3. இராமானுசன் அடி பூமன்னவே - லோக சாரங்க முனி
நாதமுனிகளும் யாத்திரிகர்களும் பிரதட்சணமாகக் கோயில் வாசலுக்கு வந்த சமயம், பக்த சிரேஷ்டர்கள் இருவர் அங்கே இருந்தார்கள். இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தபோது அவர்களின் முகஜாடையை நாதமுனிகளின் வம்சம் என்று காட்டிக்கொடுத்தது. இருவரும் வணங்கினார்கள்.
”இவர்கள் யாராக இருக்கும் ?” என்று கேட்க நினைத்து வார்த்தைகளாக வரும் முன்னர் நாதமுனிகள் “இவர்கள் இருவரும் என் மருமக்கள் வரதாசாரியார், கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன் என்றார்
“ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், இவர்கள் காளமும், வலம்புரியைப் போல முழங்குவார்கள்(1) என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர்.
”உங்கள் வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள்.
அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால் இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் என்று ஆழ்வார்கள் அருளிச்செயல்களைத் தேவகானத்தில் இசைமைத்துப் காளம், வலம்புரிகளாக முழங்கி நாதமுனிகளின் வழியில் இவர்களிடமிருந்து அரையர்கள் பரம்பரை உருவாகப் போகிறது அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
நாதமுனிகள் வைணவர்களைப் பார்த்து “நீங்கள் இவர்களுடன் என் அகம் சென்று சற்றுச் சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள். கோயில் கைங்கரியங்களை முடித்துக்கொண்டு வருகிறேன். என் குடிசையில் இன்று நீங்கள் அமுது செய்ய வேண்டும் மறந்துவிடாதீர்கள்!” என்றார்.
”அப்படியே செய்கிறோம்” என்று யாத்திரிகர்களும் நாதமுனிகளின் மருமக்களும் விடைபெற்றுச் செல்ல நாதமுனிகள் ’ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே” என்று பாடிக்கொண்டு உள்ளே சென்றார். அது தேவகானமாகக் காற்றில் மிதந்தது.
வீரநாராயண பெருமாளைக் கீழே விழுந்து வணங்கி, தன் இடுப்பில் வைத்திருந்த தாளக் கருவியை எடுத்து இசைக்க ஆரம்பித்தார். சற்று முன் கேட்ட ஆராவமுதே என்று தொடங்கும் பாசுரங்கள் ‘இடு சிவப்பு’ ( மருதாணி ) போல நாதமுனிகள் மனத்தில் நன்றாக ஒட்டிக்கொண்டு இருந்தது.
’ஆராவமுதே’ என்ற பாசுரங்களைத் தாள ஒலிக்கேற்ப மீண்டும் தன் இனிய குரலில் பாட, உள்ளம் அபிநயத்தில் ஆடியது.
அருமை தமிழில் அன்புடன் பாடிய அந்த ’குருகூர் சடகோபன்’ யார் ? எங்கே தேடுவது ? திருவரங்கத்தில் திராவிட வேதமான அந்த ஆயிரத்தை மனப்பாடமாக வைத்திருப்பவர்கள் யாராவது இருப்பார்களா ? இல்லாது போனாலும் அவை எழுதப் பெற்ற ஸ்ரீகோசம் (ஓலைச்சுவடிகள்) ஏதும் இப்பரந்த உலகில் எங்கே இருக்கும் ?” என்று ஏக்கத்துடன் வீரநாராயணனைப் பார்த்தார்.
“விரைவாகச் செல்” என்று வீரநாராயணன் உத்தரவு கொடுக்க அவரைப் பிரதட்சிணம் செய்து தேடிச் செல்லவிருக்கும் ஆழ்வார் பிரபந்தங்களைக் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று தேடிக்காண முடியாத திருவடிகளை வணங்கி வில்லிலிருந்து கிளம்பிய அம்புபோலப் புறப்பட்டார்.
நாதமுனிகளின் அவசரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர் அகத்துக்குச் சென்று பாகவதர்களை உபசரித்து வணங்கி அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டதை விரிவாகக் கூற இயலவில்லை.
நாதமுனிகள் வடதிருக்காவிரி என்ற கொள்ளிடக் கரை ஓரமாகத் திருவரங்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். நாதமுனிகள் திருக்குடந்தையோ அல்லது குருகூர் தானே செல்ல வேண்டும் ? ஏன் திருவரங்கத்தை நோக்கிச் செல்கிறார் ? உங்களைப் போல் பலருக்கும் இந்த ஐயம் வருவதில் தவறில்லை.
