ஆண்டாளும் தோழிகளும் - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - (பாசுரம் 25)
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நப்பின்னையை முன்னிட்டுக்கொண்டு கண்ணனிடம் 'உன் நடை அழகைக் காண வேண்டும், நீ சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை ரசிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்கள். கண்ணனும் அப்படியே செய்ய, ஆண்டாள் கோஷ்டி அவனுக்குப் பல்லாண்டு பாடினார்கள். ஆனால், தாங்கள் வந்த காரியத்தைச் சொல்லாமல் இப்படி இழுத்தடிக்கிறார்களே என்று எண்ணிய கண்ணன், "உங்களுக்கு என்னதான் வேண்டும்?" என்று கேட்கிறான்.)
கண்ணன்: "ஆயர்ச் சிறுமியர்களே! இதுவரை என் நலத்திற்காகக் கவலைப்பட்டு எனக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்று பயந்து எனக்கு 'போற்றி' பாடினீர்கள். ஆனால், இப்போது திடீரென்று 'பறை' வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்க்கிறீர்களே? பிரதிபலன் எதிர்பாராமல் மங்களாசாசனம் செய்பவர்கள், இப்போது இப்படிப் பலன் எதிர்பார்ப்பது முரணாக இருக்கிறதே!?"
ஆண்டாள்: "கண்ணா! நாங்கள் கேட்கும் 'பறை' என்பது ஒரு சாக்கு (வியாஜம்) தான்!
கண்ணன்: "அது என்ன வியாஜமோ! அது இருக்கட்டும், உங்களுக்கு நான் உதவ நினைத்தாலும், அதற்குப் பல தடைகள் இருக்குமே?"
ஆண்டாள்: "எங்கள் கர்மம் எங்களை உன்னோடு சேர்க்கிறது; உனது கருணையோ எங்களை உன்னைப் போல மாற்றுகிறது. உன் மாதா பிதாக்களின் காலில் இருந்த விலங்கு தெறித்து விழுந்தது போல, உனது இந்தப் பிறப்பு எங்களைக் கட்டிப் போட்டிருக்கும் பிறவித் தளையையும் அறுத்துவிடுமல்லவா!"
கண்ணன்: "என் பிறப்பைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டீர்களா?"
[ஒருத்தி மகனாய்ப் பிறந்து]
ஆண்டாள்: "கண்ணா! உன்னுடைய பிறப்பை நினைக்க நினைக்க எனக்கு வியப்புத் தாங்கவில்லை. வேதம் 'ஊழி முதல்வன் ஒருவனே' என்று உன்னைத்தான் 'ஒருவன்' (ஒப்பற்றவன்) என்று வேதமே கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட உன்னையே மகனாகப் பெற்றெடுத்ததால், உன் தாய் தேவகிப் பிராட்டியும் 'ஒருத்தி' (ஒப்பற்றவள்) ஆகிவிட்டாள்! எத்தனை பேர் தவம் செய்தாலும், உன்னைச் சுமக்கும் பாக்கியம் அவளுக்கு மட்டும் தானே கிடைத்தது?"
புல்லகலிகா: "தசரதச் சக்கரவர்த்தி தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார்; ஆனால் இங்கே வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்று நால்வர் தவம் செய்து உன்னை 'ஒருவனாகவே' பெற்றார்கள். அந்தத் தவம் 'ஒருத்தியின்' வயிற்றில் அல்லவா பலித்தது!"
பத்மா: "இந்த உலகிற்கெல்லாம் நீதான் முதல் தாய், நீதான் முதல் தந்தை. ஆனால், அப்படிப்பட்ட நீ இன்று ஒரு பெண்ணுக்கு 'மகனாக' வந்து பிறந்தாயே, அந்த எளிமையை என்னவென்று சொல்வது?"
விசாகா: "கண்ணா! நீ தூணிலிருந்து நரசிம்மனாகத் தோன்றியதைப் போலவோ, யானைக்கு உதவ வானத்திலிருந்து குதித்ததைப் போலவோ அல்லாமல், ஒரு சாதாரணக் குழந்தையாகக் கருவில் தங்கி, பத்து மாதம் என்பது போய், பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பவாசம் செய்து 'பிறந்தாய்'."
