Skip to main content

6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்

 6. இராமானுசன் அடிப் பூமன்னவே - மாறன்


நாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம் “என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! என் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது! அப்படி என்றால் அமுதத் தமிழில் உள்ள அந்த ஆயிரம் பாசுரங்களும் உங்களுக்குத் தெரியுமா?” என்று வியப்புடன் கேட்டார். 

“ஸ்வாமி, எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக நாதமுனிகள் என்ற திருநாமம் எங்களுக்குப் பரிட்சயம். இந்தப் திருநாமத்தைக் கொண்ட யோகி ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க வரப் போகிறார் என்று  எங்கள் குலமே பல ஆயிரம் வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை! இன்று  தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்! ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டறியோம்” என்றார் 

இந்த அதிசயத்தை ஜீரணிக்க முடியாத நாதமுனிகள் புளங்காகிதம் அடைந்து  “நீங்கள் கூறிய அந்த நாதமுனிகள் அடியேனா என்று நான் அறியேன். ஆனால் அந்தப் பாசுரங்களை அடையும் மார்க்கத்தை தாங்கள் கூறினால் அதை உடனே நிறைவேற்றச் சித்தமாக இருக்கிறேன்”  என்று அவரை நன்கு வணங்கினார். 

“எங்கள் குலக்கொழுந்தான  மதுரகவிகள் கண்ணி நுண் சிறுத்தாம்பு என்று தொடங்கக்கூடிய ஒப்பற்ற பத்துப் பாடல்கள் உள்ளது. அதை நாதமுனிகளுக்குத் தந்தருள வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்ட கட்டளை. அதனால் நாங்கள் பல ஆண்டுகளாகச் செவி வழியாக உங்களிடம் ஒப்படைக்க பாதுகாத்து வந்திருக்கிறோம்.  அதைத் தாங்கள் கற்றுக் கொண்டு நியமத்துடன் இசையோடு பன்னீராயிரம் முறை திருக்குருகூரில் உள்ள புளியமரத்துக்கு அடியில் உருச்சொல்வீரானால் குருகூர் சடகோபன் மனம் மகிழ்ந்து அன்போடு அவர் திருப்பளவாய் திறந்து எல்லாவற்றையும் திருவாய்மொழியாக அருளுவார்” என்றார். 

நாதமுனிகள் “மதுரகவி என்ற திருநாமமே மதுரமாக இருக்கிறது. அவருடைய கண்ணி நுண் சிறுத்தாம்பும் மதுரமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அடியேனுக்கு உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டி நின்றார். 

பராங்குசதாசர் நாதமுனிகளை வணங்கி “இந்த நாளுக்குத் தானே இத்தனை தலைமுறையாகத் தவ வாழ்கை வாழ்ந்து வந்தோம். உங்களுக்கு மதுரகவிகள் பற்றியும் அவருடைய ஆசாரியனான குருகூர் சடகோபன் பற்றியும், கண்ணி நுண் சிறுத்தாம்பு பத்துப் பாடல்களைக் கூறிகிறேன்” என்று சொல்ல ஆரம்பித்தார். 

பராங்குசதாசர் சொன்ன குருகூர் சடகோபன் வரலாற்றை நாதமுனிகளைப் போல நம் நேயர்களும் கேட்க ஆர்வமாக இருப்பார்கள் என்பதை அறிந்து அதன் விவரங்களை இங்கே தந்துள்ளோம். 

திருவண் பரிசாரம்’- உடையநங்கை திருமாளிகை

பாண்டிய நாட்டில் தாமரபரணிக்கரையில்(0) அமைந்த  திருக்குருகூரில் திருமாலுக்கே தொண்டு புரியும் திருவழுதிவளநாடர் என்னும் பரம பாகவதர் ஒருவர் வாழ்ந்துவந்தார்(1). அவர் குமாரர் அறந்தாங்கியார். அவர் பிள்ளை சக்ரபாணியார் அவர் குமாரர் அச்சுதன். அவர் பிள்ளை செந்தாமரைக் கண்ணர் அவர் குமாரர் செங்கண்ணர் அவர் பிள்ளை பொற்காரியார். அவர் குமாரர் காரியார். அவருடைய திருக்குமாரராய் ‘மாறன்’(2) என்ற பேர் பெற்றவராய் அவதரித்தார் குருகூர் சடகோபன். 



