Skip to main content

தொடை நடுங்கி - 2

தொடை நடுங்கி - 2 


ஆழ்வார் ‘தொடை கிளவியுள்’ என்ற ஒரு பதத்தை உபயோகிக்கிறார் ’தொடை கிளவியுள்’ என்றால் பொருத்தமுடைய சொற்களைச் சேர்த்து என்று சொல்லலாம்.

அதுபோல் இன்னொரு தொடை நடுங்கிய சம்பவத்தைச் சேர்த்துச் சொல்கிறேன்.

”கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினையை களைந்துவிடலாம்” என்று ஆழ்வார் பாடிய கங்கை ஓடும் காசியில் நடந்தது.

2017ல் வாரணாசிக்கு யாத்திரையாகச் சென்றேன். காசியில் தெருக்கள் ஏடாகோடமான சிக்கல் நிறைந்து வழிகளை உடையது. ஆங்கிலத்தில் அதை ‘maze’ என்பார்கள்.

பல சந்து பொந்து வழியாகப் புகுந்து சென்று காலையில் கங்கையில் சூரியன் உதிக்கும்போது நீராடிப் பாவங்களை எல்லாம் கழுவி, ஊர் சுற்றிவிட்டு இரவு நாங்கள் தங்கிய விடுதிக்கு வந்தபோது மின்சாரம் தடைப்பட ஒரே புழுக்கமாக இருந்தது.

”வாங்க வெளியே சென்றுவிட்டு வரலாம்” அறையிலிருந்த நண்பர் அழைத்தார்.

“மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டதே ?” என்று ஜகாவாங்கினேன்.

“தெருவில் லைட் எல்லாம் ஜகஜோதியா இருக்கு...இந்தப் புழுக்கத்தில் எப்படித் தூங்க முடியும் ?. .”

“நான் கிளம்புகிறேன்… வரதுன்னா வாங்க “ என்று கிளம்பினார்.

“சரி நானும் வருகிறேன்…” கிளம்பினேன்.

கிளம்பியபோது நாங்கள் தங்கியிருந்த விடுதியின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. நண்பர் விடவில்லை. விடுதியின் மேனேஜரை எழுப்பிப் பூட்டியிருந்த கதவைத் திறக்கச் சொன்னார்.

தூக்கக் கலக்கத்தில் எழுந்த அவர் மணியைப் பார்த்து “இந்நேரத்துக்கு எங்கே ?” என்று கேட்க

“வெளியே போய்விட்டு வருகிறோம்”

அவர போய்த் தொலையுங்க என்று கதவைத் திறந்துவிட்டார். வெளியே ஆள் நடமாட்டம் இருந்தது. இனிப்பு கடையில் சிலர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.

கொஞ்சம் தூரம் நடந்தபோது சூடான பால் கடை வந்தது. நண்பர் பால் வாங்கி குடித்துக்கொண்டே கடைக்காரரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார்

“இப்ப கங்கைக்குப் போகலாமா ?”

“இப்பவா ?”

“ஆமாம்”

“இப்ப போவது உசிதம் இல்லை.. நிறையக் குடிகாரர்கள் இருப்பார்கள்…”

”நான் கங்கைக்குப் போகிறேன்” என்றார் என்னைப் பார்த்து அந்தப் பார்வையில் “நீங்களும் வருகிறீர்கள் இல்லையா ?” என்பது பொதிந்து இருந்தது.

“நான் வரலை… பால் கடைக்காரர் வேண்டாம்” என்று சொல்லுகிறார் என்றேன்.

”சரி இன்னொருவரிடம் கேட்கலாம்” என்று பக்கத்துக் கடைக்காரரிடம் அதே கேள்வியைக் கேட்டார்

“தாராளமா போகலாம்… நல்ல விளக்கு போட்டு மோதிச் சர்க்கார் அருமையா செய்திருக்கிறார்கள்” என்றார்.

“மோதி இருக்கிறார் பயப்படாமல் வாங்க” என்று என்னை இழுத்துக்கொண்டு போனார். மைத்தடவிய மந்திரவாதிபின் செல்வதைப் போலச் சென்றேன்.

காசி தெருக்களைப் பகலில் ‘maze’ என்றால் இரவில் amazing!