ஆண்டாள்: "முனிவர்கள் உனது பிறப்பை 'ஆவிர்ப்பவித்தான்' (தோன்றினான்) என்பார்கள்—உனக்குக் கருப்பை தோஷம் ஒட்டாது என்பதைக் காட்ட. ஆனால், அந்தத் தோஷத்தை விட உன்னுடைய இந்த எளிய குணம் எங்களுக்குப் பெரியது அதனால், நாங்கள் உன்னைச் சற்றும் குறையின்றிக் 'பிறந்தான்' என்றே கொண்டாடுகிறோம். உலகிற்கெல்லாம் முந்தைத்தாய் தந்தையாய் இருக்கும் நீ, உனக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டு, 'நான் தேவகிப் புதல்வன்' என்று முழுமையாக ஒரு மகனாகவே மாறிப்போனாயே!."
சுகந்தா: "நீ பிறந்த அன்று செய்த அந்தச் செய்கை இருக்கிறதே! ராமபிரான் வளர்ந்த பிறகுதான் தந்தை சொல் காத்தார். நீயோ பிறந்த அந்த விநாடியிலேயே, 'இந்த உருவத்தை மறைத்துக்கொள்' என்று தந்தை வசுதேவர் சொன்னதும், உனது நான்கு தோள்களையும் சங்கு சக்கரங்களையும் மறைத்துக்கொண்டு ஒரு சாமானிய மானிட மகனாக மாறினாய்."
[ஓர் இரவில்]
சொர்ணலேகா: "கண்ணா! நீ பிறந்த அந்த ஓர் இரவு... . அதற்கு முன்னும் பின்னும் அத்தகைய ஒரு இரவு இந்த உலகிலேயே இருந்ததில்லை. நறுமணமான நெய் நாயின் வயிற்றில் தங்காதது போல, கஞ்சன் போன்ற கொடியவர்கள் வாழும் அந்த மதுரையில், நீ பிறந்த ஒரு இரவு கூட உன்னால் நிம்மதியாகத் தங்க முடியவில்லையே! நீ பிறந்த அந்த இடத்திலாவது உனக்கு ஒரு சொட்டு முலைப்பால் கிடைக்க முடிந்ததா?"
ஹேமலதா: "பிறந்த இரவிலேயே என்னென்ன பாடுபட்டாய்? அப்பப்பா! அந்த இரவு உனக்கு எவ்வளவு கொடுமையானது! ஆனால் எங்களுக்கு அதுவே கொண்டாட்டமான இரவு — ஏனெனில் அந்த இரவுதான் உன்னை ஆய்ப்பாடிக்குக் கடத்திக் காப்பாற்றியது."
[ஒருத்தி மகனாய் ஒளித்து வளர]
தனநிஷ்டா: "அங்கே பிறந்தவுடனே உனக்கு முலைப்பால் குடிக்கக்கூட நேரமில்லாமல் இங்கே ஓடி வந்தாய். யசோதையின் அன்பினால் அவளுக்குப் பால் சுரந்தது ஒருபுறம் இருக்கட்டும்; உன்னைக் கொல்ல வந்த பூதனை கூட உன்னைக் கண்டவுடன் தன் கொடுமையை மறந்து தாய்மை பொங்கிப் பால் சுரந்தாளே! அதுவல்லவா உன் அழகு!"
சுலோச்சனா: "அகில உலகிற்கும் ஈசனான உன்னை, ஒரு சாதாரணப் பெண்ணான யசோதை கட்டிப்போட்டு அடிக்க முடிந்தது என்றால், அவளும் 'ஒப்பற்றவள்' (ஒருத்தி) தானே!"
பூர்ணா: "அங்கே தேவகியின் மகனாகப் பிறந்த நீ, இங்கே யசோதையின் மகனாகவே மாறிப்போனாய். தேவகி உனக்கு அவதாரப் பெருமையைத் தந்தாள்; ஆனால் யசோதையோ உன்னோடு விளையாடும் பாக்கியத்தைப் பெற்றாள். பாவம் தேவகி! 'நான் ஒன்றும் பெறாத பாவி, எல்லாவற்றையும் அந்தத் யசோதை அல்லவா பெற்றாள்' என்று புலம்பினாள்."
[தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த]
சுகபாஷிணி: "சரி, பிறந்த வட மதுரையில் தான் தங்கமுடியவில்லை என்றால், புகுந்த இடத்திலாவது (ஆய்ப்பாடி) நீ நிம்மதியாக இருக்க முடிந்ததா? ஒவ்வொரு கணமும் அசுரர்களுக்குப் பயந்து ஒளித்து ஒளித்து வளர்த்தார்கள்! ஒரு பெயர் சூட்டு விழா உண்டா, காது குத்தல் உண்டா? உன்னைப் பொத்திப் பொத்தி வளர்த்ததை நினைத்தால் எங்களுக்குப் பெரும் துக்கமாக இருக்கிறது."
