ஆண்டாளும் தோழிகளும் - மாலே! மணிவண்ணா! - (பாசுரம் 26)
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் பறை வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; அதே சமயம் உன்னையே வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் விரும்புவது என்ன? எதற்காகத் தன்னை விட்டுவிட்டு வேறொரு பொருளைக் கேட்க வேண்டும் என்று கண்ணன் குழம்பிப் போயிருக்கிறான்.)
கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! என்னைப் போற்றிப் பாடிய நீங்கள், 'உன் பள்ளிக்கட்டிலிருந்து இறங்கி வரச் சொன்னீர்கள்'. உங்கள் அன்பிற்கு அடிபணிந்து நானும் நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்துவிட்டேன். இப்போது 'உன்னையே வேண்டுகிறோம்' என்று ஒருபுறம் கூறிவிட்டு, இன்னொருபுறம் 'பறை தருதியாகில்' என்று வேறு ஏதோ ஒரு சம்பந்தமே இல்லாத பொருளைக் கேட்கிறீர்களே? உங்கள் எண்ணம் தான் என்ன?"
(கண்ணனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது. அந்தப் புன்னகையையும், தாமரை போன்ற கண்களையும் கண்ட துரியோதனனே திகைத்துப் போய் அவனை "புண்டரீகாட்சன்" என்று அழைத்தான் என்றால், ஆண்டாள் என்ன செய்வாள்? அவள் உள்ளம் உருகி அவனை அழைக்கிறாள்.)
[மாலே! மணிவண்ணா!]
ஆண்டாள்: "மாலே! மணிவண்ணா!"
கண்ணன்: "கோதை! இதற்கு முன்பு வரை ‘நாராயணன்’, ‘பரமன்’, ‘உலகளந்த உத்தமன்’, ‘தேவாதி தேவன்’ என்றெல்லாம் அழைத்தீர்கள். இப்போது திடீரென்று 'மாலே! மணிவண்ணா!' என்று அழைப்பதன் காரணம் என்ன?"
ஆண்டாள்: "கண்ணா! உன்னை நேருக்கு நேர் கண்ட இந்த நிமிடம் நாங்கள் உருகிப் போய்விட்டோம்! வருவதற்கு முன் உன் மேன்மையை (பரத்துவம்) வைத்தே உன்னை அடையாளப்படுத்தினோம். ஆனால் இப்போது உன் அன்பைக் காண்கிறோம். 'மால்' என்றால் கரியவன், பெரியவன் என்று மட்டும் பொருளல்ல; அடியவர்கள் மேல் பித்தாகிப் போன 'பேரன்பு உடையவன்' (வியாமோகம் கொண்டவன்) என்ற பொருளும் இருக்கிறது அல்லவா?"
புல்லகலிகா: "இப்போது உன்னைப் பார்த்தால், அந்த அன்பே ஒரு உருவம் பெற்று எங்கள் முன்னே வந்து நிற்பது போல் அல்லவா இருக்கிறது! நாங்கள் உன் மீது வைத்திருப்பது வெறும் ‘அன்பு’; ஆனால் நீ இந்த ஆயர் சிறுமியர்களிடம் வைத்திருப்பதோ ‘பேரன்பு’ (மால்). இவ்வளவு பெரிய அன்பை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு இத்தனை காலம் எப்படிப் பள்ளிகொண்டிருந்தாய்? உன் மீது உள்ள அன்பு எங்களை நோன்பு நோற்கத் தூண்டியது; ஆனால் உன்னுடைய அன்போ, எங்களைக் கண்டதும் உன்னை எழுந்திருக்கக்கூட விடாமல் மயக்கத்தில் (மாலில்) ஆழ்த்திவிட்டாயோ!"
கண்ணன்: "நீங்கள் இப்படிப் பேசிக்கொண்டே போனீர்கள் என்றால் எனக்கு மயக்கம் வந்துவிடும். என்னைப் பற்றி இவ்வளவு புகழ்கிறீர்களே, என் அன்பு உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"
ஆண்டாள்: "உன் அன்பு உன் வடிவத்திலேயே நிழலாடுகிறதே! திருமகளை உன் மார்பில் கட்டிப்போட்டிருக்கும் உன் நீலமணி போன்ற வடிவழகு இருக்கிறதே, அது எங்களையும் பித்துப்பிடிக்க வைக்கிறது! நீலமணிக்கும் (ரத்தினம்) உனக்கும் எத்தனை ஒற்றுமைகள்!
