4. இராமானுசன் அடி பூமன்னவே - தமிழ்க் கோயில்
திருவரங்கத்திலிருந்து குடந்தையை நோக்கிக் காவேரி ஓடும் வழியே புறப்பட்டார் நாதமுனிகள். காவிரி துணைக்கு வரும் தாய் போலக் காட்சி அளித்தது. ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த இடங்களில் நீரின் சலசலப்பு கேட்டது. அந்த ஒலி நாதமுனிகளைச் சீக்கிரம் சீக்கிரம் என்று கூறுவது போல இருந்தது.
ஒருபுறம் காவிரியும் மறுபுறம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் காண்பவர் மனதை ஈர்க்கும் விதமாக இருந்தது. பசும் பயிர் வயல்களும், கரும்பு, வாழைத் தோட்டங்களும் தென்னை மரங்களும் மாறி மாறி வந்தது. நடுநடுவே வாய்க்கால்களும், ஓடைகளும் அதைச் சுற்றிப் பல விதமான வண்ணப் பூக்களின் காட்சிகளும் மனதைக் கொள்ளையடித்தன.
குளங்களில் செந்தாமரையும், அல்லிப்பூவும் மலர்ந்து இருந்தது. அதன் இலைகள் தண்ணீரைக் கவசம் போல மூடியிருந்தன. வயல்களில் கூட்டம் கூட்டமாக நீண்ட கழுத்தையுடைய வெண்ணிறக் கொக்குகள் பறந்துகொண்டு இருந்தன. குளங்களில் செங்கால் நாரைகள் ஏதோ தியானத்தில் இருந்தன. மரப் பொந்துகளில் கிளிகள் எட்டிப்பார்த்தன. ஆண் தூக்கணாங்குருவிகள் அழகாக நெய்த கூட்டைப் பெண் குருவிகள் நோட்டமிட, ஆண் குருவியோ தான் கட்டிய கூடு பெண் குருவியைக் கவரவேண்டுமே என்ற கவலை கலந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தது. தென்னை மரத்தில் மீது அணில்கள் வேகமாக ஏறிக்கொண்டு இங்கேயும் அங்கேயும் தாவிக்கொண்டு இருந்தன. மாடுகள் கூட்டமாக மேய்ந்துகொண்டு இருக்க அதன் கழுத்தில் கட்டிய மணியோசையுடன் வண்டுகளின் ரீங்காரமும் சேர்ந்து இசைக்க இது இந்திரலோகமோ என்று நினைக்கத் தோன்றியது.
இந்த இயற்கைக் காட்சிகளை எல்லாம் நாதமுனிகள் பார்த்துக்கொண்டு சென்றார் ஆனால் ரசிக்கவில்லை. ரசித்திருந்தால் அவர் நடை மெதுவாக அல்லவா இருந்திருக்கும்!
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே
என்ற பாடலுக்கு ஏற்றார் போல நாதமுனிகள் அகம் ஆராவமுத இசையில் கரைந்தது, நடக்கும்போது பாடிப் பாடி கண்ணீர் மல்கி, நாடி நாடி பெருமாளே என்று உள்ளம் கதறி எப்போது அடியேனுக்குக் குருகூர் சடகோபனின் பாசுரங்கள் கிடைக்கும் என்று தலைவி தலைவனைப் பார்க்காமல் வாடியிருப்பது போல வாடியிருந்தார்.
வழிநெடுகிலும் செந்நெல் தென்றலில் சந்தோஷமாக அசைந்துகொண்டு இருந்தது. இந்த நெற்கதிர்களுக்குத் தான் என்ன கொண்டாட்டம். திருக்குடந்தை சார்ங்கபாணிக்கு அமுதுபடிக்குப் பயன்படுவதால் இவை ஆனந்தக் கூத்தாடுகிறது என்று எண்ணியவாறே நடந்தார்.
’எங்கும் கோயில் எங்கும் கழனி’ என்று புகழ்வாய்ந்த திருக்குடந்தைக்கு நகரின் நடுவே அமைந்திருக்கும் ஆராவமுதனை சந்நிதிக்கு வந்தடைந்தார்.