புல்லகலிகா: "நீ இப்படி ஒளிந்து வளர்வதைக் கூடப் பொறுக்க முடியாதவனாகக் கம்சன், நாரதர் மூலம் நீ வளர்வதை அறிந்த கணமே, உனக்குத் ’தீங்கு’ செய்யத் துடித்தான். உன்னைப் பார்த்துக் கைகூப்ப வேண்டியவன், உனக்குத் 'தீங்கு' நினைக்கிறானே! உன்னை மங்களாசாசனம் செய்த இந்த வாயால், கம்சனின் அந்தச் சூழ்ச்சிகளைச் சொல்லக்கூட எங்கள் நா கூசுகிறது; பூதனை முதலான அசுரர்களை அனுப்பியது, வில் விழா என்று உன்னை அழைத்தது போன்ற அவனது அத்தனை வஞ்சகங்களையும் சேர்த்துத் 'தீங்கு' என்று ஒரே சொல்லில் முடித்துவிட்டோம் கண்ணா!"
ஆண்டாள்: "கம்சன் மறைந்து பல காலம் ஆகிவிட்ட போதிலும், உனக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என்ற பயத்தில் இப்போதும் உன்னைப் பெற்றவளின் பெயரைச் சொல்லக் கூட அஞ்சி 'ஒருத்தி, ஒருத்தி' என்றே மறைத்துப் பேசுகிறோம். தப்பாக எடுத்துக்கொள்ளாதே கண்ணா!"
[கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!]
விசாகா: "உன்னை அழிக்க நினைத்த கம்சனின் வஞ்சக எண்ணங்களை எல்லாம் நீ வீணாக்கினாய். உன்மேல் அன்பு உடையவர்கள், உனக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என்று அஞ்சித் தங்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு தவிப்பார்களே... அந்தத் நெருப்பை அப்படியே திருப்பி அந்தக் கம்சனின் வயிற்றிலேயே கட்டிவிட்டாய்! அவன் பல பிறவிகளாகச் சேர்த்த பாவங்கள் அனைத்தும், உன்னை நேருக்கு நேர் கண்ட அந்த ஒரு கணத்திலேயே அவனுக்கு நரக வேதனையைத் தந்தன."
சுகந்தா: "ஒரே மழை மேகம் பயிருக்கு மழையையும் பாறைக்கு இடியையும் தருவது போல, நீ உன் தாய் தேவகியின் வயிற்றுக்குக் குளிர்ச்சியான மழையாக (பிள்ளையாக) இருந்தாய்; கம்சனின் வயிற்றுக்கோ நெருப்பாக நின்ற நெடுமால் அன்றோ நீ! "
தனநிஷ்டா: "'நெடு மால்' என்றால் நீ 'பெரியவன்' என்று மட்டும் பொருளல்ல கண்ணா... நீ உன் அடியவர்கள் மேல் 'அன்பில் பித்தனாக’ இருப்பவன் என்றும் பொருள். இந்த ஈடு இணையற்ற குணத்தால்தான் நீயே அனைவருக்கும் நெடுமாலே!"
ஆண்டாள்: "கண்ணா! நீ இப்படி மதுரையில் பிறந்து, சிறையில் வாடி, ஆய்ப்பாடியில் ஒளித்து வளர்ந்து இத்தனை கஷ்டங்களை ஏன் பட்டாய்? எல்லாம் உன் அடியவர்கள் மீது நீ வைத்திருக்கும் அந்த அளவு கடந்த பித்தினால் (வியாமோகத்தால்) அன்றோ! "
கண்ணன்: "சிறுமியர்களே! உங்கள் பேச்சைக் கவனித்தால், நீங்கள் வந்த காரியம் வேறு, கேட்கும் பொருள் வேறு என்பது போலத் தெரிகிறதே? சரி, நீங்கள் விரும்புவதைத் தருவதற்கு நான் நினைத்தால் தான் எதையும் தர முடியும்!"