வைணவத்தில் தலைமைப்பீடமாகத் திருவரங்கம் விளங்குகிறது.வைணவத்தின் சந்தை திருவரங்கம். நமக்கு வேண்டிய பொருளைச் சந்தையில் தேடுவது தானே சுலபம் ? திருவரங்கம் சுற்றி உள்ள வீதிகளில் புலமைமிக்க தமிழ், சமஸ்கிருதப் பண்டிதர்கள் அரங்கனை ஆராதித்துக்கொண்டு இருந்தார்கள்.இது மட்டும் அல்ல, திருவரங்க நாச்சியாரின் காதில் போட்டு வைத்தால் தான் நினைத்த காரியம் கைகூடும் என்று நாதமுனிகளுக்குத் தெரியும்.
காவிரியை பார்க்கும் பொழுதுதெல்லாம் நாதமுனிகளுக்குக் காதல் ஆதரம் கடலினும் பெருகும். வடக்கே கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி என்ற புண்ணிய நதிகளில் நீராடியிருந்தாலும் காவிரி தாய் மீது அவருக்குப் பிரேமை அதிகம். காவிரியின் மிருதுவாக மணலே அவளுடைய மேனிபோல இருபக்கமும் வயல்களும், மரங்களும் ஆடை அலங்காரமாகக் காவிரியை பார்க்கும்போது களிப்படையார் யாராவது இருக்க முடியுமா ?
வயல்களில் உழவர்கள் உற்சாகமாக இருந்தர்கள். பெண்கள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே வாழி, காவேரி!
என்று பாடிக்கொண்டு நெற்கதிர்களை அறுத்துக்கொண்டு இருந்தார்கள்.
குழந்தைகள் கன்றுகுட்டிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
நாதமுனிகளுடன் காவிரியும் சேர்ந்து வந்த சமயம், ராமாயணத்திலும், மஹாபாரதத்திலும், பாகவதத்திலும் இதன் சிறப்பு அவர் நினைவுக்கு வந்தது. அது மட்டுமில்லை தமிழ் இலக்கியங்கள் எல்லாம் புகழ்ந்து பாடுகிறது. இந்த நதியைச் சோழ மன்னர்கள் குலக்கொடியாகப் பேணி வளர்க்கிறார்கள். நீண்ட வறட்சிக் காலங்களிலும் காவிரித் தாய் யாரையும் கைவிட்டதாகச் சரித்திரம் இல்லை. ஆண்டுதோறும் மழை பெய்து காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவிழாக் கொண்டாடினார்கள்.
’நடந்தாய் வாழி காவிரி’ என்று நாதமுனிகள் நடந்து வந்தபோது சமண விகாரங்களும் பௌத்த வைத்யங்களும் மடங்களும் ஆங்காங்கே தென்பட்டது. சிற்பிகள் சைவ வைணவ சிலைகளுடன் புதிதாகப் பௌத்தச் சிலைகளைச் செதுக்க ஆரம்பித்திருந்தார்கள். இது மட்டும் இல்லை அவ்வப்போது சில சமண, பௌத்த துறவிகள் நாதமுனிகளை கடந்து சென்றார்கள்.
காலம் தான் எப்படி மாறுகிறது ! அவருடைய நினைப்புக்குக் காரணம் இருந்தது. வட தேச யாத்திரை சென்று சில ஆண்டுகள் கழித்துத் திரும்பியபோது சில பாண்டிய மன்னர்கள் பௌத்த மதத்தைத் தழுவியிருந்தார்கள் சில பல்லவ மன்னர்களோ சமண மதத்தில் விருப்பம் கொண்டு அதை ஆராதித்தார்கள் சமீபகாலமாகப் பௌத்தம் சமண மதங்கள் அடைந்த செல்வாக்கை நாதமுனிகள் வியக்காமல் இருக்க முடியவில்லை. நெல்வயலில் பயிர்களுக்கு இடையே வளரும் களைபோல அவருக்கு இது காட்சி அளித்தது.
