ஆண்டாளும் தோழிகளும் - மாரி மலை முழைஞ்சில் - பாசுரம் 23
(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நப்பின்னையை முன்னிட்டுக்கொண்டு கண்ணனிடம் சரணடைந்தார்கள். 'நாங்கள் உனக்கே கைங்கரியம் செய்ய வந்தோம். உன் கடைக்கண் பார்வையே எங்கள் துக்கத்தைப் போக்கும்' என்றார்கள். கண்ணன் இன்னும் படுத்துக்கொண்டே இருக்கிறான். நப்பின்னைப் பிராட்டி கண்ணன் அருகில் செல்ல, கண்ணன் அவள் மார்பில் சாய்ந்து கொள்ள, நப்பின்னை கண்ணனிடம் ஆண்டாளும் தோழிகளும் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறாள்.)
(கண்ணன் நப்பின்னையின் பேச்சைக் கேட்டு மனம் நெகிழ்ந்து பேசுகிறான்)
கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! நீங்கள் எல்லோரும் பனியிலும், குளிரிலும் வீடு வீடாகச் சென்று எல்லோரையும் எழுப்பி, வாசல் காப்பவன், நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று அனைவரையும் முன்னிட்டு என்னிடம் வந்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் நப்பின்னையின் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே!
உங்களை எல்லாம் இப்படிப் படாத பாடு படுத்திவிட்டேன் என்று நினைக்கும் போது எனக்கே வருத்தமாக இருக்கிறது. உண்மையில் நான் அல்லவா உங்கள் இருப்பிடம் தேடி வந்திருக்க வேண்டும்?
ராமாவதாரத்தில் விபீஷணன் என்னைத் தேடி வரும்படி செய்தேன். அதுவே எனக்கு இன்றும் மிகுந்த வருத்தமாக இருக்கிறது. ஒரு ஆண் விஷயத்தில் அப்படி இருக்க, இப்போது ஐந்து லட்சம் பெண்களையும் இப்படி என் இடம் தேடி வர வைத்துவிட்டேனே! இது அதைவிட எனக்குப் பெரும் குறையாக இருக்கிறதே!"
ஆண்டாள்: "கண்ணா! பரவாயில்லை. இப்போதாவது புரிந்ததே அதுவே போதும். குழந்தைகள் எல்லாம் ரகசியம் சொல்லுகிறேன் என்று காதுகிட்டே வந்து ‘கூர் கூர்’ என்று சத்தம் போட்டுக் குன்னாங்குருச்சி விளையாடுவார்களே, அது போல அல்லவா இருக்கிறது நீ பேசுவது!"
கண்ணன்: "கோதை! சரி, பரிகாசமாய் பேசுகிறாய். நான் என்னதான் செய்ய வேண்டும்?"
ஆண்டாள்: "கண்ணா! இங்கே ஒரு சிம்மாசனம் இருக்கிறது. அதற்கு நாங்கள் பூ, மாவிலை, தோரணம் எல்லாம் கட்டி அழகுபடுத்தி வைத்திருக்கிறோம். அதற்கு முன் ஒரு கோலம் போட்டிருக்கிறோம். நீ எழுந்து வந்து முதலில் இந்த கோலத்தில் நிற்க வேண்டும். பிறகு, அந்தச் சிம்மாசனத்தில் நப்பின்னையுடன் அமர்ந்து எங்கள் குறைகளைக் கேட்க வேண்டும்."
(கண்ணன் ‘சரி செய்கிறேன்’ என்று சொல்லியபடியே, மீண்டும் நப்பின்னை மார்பின் மேல் சாய்ந்துகொண்டு சோம்பலாகப் படுத்திருக்கிறான். அவன் இன்னும் முழுமையாக எழவில்லை.)
[மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்]
ஆண்டாள்: "கண்ணா! மழைக்காலத்தில் வெளியெங்கும் வெள்ளக்காடாக இருப்பதால், அனைத்து உயிரினங்களும் தங்கள் இருப்பிடத்திலேயே தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் தங்கியிருக்கும் காலம் இது. நாட்டு மன்னர்கள் கூட அரண்மனையை விட்டுப் புறப்பட மாட்டார்கள். அதனால்தான் மிருகங்களுக்கு அரசனான சிங்கமும் தன் மலைக்குகையை விட்டு வெளிவராமல், அங்கேயே தன் பெண்சிங்கத்துடன் தங்கியிருக்கிறது."
விசாகா: "சரியாகச் சொன்னாய் கோதை! சுக்ரீவன் தன் கடமையை மறந்து உள்ளே உறங்கிக் கிடந்ததும், ராமபிரான் பிராட்டியைப் பிரிந்து மால்யவான் மலையில் தங்கியிருந்ததும் இதே போன்றதொரு மழைக் காலத்தில்தான்."