[உன்னை அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில்]
ஆண்டாள்: "உண்மைதான் கண்ணா! நீ எதற்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன். நாங்கள் எவ்வளவுதான் உன்னிடம் 'அருத்தித்து' (வேண்டி) நின்றாலும், எங்களின் அந்த வேண்டுதல் மட்டுமே உன்னை வளைத்துவிடாது. மிகவும் உயர்ந்த இடத்திலிருக்கும் உன்னிடம், மிக எளியவர்களான நாங்கள் 'உனக்குத் திருவுள்ளம் இருந்தால் செய்தருள்' என்று உன் கருணையை வேண்டி நிற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? உன் கிருபையையே எதிர்பார்த்து நிற்கிறோம்."
கண்ணன்: "சரி, கோதை! உங்கள் பணிவு புரிகிறது. ஆனால் ஒன்று... என்னைப் பிரிந்து வருத்தத்தில் இருந்ததாகச் சொன்னீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இப்போது என்னிடம் வரும்போது இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே? இது எப்படிச் சாத்தியம்? உங்கள் முகத்தில் எந்த வருத்தமும் தெரியவில்லையே!"
ஆண்டாள்: "கண்ணா! உன்னைப் பிரிந்திருந்த போது வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால், உன்னைக் கண்ட அந்த மாத்திரத்திலேயே எங்களது பழைய துன்பங்கள் எல்லாம் மறைந்துவிட்டன. இப்போது ஒரு சிறு வருத்தமும் இன்றி, மிகுந்த மகிழ்ச்சியோடு தான் உன்னைக் காண வந்திருக்கிறோம். உன்னைப் பாடுவதே அந்த வருத்தத்திற்கு மருந்தாகிவிட்டதே!"
கண்ணன்: "பட்டர்பிரான் வளர்த்த கிளிக்குப் பேசச் சொல்லிக்கொடுக்க வேண்டுமா என்ன? சரி, நான் என்ன செய்ய வேண்டும்?"
ஆண்டாள்: "நீ எங்களுக்காகச் சிரமப்பட்டு சிறையில் பிறந்து காட்ட வேண்டாம்; காட்டில் ஒளிந்து வளர்ந்து காட்ட வேண்டாம்; அசுரர்களைக் கொன்று காட்டவும் வேண்டாம். நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே உன்னை, எங்களுக்குக் வேண்டிய பறையைத் தந்தருள வேண்டும்."
கண்ணன்: "'பறை வேண்டும், பறை வேண்டும்' என்றும் சொல்கிறீர்கள், ஆனால் உங்கள் உள்ளத்தில் இருப்பது வேறு ஏதோ இருக்கிறது என்று நினைக்கிறேன்!"
ஆண்டாள்: "கண்ணா, எங்களுக்குத் தேவையான 'பறை' தான் அதை நீ தருவதாக இருந்தால்…"
கண்ணன்: "கோதை! அந்தப் பறையைப் பெற்றால் உங்களுக்கு அதனால் என்ன லாபம்? அதை வைத்துக்கொண்டு என்ன செய்வதாக உத்தேசம்?"
[திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி]
சுகபாஷிணி: "கண்ணா! நீ 'பறை' கொடுத்தால் எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறாயா? நீ 'திருவுக்கும் திருவாகிய செல்வன்' அல்லவா? உன்னிடம் அந்த மகாலட்சுமியே ஆசைப்பட்டு விரும்பும் செல்வத்தையும் பெற வந்தோம்! வெறுமனே அந்தச் செல்வம் மட்டும் போதுமா? அதை எதிரிகளிடமிருந்து காக்க வீர்யம் வேண்டாமா? அந்த வீரியமும் உன்னிடமே இருக்கிறது! அந்தச் செல்வத்தையும் அதைக் காக்கும் உன் வீரத்தையும் பாடவே நாங்கள் வந்தோம்"
[வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் ]
ஆண்டாள்: "கண்ணா! நேற்று வரை உன் பெயரைச் சொல்லக் கூடத் தகுதியில்லாமல் இருந்த நாங்கள், இன்று உன் குணங்களைப் பாடும் பாக்கியம் பெற்றோம் என்பதே எங்களுக்குப் பெரிய பேறு. நீ பறை தருவாயானால், எங்களுக்கு வெறும் பிறவித் துன்பம் நீங்குவது மட்டும் எங்களுக்குப் பயன் அல்ல; துன்பம் நீங்கிய பிறகு உன்னைப் பாடி மகிழ்வதுதான் எங்களின் நோக்கம்!"
மாலே.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
9.1.2026
Comments
Post a Comment