Skip to main content

தினமும் கொஞ்சம் தேசிகன் - 9

தினமும் கொஞ்சம் தேசிகன் - 9

பிரபந்தப் புத்தகத்தில் தனியன் என்று பாசுரம் ஆரம்பிக்கும் முன் சமஸ்காரத்திலும், தமிழிலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம். அருளியவர்களின் யார் என்று சில புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் சிலவற்றில் அவை இருக்காது. இதனால் சில தனியன்கள் யார் அருளினார்கள் என்ற தகவல் இருப்பதில்லை. 

தன் ஆசாரியனை அல்லது அவரது நூலைப் போற்றி புகழ்ந்து அதன் சாரத்தை தனியன்கள் கூறும். இது அந்த நூலுடன் சேராமல் தனித்து நிற்கும் செய்யுள் அல்லது ஸ்லோகம். ஒரே நூலுக்குப் பல ஆசாரியர்கள் அருளிய தனியன்கள் அந்த நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளது.  இதைத் தொடங்கி வைத்தது நாதமுனிகள் தான். சில தனியன்கள் பொதுவாக எந்த நூலுக்கும் சேராமல் பொதுத்தனியன் என்ற பெயருடன் இருக்கும். 

ஆசாரிய தனியன் என்பது அவரது சீடர்கள் தம் ஆசாரியனை வணங்குவதற்கு நாள்தோறும் சேவிப்பதற்கு அருளியது. 

இன்று ’அவா’ தனியன்,  ’இந்தத் தனியன் சொல்லும் வழக்கம் எங்களுக்கு இல்லை’ என்று பல பாகுபாடுகளுடன் தனியன்கள் தனிமைப்படுத்தி அச்சாகும் பிரபந்த புத்தகங்களில் இதைக் காணலாம். இதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல், இவ்வொரு தனியனுக்குப் பின் ஓர் அழகான அவதாரக் கதை இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். 

உதாரணத்துக்கு ”நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்” என்ற திருப்பாவை தனியனுக்கும் திருக்கோட்டியூருக்கும் சம்பந்தம் உண்டு. இந்தத் தனியன்பற்றிய சுவாரஸியமான விஷயத்தைப் பார்க்கலாம்.

கூரத்தாழ்வான் திருகுமாரரான பட்டர் வாழ்ந்த காலத்தில் விக்கிரம சோழன் ஆட்சி புரிந்தான்.  பட்டருடன் விரோதித்து உபத்திரம் தரத் தொடங்கினான். பட்டர் சோழ தேசத்தை விட்டு பாண்டிய நாட்டில் இருந்த திருக்கோட்டியூரைக் நோக்கிப் புறப்பட்டர். நடுப்பகலில் ஓர் இடத்தில் பசி மிகுந்து களைப்புற்று அயர்வடைந்தார். அப்போது பட்டர் புறப்பட்டுச் சென்றதை அறிந்த நஞ்சீயர் கட்டுச்சோறும், தண்ணீரும் எடுத்துக்கொண்டு ஓடிவந்து பட்டரைச் சந்தித்து இளைப்பாற்றி வைத்தார்.  பட்டரும், நஞ்சீயரும் சேர்ந்து, பல தினங்கள் நடைப்பயணமாக  திருக்கோட்டியூர் வந்தடைந்தனர். அங்கே திருகோட்டியூர் நம்பிகள் திருக்குமாரர் தெற்காழ்வானையும் குமாரத்தி தேவகிப் பிராட்டியையும், சிஷ்யையான திருக்கோனேரி தாஸ்யையும் சேவித்து மகிழ்ந்தனர்.  இந்தச் சமயம் அனந்தாழ்வான் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை மங்களாசாசனம் செய்த போது, நஞ்சீயரும், பட்டரும் திருக்கோட்டியூரில் இருப்பதைக் கேள்விப்பட்டுத் திருக்கோட்டியூர் வந்து அங்கே பட்டரைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாரி அணைத்துக்கொண்டு தம் மடி மீது வைத்துக்கொண்டார்.  பட்டரை அனந்தாழ்வான் ஸ்ரீரங்க நாச்சியாருக்கு மகன் என்றேன் கூறுவாராம். அதனால் தான் வணங்கும் தாயாருடைய மகன் என்றே கருதி அனந்தாழ்வான் பட்டரைத் தம் மடி மீது வைத்துக் கொண்டார். 

இப்போது பட்டரும், நஞ்சீயரும் அனந்தாழ்வானும் கூடியிருந்த மார்கழி குளிர்காலத்தில் ஆண்டாள் விஷயமாக ஆழ்வார்கள் விஷயமாகப் பேசும்போது பட்டர் இரண்டு ஸ்லோகங்கள் அருளிச் செய்தார். “நீளாதுங்க ஸ்தனகிரி தடீ” என்ற ஸ்லோகத்தையும் ஆழ்வார்கள் பதின்மர் விஷயமாக “புதம் ஸ்ரச்ச மஹதாஹவய” என்ற ஸ்லோகத்தையும் பட்டர் அங்கு அருளிச் செய்தார்.