ஆராவமுதே என்ற பாசுரத்தில் சரணாகதியும், பக்தி நெறியும் இருக்க மாயாவாதமும், சூனிய வாதமும் தலைவிரித்து ஆடுவதை இந்தத் தமிழ் பாசுரங்கள் கிடைத்தால் அடக்கிவிடும் என்று நம்பினார். ஒரு சிலராலேயே மேற்கொள்ளத்தக்கப் பக்தி யோகத்தைக் காட்டிலும் அனைவரும் கைக்கொள்ளக்கூடிய சரணாகதி நெறியே சிறந்தது. பக்தி யோகத்தில் கண்ணனை அனுபவிப்பதைக் காட்டிலும் குருகூர் சடகோபனின் பாசுரங்களில் பெருமாளுடைய குணங்களை அனைவரும் ஈடுபடக்கூடியதோர் பதியப் பக்தி நெறியைக் காட்டுக் கொடுக்க முடியும் என்ற மன ஓட்டத்துக்குத் தக்கவாறு
’கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்று’ அவர் கால்கள் ஓட அவர் மனமோ ‘மால் தேடி ஓடும் மனம்’ போன்று அதைவிட விரைவாக வண்டுகள் எழில் கொஞ்சும்
ஆராத அருள் அமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற்கு அளித்த கோயில்
தோலாத தனி வீரன் தொழுத கோயில்
துணையான விபீடணற்குத் துணையாம் கோயில்
சேராத பயன் எல்லாம் சேர்க்கும் கோயில்
செழு மறையின் முதல் எழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினை யனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயிலுக்குள் புகுந்து ஸ்ரீரங்க நாச்சியாரை வீற்றிருக்கும் வாசல் முன் மண்டபத்தில் நின்றார். பிற்காலத்தில் கம்பன் சோழப் பேரரசர்களால் ஆதரிக்கப்படாத நிலையில் நாதமுனிகள் தலைமையில் இங்கே கம்ப ராமாயணத்தைத் தாயார் முன் அரங்கேற்றம் செய்து, அவர் நிற்கும் மண்டபமே கம்பர் அரங்கேற்ற மண்டபம் என்று பெயர் பெறப் போகிறது என்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை!
ஸ்ரீரங்க நாயகி தாயாரைத் தரிசித்து, பெரிய பெருமாளைத் தொழுதபோது அவர் ‘உவந்த உள்ளத்தனாய்’ நாதமுனிகளை குளிரக் கடாக்ஷித்தார்.
நாதமுனிகள் நல்லார்கள் வாழும் நளிரரங்கத்து அடியார்களின் திருவடிகளை வணங்கி ”இங்கே குருகூர் சடகோபன் பாசுரங்களை அறிந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா ? அப்படி இல்லை என்றால் ஏதேனும் ஓலைச்சுவடிகளாவது உள்ளதா ? சொல்வீர்களா ?” என்று பசிக்கு ஒருவன் இல்லம்தோறும் உணவு யாசிப்பது போல நாதமுனிகள் எல்லா இடங்களிலும் கேட்டவாறு சென்றார்.
திருவரங்கத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கண்ணிலே வெண்ணெயிட்டுக்கொண்டு தேடி அலைந்தார். திருவரங்கத்துப் பெருமையுடைய அவ்வடியார்கள் எல்லோரும் “இரண்டுமில்லை!” என்று சொன்னார்கள்.
நாதமுனிகள் மீண்டும் நம்பெருமாளை வணங்கித் தனக்குத் தெரிந்த அந்தப் பத்துப் பாசுரங்களை அவர் முன் பாடினார். நாதமுனிகளே ஒரு சங்கீத கருவி, அவர் நம்பெருமாள் முன் பாடிய பாடல் தேவகானமாக இசைத்தது.
ஆழ்வார் பாசுரங்களைப் பாடினால் எந்தப் பெருமாளும் மயங்கிவிடுவார்கள். இசையுடன் பாடினால் கேட்கவே வேண்டாம்! வேண்டிய வரத்தை யோசிக்காமல் கொடுத்துவிடுவார்கள். நம்பெருமாளுக்கு நாதவினோத நம்பி என்று பெயர் பெற்றவர். இசைக்குச் சன்மானமாக நான்கு அடி நடந்து காண்பிக்கும் பெருமாள். மீண்டும் கிடைக்கப் போகும் அந்தப் பாசுரப் புதையலால் ‘பதின்மர் பாடிய பெருமாள்’ என்ற கூடுதலாகப் பெயர் வேறு கிடைக்க போகிறது. நாதமுனி ’ஆராமுதே’ என்ற பாசுரத்தின் இசைக்கு நம்பெருமாள் என்ன செய்திருப்பார் என்று வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
’ஆராவமுதே’ என்பது ஒரு மாயச் சொல். எத்தனை முறை அதைச் சொன்னாலும் பெருமாளைப் போல அது தெவிட்டாது. எப்படிப்பட்டவர்களையும் மயக்கும் அமுதச்சொல்.