ஆண்டாள்: "கண்ணா! இது பிரிந்தவர்கள் கூட வேண்டிய காலம்; கூடியிருப்பவர்கள் இன்பம் அனுபவிக்க வேண்டிய காலம். இத்தகைய சூழலில், நாங்கள் மட்டும் உன் வாசலில் பனியில் நனைந்து வாடுவதோ?
இடைப்பெண்கள் நாங்கள் எல்லாவற்றையும் துறந்து கலங்கும் இந்தக் காலத்தில், மலைக்குகையில் பாறையோடு பாறையாகச் சிங்கம் பொருந்தி இருப்பது போல, யசோதையின் இளஞ்சிங்கமான நீ நப்பின்னையோடு ஒன்றியிருக்கிறாய்! ஒரு சிங்கம் உறங்கும் போது அதைக் கண்டாலே மற்றக் கீழான மிருகங்கள் பயத்தால் நடுங்கி மண்ணைக் கவ்வும். அதுபோலவே, நீ அறிதுயில் கொள்ளும் அழகைக் கண்டாலே உனது எதிரிகள் நிலைகுலைந்து போகிறார்கள்."
கண்ணன்: "கோதை! சரி நான் என்ன செய்ய வேண்டும்?"
[சீரிய சிங்கம் அறிவுற்று]
ஆண்டாள்: "அறிவற்ற ஒரு பூ, காலம் உணர்ந்து மலர்வது போலே, தன் அடியார்களுக்காக நீ உணரும் போதே நீ அறிவு பெற்றவனாகிறாய். நீ அப்படித் துயில் எழும் போது அந்த அழகு பன்மடங்காகப் பெருகி நிற்கும். அந்த ’அரி பொங்கிக் காட்டும் அழகை’ நாங்கள் காண வேண்டும் "
கண்ணன்: "சரி எழுந்துகொள்கிறேன்."
[தீ விழித்து]
ஆண்டாள்: "கண்ணா பொறு! நீ எப்படி எழுந்துகொள்ள வேண்டும் என்று விவரிக்கிறேன். சிங்கம் தூங்கிக்கொண்டு இருந்தாலும், ‘நம் எல்லைக்குள் புகுந்தது யார்?’ என்று பார்க்கும் பார்வையில், தன் அருகிலிருக்கும் பெண் சிங்கமோ அல்லது குட்டிகளோ கூட அஞ்சி நடுங்கும்படி கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழிக்குமே, அதுபோல விழிக்க வேண்டும்!"
கண்ணன்: "கோதை! இப்படிச் சீற்றம் கொண்டு நரசிம்ம அவதாரம் போலப் பிராட்டியும் தேவர்களுமே பயப்படும்படி, பயங்கரமாக விழிப்பதை நீ ஏன் காண ஆசைப்படுகிறாய்?"
ஆண்டாள்: "கண்ணா! இந்தக் கோபம் அடியவர்கள் மேலானது அல்லவே! அடியவர்களைத் துன்புறுத்தும் விரோதிகள் மேலானது அன்றோ? ஒரு காதலனின் கோபம் கூடக் காதலிக்கு இன்பம் தருவது போல! இரணியனை வதம் செய்ய நரசிம்மனாக வந்தபோது உன்னை எல்லோரும் ‘அழகியவன்’ என்று கொண்டாடினார்களே! எனவே உன் சீற்றமும் எங்களுக்கு இன்பமாகவே இருக்கும்!"
கண்ணன்: "வேறு என்ன செய்ய வேண்டும்?"
[வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி]
சுகந்தா: "சிங்கத்திற்கே உரிய நறுமணம் வீசும் அதன் பிடரி மயிர்கள் சிலிர்த்து எழும்படியாக நீ எழ வேண்டும். எல்லா வாசனைகளையும் தன்னுள் கொண்டவன் ’கேசவன்’ என்ற பெயருக்கு ஏற்றார் போல் அந்தப் பிடரி மயிர்களைச் சிலிர்த்துக் கொண்டு எழ வேண்டும்!"
[மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு]
புல்லகலிகா: "உறங்கிக் கிடந்ததால் ஏற்பட்ட உடல் அயற்சி நீங்க, ஒவ்வொரு அவயவத்தையும் சிங்கம் உதறிக்கொள்வது போல, நீயும் உன் திருமேனியை உதறிக்கொண்டு, சோம்பல் முறித்து, நாலாபுறமும் அசைந்து வீறுகொண்டு எழ வேண்டும்."