மணியைக் கையில் வைத்திருப்பவன் காலில் எல்லாரும் விழுவது போல, உன் திருவடிகளில் அனைவரும் சரணடைகிறார்கள்.
பத்மா: விலை உயர்ந்த மணியை ஒரு முந்தானையில் முடிந்து எளிதாக எடுத்துச் செல்வது போல, நீயும் அடியவர்களுக்கு மிக எளிமையாக (சௌலப்யம்) இருக்கிறாய். சுதபாகா என்ற மகரிஷி பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற விருப்பத்தில் காடு மேடெல்லாம் தேடிக்கொண்டு வரும் போது, “அட பிரமம் வேண்டுமா?... இதோ பாருங்கள்...” என்று ஒரு கோகுலத்து இடைச்சி தன் தாவணியிலிருந்து ஒரு முடிச்சை அவிழ்க்க, அதிலிருந்து சின்னக் கருப்பான ரத்தினக்கல் போன்ற குழந்தை குதித்து ஓடியதே…! அது நீதானே! அந்தக் கதை எங்களுக்குத் தெரியும்!"
விசாகா: "ஒருமுறை இந்த நீலமணியைப் பார்த்துவிட்டால் வேறு எதன் மீதும் கண் செல்லாது; உன் அழகும் அப்படியே!"
ஆண்டாள்: "அதுமட்டுமல்ல கண்ணா! ரத்தினத்தை வைத்திருப்பவர்களுக்குத் தூக்கம் வராது. கிடைத்த பின் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்று எப்போதும் அதன் நினைவில் உறங்காமல் இருப்பார்கள். அதுபோல, இந்த 'மணிவண்ணன்' கிடைக்கும் வரை எங்களைப் போன்றவர்களுக்குத் தூக்கம் வராது; உன்னைக் கண்ட பின் இனிமேல் ஏது தூக்கம்?
சுகந்தா: கடலிலே வலை வீசும் மீனவன் கையில் ரத்தினம் கிடைக்க, அதன் அருமை தெரியாமல் அதை ஒரு ரத்தின வியாபாரியிடம் சொற்ப விலைக்கு விற்பான். வியாபாரியோ அதன் விலை அறிந்து அதை அரசனிடம் அதிக விலைக்கு விற்பான். அரசனோ அதை ஆனந்தமாக அணிந்துகொண்டு அதை முழுமையாக அனுபவிப்பான். அதுபோல, சிலர் உன்னிடம் அற்பமான பலன்களைக் கேட்டுப் பெறுவார்கள். ஆனால் நாங்களோ, உன்னையே விரும்பி, உன்னையே அணிந்து, உன்னையே அனுபவிக்கும் அந்தப் பேரானந்தத்தை வேண்டுகிறோம்."
சுகந்தா: "உன் தாய் யசோதை உன்னை எப்போதும் 'என் மணிவண்ணனே' என்று கொஞ்சுவாள். இன்று அந்த அழகைக் கண்டு நாங்கள் வந்த காரியத்தையே மறந்து உன் பேரன்பில் திளைக்கிறோம்!"
கண்ணன்: (புன்னகைத்து) "என் புகழையும் அழகையும் இவ்வளவு வியந்து பாடியது போதும்! நீங்கள் என்னைத் தேடி வந்த காரியத்தைச் சொல்லுங்கள்."
[மார்கழி நீர் ஆடுவான்]
ஆண்டாள்: "கண்ணா! 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்.. நீராடப் போதுவீர்’ என்று என் தோழிகளை எல்லாம் அழைத்துக்கொண்டு நாங்கள் 'மார்கழி நீராட்டம்' என்னும் நோன்பை மேற்கொண்டுள்ளோம். உன்னை அடைந்த பின் அது தேவையில்லை என்றாலும்…"
கண்ணன்: "தேவையில்லை என்றாலும்... என்ன?"
ஆண்டாள்: "அந்த நோன்பு இனிதே நிறைவடைய எங்களுக்குத் தேவையான உபகரணங்களை உன்னிடமிருந்து பெற்றுச் செல்லவே வந்திருக்கிறோம்."
கண்ணன்: (வேடிக்கையாக) "மார்கழி நீராட்டமா? இது என்ன புதுமையாக இருக்கிறது? இதை எல்லோரும் ஒன்று கூடி வேறு செய்யப் போகிறீர்களா?"