நாதமுனிகளுக்கு முன் ’ஆராவமுதே’ என்ற சொல்லுக்கு மயங்கி வடதேசத்திலிருந்து தென் தேசத்துக்கு ஒரு மாமுனிவர் வந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நமக்கு மிகவும் பரிச்சயமான திருப்பாணாழ்வாருக்கு ‘முனி வாகனமாக’ இருந்த ’லோகசாரங்க மஹா முனிவர்’ தான். அவருடைய கதையைக்(2) கேட்டுவிட்டு நாதமுனிகளுடன் நம் பயணத்தைத் தொடரலாம். .
வடதேசத்தில் காசியில் லோகசாரங்க முனிவர் வசித்து வந்த சமயம், தென் தேசத்திலிருந்து காசிக்கு ஒருவன் சென்றிருந்தான். முனிவர் அவனை நோக்கி “அன்பரே ! தென் தேசத்தில் விசேஷம் ஏதுவும் உண்டோ ?” என்று விசாரித்தார். அதற்கு அவன் “திராவிட தேசத்தில் பிரபந்தம் ஒன்று அவதரித்துள்ளது. பல அறிஞர்கள் அதை மிகவும் கொண்டாடுகிறார்கள்” என்றான்.
முனிவர் ஆர்வமாக “அப்படியா ? அதைப் பற்றி மேலும் கூறு” என்றார் ஆர்வமாக. அதற்கு அவன் “எனக்கு அவை தெரியாது அதில் ’ஆராவமுதே’ என்ற ஒரு வார்த்தை தான் எனக்குத் தெரியும்” என்று பதில் கூறினான்.
‘ஆராவமுதே’ என்ற சொல்லைக் கேட்டு முனிவர் வியப்பில் மூழ்கி “நாராயணன் முதலிய சகஸ்ர நாமங்கள் இருக்கும்போது அவற்றைக் காட்டிலும் இப்படியும் ஓர் அழகிய திருநாமம் இருக்கிறதா ?” என்று கூறியதோடு திருப்தியடையாமல் “இப்படிப்பட்ட அழகிய சொல் நடையாடுகின்ற தேசத்துக்குப் செல்ல வேண்டும்” என்று அப்போழுதே புறப்பட்டுத் தென் தேசத்துக்கு வந்தார்.
நாதமுனிகள் திருக்குடந்தைக்குப் புறப்பட்டதில் வியப்பு ஏதும் இல்லை.
பயணம் தொடரும்..
- சுஜாதா தேசிகன்
07-08-2020
------------------------------------------
(1) ஸ்வாமி தேசிகன் அதிகாரசங்கிரகத்தில்(6) நாதமுனிகளைத் தொழும் பெருமிதம்
காளம் வலம்புரி யன்ன நற் காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்
மூளும் தவ நெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுது எழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே
காளம் : ஒரு விதமான இசைக் கருவி. எக்காளம் என்றும் கூறுவர்
(2) நஞ்சீயர் திருவாய்மொழி ஐதீகம்
வரைபடங்கள்: நடந்தாய் வாழி காவிரி புத்தகம்
Fridays are becoming still more brighter and are filled with eternal bliss. Thank you for all the happiness..
ReplyDeleteDesikan..
Par excellence
அடியேன் தாசன். வைணவத்திற்கு நீங்கள் செய்யும் தொண்டு உங்கள் ஏழேழு தலைமுறை வாரிசுகளுக்கும் புண்ணியம் சேர்க்கும். உங்கள் புகழ் ஓங்கி வளரும்.
ReplyDeleteவாசிக்கும் எங்களையும் உய்விக்கும் அருமருந்து உங்கள் பதிவுகள். எங்கள் அகத்திலும், உறவிலும் பலருடன் பகிர்கிறேன். அனைவரும் உங்களுக்கு தலைதாழ்ந்த நன்றி தெரிவிக்கிறோம்.
தன்யோஸ்மி.
ReplyDelete