Skip to main content

நற்செல்வன் தங்காய்!

நற்செல்வன் தங்காய்!



’நற்செல்வன்’ என்பவன், ராமனுக்கு எப்படி லட்சுமணனோ, அதுபோலக் கண்ணனுக்கு ஒரு நற்செல்வன் என்கிறார்கள் உரையாசிரியர்கள். ஆண்டாளுக்கு மட்டும் தெரிந்த அந்த அந்தரங்க நண்பன் நற்செல்வன் யார்?

இதற்குப் பெரியாழ்வார் திருமொழியில் விடை இருக்கிறது.

சுரிகையும் தெறி-வில்லும் செண்டு கோலும்*
மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட*
ஒரு கையால் ஒருவன் தன் தோளை ஊன்றி*
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்**
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்*
மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்*
அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள்,*
அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே 256/3.4.3

இடிப்பில் பிச்சுவா கத்தி, ’கட்டாபுல்ட்’ (தெறிவில் - சுண்டுவில்)ஒன்றையும், மாடுகளை ஓட்டச் சாட்டையும்(செண்டு) வைத்துக்கொண்டு கண்ணன் ஓடி வரக் காற்றில் மேலாடை கீழே விழ அதை அவன் தோழர்கள் எடுத்துக்கொண்டு அவன் பின் தொடர அப்போது ஓர் உயிர்த்தோழனுடைய தோளை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் பசுக்கள் திரும்ப வருகிறது என்பதைத் தெரியப்படுத்தச் சங்கை ஊத அதைக் கேட்ட பசுக்கள் துள்ளி ஓட…இந்தச் சமயத்தில்
தோளோடு தோளாக கண்ணனைத் தாங்குபவன் தான் இந்தச் செல்வன். அந்தரங்கக் கைங்கரியம் செய்வதால் அவனை ‘நற் செல்வன்’ என்கிறாள் ஆண்டாள்.

கண்ணன் சாய்ந்துகொண்டு வரும் அந்தத் தோழன் தான் இந்த ’நற்செல்வன்’.

வள்ளுவர்
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்று நிலை

சிறந்த நட்பு எது என்றால் எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும்போதெல்லாம் தாங்கும் நிலையாகும். தோள் கொடுப்பான் தோழன் என்று இதனால் தான் சொல்லுகிறோம்.

ஒரு நல்ல நண்பனே சாய்ந்துகொள்ளத் தோள் கொடுப்பான். தன் தோளைக் கொடுத்துக் கண்ணனைத் தாங்கும் அந்த நல்ல தோழன் தான் இந்த ’நற்செல்வன்’.

-சுஜாதா தேசிகன்
5.1.2026

Comments