பொற்காரியார் தமது பிள்ளையான காரியாருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தார். மலை நாட்டில் ‘திருவண் பரிசாரம்’ என்ற இடத்தில் ’திருவாழ் மார்பர்’(3) என்னும் திருமால் அடியாருடைய மகளான உடைய நங்கையாரை மணம் பேசினார்.  திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது.  

தம்பதிகள் சில காலம் திருக்குருகூரில் இல்லறம் நடத்தி வந்தனர். ஒரு நாள் மாமனாரின் வேண்டுகோளுக்கு இணங்க, காரியார் தன் மனைவி உடைய நங்கையுடன்  திருவண்பரிசாரத்திற்கு சென்று சிலகாலம் தங்கிய பின் மிண்டும் திருக்குருகூருக்குத் திரும்பி வரும் வழியில் திருக்குறுங்குடி கோயிலுக்குச் சென்று அங்கே வடிவழகிய நம்பியைச் சேவித்து ‘தங்களுக்கு உங்களைப் போலவே ஒரு குழந்தை வேண்டும்’(4) என்று பிரார்த்தித்தார்கள். திருக்குறுங்குடி நம்பியும் ‘நாமே பிறக்கிறோம்’ என்று அர்ச்சக முகத்தாலே வரம் அளித்தார். மாலை பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு காரியார் தம்பதிகள் திருக்குருகூருக்கு வந்தார்கள். 




குருகூரில் பொலிந்த நின்ற பிரானை வணங்கி  வாழ்ந்திருந்த காலத்தில் உடைய நங்கையார் கருத்தரித்து, அவர்களுக்குக் கலி பிறந்து நாற்பத்து மூன்றாவது நாளில் வைகாசி மாதம், விசாக நட்சத்திரத்தில்(8) பௌர்ணமி அன்று திருத்துழாய் மணத்தோடு முளைக்குமாப் போலே கலி தோஷத்தை அகற்றுவதற்காக ஒரு குழந்தை அவதரித்தது. 

நம்மாழ்வார் அவதரித்த இடம் - அப்பன் கோயில்
நம்மாழ்வார் அவதரித்த இடம் - அப்பன் கோயில்


இந்தக் குழந்தை அவதரிப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆனி மாதம் மூல திருநட்சத்திரம் அன்று கோயில் வெளிச் சுற்றில் புளியமரம் ஒன்று முளைக்க ஆரம்பித்தது, தாமிரபரணி தண்ணீரைப் பருகிப் பெரிய விருட்சமாக வளர்ந்தது கோயில் விமானம் முழுவதும் பரவிக் குடையாக(5) காட்சி அளித்தது. மரக் கிளைகளில் கிளிகளும், அணில்களும் அம்மரத்துக்கு ஆபரணமாக விளங்கியது.  மரம் பூத்துக் குலுங்கியது ஆனால் காய்க்கவில்லை. அந்த மரத்தில் ஒரு சின்னப் பொந்து ஒன்று உருவாகி கிளிகளும் அணில்களும் மரத்தின் மென்மையான இலைகளைக் கிள்ளி அதில் சேகரித்து மெத்தென்ற பஞ்ச சயனம் போல அமைத்து வந்தன. திருக்கோயில் பக்கம் வளர்ந்ததால் அம்மரத்தை அவ்வூர் மக்கள் திருப்புளி என்று அழைத்தனர். விமானத்துக்குக் குடையாக இருந்ததால் ஆதிசேஷன் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார்கள். அந்தப் புளிய மரம் கண்வளராமல் ‘உறங்காபுளியாக’  மாறனுக்கு காத்துக்கொண்டு இருந்தது. 




உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் முலைப்பாலுக்கு வாயைத் திறந்து அழத் தொடங்கி கடைசியில் வாய்க்கரிசி போடும் வரை உண்டியே உடையே என்று உகந்தோடுவதற்கு மாறாக வடிவழகிய நம்பியின் திருவருளால் அவதரித்த அக்குழந்தை பிறந்த அன்று தொடங்கிக் கண்விழியாது, வாய் அழாது, உடல் ஆடாது தாய்ப் பாலுண்ணாது உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமலிருந்த போதிலும், உள்ளொளியுடன் உருவும், திருவும் பெற்று வாட்டமில்லாது இருக்கும் அதிசயத்தைக் கண்டு பெற்றோர் வியப்பும் மற்றொரு பக்கம் வருத்தமும் அடைந்தனர்.  