இந்தக் கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று அழைக்கப்பட்ட இந்த ஊரைப் பற்றித் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்குக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
முன்பு ஒரு முறை பிரம்மா பிரளய வரும் காலத்தில் புண்ணியத்தலங்களிலிருந்து மண்ணை கொணர்ந்து, அமுதத்துடன் பிசைந்து அதைக் குடமாகச் செய்து, அக்குடத்தில் அமுதத்தை நிரப்பி அதில் படைப்புக்குக் காரணமான ஒரு விதையை இட்டு நான்கு வேதங்களையும் சுற்றிலும் அதற்குக் காப்பாக இருக்கச் செய்து மூடி,மேரு மலையின் உச்சியில் வைத்தார்.
பிறகு பிரளயம் வெள்ளத்தில் இந்த அமுதக்குடம் குடந்தைக்கு மிதந்துவந்து இங்கே தங்கியது. பிரளய வெள்ளம் வடிந்த குடத்தின் மூக்கு வழியாக அதில் உள்ள அமுதம் பரவியது. அந்த அமுதக்குடம் மூக்கின் வழியாகப் பெருக்கிவிட்ட இடமானதால் இந்த இடத்துக்குக் குடந்தை என்று பெயர் வந்தது.
குடந்தையில் தங்கினால் அல்லது அதை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அல்லது தங்க நினைத்தலும் மோட்சம் நிச்சயம் என்பார்கள் பெரியோர்கள். குடந்தையில் தாய் தந்தையரைத் தவிர எல்லாம் கிடைக்கும் என்பார்கள்.
நாதமுனிகள் நம்பிக்கையுடன் கோயிலுக்குள் கொடிமரத்துக்கு முன் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தார்.
மூலவர் ஸ்ரீ ஆராவமுதன், ஸ்ரீ சார்ங்கராஜா, ஸ்ரீ சார்ங்கபாணி என்ற திருநாமங்களுடன் கோமளவல்லித் தாயார், உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சக்கரம் சங்கு கதை சார்ங்கம் என்ற வில்லுடன் உடைவாள் என்ற ஐந்து திவ்வியாயுதங்களுடன் அபயம் அளிக்கும் திருக்கை முத்திரையுடன் நின்ற திருக்கோலத்தை அனுபவித்த முனிகள்,
தேனோ ?
பைம்பொன் சுடரோ?
திகட்டாத திண்ணமுதோ ?
இன்பப் பாவின் இன்சுவையோ?
என்று காணக்கிடைக்காத அழுகு வடியும் திருமேனியுடன் ஆராவமுதனைச் சேவித்து, அவன் மீதுள்ள திருவாய்மொழி ’ஆராவமுதே’ என்று பாசுரங்களை உளமுருக இசையுடன் சேவிக்க, பெருமாளின் கருவறையின் எதிரில் திருமாமணி மண்டபத்தில் உள்ள பன்னிரண்டு கால் தூண்களும் பன்னிரண்டு ஆழ்வார்களைப் போலக் கேட்டுக்கொண்டு அந்த இடம் வைகுந்தத்தில் இருக்கும் வைதிக விமானமாக மற்றொரு பூலோக வைகுண்டமாக உருப்பெற்றது. கிழக்கே திருமுக மண்டலம், பாம்பணைமேல் உத்தான சயனத்தில் யோகத்தில் பள்ளிகொண்டு இருந்த பெருமாள் அர்ச்சையைக் குலைத்துக்கொண்டு திருமழிசை ஆழ்வாருக்கு எழுந்துகொண்டது போல எழுந்திருக்கலாமோ என்று யோசித்தார்.
மதுரமான தமிழில் வேதத்தின் சாரமான பாடல்களில் பாலும் தண்ணீரும் கலந்தால் எப்படித் தெரியாமல் இருக்குமோ அதுபோல அந்தப் பாடல்களில் இறைவனும் இசையும் கலந்தே இருந்தது. குருகூர் நம்பியின் யாழின் இசை வேதத்துக்குச் சமமான பாசுரங்களை இன்னிசையுடன் பாடித் திரிந்தார் மதுரகவி ஆழ்வார். அப்படிப் பட்ட பாடல்களில் மயங்காதவர் யாராவது இருக்க முடியுமா ?
நாதமுனிகள் இசையோடு பாடியபொழுது அனாயாசமாய் அனந்தமாய் பெருமாளின் பகவத் ஸ்வரூப - ரூப - குண ஐஸ்வரியத்தை அன்று அங்கே குழுமியிருந்த பக்தர்களுக்குக் கண்ணாடியில் காட்டுவது போலப் பிரதிபலித்தது. அவர்கள் அனுபவித்து உள்ளடங்காமல் வழிந்து கண்ணீராகப் புறப்பட்டது இந்த இடம் போதுமா என்று தோன்றியது. பக்தர்கள் ஆராவமுதனை என்னப்பன் ! என் ஆருயிர் ! என் ஆசைக்கனி ! என உள்ளம் உருகிச் சேவித்தார்கள்.
