Skip to main content

ஸ்ரீவைஷ்ணவ பெயர்கள்

 ஸ்ரீவைஷ்ணவ பெயர்கள்


இன்றைய ஸ்ரீவைஷ்ணவர்கள் கொஞ்சம் ஸ்டைலான பெயர்களையே விரும்புகிறார்கள். உதாரணத்துக்கு நம்மாழ்வார் என்று பல முறை சொன்னாலும், யாரும் தங்கள் குழந்தைகளுக்கு நம்மாழ்வார் என்று பெயர் வைக்கமாட்டார்கள் ( சடகோபன் என்று தான் வைப்பார்கள் ). இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்த நம்மாழ்வர் மட்டுமே இன்று நமக்குத் தெரியும்.

ஸ்ரீவைஷ்ணவ பெயர்களில் பல தகவல்கள் பொதிந்துள்ளது.

ஆழ்வார் “கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே” என்கிறார் . திருவேங்கடத்தில் உள்ள திருக்குளத்தின்(ஏரி) பெயர். திருக்கோட்டியூர் நம்பிகள் சிஷ்யை திருக்கோனேரி தாஸ்யை என்ற திருநாமத்துடன் விளங்கினார். இந்த அடியார் திருவாய்மொழிக்கு வாசகமாலை என்ற நூலை எழுதினார்.

பிள்ளைலோகாசாரியரின் சிஷ்யர் விளாஞ்சோலைப் பிள்ளை. இவருக்குப் பிள்ளைலோகாசாரியார் ’நலம் திகழ் நாராயண தாஸர்’ என்ற பெயரை வைத்தார்.

இவர் சேர தேசத்தவர்(கேரளா). குலசேகர ஆழ்வாரும் அதே தேசம் அதனால் பெருமாள் திருமொழியில் வரும் “நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே” என்ற பாசுர வரிகளில் வரும் பெயரையே அவருக்குச் சூட்டினார். 

“குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்” என்ற ஆழ்வார் பாசுரம் பலருக்குத் தெரிந்திருக்கும். திவ்ய பிரபந்தத்தில் பல இடங்களில் “குன்றம் ஏந்தி” என்ற சொல் வருகிறது.

”தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி”, ”வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி”, ”தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி”, “மா மணி குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை”, ”காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை”, ”மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும்”

இதில் ஆச்சரியம் என்ன என்றால் “குன்றம் ஏந்தி பாகவதர்” என்று ஒருவரின் பெயர்.

அது ”எப்படி சார் ’குன்றம் ஏந்தி’ என்ற பெயர் வைக்கலாம் ? என்று நமக்குத் தோன்றும்.

இடி தாங்கி என்று நாம் சொல்லுவதில்லையா ? அதுபோலத் தான் இது.

இந்தப் பெயர்களை எல்லாம் இனி யாரும் வைக்கப் போவதில்லை

'விப்ர நாராயணர்' என்ற இயற்பெயர் கொண்டவர் அரங்கனால் ஆட்கொண்ட அரங்கனின் அடியவர்களுக்கே அடிமையாக இருக்க விரும்பி 'தொண்டரடிப்பொடியாழ்வார்’ ஆனார். இவருடைய இயற்பெயர் என்ன என்றால் உடனே பலருக்கு நினைவு இருக்காது. இந்தப் பெயர் எப்படி வந்திருக்கும் ?

இவருக்கு முற்பட்ட குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் இந்த வரியைப் பாருங்கள்

“ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி”

குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் ‘நடைவிளங்கு தமிழ்' அதற்கு உரை தேவை இல்லை, ஹார்லிக்ஸ் போல அப்படியே சாப்பிடலாம், சாரி படிக்கலாம்.

நாதமுனிகள் தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் காலத்தில் அது முடியாமல் போக, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின், ஆசாரியன் விருப்பப்படி ஈசுரமுனி மகனுக்கு ’யமுனைத்துறைவன்’ என்று பெயர் சூட்டி அருளிச்செயல் பாடம் புகட்டினார்.

“யமுனை துறைவன்” என்ற பெயர் எங்கிருந்து வந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. திருப்பாவையில்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெரு நீர் யமுனை துறைவனை

திருவரங்கத்து அமுதனார் தம் இராமானுச நூற்றந்தாதியில், ஆளவந்தார் என்று கூறாமல் 'யமுனை துறைவன்' என்று நாதமுனிகள் விரும்பிய பெயரையே உபயோகிக்கிறார்.

எதிகட்கு இறைவன் யமுனை துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே

நாதமுனிகளின் நேர் சிஷ்யர் உய்யக்கொண்டார் இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர். உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்). ஸ்ரீமத் நாதமுனிகள் யோக சாஸ்திரத்திலும் விற்பன்னர். யோகத்தில் பகவானை உணரும் ஆற்றல் பெற்றவர். நாதமுனிகள் குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்கயோகம் கற்பித்து உய்யக்கொண்டாருக்கும் கற்றுக் கொடுக்கப் பிரியப்பட்டபோது உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்றார். அதாவது ஒருவர் வீட்டில் யாரோ இறந்து கிடக்கும்போது அங்கே மகிழ்ச்சியான திருமண பேச்சைப் பேசமாட்டார்கள். இதன் உள் அர்த்தம், உலகில் பல மக்கள் சம்சாரத்தில் சுக துக்கங்களில் உழன்று கிடக்க நாம் மட்டும் selfish ஆகப் பகவானை அனுபவித்துக் கொண்டிருக்கலாமா ? என்பது பொருள். இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து, அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக்கொண்டீரோ?” இதனால் அவருக்கு உய்யக்கொண்டார் என்ற பெயர் என்று வைத்துக்கொண்டாலும், நாதமுனிகள் அவருக்கு ஆழ்வார் திருவாக்கில் வந்த வார்த்தையையே அவருக்குப் பெயராகச் சூட்டினார் என்று தோன்றுகிறது.

திருமங்கை ஆழ்வார்

“தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்” என்கிறார்.

நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களிலேயே மூழ்கி ஆழ்வாரின் சொற்கள் மட்டுமே அவருடைய அவர்களுடைய vocabulary !

குலசேகர ஆழ்வாரின் ஒரு பாசுரத்தில்

“மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே” என்று உருகுகிறார். அந்த மணத்தூணையே தன் பெயராகக் கொண்டவர் பெயரும் கல்வெட்டில் இருக்கிறது. அவர் பெயர் திருமணத்தூண் நம்பி !

நம்பெருமாள் செஞ்சியை அடைந்தபோது, திருமணத்தூண் நம்பி என்பவர், உத்தமநம்பியை செஞ்சிக்கு அனுப்பி வைக்கிறார்.

- சுஜாதா தேசிகன்

Comments

 1. அருமையான பதிவு💐💐💐

  ReplyDelete
 2. Sir amazing. It is really rare to collate all the names in one article. I got a doubt how do you get these ideas and sure there is more reading needed and afterwards collating all the names under one roof.

  ReplyDelete
 3. நல்ல சிந்தனை மற்றும் வடிவமைப்பு

  ReplyDelete
 4. Best read early in the morning. Thank you Desikan Sir.

  ReplyDelete
 5. Beautifully written. Thanks a lot sir.

  ReplyDelete

Post a Comment