பெற்றோர்கள் சிறிதும் கவலைப்படாமல் நம்பியிடம் வேண்டிக்கொண்டு பிறந்த குழந்தை, அதனால் இந்தக் குழந்தையைக் காப்பது அவன் பொறுப்பு என்று எம்பெருமான் மீது முழு பாரத்தை வைத்து, பிறந்த பன்னிரண்டாம் நாள் திருக்குருகூரில் பொலிந்து நின்ற பிரான் சந்நிதிக்கு குழந்தையை எடுத்துச் சென்று, ஆதிநாதனைச் சேவித்துப் பொலிந்து நின்ற பிரானின் திருமுன்பே அந்தக் குழந்தையைச் சேவிக்கப் பண்ணி வைத்து,  உலகில் ஏனைய குழந்தைகளின் இயல்புக்கு மாறாக இருந்தமையால் அக்குழந்தைக்கு ‘மாறன்’ என்று பெயர் சூட்டினர். 

மாறன் என்று திருநாமம் பெற்ற அக்குழந்தை மெதுவாகத் தவழ்ந்து சென்று அப்புளியமரத்தின் பொந்தில் அமர்ந்தது. அந்த மரமே ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டிலாக அமைந்தது. பெற்றோர்களும் அக்குழந்தையை தங்கள் பிள்ளையாகக் கருதாமல், எங்கள் குடிக்கரசே!’ இனி  பொலிந்த நின்ற பிரான் உன்னைக் காக்கட்டும் என்று வேண்டிக்கொண்டு பேணி வந்தார்கள். 

ஆதிப்பிரான் தான் பிரியப்பட்டுச் சூட்டிக் களைந்த மகிழ மலர் மாலையைப் பிரியமான மாறனுக்குச் சேனை முதலியாரை மூலம் அனுப்பி அவருக்குப் பஞ்ச சமஸ்காரங்களைச் செய்வித்து எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்கச் செய்து மயற்வர மதிநலம் அருளினான்(6). 

அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று அந்தப் புளியமரத்தின் பொந்தில் தெற்கு நோக்கி திருஞான முத்தரையுடன் அங்கே யோகத்தில் அமர்ந்தது. உள்ளொளியுடன் உருவும், திருவும் பெற்று ஞான முத்திரையுடன் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் பெருமாளை நினைத்த வண்ணம் தவ முனிவராக ஞான ஒளியுடன் காட்சி அளித்தான் அந்தப் பாலகன். 

கருவிலிருக்கும் குழந்தை ஞானத்துடன் இருக்கும். அது பிறந்தவுடன் சடம் என்ற காற்று குழந்தையைத் தீண்டும் போது ஞானம்  அஞ்ஞானமாக மாறி அழுதல், அரற்றுதல் போன்ற தன்மைகளை உருவாக்குகிறது. இந்தச் சடமென்னும் வாயு மாறன் பிறந்தவுடன் இவரைத் தொடுவதற்கு வர, அப்போது அதனைக் கோபித்து ஒரு  ஹுங்காரம் செய்து ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால் இவருக்கு சடகோபன்(7) என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. 

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் ? என்று ஊர் மக்கள் போற்றினார்கள். சடகோபர் பதினாறு வயதிலும் கண் விழியாமல் மௌனமாக இருப்பதைக் கண்ட பெற்றோர்கள் ‘இப்படி யாரோடும் பேசாமல் இருக்கிறாரே’ நாம் ஏதாவது அபசாரம் செய்துவிட்டோமோ என்று கருதி கலங்கினர்.  இந்தச் சமயத்தில் தான் மதுரகவிகள் ஓர் இரவில் பேரொளி ஒன்றைக் கண்டு அதிசயத்து அதை நோக்கி தென்திசை வந்து வாய்திறக்க வைத்து,  ’செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று சடகோபருடன் உரையாடி, அவருக்கே சிஷ்யரானார். 

இந்தக் கதை நாதமுனிகளுக்கு முன்பே நம் வாசகர்கள்  அறிந்துள்ளதால் அதை இங்கே மீண்டும் சொல்லவில்லை. 