கூடியிருந்த பக்தர்கள் மட்டும் அல்லாமல், ஆராவமுதனுக்கு அன்று ஏதோ ஒரு புதிய வெற்றி அடைந்ததுபோல் தோள்கள் பூரித்து புளகாங்கிதமானது.
நாதமுனிகள் அமுதனிடம் ’எழுந்திருந்து பேசு’ என்று கூறியிருந்தால் உடனே எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்திருப்பார். ’ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் கண்டேன் கண்டேன் கண்ணிற்கினியது கண்டேன் என்று நாதமுனிகள் மனமுருக அமுதனை நோக்கினார்.
உழுதுபாலைப்(1) போன்ற சடகோபனின் பாடலை கேட்ட அர்ச்சகர் நாதமுனிகளுக்குத் தீர்த்தம் பிரசாதம் முதலியவற்றை உகப்புடன் அளித்தார்.
நாதமுனிகள் பணிவுடன் பெற்றுக்கொண்டு ”ஓராயிரத்து இப்பத்து” என்று இந்தப் பாசுரங்களில் காணப்படும் இந்தப் பத்துப் பாசுரங்கள் எந்தச் சதகத்தில் காணப்படுகிறதோ தெரியவில்லை. ஆராய்ந்து இந்த ஆயிரம் பாசுரங்களையும் கற்க இங்கே வந்தேன். சார்ங்கபாணியான ஆராவமுதனைப் பற்றியதான இந்தப் பெரிய பதிகத்தைத் தெரிந்தவர்கள் இங்கே இருக்கிறார்களா ? இருந்தால் உடனே கற்கிறேன் ” என்றார்.
அர்ச்சகர் “எங்களுக்கும் இப்பத்து பாசுரங்களே பாடம். குருகூர் சடகோபன் என்று வருவதால் நீங்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருக்குருகூர் புண்ணிய ஸ்தலத்தில் தேடிப் பார்க்கலாம் என்று தான் சொல்ல நினைத்தார். ஆனால் அவர் திருவாக்கில் ’திருக்குருகூர் புண்ணிய ஸ்தலத்தில் பெறுவீராக’ என்று ஆராவமுதன் அர்ச்சகமுகேன திருவாய்மலர்ந்தருளி அந்தச் சொல் அந்த திருமாமணி மண்டபத்தின் வார்த்தையாக ஒலித்தது(3)
தமக்கு மீண்டும் ஆராவமுதாழ்வார் என்ற திருப்பெயரும், பின்னாளில் ’திராவிட சுருதிதர் சகாயநம:’ என்று அர்ச்சனையில் ஒரு திருநாமம் அமையப்போகிறது என்றால் விடுவாரா ?
நாதமுனிகள் ஆராவமுதனை உள்ளம் உருகச் சேவித்து “இப்பொழுதே புறப்படுகிறேன்!” என்று புறப்பட்டார்.
“ஸ்வாமி மழை வரும் போல இருக்கிறது. இன்று குடந்தையில் அடியேன் அகத்தில் தங்கி, அமுது செய்துவிட்டு, நாளைக் காலைப் புறப்படலாமே?” என்றார் அர்ச்சகர்.
“நீங்கள் கேட்டதே ஈரக்கையால் தடவியது போல இருக்கிறது(4). இருந்தாலும், பாம்பு தீண்டினால் தாமதிக்காமல் மருத்துவரிடம் உடனே செல்ல வேண்டும் அல்லவா ?” என்று குருகூர் நோக்கிக் காலடி எடுத்து வைத்தார்.
அர்ச்சகர் அவர் உறுதியைக் கண்டு வியந்து பிரசாதங்களைக் கட்டிக்கொடுத்தார். நாதமுனிகள் மனதில் ஆராவமுதப் பாசுரமும் கையில் அவனுடைய பிரசாதங்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
அமுதத்துடன் பிசைந்து அதைக் குடமாகச் செய்து, அக்குடத்தில் அமுதத்தை நிரப்பி அதில் படைப்புக்குக் காரணமான ஒரு விதையை இட்டு குடத்தைப் பற்றிய கதையைச் சற்று முன் பார்த்தது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்.