[மேலையார் செய்வனகள் வேண்டுவன]
ஆண்டாள்: "இவ்வளவு நாள் இந்த ஊரார் உன்னைச் சந்திக்கக் கூடாது என்று வீட்டுக்குப் பூட்டும், உன்னைப் பற்றிப் பேசக் கூடாது என்று எங்களுக்கு வாய்பூட்டும் போட்டிருந்தார்கள். நாங்கள் செய்த அதிர்ஷ்டம், ஊரில் மழை இல்லாமல் போனது. எந்த இடையர்கள் எங்களுக்குப் பூட்டு போட்டார்களோ, அவர்களே பூட்டை திறந்துவிட்டு, மழை வேண்டி இந்த நோன்பைச் செய்யும்படி எங்களுக்குச் சொன்னார்கள். ஆனால், உண்மையில் உன்னையும் எங்களையும் இந்த நோன்பு என்ற பெயரில் ஒன்று சேர்த்த அந்தப் பெரியவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டாமா?"
பத்மா: "கண்ணா! நேற்று நடந்த அந்த இடையர்கள் கூட்டத்தில் ஒரு கிழவர் இந்த நோன்புக்கு வேண்டியவற்றை ’நான் தருகிறேன்’ என்று சொல்லாமல், 'கண்ணனிடம் போய்க் கேளுங்கள் அவன் பார்த்துக்கொள்வான்' என்று சொன்னது எங்கள் அதிர்ஷ்டம் அன்றோ! உன்னை அனுபவிப்பதற்குத் தடை இல்லாது செய்த இடையர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மார்கழி நீராட்ட நோன்பை முறைப்படி செய்து முடிக்க விரும்புகிறோம்."
(கண்ணன் இவர்கள் பேச்சை இன்னும் கொஞ்ச நேரம் கேட்க வேண்டும் என்று மேலும் சில கேள்விகளைக் குறும்பு கலந்து கேட்கிறான்.)
கண்ணன்: "சரி கோதை! இந்த மாதிரி நோன்பு எல்லாம் எங்கே சொல்லியிருக்கிறது? எனக்குத் தெரிந்து அப்படி ஒரு நோன்பைப் பற்றி எந்தச் சாத்திரத்திலும் கேள்விப்படவில்லையே! எதையும் ஆதாரமில்லாமல் செய்யக்கூடாது அல்லவா? உன் தந்தை விட்டுசித்தர் சொல்லிக்கொடுத்திருப்பாரே!"
ஆண்டாள்: "கண்ணா! நீ சொல்லும் வேத ஆதாரங்களை விடவும் உயர்ந்த ஆதாரத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்!"
கண்ணன்: "அப்படியா? அது என்ன என்று நான் தெரிந்துகொள்ளலாமா?"
ஆண்டாள்: "இது ஏதோ இன்று நேற்றுத் தொடங்கியதல்ல; இது 'மேலையார் செய்வன்கள்'. அதாவது, நம் முன்னோர்கள் காலங்காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த நற்பழக்கம் (சிஷ்டாச்சாரம்). ஹோளி, காமன் பண்டிகைகளைப் போல மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் இந்த நோன்பு, ஒரு உயர்ந்த மரபாகும்! சாத்திரங்களில் எழுதி வைக்கப்பட்டிருப்பதை விட, பெரியோர்கள் காட்டிய வழிதான் எங்களுக்கு முதன்மையானது. இதை ராமரும் கடைப்பிடித்திருக்கிறார்! உனக்கா அது தெரியாது?"
கண்ணன்: "கோதை! ராமனா ? அப்படியா? எனக்குத் தெரியவில்லையே!"
ஆண்டாள்: "ராமாயணத்தில் பிராட்டி ராமரை 'சரண் புகுந்தவரைக் காக்கும் வாத்சல்யக்கடல்' (சரணாகத வத்சலர்) என்றாள் நினைவிருக்கிறதா?"
கண்ணன்: "ஆமாம்! சொன்னாள்!"
ஆண்டாள்: "கடற்கரையில் விபீஷணன் ராமர் முன் நின்ற போது, ’அவன் நல்லவனோ பொல்லாதவனோ அபயம் என்று என் காலில் விழுந்தால் நான் எதையும் பார்க்க மாட்டேன் அவனுக்கு அபயம் கொடுத்துவிடுவேன்’, ’அபயதானம் தருவதே என்னுடைய விரதம்' என்றான் அது தெரியுமல்லவா?"