பராங்குசதாஸ நம்பி நாதமுனிகளைப் பார்த்து ”நாங்கள் மதுரகவிகள் வம்சம். மதுரகவிகளுக்கு எல்லாமே சடகோபன் தான். எங்கள் வம்சத்தவர் எல்லோரும் சடகோபருடைய பெயரையே சூட்டிக்கொள்வோம்(13). என் தந்தை பெயர் வகுளாபர தாஸர் , என் பெயரான பராங்குசதாஸன் . இரண்டுமே சடகோபருடைய பெயர்கள் தான்.” என்றார் 
நாதமுனிகள் வியந்து “ஆஹா! இந்தப் பெயர்களின் காரணம் என்னவோ?” என்று கேட்டார். 

பராங்குசாஸர் ”திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் உள்ளம் உவந்து, பிரசாதித்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் வகுளாபரணர்(9) என்று பெயர் பெற்றார். பிறசமயத்தினராகிய யானைகளைத் தமது இனிய தமிழ் பாசுரத் தத்துவார்த்தங்களால் செருக்கை அடக்கி அவர்களுக்கு மாவட்டி(10) என்னும் கருவிபோல் இருந்ததால் பராங்குசர்(11) என்ற சிறப்புப் பெயர் பெற்றார். எங்களுக்கு முதல் தெய்வம் சடகோபர் தான்!” என்று உடனே பின்வரும் படலைச் சொன்னார். 

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ? - தாமம்
துளவோ, வகுளமோ? தோள் இரண்டோ, நான்கோ?
உளவோ பெருமான் உனக்கு?

நாதமுனிகள் அந்தப் பாடலின் பொருள் சுவையை வியந்து 
”சடகோபனின் ஊர் திருக்குருகூரோ? இல்லை திருப்பாற்கடலோ? 
பெயர் பாராங்குசனோ இல்லை நாராயணனோ? 
திருமாலை துளசியில் ஆனதா? இல்லை வகுள மலர்களால் ஆனதா? அவருக்குத் தோள்கள் இரண்டோ ? இல்லை நான்கோ? 
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போனால் திருமாலும் சடகோபனும் இருவர் அல்ல, ஒருவரே என்பது புரிந்துவிடும்!” என்ன அருமையான பொருள் பொதிந்த சொற்கள் என்று உருக்கமாக கூறி, அடியேனுக்கு மதுரகவிகளின் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ உபதேசிக்க வேண்டும் என்று வணங்கி நின்றார். 

பராங்குசதாஸர் உள்ளம் உகந்து கண்ணி நுண் சிறுத்தாம்பை உபசேதிக்க தயாரானார். நாதமுனிகள் தலை தாழ்த்தி

வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்(12)

என்று வணங்கி விநயமுடன் உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார். 

- சுஜாதா தேசிகன்
29-08-2020
பயணம் தொடரும்... 
கோட்டோவியங்கள் நன்றி திரு ஜெ.பி

-------------------------------------------------------------------------------------------

(0)
ஸ்ரீநகர்யாம் மஹாபுர்யாம் தாம்ரபர்ணி உத்தரே தடே
ஸ்ரீ திந்த்ரிணீ மூலதாம்நே சடகோபாய மங்களம்
நம்மாழ்வார் மங்கள ஸ்லோகம் 

(1)
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.

திருமலையில் வசிக்கும் முடிவில்லத புகழுடைய எம்பெருமான் எம்குலநாதன் என்கிறார் நம்மாழ்வார் 

(2)
மாறன் சடகோபன், காரி மாறன் என்று சொல் திருவாய்மொழியில் ஆறு இடங்களில் வருகிறது.  
’மாறன் அடிபணிந்து உய்ந்தவன்’ என்று இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார். 

(3)
திருவாழ் மார்பர் - ஸ்ரீநிவாசன் என்ற திருநாமத்தின் தமிழ்ச்சொல். வழக்கிழந்து விட்டது. 

(4)
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து  அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
என்ற பாசுரத்தில் தாய் தன் மகளைத் தான் பெற்ற அருமைப்பாட்டைக் கூறும் இடம்(நெடுங்காலம் பரவி பெற்ற - நீண்டகாலம் வழிபட்டுப் பெற்ற) ஆழ்வாரின் அவதாரச் சிறப்பு குறிப்பாக வெளியிடப் பெற்றுள்ளதாகப் பூர்வாசாரியார்கள் திருவுள்ளம். 