பத்மா: "சிங்கம் முழு உடலையும் ஒன்றாக நிமிர்த்தி, ஒரு பெரிய கர்ஜனை செய்வது போல, உன் மேக முழக்கம் போன்ற குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே துஷ்டப் பிராணிகள் அழிந்து போக வேண்டும்; அதே சமயம் அந்த ஓசை எங்களைப் போன்ற பெண்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தர வேண்டும். 'பெண்களே! வந்துவிட்டீர்களா?' என்று நீ கேட்கும் அந்த முழக்கத்தைத்தான் எங்கள் காதுகள் ஆவலோடு எதிர்பார்க்கின்றன."
விசாகா: "ஒரு பெரிய குகையிலிருந்து அஞ்சா நெஞ்சமும் கம்பீரமும் கொண்ட சிங்கம் எப்படி வெளியே வருமோ, அதேபோல நீயும் உன் பள்ளியறையிலிருந்து புறப்பட்டு எங்களைக் காண வரவேண்டும் (புறப்பட்டுப் போதருமா போலே). உனது அந்த விழிப்பும் எங்கள் கண்களுக்கு விருந்து; உனது அந்த முழக்கமும் எங்கள் காதுக்கு விருந்து! இவற்றை எங்களுக்கு அருள வேண்டும்!"
[போதருமா போலே ]
கண்ணன்: "ஆயர் சிறுமியர்களே! நான் சிங்கம் போலப் புறப்பட்டு வருகிறேன். ஆனால் நான் நரசிம்மமாய்ப் புறப்படவா? ராகவ சிம்மமாய்ப் புறப்படவா? அல்லது யாதவ சிம்மமாய்ப் புறப்பட வேண்டுமா?"
ஆண்டாள்: "எங்களை ஹிரணியவாதிகள் என்று நினைத்தால் நரசிம்மமாக வா! எங்களை ராவணன் என்று நினைத்தால் ராகவ சிம்மமாய் வா! எங்களை கம்சன், சிசுபாலன் போன்றவர்கள் என்று நினைத்தால் யாதவ சிம்மமாய் வா! ஆனால் நாங்கள் கோபிகைகள்! எங்களைக் கோபிகைகளாக நினைத்து வா!"
கண்ணன்: "கோதை! எது எப்படி என்று நீயே சொல்."
[நீ பூவைப்பூ வண்ணா!]
ஆண்டாள்: "நீ பூவைப்பூ வண்ணா! மென்மையோடு வர வேண்டும்!
உனது வீரம், கம்பீரம், கர்ஜனை - இவற்றிற்குச் சிங்கத்தை ஒரு உவமையாகச் சொன்னோம்! ஆனால், உனது வடிவழகு, உன்னிடமுள்ள அந்தத் தெய்வீக நீல நிறம், உனது திருமேனியின் மென்மை (சௌகுமார்யம்), உன்னைக் கண்டாலே ஏற்படும் அந்தக் குளிர்ச்சி... இவை சிங்கத்திடம் உண்டோ?
உனது அழகிற்கு ஓரளவாவது ஈடாக எதாவது சொல்ல வேண்டுமே என்றுதான் 'பூவைப் பூவை' (காயாம்பூ) உவமையாகச் சொன்னோம் (நீ பூவைப்பூ வண்ணா). உண்மையில் ஆராய்ந்தால் அந்தச் சிங்கமும் உனக்கு நிகரல்ல, இந்தப் பூவும் உனக்கு இணையல்ல! நீ சிங்கத்தின் கம்பீரத்தோடு, பூவைப் பூவின் மென்மையோடு வர வேண்டும்!"
கண்ணன்: "கோதை! என் அழகை அத்தனை ஆழமாக ரசிப்பவர்கள் என்றால், தயங்காமல் உள்ளே வாருங்கள்."
[உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி]
ஆண்டாள்: "கண்ணா! நாங்கள் உன் அழகை ஓரிடத்தில் அமர்ந்து மட்டும் பார்க்க வரவில்லை; நீ உன் பள்ளிக்கட்டிலிருந்து, அந்தச் சிங்கத்தைப் போலக் கம்பீரமாக நடந்து வரும் நடையழகைக் காணவே வந்திருக்கிறோம்
ராகவன் அந்தப்புரத்திலிருந்து புறப்பட்டு வெளியே வரும் போது லக்ஷ்மணன் கைகூப்பிக்கொண்டு நின்றதைப் போல, நாங்களும்... நீ வெளியே புறப்பட்டு..அந்த நால் வகை நடையையும் காட்டிக்கொண்டு வருவதைக் கைகூப்பிக்கொண்டு காண வேண்டும்."