கண்ணன்: "இது தெரியாமலா? நன்றாகத் தெரியுமே!"
ஆண்டாள்: "அப்போது ராமர் என்ன சொன்னார்? ’நான் என்ன புதிதாகச் செய்துவிட்டேன்? எனக்கு முன்பே ஒரு புறா இந்தப் பெருமை எல்லாம் தட்டிக்கொண்டு சென்றுவிட்டதே’ என்று புலம்பியது நினைவிருக்கிறதா? சரணடைந்த வேடனுக்காகத் தன் சதையையே கொடுத்த அந்தப் புறா செய்த செயல் வேதத்தைவிட மேலான விஷயமல்லவா? ராமருக்கு முன்னோடியாக ஒரு புறா இருந்ததைப் போல், நாங்களும் எங்கள் மேலையார்கள் செய்துக்காட்டிய செயல்களைச் செய்கிறோம்!
அது மட்டுமா ? நீயே அன்று அர்ஜுனனுக்குத் தேர்ப்பாகனாக இருந்துகொண்டு, 'பெரியோர்கள் எதைச் செய்கிறார்களோ அதையே உலகமும் பின்பற்றும்' என்று உபதேசித்தாய். அந்த உபதேசத்தை எங்களைக் கண்டவுடன் மறந்துவிட்டாயோ? சாத்திரங்களில் ஒரு விஷயம் இருந்தாலும், அதனைப் பெரியோர்கள் கைக்கொள்ளாவிட்டால் அது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்."
கண்ணன்: "அட! கீதை எல்லாம் கூடப் படித்திருக்கிறீர்கள் போலவே!"
ஆண்டாள்: "கண்ணா! நன்றாகக் கேட்டுக்கொள். உன்னை நாங்கள் 'நாராயணன்' என்றும், 'பரதெய்வம்' என்றும் கொண்டாடுவதற்குக் கூட வேதங்கள் காரணமல்ல கண்ணா. 'என் தந்தை விட்டுசித்தன் எம்பெருமான் என்று யாரைச் சொன்னாரோ, அவரே எங்கள் தெய்வம்' என்று தான் நாங்கள் உன்னைப் பின்தொடர்கிறோம். அந்தப் பெரியோர்கள் காட்டிய மார்கழி நீராட்ட நோன்பிற்குத் தேவையானவற்றைத் தந்து எங்களை ஆட்கொள்ள வேண்டுகிறேன்!"
(இவர்களின் அழகும், அதற்கு ஏற்ற அழகிய பேச்சிலும் மயங்கிச் சிலையாக நின்று கொண்டிருந்தான் கண்ணன். இதைக் கவனித்த ஆண்டாள்...)
[கேட்டியேல்]
ஆண்டாள்: "கண்ணா! உன் வடிவழகில் நாங்கள் மயங்கிக் கிடப்பது போல, எங்கள் அழகில் நீ மயங்கிப் போய் நாங்கள் வந்த காரியத்தை மறந்துவிடாதே! காது கொடுத்து நாங்கள் கேட்பதைச் சற்று கவனி."
கண்ணன்: "கோதை! நீ அதிகாரமாகச் சொல்லுகிறாயா அல்லது பணிவாக வேண்டிக்கொள்கிறாயா என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது. உன் தேன் போன்ற இன்சொற்கள் எனக்கு மயக்கத்தைத் தருகிறது. சொல்லுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்? எதையும் தருகிறேன்!"
[ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன]
ஆண்டாள்: "கண்ணா! நாங்கள் நோன்புக்குப் புறப்படும்போது எங்களுக்கு முதலில் மங்கலமான ஒலியை எழுப்பும் சங்குகள் வேண்டும்."
கண்ணன்: "சங்குகளா?"
ஆண்டாள்: "ஆம்! அவை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?"
கண்ணன்: "அதையும் நீயே சொல்லிவிடு!"
ஆண்டாள்: "'ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல வேண்டும்!"
கண்ணன்: "ஒரே சங்கு எப்படி நடுங்கவும், முரலவும் முடியும்?"