இந்தத் தனியான்கள் எல்லாம் ஏதோ திட்டம் போட்டு எழுதியது இல்லை, ஆசாரியர்களின் திருவாக்கில் உதித்தவை. உதித்த காரணம், இடம் சூழல் எல்லாம் இருக்கிறது. அடுத்த முறை திருப்பாவை தனியன் சொல்லும்போது பட்டர் அனந்தாழ்வான் மடியில் இருப்பது உங்கள் நினைவில் வந்தால் அதுவே இந்தக் கட்டுரையின் வெற்றி. 

இன்று(22/08/2020) ஆணி ஸ்வாதி, ராமானுஜ தயாபாத்ரம் என்ற தனியன் அவதரித்த நாள். இந்தத் தனியன்பற்றிப் பார்ப்பதற்கு முன் தனியன் என்றால் என்ன என்று மேலும் கொஞ்சம் பார்க்கலாம். தனித்து இருப்பதற்குப் பெயர் தனியன் என்று கூறுவர் (தன்னந்தனியா வேலையை முடித்துவிட்டான்). பிரபந்தம் சேவிக்கும் முன் தனியனைச் சேவிப்பது வழக்கம். ஆங்கிலத்தில் invocation என்று கூறலாம்.  பிரபந்தத்துடன் சேராமல், இவை தனிச் செய்யுளாக இருந்தாலும் அவை தனித்து ஒப்பற்றதாய் இருக்கும் தன்மை உடையது. பெருமாளைத் தனியன் அதாவது ‘ஒப்பற்றவன்’ என்கிறார் திருமங்கை ஆழ்வார். 

தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே

அதாவது அவனுக்கு ஒப்பாக இன்னொருவர் எங்கும் இல்லை.  அப்படி ஒப்பற்ற ஒரு தனியன் தான் இந்த 'ராமானுஜ தயாபாத்ரம்’ என்ற தனியன். 

ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

ஸ்வாமி தேசிகன் ஸ்ரீரங்கத்தில் நடந்த கலகம் காரணமாக ஸ்ரீ சுதர்சனப் பட்டர் குமாரர்களையும், ஸ்ரீபாஷ்ய வியாக்கியானமான சுருதப்ரகாசிகை ஏடுகளையும் காத்து சத்தியமங்கலம் காடுகளின் வழியாகத் திருநாராயண புரம் ( மேல்கோட்டை ) வந்தடைந்தார்.  இங்கே தான் யதிராஜ ஸப்ததியையும், திருவரங்கனைச் சேவிக்க முடியாத பிரிவைப் பொறுக்க முடியாமல் அபீதிஸ்தவத்தையும் அருளிச் செய்தார். 

ஒரு நாள் மேல்கோட்டையில், ஸ்வாமி தேசிகன் செல்வப்பிள்ளை, உடையவரையும் மங்களாசாசனம் செய்தார்.  அப்போது ஸ்வாமி தேசிகனின் சிஷ்யர் பேரருளாளர் என்பவர் சன்னியாசத்தை மேற்கொண்டு ஸ்ரீபிரம்மதந்திர ஸ்வதந்த்ரர் ஜீயர் என்ற திருநாமத்துடன் தேசிகனின் காலட்சேப கோஷ்டியில் இருந்தார். 

ஸ்வாமி தேசிகன் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் செய்து முடித்திருந்த சமயம், ஸ்ரீபிரம்மதந்திர ஸ்வதந்த்ரர் ஜீயர் ’ராமானுஜ தயா பாத்ரம்’ என்ற தனியனைத் தேசிகன் முன் அருளினார். இதைக் கேட்ட ஸ்வாமி தேசிகன் மிகவும் உள்ளம் குளிர்ந்து  ‘தனக்குக் கிடைத்த ஆசாரியர்களின் தொடர்பை இது காட்டுவதாலும், தன் ஆசாரியனின் திருநாமத்தைக் கொண்டு தொடங்குவதாலும் தனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது” என்று இந்த ஒப்பற்ற தனியனை ஏற்றுக்கொண்டு, திவ்ய பிரபந்த முதலிய மற்றும் மற்ற தமிழில் உள்ள எல்லா அருளிச் செயல் தொடக்கத்திலும் இதைச் சேவிக்க ஸ்வாமி தேசிகனே நியமித்தார். 

இந்தத் தனியனை ஸ்வாமி தேசிகனே ஏற்றுக்கொண்டுள்ளார் என்றால் இதில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும் அல்லவா ? அது என்ன என்று சுருக்கமாகப் பார்க்கலாம். 