(5)
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

(6)
அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.
இந்தப் பாசுரத்தில் அறிவு தோன்றுவதற்கு முன்பே இளம்பருவத்திலேயே பெருமாள் பேரன்பு கொண்டவராக எனக்கு அருள் புரிந்தான் என்கிறது இப்பாசுரம். 

(7) 
திருவாய்மொழி இறுதிப்பாசுரமகிய பல சுருதிப் பாசுரங்களில் பலவற்றில் ‘சடகோபர்’ என்ற முத்திரைச் சொல்லாக அமைந்திருக்கிறது. 

(8) வைகாசி விசாகம் :
ஸ்வாமி தேசிகன் பிரபந்தசாரம் - “இந்நிலத்தில் வைகாசி விசாகம் தன்னில்எழில் குருகை வருமாறா விரங்கு நீயே” ; ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறிய பகர்கின்றேன் - சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்

(9) மகிழம் என்ற தமிழ்ச் சொல் வடமொழியில் வகுளம் என்று வழங்கப்படுகிறது. வகுள மாலையை ஆபரணமாக உடையவர் அதனால் வகுளாபரணர் என்று பெயர். நம்மாழ்வார் திருவாய்மொழியில் “வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” என்று கூறுவதே சான்று. 

(10) மாவட்டி என்பது அங்குசம் 

(11) பராங்குசர் 

சேமம் குருகையோ? செய்யதிருப் பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ, நாரணனோ? 
என்ற பாடலில் வருவது சான்று. 

(12) நாதமுனிகள் மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு அருளிய தமிழ் தனியன். 

(13) இன்றும் திருக்குருகூர் சுற்றி உள்ள ஊர் பெயர்கள், குடும்பத்தில் மூத்த பிள்ளைகளில் பெயர்கள் சடகோபன் சம்பந்தமாகவே இருக்கும். வேற்று மதத்தினர் கூட சடகோபன் ‘ஆழ்வார்’ என்ற அபிமானத்தில் இந்த பெயரை தங்கள் முதல் பிள்ளைக்கு சூட்டுகிறார்கள்.

Comments

  1. அருமை.... முதல் வரியிலிருந்து கடைசி வரிவரை, கண்களை எடுக்கவே முடியவில்லை. இன்றைய ஏகாதசியில் நம்மாழ்வார் வைபவம், நாதமுனிகள் வைபவங்களை அனுபவிக்க என் செய்தேன் அடியேன்!



    அடியேன் தாஸன்.

    ReplyDelete
  2. No wonder Swamy Nammazhwar is eulogised as Prapanna Jana Koodastar. He is rightly positioned between 4 predecessors and 7 successors in Aazhwaar lineage. Thiruvaaimozhi is Dravida Veda Saagaram as per Taniyan written by Sriman Nathamunigal. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
  3. 🙏🙏 படிக்கக் கொடுத்துவைத்திகிருக்க வேண்டும். 5 சதவிகிதம் மனசில் நிற்குமா என்று தெரியவில்லை. மொத்தமாக நாதமுனிகள் வம்சம், சடகோபன் நம்மாழ்வார் வரலாறு மனத்தில் இருந்தாலே நன்று.
    உங்கள் மூலம் பெருமாள் எங்களை உய்விக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

    நான் பூரணமாக நாராயணன் அடிமையாகவில்லை . கஷ்டம். பாக்கியமில்லை. இருந்தும் இந்தவயதிலாவது கொஞ்சம் மனது திருந்த வாய்ப்பளிக்கும் உங்களுக்கு என்றென்றும் நன்றி.
    அடியேன் தாசன்.

    ReplyDelete
  4. Enna chavan seithom.sadagopan Thiru adigale saranam.

    ReplyDelete
  5. ஜெகநாதன் சார் சொல்வது போல் படிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும், அதற்கு கொடுப்பினை இருக்கவேண்டும், ஓம் நமோ நாராயணாய நமஹ, ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ. ராஜூவேம்பு, திருச்சி.

    ReplyDelete
  6. அருமை. அருமை. பேறு பெற்றோம் மாறன் பற்றி அறிய அரங்கன் அருள்.

    ReplyDelete

Post a Comment