ஆண்டாள்: "ஏன் முடியாது? நீ நினைத்தால் எதுவும் முடியும்! உனக்கும் உன் அடியவர்களுக்கும் விரோதிகளாக இருப்பவர்கள் அனைவரும் நடுங்கும்படி முழங்க வேண்டும். பாரதப் போரில் நீ ஊதிய சங்கொலி துரியோதனாதியர்களின் இதயத்தைப் பிளந்தது போல, அச்சமூட்டும் அசுரர்களின் பலத்தை அது அழிக்க வேண்டும். அந்தச் சத்தம் சாதாரணமானதல்ல! உன் சங்கு முழங்கினால் சிவனின் கையில் இருக்கும் சூலம் நழுவி விழுமாம், அது போல இருக்க வேண்டும்!"
கண்ணன்: "ஓ... அப்படி நடுங்க வேண்டுமா?"
ஆண்டாள்: "அதே சமயம், அன்று ருக்மிணிப் பிராட்டி உனக்காகக் காத்திருந்தபோது, நீ வரும் செய்தியை உன் சங்கொலிதான் அவளுக்குத் தெரிவித்து அவளை வாழ வைத்தது. அந்தச் சங்கொலி கேட்டு அவள் அன்று ‘கண்ணன் வந்துவிட்டான்’ என்று ’வண்டினம் முரலும் சோலையான’ திருவரங்கத்தில் வண்டுகள் இசைப் பாடுவது போல அவளுக்கு இருந்தது அல்லவா? அதுபோல, எங்களுக்கு உன் சங்கொலி உன் புல்லாங்குழல் இசை போல இனியதாக இருக்க வேண்டும்!"
கண்ணன்: "சரி அடுத்து?"
[பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே]
ஆண்டாள்: "சங்கு இன்னும் முடியவில்லை… ஆயர்பாடியில் திரட்டிய பால் போன்ற வெண்மையான நிறம் கொண்டதாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், பிறந்த கடலையும், வளர்ந்த அசுரன் உடலையும் விட்டுவிட்டு, உன்னை ஒரு கணமும் பிரியாமல் உன் கையே கதியென்று உன் கையில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற உன் பாஞ்சசன்னியம் போலவே எங்களுக்குப் பல சங்குகள் வேண்டும்!"
[போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே]
கண்ணன்: (சிரித்துக்கொண்டே) "கோதை! கோதை! விட்டால் என் சங்கத்தையே பறித்துவிடுவாய் போலிருக்கிறதே! பாஞ்சசன்னியம் என்பது உலகில் ஒன்றுதான் இருக்கிறது. அதற்கு இணையான இன்னொன்று இல்லவே இல்லை. அப்படியிருக்க 'பாஞ்சசன்னியம் போன்ற பல சங்குகள்' என்று எப்படிக் கேட்கிறீர்கள்?"
ஆண்டாள்: (சிரித்துக்கொண்டே) "அதனால்தான் கேட்கிறோம் கண்ணா! உனக்கு மிகவும் பிடித்த அந்தப் பாஞ்சசன்னியத்தை நீ எங்களுக்குக் கொடுத்துவிட்டால், அதை ஒரு கணமும் பிரிய மனமில்லாத நீயும் அதன் பின்னாடியே எங்களிடம் ஓடி வருவாய் அல்லவா?"
கண்ணன்: "சரி, சங்குகளைப் பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். அடுத்து உங்களுக்கு என்ன வேண்டும்?"
[சாலப் பெரும் பறையே]
ஆண்டாள்: "'சாலப்பெரும் பறையே' வேண்டும் கண்ணா! நாங்கள் புறப்படுவதைச் சங்கு தெரிவிக்கும் என்றால், நாங்கள் ஊர்வலமாகச் செல்லும்போது அதிர முழங்க பறை, பெரும் பறை, சாலப் பெரும்பறை வேண்டும்."
( அந்த காலத்து S. M, XL )
கண்ணன்: "தருகிறேன். இன்னும் வேறென்ன?"
[பல்லாண்டு இசைப்பாரே]
ஆண்டாள்: "நாங்கள் கொட்டி முழக்கிக் கொண்டு வரும்போது, எங்களுக்குத் திருஷ்டி படாமல் இருக்கவும், உனக்கு மங்கலம் உண்டாகவும் பல்லாண்டு இசைப்பார் வேண்டும்!"
கண்ணன்: "அப்புறம்?"