“அடையாளம் பார்த்து வெச்சிக்கோங்க… பட்டுப் புடவை கடை, ஒரு மரம், ஒரு ஒத்த லைட் போஸ்ட்… “

திடீர் என்று நின்றுவிட்டோம்

அங்கே மூன்று பிணங்கள் இருசமபக்க முக்கோண தேற்றத்தில் ( ஆங்கிலத்தில் isosceles triangle ) முழுமையாக எரிந்துகொண்டு இருந்தன.

பக்கத்தில் ஒருவர் குச்சியுடன்…!. உடனே யூ டர்ன் அடித்துத் திரும்பினோம்.

பிணத்தைக் கிட்டே பார்த்த அதிர்ச்சியில் வழியை மறந்துவிட்டோம். நண்பர் விடவில்லை. கங்கையைப் பார்த்துவிட்டுத் தான் போவது என்று அடம்பிடித்தார். எனக்கும் வேறு வழியில்லை. தனியாக மீண்டும் விடுதிக்குச் செல்லப் பயமாக இருந்தது. ஒருவாறு வழியை யூகித்து கங்கைக் கரைக்கு வந்தோம்.

மிக அமைதியாக இருந்தாள் கங்கை. காலையிலிருந்த கூட்டம் இப்போது இல்லை. அரசமரத்துக்கு அடியில் ஒரு நாய் ஊளையிட்டுக் கொண்டு இருந்தது. மணி சரியாக 12.10.

அப்போது நண்பர் எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

“இவ்வளவு தூரம் வந்துட்டோம் ஒரு முழுக்கு முழுகிவிட்டுப் போய்விடலாம்” என்றார்

“பன்னிரண்டு மணிக்குக் கங்கையில் குளிக்கக் கூடாது”

“கங்கையில் குளிக்கச் சாஸ்திரம் எல்லாம் கிடையாது நான் குளிக்கப் போகிறேன்..” என்று உள்ளே இறங்கினார்


தனியாக அங்கே நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்துகொண்டு இருந்தபோது ஊளையிட்ட நாய் என் பக்கம் துணைக்கு வந்தது. அதனிடம் தப்பிக்க நானும் கங்கையில் இறங்கினேன்.

“வந்துட்டீங்களா… என்ன சுகமா இருக்கு பயந்தீங்களே.. ?”

நன்றாகத் தான் இருந்தது.

கொஞ்சம் நேரம் கங்கையிலிருந்தேன். அப்போது என் பக்கம் திடீர் என்று ஒரு உருவம் தண்ணீரிலிருந்து மேலே வந்தது. என் நண்பர் என்று நினைத்துப் பார்த்தபோது அது வேறு யாரோ. யாரோ இல்லை அகோரி.

ஜடா முடி, கண்கள் சிகப்பாகப் பார்க்கப் பயங்கரமாக இருக்க அட்ரினல் வேலை செய்யத் தண்ணீருக்குள் தொடைகள் நடுங்க ஆரம்பித்தது.

கரையேறினேன். அங்கே கூட்டமாக அகோரிகள் மிட்நைட் பூஜைக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார்கள். வேகமாக நடந்து விடுதிக்கு வந்தேன்.

நிசப்தமாக இருந்தது.

- சுஜாதா தேசிகன்

( படம் : கங்கை சூரியோதயம் - நிலவோதயம், 2017 எடுத்தது.அகோரி படம் - பெங்களூர் சித்திர சந்தேயில் படம் பிடித்தது. ஓவியர் யார் என்று தெரியாது. )

Comments

  1. அங்கே மூன்று பிணங்கள் இருசமபக்க முக்கோண தேற்றத்தில் ( ஆங்கிலத்தில் isosceles triangle ) =>

    "தோற்றத்தில்" (தேற்றம் என்றால் Theorem என்று நினைக்கிறேன்) ?

    ReplyDelete
  2. Amazing Ganges night experience. Even I have experienced during night in the streets and shops. Also during rain the whole place is full of floods but will be vanished into Ganges within few hours after rain stops.

    ReplyDelete
  3. Arumai. நடு நிசியில் அகோரியை நிலத்தில் பார்த்தாலே தொடை நடுங்கும். இதில் கங்கைக்குள்ளே கேட்கவே வேண்டாம்.

    ReplyDelete

Post a Comment