Skip to main content

(3) தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே!

 (3) தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே!


”சாமி ! இதுவும் ஒரு கண்ணன் கதை தான்” என்று அந்தக் குட்டிப் பெண் சொல்ல ஆரம்பித்தாள்.

கண்ணன் தினமும் தன் தோழர்களுடன் மாடு மேய்க்கப் போவான். அவன் போகும் இடம் காடு. அங்கே தான் மாடுகளுக்குப் புல் கிடைக்கும். ஒரு நாள் நடுப் பகல் அது அவர்களுக்குச் சாப்பிடும் சமயம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள்.

“டேய் எனக்குக் கொஞ்சம் தோசை கொடு”

“எனக்கு அதிரசம்”

“தயிர்சாதத்துக்கு என் அம்மா ஊறுகாய் வைக்க மறந்துவிட்டாள், கொஞ்சம் ஊறுகாய் கொடு” என்று தனமும் விதவிதமாகச் சாப்பிடுவார்கள். 

எல்லோரும் வழித்து, நக்கி சாப்பிட்டு முடித்தார்கள். ஆனால்  அவர்களுக்கு அன்று பசி தீரவில்லை. இன்னும் பசித்தது.

”கண்ணா இன்னும் பசிக்கிறதே?” என்றார்கள்.

கண்ணன் சுற்றி முற்றும் பார்த்தான். “அங்கே புகை வருகிறதே தெரிகிறதா ? “

“ஆமாம் ஆமாம்” என்றார்கள் சிறுவர்கள்

“அங்கே யாகம் நடக்கிறது என்று நினைக்கிறேன். அங்கே உணவு கிடைக்கும் போய்க் கேளுங்கள்”

“கேட்டால் கொடுப்பார்களா ?” என்றான் ஒருவன் சந்தேகமாக. 

“அந்தணர்கள் கோபக்காரர்கள் ஆயிற்றே” என்றான் இன்னொருவன்.

“ஏன் கொடுக்காமல், கண்ணன் தான் அனுப்பினான் என்று சொல்லுங்கள்..

கொடுப்பார்கள்” என்றான் கண்ணன்.


சிறுவர்கள் ஓட்டமாக ஓடினார்கள். அங்கே கண்ணன் கூறியது போல அந்தணர்கள் யாகம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.

“ஐயா ! எங்களுக்குப் பசிக்கிறது உணவு வேண்டும்” என்றார்கள். அந்தணர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

தயங்கியபடி “கண்ணன் அனுப்பினான். உணவு வேண்டும்” என்றார்கள். 

அந்தணர்கள் ’ஸ்வாஹா....ஸ்வாஹா' என்று யாகம் செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். சிறுவர்களை லட்சியம் செய்யவில்லை. அந்தணர்களுக்கு காது கேட்க வில்லை என்று நினைத்து, சிறுவர்கள் யாகசாலை அருகில் சென்றார்கள். அப்போது ஒரு அந்தணர்

 “தள்ளிப் போங்கள்” என்று கையிலிருந்த கரண்டியை உயர்த்தினார். சிறுவர்கள் பயந்துக்கொண்டு,  ஏமாற்றத்துடன் கண்ணனிடம் ஓடி வந்து நடந்ததைச் சொன்னார்கள். கண்ணன் வழக்கம்போலப் புன்சிரிப்புடன் 

“கவலை வேண்டாம். வேதம் படித்த அந்தணர்களின் மனைவிமார்களிடம் கேளுங்கள்”

அதில் ஒரு சிறுவன் “தரவில்லை என்றால் .. கண்ணன் கேட்டதாகச் சொல்ல வேண்டும், சரி தானே கண்ணா  ?” என்றான் நமுட்டுச் சிரிப்புடன். 

மீண்டும் சிறுவர்கள் ஓடினார்கள். யாகம் நடப்பதால் அந்தணர்களின் மனைவிமார்கள் வீட்டின் உள்ளேயே இருந்தார்கள். அவர்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டிய சிறுவர்கள் “பசிக்கிறது.. உணவு வேண்டும்... கண்ணன் அனுப்பினான்” என்றார்கள்.

போன கதையில் விதுரர் போல எல்லோரும் பரப்பரப்பாகிவிட்டார்கள். யாகத்துக்கு சமைத்து வைத்த வித வித இனிப்பு, பலகாரம், தயிர், பால், என்று எல்லாவற்றையும் எடுத்து வந்தார்கள். பெரிய, சிறிய பானை நிறைய உணவுகளை நிரப்பினார்கள்.


குண்டாக இருக்கும் சிறுவர்கள் தலையில் பெரிய பானை, ஒல்லியாக இருக்கும் சிறுவர்கள் தலையில் சின்னப் பானை என்று ஏற்றினார்கள். சில சிறுவர்கள் தலையில் இரண்டு பானைகள் கூட இருந்தது.  பலகார வாசனையால் நாக்கில் எச்சில் ஊறியது.