[கோல விளக்கே]
ஆண்டாள்: "அழகிய 'கோல விளக்கு' வேண்டும். இருளிலும் நாங்கள் பாடுபவர்கள் முகத்தைப் பார்க்கவும், அவர்கள் எங்கள் முகத்தைப் பார்க்கவும் உதவும் மங்கல தீபம் அது."
கண்ணன்: "பிறகு?"
[கொடியே, விதானமே]
ஆண்டாள்: "தூரத்தில் இருப்பவர்களும் நாங்கள் வருவதை அறிய அழகிய 'கொடி' வேண்டும். அது வெற்றிக்கொடியாக முன்னே செல்ல வேண்டும்!"
கண்ணன்: "வேறு எதாவது இருக்கிறதா?"
ஆண்டாள்: "மார்கழி மாதமல்லவா? அதிகாலையில் நாங்கள் நீராடப் புறப்படும்போது பனி எங்கள் தலையில் விழாதபடி ஒரு 'விதானம்' (மேற்கட்டி/பந்தல்) வேண்டும். இவையெல்லாம் இருந்தால் தான் எங்கள் நோன்பு முழுமையடையும்."
(கண்ணன் சற்று யோசனைக்குப் பின் சிறுமியர் கேட்ட ஒவ்வொன்றுக்கும் தன் வசமிருந்த மிகச்சிறந்த உயர்பொருள்களை வழங்கினான்.)
கண்ணன்: "கோதை! பாஞ்சசன்னியத்தைப் போன்றது வேறொன்று இல்லை என்பதால், என் கையிலிருந்த பாஞ்சசன்னியத்தையே கொடுக்கிறேன்."
(ஆண்டாள் அதை வாங்கிக்கொள்கிறாள்.)
கண்ணன்: "நான் குடக்கூத்தாடிய போது என் இடையில் கட்டியிருந்த பறையைக் கொடுக்கிறேன்."
(ஆண்டாளின் தோழி புல்லகலிகா அதை வாங்கிக்கொள்கிறாள்.)
கண்ணன்: "எனக்குத் தெரிந்து பல்லாண்டு பாடுவதில் வல்லவர் பெரியாழ்வார் தான். அவரையே உங்களுக்குத் துணையாக வரச் சொல்லுகிறேன். 'குலவிளக்கு' என்று நீங்கள் போற்றிய நப்பின்னைப் பிராட்டியையே ஒளி விளக்காக கொடுக்கிறேன். என் வாகனமான கருடனையே உங்களுக்குக் கொடியாகக் கொடுக்கிறேன்."
கண்ணன்: "ஆதிசேஷன் என்னை விட்டுப் பிரிய மாட்டான்.. என்ன செய்யலாம்? (சற்று யோசித்த கண்ணன் தான் உடுத்திய மணமுள்ள பீதாம்பரத்தைக் கழற்றி) என் பீதாம்பரத்தை மேற்போர்வையாக, பனி தடுக்க வைத்துக்கொள்ளுங்கள்!"
(ஆண்டாள் அதைப் பெற்றுக்கொண்டாள்.)
ஆண்டாள்: "கண்ணா, இவை ஒவ்வொன்று மட்டும் போதாது, பல வேண்டும்."
[ஆலின் இலையாய்! அருள் ஏலோர் எம்பாவாய்]
கண்ணன்: (அதிர்ச்சியுடன்) "என்ன? இவ்வளவு பொருட்களை நான் எங்கே தேடுவேன்? நீங்கள் கேட்பவை எல்லாம் உலகில் அரிதான பொருட்கள்."
ஆண்டாள்: "உனக்கா அரியது என்று ஒன்று உண்டு? பிரளய காலத்தில் ஒரு சிறிய குழந்தையாக மாறி, ஏழு உலகங்களையும் உன் சிறிய வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டு, ஓர் ஆலந்தளிரில் துயின்றவன் நீ! முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டும் வல்லமை (அகடிதகடனா சாமர்த்தியம்) கொண்ட உனக்கு, நாங்கள் கேட்கும் இந்தப் பொருட்கள் எம்மாத்திரம்? இல்லாத ஒன்றைக் கூட எங்களுக்காகப் புதிதாகப் படைக்க உன்னால் முடியுமே! ஆலினிலையாய்! எனவே எங்களுக்கு நீயே திருவுள்ளம் பற்றி அருள வேண்டும்!"
கூடாரை தொடரும்..
-சுஜாதா தேசிகன்
10.1.2026
Comments
Post a Comment