Skip to main content

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026. 



கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நான் சென்னை பு.காட்சிக்குச் செல்கிறேன். தொடர்ச்சியாகப் பல விஷயங்கள் மாறிவிட்டன. மேலட்டை மாறி, அரங்குகள் கூடி, எழுத்தாளர்கள் அதிகரித்து.. வாசகர்கள்? 

“எப்படிப்பா இவ்வளவு பெரிய புக் படிக்க உனக்கு டைம் இருக்கு?” 


கடந்த ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்த போதே கூட்டம் வேகமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. நானும் வேகமாக உள்ளே சென்றேன். 


நுழைவாயிலில், ’வெரேலி ஆர்ட்’ படங்களுடன் ஜூட் பைகள் கீழே பரப்பி கூவிக் கூவி விற்க ஆரம்பிக்க, அருகில் ‘சார் இலவசப் பைபிள்’ வாங்கிக்கோங்க என்று கூடாரத்தில் கூவிக்கொண்டு இருந்தார்கள். அனுமதிச் சீட்டு இல்லை. உள்ளே நுழைந்த போது, ’சார் அந்த கேட் வழியா போங்க’ என்றார்கள்.


முதல் வரிசையில் நுழைந்த ஏழாவது நிமிடம் ஒரு 6-7வது படிக்கும் சிறுவன் தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து… கண்ணீருடன் கண்ணில் பட்டான். அப்பாவிடம் புத்தகம் வாங்கித்தர அடம் பிடிக்கிறான் என்று நினைத்து அவன் அருகில் சென்றேன். “அப்பா இப்பவே வீட்டுக்கு போகலாம். போர் அடிக்குது” “இப்பத்தானேடா உள்ளே நுழைந்திருக்கிறோம்…” என்று மன்றாடிக்கொண்டு இருந்தர். அம்மா அப்பா, ஐ-பேட் உடன் வளர்ந்த Gen Z (ஜென் Z) தலைமுறைக்கு படிக்க ஆர்வமில்லை, அப்படியே படித்தாலும் ஆங்கிலம் தான் படிக்கிறார்கள். 

இதை வேடிக்கைப் பார்க்கும் போது பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல்,  ஒரு மஞ்சள் திருமண் மாமா என்னருகில் வந்து,  ‘சார் சைக்காலஜி ஆப் மணி’ என்று புத்தகம் எங்கே கிடைக்கும் ? என்றார்.


’இப்ப தான் உள்ளே நுழைந்திருக்கிறேன்’ என்ற பதிலைக் கூட வாங்கிக்கொள்ளாமல், எதிரே இருக்கும் கடையில் அந்த புத்தகத்தைக் கண்டு என்னை கண்டுகொள்ளாமல் போனார். மாமா வாய் முகுர்த்தம், அதற்கு பின் எல்லா கடைகளிலும் விதவிதமாக இந்தப் புத்தகமும், கூடவே பச்சையில் "தி ஆர்ட் ஆப் ஸ்பெண்டிங் மணி" (The Art of Spending Money) புத்தகமும் ரயில் ஜன்னலில் வழியே மின்சார கம்பங்கள் போல கூடவே வந்துகொண்டு இருந்தன.


ஆங்காங்கே தூத்தல் போல, இந்த முறை ஏ.ஐ புத்தகங்கள் கண்ணில் பட்டன. அடுத்த முறை கனமழையாக பெய்யும் வாய்ப்புத் தெரிகிறது. நல்ல ஏஐ புத்தகம் எது என்று ஏஐயிடம் கேட்க வேண்டும்.


சில வருடங்களுக்கும் முன்னால் பொன்னியின் செல்வன் கட்டுக் கட்டாக வைத்திருப்பார்கள். அவை குறைந்துவிட்டன. மணிரத்தினம் படம் ஒரு காரணம் என்று பேசிக்கொண்டார்கள். இதை ஈடுகட்டும் வகையில் எங்கும் ஐயன் திருவள்ளுவரின் திருக்குறள் விதவிதமாக கண்ணில் பட்டது. திருக்குறளை யாரும் படம் எடுக்க முடியாது, அதனால் திருவள்ளுவர் தப்பித்தார். பு.கயில் இருக்கும் திருக்குறள் புத்தகங்களில் 10% விற்றால் கூட, 2026ல் தமிழ்நாடு மொத்தமாக திருந்திவிடும் அபாயம் இருக்கிறது.


புண்ணியாவஜனம் புனித நீர் தெளிப்பது போல வாயில் நுழையாத புல்காகோவ், தஸ்தாயெவ்ஸ்கி போன்ற ரஷ்ய எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் தெளிக்கப்பட்டிருந்தன. ‘காதல் கோட்டை’ வந்த போது, புற்றீசல் போல ‘காதல்’ பெயர்கொண்ட படங்கள் புறப்பட்டன. அது போல என்று நினைக்கிறேன்.


