ணன் இதை எல்லாம் கண்டு மயங்கமாட்டார்” என்று அறிவுரை கூறினார்.  துரியோதனன் வித விதமான உணவு வகைகளுடன் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தான்.

அஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணர், நேராகத் திருதராஷ்டரன் அரண்மனைக்குச் சென்று அவரை வணங்கினார். பிறகு துரியோதனனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே துரியோதனனின் விருந்துக்குக் கூப்பிட அதைக் கிருஷ்ணர் மறுத்துவிட்டுப் புறப்பட்டார். அப்போது துரியோதனன், பீஷ்மர், துரோணர் முதலானோர் “கண்ணா உனக்கு ரத்தினங்களால் ஆன சிறந்த மாளிகையை ஏற்பாடு செய்கிறோம். நீ அங்கே வந்து தங்க வேண்டும்” என்றார்கள். அதற்குக் கண்ணன் “உங்கள் தங்க மாளிகையைவிட எனக்கு விதுரரின் இல்லம் தான் சுகம் அங்கேயே தங்க விரும்புகிறேன் வா விதுரா ” என்று புறப்பட்டார்.


விதுரர் இதை எதிர்பார்க்கவில்லை. ”கிருஷ்ணா இந்தச் சிறியவன் வீட்டைத் தேடி வந்தாயே!” என்று மிகுந்த மகிழ்ச்சியாகவும், அதே சமயம் பரபரப்பாகக் காணப்பட்டார். அவருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வீட்டுக்குள் இங்கும் அங்கும் ஓடினார். ஒரு ஆசனத்தை எடுத்து வந்து கண்ணன் அமர்ந்து கொள்ள அதைக் கீழே போட்டார். கண்ணன் உட்காரும் சமயம் ‘கண்ணா சற்று பொறு’ என்று தன் கையால் அந்த ஆசனத்தைத் தடவிப் பார்த்துப் பிறகு உட்காரச் சொன்னார். ”விதுரா என்ன செய்தாய் ?’ என்று கண்ணன் கேட்க அதற்கு விதுரர். துரியோதனனின் உப்பைச் சாப்பிடுபவன். என்னையும் அறியாமல் இந்த ஆசனத்தில் உனக்கு ஏதாவது ஊசி வைத்துவிட்டேனா என்று ஒருமுறை சோதித்தேன்” என்றார். கண்ணன் புன்சிரிப்புடன் ’ஏன் இந்தப் பரபரப்பு’ என்று கேட்டார். 

“கண்ணா, பரம்பொருளே! உனக்குத் தகுதியான உணவை அளிக்க என்னிடம் தகுதியும் இல்லை, சக்தியும் இல்லை. உனக்குக் கொடுக்க என்னிடம் படபடப்பும், பரபரப்பும் தான் இருக்கிறது என்று பக்கத்திலிருந்த சில வாழைப்பழங்களை எடுத்து அன்பினாலும், பக்தியாலும் தூய உள்ளத்தினால் அதைக் கண்ணனுக்குக் கொடுத்தார். 

விதுரருக்குப் இருந்த பரபரப்பில்  வாழைப்பழத்தை ஒவ்வொன்றாக உரித்து, தோலைக் குப்பையில் போடுவதற்குப் பதில் பழங்களைக் குப்பை போட்டுத் தோலைப் பழம் என்று நினைத்துக் கண்ணனிடம் கொடுத்தார். கண்ணனும் ‘என்ன சுவை என்ன சுவை’ என்று சாப்பிட ஆரம்பித்தார். சிலவற்றைச் சாப்பிட்ட பின் இதைப் பார்த்த விதுரரின் மனைவி ”நன்றாக இருக்கிறது உங்கள் உபசாரம்.. “ என்று சுட்டிக்காட்ட, விதுரரின் பரபரப்பு மேலும் அதிகமாகியது. கண்ணனுக்குப் பழங்களைக் கொடுக்க,  எனக்கு நீ முன்பு கொடுத்த தோலே மிக ருசியாக இருந்தது. என் வயறு நிறைந்துவிட்டது” என்றார். 

விதுரர் தனது உள்ளமாகிய அகத்தைச் சுத்தமாக்கி ஒழித்துக் கண்ணன் வாசம் செய்யக் கொடுத்தார் . சுச்சியுடன் ( தூய்மையுடன் ) உணவைக் கொடுத்தால் அதை ருசியுடன் கண்ணன் ஏற்றுக்கொள்கிறான்.

“அம்மா ! நீ நன்றாகக் கதை சொல்லுகிறாய்” என்றார் ராமானுஜர்.

ராமானுஜருடன் இருந்த சிஷ்யர்  “பெண்ணே திருவரங்கத்தில் நடந்ததை உனக்குச் சொல்கிறேன். தினமும் பெரிய பெருமாளுக்குப் பல தின்பண்டங்கள் துணியால் மூடிக் பெருமாளுக்கு எடுத்துச் செல்வார்கள். பெருமாளுக்குக் காண்பித்துவிட்டுத் திரும்பும்போது அங்கே ராமானுஜர் அதைத் தினமும் திறந்து காண்பிக்கச் சொல்லுவார்.  ஏன் எப்படிச் செய்கிறார் என்று யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் நைவேத்தியம் ஆகித் திரும்பும்போது ஏன் தினமும் துணியை எடுத்துப் பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு ராமானுஜர்  ’தினமும் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறோம். என்றாவது ஒரு நாள் அன்புடன் இதை உண்கிறேன் என்று எனக்குக் குறிப்பு இருக்கிறதா என்று திறந்து பார்க்கிறேன்’ என்றார். ஒரு நாள் என்ன ஆயிற்று தெரியுமா ?” என்று சொல்லுவதை நிறுத்தினார். 

“என்ன ஆச்சு சாமி ? “ அந்தப் பெண் ஆர்வமாகக் கேட்க சிஷ்யர் தொடர்ந்தார் 

“ஒரு நாள் வழக்கம்போல ராமானுஜர் திறந்து பார்க்கும்போது பிரசாதம் கலைந்து இருந்தது. பெருமாள் அதைத் தொட்டு உண்டு இருக்கிறார். அன்புடன் கொடுத்தால் அதை அன்புடன் ஏற்றுக்கொள்கிறான்” என்றார் அந்த சிஷ்யர். 

அந்தப் பெண் “சாமி இதில் ஒன்றைக் கவனித்தீர்களா போன கதையில் அக்ரூரர் கண்ணனைத் தேடிக்கொண்டு போனார், ஆனால் இங்கே கண்ணன் விதுரரைத் தேடிக்கொண்டு வருகிறார்!”

“நம் தேகத்தையும் ஆத்மாவையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்!” என்றார் ராமானுஜர். 

உடனே அந்தக்  குட்டிப் பெண் “தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போல!” 

ராமானுஜர்  சிரித்துக்கொண்டே. “ஓ! இன்னொரு கதையா ? சரி சொல்லு!” என்றார் 

Comments