“சீக்கிரம் சீக்கிரம் கண்ணன் காத்துக்கொண்டு இருப்பான்” என்று எல்லோரும் கிளம்பினார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தபோது அந்தணர்கள் 

“யாகசாலையை விட்டு யாரும் வெளியே போகக் கூடாது” என்று சத்தம் போட்டார்கள். சிறுவர்கள் சோகமாகப் பெண்மணிகளைப் பார்த்தார்கள். பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எல்லோரும் கண்ணனைப் பார்க்கச் செல்லும் ஆர்வத்தால் கணவனின் பேச்சைக் கேட்காமல் அவர்களை மீறிச் சென்றார்கள். சிறுவர்கள் முகத்தில் மீண்டும் சந்தோஷம் மீண்டும் வந்தது. உணவு சிந்த ஓடினார்கள் எல்லோரும் .

பெண்மணிகள் கண்ணனைப் பார்த்தபோது ஆனந்தப்பட்டார்கள். பரபரப்பாகி  தாங்கள் கொண்டு வந்த உணவை எல்லாம் கண்ணனுக்கு மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள்.

“கண்ணா லட்டு” என்றார் ஒரு பெண், இன்னொருவர் “வெண்ணை” என்றாள், இன்னொருத்தி “வெல்லத்துடன் வெண்ணை சாப்பிடு” ...

சிறுவர்கள் எதைச் சாப்பிடுவது எதை விடுவது என்று குழம்பியபடியே சாப்பிட்டார்கள். கண்ணன் மகிழ்ந்து “உணவு ருசியாக இருந்தது... நேரம் ஆகிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள், யாகசாலையில் உங்கள் கணவன்மார்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள்” என்றான்.

“கணவனின் வார்த்தையை மீறி நாங்கள் இங்கே உனக்காக ஓடி வந்தோம். மீண்டும் சென்றால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ?” என்றாள் ஒரு பெண். 

“நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்..” என்று கண்ணன் சமாதானம் செய்தான். 

“இருந்தாலும்.. எங்களுக்குப் பயமாக இருக்கிறது கண்ணா” என்றார்கள் அந்தப் பெண்மணிகள்.

“பயப்படாதீர்கள். என்னை நினைத்துக்கொள்ளுங்கள்.. பயம் போய்விடும். நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்” என்றான் கண்ணன். 

பெண்மணிகளும் கண்ணனை விட்டுப் பிரிகிறோமே என்று மெதுவாக நடந்து சென்றார்கள்.

யாகசாலையில் கண்ணன் கூறியது போலக் அந்தணர்கள் கோபப்படாமல், தங்கள் மனைவிமார்களை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் அந்த அந்தணர்களின் ஒருவர் மட்டும் கொடூர முரடன். தன் மனைவியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று திருகோளூர் பெண் பிள்ளை நிறுத்தினாள்.

“அடப் பாவமே !  அவளுக்கு என்ன ஆயிற்று ?” என்றார் ராமானுஜர். 

அந்தப் பெண்மணி சற்றும் கலங்கவில்லை. அவள் உள்ளம் முழுவதும் கண்ணனே என்று இருந்தான். அப்படியே கண்ணனை நினைத்துத் தன் உயிரை விட்டாள். அந்தப் பெண்ணைப் போலக் கண்ணனை நினைத்து உயிரை விட்ட அந்த உயர்ந்த பக்தி எனக்கு இல்லையே” அதனால் தான் இந்த ஊரைவிட்டுப் போகிறேன்.

”பெண்ணே உன் வேகத்தையும் அவசரத்தையும் பார்த்தால் நீ பத்தவிலோசனமே போய்விடுவாய் போலிருக்கிறதே!” என்றார் ராமானுஜர்.

பக்கத்திலிருந்த சிஷ்யர்கள் இது என்ன புது பெயராக இருக்கிறதே என்று குழப்பத்துடன் பார்க்க, ராமானுஜர் அந்தப் பெண் பிள்ளையைப் பார்த்தார். அவள் குறிப்பு அறிந்து “இந்தக் கதை நடந்த இடம் பத்தவிலோசனம்... அதைத் தான் சாமி சொல்றாங்க” என்றாள்.

பக்கத்திலிருந்த சிஷ்யர்கள் “அட ஆமாம். ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் இந்த ஊரைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். இப்போது தான் நினைவுக்கு வருகிறது” என்றார்கள்.

“ஆண்டாள் பிராட்டி சொல்லாத விஷயமே இல்லை” என்று ராமானுஜர் பெண்ணைப் பார்த்த போது அந்தச் சுட்டிப் பெண் “தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!

 ராமானுஜர் புன்னகையுடன் ”இன்னொரு கதையா ?” என்றார். 

- சுஜாதா தேசிகன்

Comments