குடந்தை என்ற குடத்தில் ஆராவமுதப் பாசுர விதைகளால் பிறந்த இன்தமிழ் ஆழ்வார் அருளிச்செயல்கள் மீண்டும் உயிர்பெறச் செய்த சார்ங்கபாணி கோயிலைத் தமிழ் கோயில் என்று கூறுவதில் தவறில்லையே! சார்ங்கபாணியுடனான உறவு ஒரு குடநீரோடு போகும் உறவன்று அல்லவா ? (2)
நாதமுனிகள் பிரயாணத்தை ஆரம்பித்தவுடன் ’விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்கள்’ என்று ஆகாசமெங்கும் நீல நிறமாக மாறிக் கண்ணை நினைவு படுத்தி முனிகள் மீது மழையாகப் பொழிந்தது.
மின்னல் ஆழி போல மின்னியது. இடியின் ஓசை வலம்புரி போல அதிர்ந்தது. சார்ங்கபாணியின் சார்ங்க வில்லிலிருந்து விரைந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை இந்த உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும், கண்ணனுடன் கலந்து மகிழ்ந்து குருகூர் சடகோபன் அருளவிருக்கும் பாசுரங்கள் உலகத்துக்குத் தண்ணீர்ப் பந்தலாக இருக்கப் போகிறது என்று உணர்த்தியது.
லோகசார்ங்கமுனி முனி வடக்கிலிருந்து ’ஆரவாமுதன்’ என்ற ஒரு சொல் கேட்டு ஈர்க்கப்பட்டு தென் தேசம் வந்தது போல நாதமுனிகள் குருகூர் நோக்கி லோகம் உய்விக்க சார்ங்கபாணி துணையுடன் சென்றதால் இவரையும் நாம் லோக சார்ங்க முனி என்று அழைக்கலாம் அல்லவா ?
நாதமுனிகள் மட்டும் அல்ல, அவருக்கு முன் வேறு ஒருவரும் இப்படி இருட்டில் குருகூர் நோக்கிச் சென்றுள்ளார். நமக்குப் பரிச்சயமான மதுரகவிகள் தான்.
மழையில் குருகூர் செல்லும் நாதமுனிகளுடன் நாமும் பயணித்தபடியே மதுரகவிகளின் கதையைக் கொஞ்சம் அனுபவிக்கலாம்.
திருக்குருகூர் அருகாமையில் திருக்கோளூர் என்ற சிறிய ஊரில் அவதரித்தவர் மதுரகவிகள். சிறுவயதிலேயே சிறந்த நூல்கள், வேதாந்தம் எல்லாம் ஆராய்ந்து அறிந்தவர். எனினும் அவருக்குத் திருப்தியும், சாந்தியும் ஏற்படவில்லை. பாரதத் தேசம் முழுவதும் அலைந்து திரிந்தார். சந்திக்கும் அறிஞர்களுடன், பக்தர்களுடன் பழகினார். எனினும் உள்ளத்துப் பசியை அவை போக்கவில்லை. அவருக்குத் தேவையான உகப்பான விஷயம் எங்கும் கிடைக்கவில்லை.
வடமதுரை, துவாரகை முதலான கண்ணன் திருவடி பட்ட நிலங்களில் பெருமாளை நினைத்து நெஞ்சுருகினார். ஸ்ரீராமர் அவதரித்த அயோத்திக்குச் சென்று அங்கே ராம பக்தியில் மூழ்கினார். எனினும் இதயம் ஆறுதல் பெறவில்லை. அவர் உள்ளம் ஞானவாழ்கைக்கு வழிகாட்டக்கூடிய ஒரு குருவைத் தேடித் தவித்தது.
ஒரு பின் மாலைப் பொழுதில் “எவ்வளவு காலமாக அலைந்து திரிந்துவிட்டேன். நான் பிறந்த திருக்கோளூரிலிருந்து நெடுந்தூரம் ராமகிருஷ்ணாதி அவதார ஸ்தலங்களுக்கே வந்துவிட்டேன். இனி எங்கே போவது ? ஒன்றும் புரியவில்லையே” என்று தம் ஊர் இருக்கும் திசையை ஏக்கத்துடன் நோக்கினார்.
அந்தத் திசையில் சூரியோதயமாகி விட்டது போலத் தோன்றியது. இவ்வளவு பிரகாசமாக எல்லா சூரியன்களும் ஒன்றாக ஒளிர்வது போலப் பிரகாசமாகத் தெரியும் பேரொளி வானுயர வளர்ந்து அமுத ஒளியாகத் திகழ்கிறதே என்று திகைத்தார்.
