Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - அம்பரமே - 17

ஆண்டாளும் தோழிகளும் - அம்பரமே - 17



(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா) அரண்மனை வாயில், தோரண காப்போரிடம் அனுமதி பெற்று, மிகுந்த உற்சாகத்துடன் நந்தகோபனுடைய திருமாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கே நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோர் உறங்கும் இடத்திற்கு வருகிறார்கள்.)

(காட்சி: நந்தகோபன் முதற்கட்டில் படுத்திருக்கிறார். மெல்ல அவர் தூங்கிக்கொண்டு இருக்கும் இடத்துக்குச் செல்கிறார்கள். அங்கே நந்தகோபன் ஒரு கையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார். மறுகையில் கூர்வேல் இருக்கிறது.)

புல்லகலிகா: "மெதுவாக வாருங்கள்! தடுக்கி விழுந்தால் நந்தகோபன். கையில் வேல் வேறு இருக்கிறது, ஜாக்கிரதை!"

விசாகா: "தூங்கும்போதும் கையில் எதற்கு வேல்?

சுகந்தா: ”கண்ணனின் அழகில் மயங்கிய பெண்கள் அவனைத் திருடிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற பயம் தான்!"

புல்லகலிகா: "என்ன? பெண்கள் திருடிக்கொண்டு சென்றுவிடுவார்களா? வேடிக்கை தான்!"

பத்மா: "மன்மதனுக்கு மன்மதனான கண்ணனின் பேரனான அநிருத்தனையே பெண் களவாடிக் கொண்டு சென்றது நினைவில்லையா? "

ஆண்டாள்: "நந்தகோபனுக்குத் தான் சேமித்து வைத்த செல்வம், அந்த 'வைத்தமாநிதி' கண்ணன் தானே! சரி, இந்த அறம் செய்யும் அன்பரை அன்பாக எழுப்ப வேண்டும்."

[அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்]

சுகந்தா: "ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், வேண்டுவோருக்கு வேண்டுகின்றவற்றை எல்லாம் கொடுக்கும் நந்தகோபனே! எழுந்திருங்கள்!"

சொர்ணலேகா: "இவர் வஸ்திர தானம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அதைக் கொடுக்கும் போது வஸ்திர தானம் செய்வதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்று தெரியும்."

ஹேமலதா: "அதே போல் தண்ணீர் தானம் செய்யும் போது, இவரைப் போல் தண்ணீர் தானம் செய்ய உலகில் யாராவது இருக்கிறார்களா என்று தோன்றும்."

தனநிஷ்டா: "அன்னதானத்தை விட்டுவிட்டீர்களே! அதை ஆயுசு உள்ளவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது!"

ஆண்டாள்: "தன் தந்தையிடம் இந்த தான தர்மங்களை எல்லாம் கண்ணன் நன்கு கற்றுக்கொண்டு விட்டான் தெரியுமா?"

சுலோச்சனா: "கோதை! அப்படியா?"

ஆண்டாள்: "பார்! வஸ்திர தானம் கற்றுக்கொண்டு திரௌபதிக்குப் புடவையைச் சுரந்தான்; தண்ணீர் தானம் செய்ய, போர்க்களத்தில் அர்ஜுனனின் தேர் குதிரைகள் தாகத்தால் தவித்த போது, நிலத்தைத் தன் அம்பால் கீறித் தண்ணீர் வரவழைத்துக் கொடுத்தான்; அன்னதானம் செய்ய, துர்வாசர் பாண்டவர்களிடம் சென்று உணவு கேட்ட போது, காலியாக இருந்த அக்ஷயபாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரு பருக்கை சோற்றையும், துளி கீரையையும் உண்டு, மூவுலகின் பசியையும் போக்கினானே!"

புல்லகலிகா: "பிறருக்கு உபகாரம் செய்வதையே தாரகமாகக் கொண்டிருக்கும் தர்ம பிரபுவே! ஆயர் சிறுமியர்கள் வந்திருக்கிறோம் எழுந்திருங்கள்."

[எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்]

ஆண்டாள்: "எங்களுக்கு அவன் உண்ண சோறு, பருகிய நீர், உடுத்திக் களைந்த ஆடை என்று எல்லாமே கண்ணன் சம்பந்தம் பெற்றது தான். பெண்ணைக் கன்னிகா தானம் செய்யும் தந்தையைப் போல், உங்கள் மகன் 'நந்தகோபன் குமரனை' எங்களுக்குக் 'கண்ண தானம்' கொடுக்கப் போகும் நீங்களே, எங்களுக்கு எம்பெருமான்! (ஸ்வாமி!) நந்தகோபாலா! எழுந்திரு!"

(நந்தகோபன் கண்விழித்து ‘சரி’ என்று அனுமதித்தது போல இருக்க, ஆண்டாளும் தோழிகளும் யசோதைப் பிராட்டியை எழுப்பச் செல்கிறார்கள். இவள் நந்தகோபனுக்கு அடுத்த கட்டில் படுத்திருக்கிறாள்.)

[கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!]
ஆண்டாள்: "வஞ்சிக் கொடி போன்ற இடுப்பை உடைய பெண்களுக்கெல்லாம் தலைவியே! வேரில் வெந்நீர் விட்டால் கொழுந்து முதலில் வாடுவது போல, எங்களுக்கு ஒரு குறை என்றால் உன் முகம் அன்றோ முதலில் வாடும்! சீதை தன்னைத் துன்புறுத்திய அரக்கிகளுக்கே நலம் விரும்பியது போல, வருத்தத்தோடு வந்திருக்கும் இந்தச் சிறுமிகளான எங்களுக்குக் கண்ணனைக் காட்டி ஆறுதல் சொல்ல நீ எழுந்திருக்க வேண்டாமா?"

விசாகா: "விளக்குத் தன்னையும், பிறவற்றையும் பிரகாசமாகக் காட்டுவது போல, நீ நம் ஆயர் குலத்துக்கும் எங்களுக்கும் மங்கள தீபம் போலப் பிரகாசமாக இருக்கும் குலவிளக்கு! இருள் சூழ்ந்த எங்கள் நெஞ்சைப் பிரகாசிக்கச் செய்ய, ஆயர் குலத்தின் அணிவிளக்கான கண்ணனை எங்களுக்குக் காட்டித் தர, எம்பெருமாட்டி! யசோதையே! எழுந்திருக்க வேண்டும்!"

[எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்]
சொர்ணலேகா: "ஒரு பெண்ணின் கஷ்டம் ஒரு பெண்ணுக்குத் தான் தெரியும் என்பார்கள். நந்தகோபன் எழுந்தால் தான் எங்கள் கஷ்டத்தைப் புரிந்து கொள்வார், நீயோ எங்கள் கஷ்டத்தை அறிந்தாலே போதும். அதனால் எழுந்திருக்கக் கூட வேண்டாம், எங்களின் கஷ்டத்தை நீ உணர்ந்திருந்தாலே போதும்!"

(யசோதையும் ‘சரி போங்கள்’ என்று உடன்பட்டது போலக் கிடக்க, ஆண்டாளும் தோழிகளும் அடுத்த அறைக்குச் செல்கிறார்கள். அங்கே கண்ணன் படுத்திருக்கிறான்.)

[அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த]
புல்லகலிகா: "கண்ணா! மண்ணுக்கு ஆசைப்பட்ட அமரர்களுக்காக, ஆகாச வெளியைத் துளைத்துக் கொண்டு ஓங்கி உயர்ந்து உலகை எல்லாம் அளந்தாய்..ஆயர் சிறுமிகளான நாங்கள் எந்த மண்ணுக்கும் ஆசைப்படாமல் மாயனான உன்னை ஆசைப்பட்டு வந்திருக்கிறோம். நீ அன்று ஓங்கி வளர்ந்தது போல், இன்று உறக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும்! "

[உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்]
ஆண்டாள்: "அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளைக் காணச் சென்ற அனுமனிடம், சீதை 'ராமர் சௌக்கியமா?' என்று வினவியபோது, திருவடி (அனுமன்), 'அவருக்குத் தூக்கமே இல்லை' என்று பதிலளித்தார். இதை என் தந்தை பட்டர்பிரான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ராமபிரான் அன்று கொண்ட அந்தத் தூக்கமின்மையை, இன்று இங்கே நேரில் காண்கிறேன்! கண்ணா! "

(முதலில் தன் அண்ணன் பலராமனை எழுப்பாமல், முறை தப்பித் தன்னை எழுப்பினார்கள் என்று பேசாமல் படுத்துக் கிடந்தான். நாம் எழுந்தால் அந்தப் பழியையும் நாம் சுமக்க நேரிடும் என்று கண்ணன் கண்ணை இறுக்க மூடிக்கொண்டான்.)

[செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!]
ஆண்டாள்: (இதைக் குறிப்பால் அறிந்த ஆண்டாள்) "அடியே! நாம் தவறு செய்துவிட்டோம். கண்ணனுக்கு முன்னே பலராமனை எழுப்பியிருக்க வேண்டாமா?"

தனநிஷ்டா: "ஆமாம்! ஒரு குழந்தை பிறக்கும்போது அந்த வீட்டிற்கு அதிர்ஷ்டம் வரும் என்பார்கள். பலராமன் பொற்கால் இந்த ஆயர்பாடியில் பட்ட அதிர்ஷ்டம் தான், நமக்குக் கண்ணன் கிடைத்தான்."

ஆண்டாள்: "இளைய பெருமாள் (லட்சுமணன்) ராமனுக்குப் பின் பிறந்து கைங்கரியச் செல்வத்தைப் பெற்றது போல், இவர் முன்பு பிறந்து அந்தக் கைங்கரியச் செல்வத்தைப் பெற வேண்டாமா? அன்று இளையபெருமாள் காட்டில் உறங்காமல் இருந்தது போல், இன்று நீங்கள் உறங்காமல் இருக்க வேண்டாமா? செம்பொன்னால் ஆன வீரக்கழல் அணிந்த செல்வா! பலதேவா!

தனநிஷ்டா: "படுக்கையில் உறங்குபவர்கள் உண்டு, ஆனால் உறங்குபவர்களுடன் படுக்கையும் (ஆதிசேஷன்) உறங்குமா?"

[உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்]
ஆண்டாள்: "எங்களையும் கண்ணனையும் நீங்கள் தானே சேர்த்து வைக்க வேண்டும்? அதனால் நீங்களும் உன் தம்பியும் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்!"

உந்து... தொடரும்..
-சுஜாதா தேசிகன்
1.1.2026

Comments