பதிப்பகங்களின் பெயர்களைப் படித்துக்கொண்டு போகும் போது ‘தீராவிட ஸ்டாக்’ என்று ஒரு பதிப்பகத்தைப் பார்த்த போது எச்.ராஜா நினைவுக்கு வந்தார். நீலம் பதிப்பகம் ஸ்டால் முழுவதும் கருப்பாக இருந்தது. ‘காலச்சுவடு’வில் ஆங்கிலப் புத்தக ஸ்டால் போல் கூட்டமாக இருந்தது. தமிழ்நாடு பாடநூல் ஸ்டாலில் கூட்டம் இருந்தது. விகடனில் கூட்டம் இருந்த அளவுக்கு குமுதத்தில் இல்லை.


மக்கள் நடுவில் இருபுறமும் வேடிக்கைப் பார்த்துச் செல்ல, ‘சார் உள்ளே வந்து பார்த்துட்டுப் போங்க’ என்று பதிப்பாளர்கள் அழைத்துக்கொண்டு இருந்தார்கள். முன்பு எல்லாம் பதிப்பகங்கள் 1000 புத்தகங்கள் பிரசுரிப்பார்கள். அவை முழுவதும் விற்றுத் தீர சில வருடங்கள் ஆகலாம். இது புத்தகமாக வர லாயக்கா? மக்கள் விரும்பி வாங்குவார்களா? விற்குமா? என்று பல கேள்விகளை யோசித்து முதலீடு செய்வார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. பிரிண்ட் ஆன் டிமாண்ட் முறையில் வீட்டிலிருந்தபடியே நீங்கள் பி.டி.ஃப் அனுப்பினால் மறுநாள் கூரியரில் (மினிமம் 12) புத்தகம் வீட்டுக்கு வந்துவிடும். ‘வீட்டில் இருந்தபடியே நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ போல ’நீங்களும் எழுத்தாளர் ஆகலாம்’.


ஒரு புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் போடுவதை விட, 100 புத்தகங்களை 10 பிரதிகள் போடுகிறார்கள். அதனால் கடல் நீரைப் போல அலை அலையாகப் புத்தகங்கள் எங்கும் நிறைந்து இருக்கின்றன. குடி நீர் போல எந்தப் புத்தகம் உங்களுக்கு தேவை என்று இந்தக் குவியலில் தேட வேண்டும். சில பதிப்பகங்களைத் தவிர்த்து, எல்லா புத்தகங்களும் எல்லா ஸ்டால்களிலும் ஒரு மினி புத்தக அமேசான் போல காட்சி அளிக்கிறது. அதனால் நமக்கு ஒரு அயர்ச்சி ஏற்படுகிறது.


டயட், சமையல் குறிப்பு, ஜோதிடம், மன அமைதிக்கு யோகா போன்று புத்தகங்களுக்கு ட்ஃப் கொடுக்கும் விதமாக திராவிடம் சார்ந்த புத்தகங்கள் தடுக்கி விழுந்தால் இருக்கின்றன. கிழக்கு பதிப்பகத்தில் ஒரு சைடு முழுக்க ‘சுஜாதா’ புத்தகங்களை பார்க்க முடிந்தது.


சமீபத்தில் நண்பர் ம.பெ.சீனிவாசனின் ’பு.ரா.புருஷோத்தமனாரின் வைணவத் தொண்டு’ தேடிக்கொண்டு கடைசியில் இருந்த சாகித்திய அகாதெமி ஸ்டாலை அடைந்த போது பல ஸ்டால்கள் சுற்றியதா இல்லை ஐம்பது வயது தாண்டிவிட்டதா என்று தெரியவில்லை, சட்டென்று அந்தப் புத்தகத்தின் பெயர் மறந்துவிட்டது. அவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை. பிறகு 10 நிமிடம் கழித்து ஒருவழியாகக் கண்டுபிடித்தேன். நான் வாங்கிய ஒரே புத்தகம் இது தான். 


வெளியே வந்த போது ‘நம்ம வீட்டு கல்யாணம்’ கேட்டரிங் கூடாரத்துக்கு முன் நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டு இருந்தார்கள். "செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"


-சுஜாதா தேசிகன்

20.1.2026

பிகு: புத்தகக் கண்காட்சியில் யாரும் தனியாக நின்று செஃல்பி எடுப்பதில்லை. ஒருவர் இன்னொருவருக்கு புத்தகம் கொடுக்க அது தான் புத்தகக் கண்காட்சியின் செஃல்பி!

Comments