உடனே அது தோன்றிய இடத்தைக் கண்டுபிடிக்க அந்தத் திசையை நோக்கிப் பிரயாணப்பட்டார். பல காடுகளையும், மலைகளையும், ஊர்களையும், மக்களையும் கடக்கப் பகலில் தூங்கி இரவெல்லாம் ஜோதியே வழிகாட்ட இருட்டில் நடந்தார்.
போகும் வழியில் பல திவ்ய தேசங்களில் அந்த ஒளியின் மூலத்தைக் கண்டுகொள்ள முயன்றார். ஆனால் மதுரகவிகளை அந்த ஒளி தெற்கே தெற்கே இழுத்துச் சென்றது. திருவரங்கம் வந்ததும் இந்த ஒளியின் ரகசியம் இங்கே புலப்படும் என்று எண்ணினார். ஆனால் அங்கேயும் அதற்கு விடை கிடைக்கவில்லை. அந்த ஆனந்த ஜோதி காவிரி தீரத்திற்கும் தெற்கே தெரிந்தது.
பிரயாணத்தைத் தொடர்ந்தார். தாமிரபரணி தீரத்துக்கு வந்தார். தமது ஊருக்கு அருகேயுள்ள குருகூரைத் தாண்டியதும் தென் திசையில் தெரிந்த ஜோதி வடக்கே தெரிந்தது!
”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்!” என்று அதிவிரைவாகக் குருகூருக்குள் நுழைந்தார். அங்கே கோயிலுக்கு அருகே சென்றபோது ஜோதி தலைக்கு மேல் தெரிந்தது.
“இந்த ஊரில், இந்த இடத்தில் ஏதாவது விசேஷமுண்டோ ?” என்று ஊர் மக்களை விசாரித்தார். அவர்கள் கோயிலுக்கு அருகில் இருக்கும் புளிய மரத்தைக் காட்டி “அந்தப் புளியமரத்துப் பொந்தில் பிறந்து பதினாறு பிராயம் ஒரு குழந்தை உணவு ஏதும் இல்லாமல், கண்விழியாமல் தியானத்தில் இருக்கிறது!” என்றார்கள்.
மதுரகவிகள் புளியமரத்துக்கு அருகில் சென்றார். அதன் பொந்தில் பாலகன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார். கண்கள் மூடியிருந்தாலும் முகம் தான் பார்த்த ஜோதியைப் போலப் பிரகாசமாகக் கதிர்மதியம் போன்ற முகத்துடன் சாந்தமாகக் காட்சி அளித்தார்.
அவரிடமிருந்து புறப்பட்ட ஞான ஒளி எல்லையற்றதாய் எல்லா இடங்களிலும் பரவி மதுரகவிகளின் மனக் கண்ணுக்குள் சூட்சுமமாக வியாபித்துக்கொண்டது.
இந்த ஜோதி இயற்கைக்கு அப்பால் நெடுந்தூரம் தெரிந்ததில் ஆச்சரியமில்லை என்று மதுரகவிகள் எண்ணினார். இந்தப் பாலகன் மனித ரூபந்தானா ? என்ற ஐயம் உண்டாயிற்று. நம்மைப் போல் உணர்ச்சி உண்டா ? பேசுமா ? என்று எண்ணிய மதுரகவி, உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து கீழே விழுமாறு போட்டதும் ’தடால்’ என்ற பெரிய சப்தம் கேட்டு, அந்தப் பாலகன் கண் முழித்துப் பார்த்தார்.
மதுரகவிகளுக்கு ‘ஏன் எப்படி பக்திக் குறைவான காரியத்தை செய்தோம்’ என்று தோன்றியது இருந்தாலும், தான் செய்த சோதனை வெற்றி பெற்றது என்று அந்தப் பாலகனின் கண்கள் மலர விழித்தபோது மதுரகவிகள் பல இடங்களில் திரிந்து தேடிய புதையலைக் கண்டு பிடித்த சந்தோஷம் அவர் உள்ளத்தில் குடிகொண்டது.
இந்தப் பாலகனுக்கு உணர்ச்சி இருக்கிறது. இவருக்குப் பேச்சு வருமோ ? என்பதையும் சோதிப்போம் என்று ’செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று புதிரான வாக்கியம் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாலகன் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று நொடிப் பொழுதில் பதில் கூறினார்.