ராமானுஜ தயா பாத்ரம்  -  ராமானுஜ என்பது நம் உடையவர் என்று நாம் எல்லோரும் அறிந்தது. ஆளவந்தார் எப்படி ஸ்ரீராமானுஜருக்கோ அது போல கிடாம்பி அப்புள்ளார் தேசிகனுக்கு. அப்புள்ளாரின் திருநாமம் ஆத்ரேய ராமாநுஜாசார்யார். ஆக இது உடையவரையும், அப்புள்ளாரையும் குறிக்கும். 

அடுத்து, ராம என்ற சொல் ஸ்ரீராமரையும் அநுஜ’ என்பது அவனைத் தொடர்ந்து குருபரம்பரையில் தோன்றின சகல ஆசாரியர்களையும் குறிக்கின்றன. அதனால் இந்த தனியனைச் சேவித்தால் குருபரம்பரையை வணங்கிய பயன் கிடைக்கும். 

அதாவது பகவானிடத்திலிருந்து(ராமர்) ஆரம்பித்து,  ராமானுஜர்,  தேசிகனுடைய ஆசாரியனான கிடாம்பி அப்புள்ளார்(ராமாநுஜாசார்யார்) மற்றும் எல்லாப் பூர்வாசாரியர்களையும் (அநுஜ) குறிக்கும் வண்ணம் ஆரம்பிக்கிறது இத்தனியன். 

மேற்கூறிய எல்லா ஆசாரியர்களின் தயைக்கும் தேசிகன் பாத்திரமானவர்.  இந்தத் தயைக்குப் பாத்திரமானவர் எப்படி இருப்பார் ?  ஜ்ஞான வைராக்ய பூஷணம் -   நம்மாழ்வார் போல மதிநலம் உடையவராக ஞான, வைராக்கியங்களையே ஆபரணங்களாகச் சூட்டிக்கொண்டு, ஸ்ரீமத் வேங் கட நாதார்யம் - ’வேம்’ என்றால் பாவங்களை ’கட’ நீக்கும் திருவேங்கடமுடையானுடைய திருமணியின் அவதாரமாக அதே கல்யாணக் குணங்களையும். அதே திருநட்சத்திரத்தில் அவதரித்து வேதங்களைக் கற்பித்து, திருவரங்கப் பெரிய பெருமாளே இவருக்கு வேதாந்தாசாரியார் என்று பட்டத்தை இவருக்கு அளித்துக் கௌரவித்து சந்தோஷப்பட்டார். 

எம்பெருமானார் தரிசனத்தை அவருக்குப் பின் போற்றி பாதுகாத்த ஆசாரியர்களில் தலை சிறந்தவர். ராமானுஜருக்கு பிறகு 200 ஆண்டுகளுக்குப் பின் பல குழப்பங்களைப் போக்கியது மட்டுமல்லாது, பிற மதத்தவரின் கலக்கங்களையும் போக்கி, சம்பிரதாயத்தை நிலைத்து நிற்கச் செய்தார். ராமானுஜருக்குப் பிறகு மீண்டும் நிலைநாட்ட வந்த(வந்தே) ஆசாரியனான தேசிகனை (வேதாந்த தேசிகம்) வணங்குகிறேன்.  

தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள் இருந்தாலும், ஸ்வாமி தேசிகன் ஆசாரியர்களுக்கும் ஆசாரியனாக இருப்பதால் அவரே தேசிகன். தனியனைப் போலவே தனித்து ஒப்பற்ற நிற்கிறார்!

- சுஜாதா தேசிகன் 
22-08-2020
ஆவணி ஹஸ்தம், தனியன் அவதர நாள்.
படம்: ஸ்ரீபிரம்மதந்திர ஸ்வதந்த்ர  ஜீயர், ஸ்வாமி தேசிகன், அவருடைய திருக்குமாரர் நாயினாராசாரியர்


Comments

  1. மிகவும் அருமை

    ReplyDelete
  2. அருமை. இந்தத் தனியனுக்கு ஒரு 'சுருக்கமான' விளக்கம் 200 பக்கங்களில்(!) தயாராக இருக்கிறது. ஸ்வாமி தேசிகன் திருவுளப்பட்டால் (அப்புறம் இன்னொரு மூன்றெழுத்து இனிஷியல்காரரும்) அது இந்த வருடப் புரட்டாசித் திருவோண நன்னாள் மலராக வெளிவரும்.

    ReplyDelete
  3. ஸ்வாமி தேசிகன் திருவடிகளே சரணம். அருமை ஸ்வாமி.
    -உப்பிலிஸ்ரீனிவாசன்.

    ReplyDelete
  4. Adiyen, avatara utsavam on Avani Hastham🙏🙏

    ReplyDelete
  5. அருமை 👌. தன்யோஸ்மி.

    ReplyDelete
  6. தன்யாஸ்மி அடியேன்! அருமையான விளக்கம்

    ReplyDelete

Post a Comment