சொர்ணலேகா: "ஒரு இளங்காளைக்கே உரிய செருக்குடன், எதற்கும் அஞ்சாத தன்னம்பிக்கையுடன் நீ நடந்து வர வேண்டும்."
ஹேமலதா: "ஒரு மதயானையின் நடையில் இருக்கும் அந்த மெதுவான, ஆனால் உறுதியான மதிப்பும் உன் நடையில் தெரிய வேண்டும்."
தனநிஷ்டா: "புலியினுடைய பாய்ச்சல் போன்ற அந்தச் சுறுசுறுப்பும், வேகமும், கூர்மையான பார்வையும் உன் அசைவுகளில் இருக்க வேண்டும்."
சுலோச்சனா: "காட்டின் அரசனான சிங்கத்தைப் போல, மற்ற அனைவரையும் தன் கம்பீரத்தால் அடக்கி ஆளும் பெருமை தோற்ற நீ நடந்து வர வேண்டும்.."
ஆண்டாள்: "கண்ணா! உனக்காகக் கோலம் போட்டிருக்கிறோம். அதுவரையில் நீ நாங்கள் சொன்னது போல் நடந்து வர வேண்டும்."
கண்ணன்: "ஆயர் சிறுமியர்களே! இதோ நடந்துவருகிறேன்." (என்று கம்பீரமாக நடந்து வருகிறான் கண்ணன்).
[கோப்பு உடைய சீரிய சிங்காசனத்து இருந்து ]
ஆண்டாள்: "சிங்கம் போல நடந்து வந்த உனக்கு மட்டுமே ஏற்றார் போல் சீரிய சிங்காசனத்தை அழகு படுத்தி வைத்திருக்கிறோம். அதில் நீ அமர வேண்டும்"
கண்ணன்: "எதற்கு அமர வேண்டும்? இங்கிருந்தே உங்கள் குறைகளை கேட்கிறேனே?"
ஆண்டாள்: "நீ நடந்து வந்த அழகைக் கண்டோம், இனி நீ அரியாசனத்தில் வீற்றிருக்கும் அழகையும் காண வேண்டுமே!"
கண்ணன்: "சரி, அமர்ந்து என்ன செய்ய வேண்டும்?"
ஆண்டாள்: "படுக்கையில் நீ படுத்துக்கொண்டு பேசினால் அது தனிப்பட்ட பேச்சு; நடந்து கொண்டே சொன்னால் அது அவசரப் பேச்சு; ஆனால் அரியாசனத்தில் அமர்ந்து சொன்னால் அது உலகிற்கே உரிய 'அரசாணை'. எனவே, எங்கள் குறைகளைத் தீர்க்க ஒரு பேரரசனாக அரியாசனத்தில் அமர்ந்து எங்களை அங்கீகரிக்க வேண்டும்!"
தனநிஷ்டா: "கண்ணா! எங்களிடம் விளையாட்டாகப் பொய் சொல்லும் 'பொய் நம்பி'யாக நீ இருந்தாலும், இந்த அரியாசனத்தில் அமர்ந்துவிட்டால் நீ ஒருபோதும் பொய் சொல்ல மாட்டாய்! விபீஷணனுக்கு அபயம் அளிக்கும் போது ராகவன் கடற்கரையில் சொன்ன வார்த்தையையும், நீ அர்ஜுனனுக்குத் தேர்த்தட்டில் ‘கவலைப்படாதே’ (மா சுச:) என்று சொன்ன வார்த்தைக்கும் ஒரு தனி வலிமை இருப்பது போல, இந்தச் சிங்காசனத்தில் அமர்ந்து நீ எங்களுக்குத் தரும் வாக்குறுதிக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கும்!"
(தண்டகாரணியத்தில் முனிவர்கள் படும் துயரத்தைக் கண்ட ராமபிரான், அவர்கள் கேட்பதற்கு முன்பே 'நான் ஏன் வந்து உதவி செய்யவில்லை' என்று தன்னைத்தானே வெறுத்துக்கொண்டதை நினைத்துக்கொண்ட கண்ணன், அதுபோலவே, இங்கே இந்தப் பெண்கள் படும் மனத்துயரத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவர்களை அன்போடு அழைத்து...)
கண்ணன்: "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
[யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்]
ஆண்டாள்: "கண்ணா! உன் அருகில் நப்பின்னை வீற்றிருக்க, நீ உனது அரியாசனத்தில் அமர்ந்து, சபையோர் சூழ தேவதி தேவனாக நாங்கள் வந்த காரியம் என்ன என்பதை விசாரித்து அருள வேண்டும்!."
அன்று இவ் உலகம்.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
7.1.2026
Comments
Post a Comment