கேள்வி எவ்வளவு மறைபொருளாக இருக்கிறதோ அதைவிடப் பதில் மறைபொருளாயிருக்கிறதல்லவா ? இதை வாசகர்களுக்கு விளக்குவது நம் கடமையாகிறது. செத்தது என்பது சடப்பொருளான நம் உடலைக் குறிக்கும். சிறியது என்பது நம் ஆத்மாவைக் குறிக்கும். சடமாகிய சரீரத்தில் ஜீவாத்மா சம்பந்தப்படும்போது அது எதை அனுபவித்து எங்கே இருக்கும் ? என்பது தான் மதுரகவியின் கேள்வி. அதற்கு அந்தப் பாலகனோ சரீரத்தைச் சார்ந்த சுகதுக்கங்களை அனுபவித்துக் கொண்டு அந்தச் சரீரத்தையே சார்ந்திருக்கும்” என்று சூத்திரமாக வேதாந்தக் கருத்தைப் பதிலாக உரைத்தார்.
அந்தப் பாலகனின் குரலும் அவருடைய பார்வையின் அருளும் மதுரகவிகளின் பல கால ஐயங்களைத் தீர்த்தன. வயது முதிர்ந்த மதுரகவி என்ற யோகி அந்தப் பாலகன் திருவடிகளில் அப்படியே விழுந்து தன்னை சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சரணாகதி செய்தார். ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆசாரிய சரணாகதியின் துவக்கம் ஆரம்பமானது.
மதுரகவிகள்
வேதம் தமிழ் செய்த விமலர் வந்தார்!
உரிய தெய்வப் புலவர் வந்தார்
அளவிலா ஞானத்து ஆரியர் வந்தார்
ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியர் வந்தார்
திருகுருகூர் நம்பி வந்தார்!
என்று ஆடிப்பாடி கொண்டாடிய அதே இடத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் நாதமுனிகள் முழுக்க நனைந்து வந்து சேர்ந்த சமயம், ஆதவன் மெதுவாக உதிக்கத் தொடங்கி, பறவைகள் உல்லாசமாய் பாடிக் கொண்டே சூரியனையும், நாதமுனிகளையும் வரவேற்றது.
அன்றைய சூரியோதயம் வைணவத்தின் சூரியோதயமாக அமையப் போகிறது என்று பொலிந்த நின்ற பிரான் காத்துக்கொண்டு இருந்தார்.
பயணம் தொடரும்..
- சுஜாதா தேசிகன்
14-08-2020
படங்கள் நன்றி :ஜெ.பி, கேஷவ்
-------------------------------------------------
(1) உழுதுபாலை - சுவையான பால்.
(2) ஒரு குடநீரோடு போகும் உறவன்று - கோபியர்கள் கண்ணனைப் பார்த்து நமக்கும் உமக்கும் உள்ள உறவு எத்தகையது என்று கூறும் சொல்.
(3) மணி மண்டபத்தின் வார்த்தையாக - அரசவையில் கூறப்படும் வார்த்தை. நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பொருள்.
(4) ஈரக்கையால் தடவியது போல - ஸ்ரீராமர் அயோத்திய மக்களை தன் ஈரக்கையால் தடவியது போல ஆட்சி செய்தார் என்ற பிரயோகம்
வார்த்தைகளே கிடைக்கவில்லை பாராட்ட
ReplyDeleteபல்லாண்டு பல்லாண்டு தேசிகன்
தேனோ?
ReplyDeleteபைம்பொன் சுடரோ?
திகட்டாத திண்ணமுதோ?
இன்பப் பாவின் இன்சுவையோ?
நாதமுனியோ? / லோகசாரங்க முனியோ? என மலைத்து நிற்கிறோம்
I’ve dreamt of the scene of Nathamuni’s excitement and his travel to thirukurugoor .. you have portrayed it so beautifully with Kalki’s sol nayam.. enjoying and soaking in every word.. Thank you so much..
ReplyDeleteArumai!
ReplyDeleteEnjoyable
ReplyDeleteதிகட்டாத தெள்ளமுதாக தெள்ளிய நடையில்
ReplyDeleteஎங்கள் அமுதனை ஆழ்ந்து அனுபவித்தோம். அடுத்த பகுதிக்கு ஆவலாய் காத்திருக்கிறோம். அருமை தேசிகன் ஜீ!
- உப்பிலிஸ்ரீனிவாசன்