Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - கறவைகள் பின் சென்று - (பாசுரம் 28)

ஆண்டாளும் தோழிகளும் - கறவைகள் பின் சென்று - (பாசுரம் 28)



(சூழல்: ஊராருக்கு 'நோன்பு' என்ற பெயரில் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்கள் ஆண்டாளும் தோழிகளும். ஆனால், உண்மையில் தங்களுக்கு 'பறை' என்பது ஒரு கருவி மட்டுமே; எங்களின் உண்மையான 'பறை' என்ற இலக்கு வேறு, அது உன் திருவடிகளில் செய்யும் நித்தியக் கைங்கரியமே (தொண்டு) என்பதை இப்போது அவர்கள் கண்ணனிடம் வெளிப்படுத்துகிறார்கள்.)

ஆண்டாள்: "கோவிந்தா! நாங்கள் இதுவரை ஊராருக்காக 'நோன்பு' என்ற பெயரில் பறை மற்றும் வேறு சில உபகரணங்களைக் கேட்டு உன்னிடம் வந்தோம். ஆனால் எங்களுக்கு வேண்டிய உண்மையான, உயர்ந்த பறை வேறு!"

(கண்ணன், இவர்கள் கேட்கப்போகும் அந்தப் பறை என்ன என்பதை ஊகித்து, அவர்களைச் சோதிப்பதற்காக மேற்கொண்டு பேசுகிறான்.)

கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! ஊராருக்காகப் பறை வாங்கினீர்கள், உங்களுக்காகப் பல ஆபரணங்களையும் கேட்டீர்கள். இப்போது நீங்கள் விரும்பும் அந்த 'உயர்ந்த பறையை' அடைய உங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? அதற்காக ஏதாவது சாதனைகளைச் செய்தீர்களா? எதுவும் செய்யாமல் பலனை மட்டும் எதிர்பார்ப்பது முறையா? எதை நம்பி என்னிடம் வந்தீர்கள்?"

ஆண்டாள்: "கோவிந்தா! நீ என்ன கேட்கிறாய் என்றே எங்களுக்குப் புரியவில்லை!"

கண்ணன்: "கோதை! என்னிடம் பக்தி பிறக்க வேண்டுமானால் பல்லாயிரம் பிறவிகளில் தவம், ஞானம், கர்ம யோகம் எல்லாம் செய்திருக்க வேண்டுமே! நீங்கள் அப்படி ஏதாவது செய்தீர்களா? இப்படி ஏதாவது தகுதி உங்களிடம் உண்டா?"

ஆண்டாள்: "கோவிந்தா! நீ கேட்பது வேடிக்கையாக இருக்கிறது! இதையெல்லாம் நாங்கள் எப்படித் தெரிந்துகொள்வோம்?"

கண்ணன்: "குருகுல வாசம் செய்து, சாத்திரங்கள் நன்றாகப் பயின்றவர்களிடம், அதன் உட்பொருளை கற்று, உணர்ந்து செய்ய வேண்டியவை!"

ஆண்டாள்: "கோவிந்தா! எங்களுடைய அறிவையும் பழக்க வழக்கங்களையும் பார்த்தாலே உனக்கு இந்நேரம் தெரிந்திருக்க வேண்டுமே! இருந்தாலும் சொல்கிறேன் கேள். பொதுவாக உலகில் ஆசாரியர்களைப் பணிந்து, அவர்களைப் பின்தொடர்வதுதான் மரபு. ஆனால் நாங்களோ, அறிவற்ற பசுக்களுக்குப் பின்னால் காடுகளுக்குச் செல்கிறோம். ஞானமற்றவனைச் சாத்திரம் 'மனித உருவில் இருக்கும் பசு' (நரபசு) என்று சொல்லும். அப்படிப்பட்ட அறிவற்ற பசுக்களின் பின்னால் நாங்கள் போகிறோம்! அந்தப் பசுக்களே எங்களைப் பார்த்துச் சிரிக்கும்படியான அறிவற்ற நிலையில் இருப்பவர்கள் நாங்கள்! இதுதான் எங்கள் லட்சணம்!"

கண்ணன்: "சரி பெண்களே! இந்தப் பசுக்களை ஓட்டிக்கொண்டு வரும் வழியில் ஏதாவது கோயில், குளம் என்று இருந்திருக்க வேண்டுமே?”

புல்லகலிகா: "பசுக்களுக்குப் புல் கிடைக்கும் இடமே எங்களுக்குத் திவ்யதேசம். நீ எதிர்பார்க்கும் தகுதியான எந்தப் புண்ணிய தேசத்திலும் மழைக்குக்கூட நாங்கள் ஒதுங்கியது கிடையாது. பசுக்களுடன் நாங்கள் காடுகளுக்குச் சென்றோம், அவ்வளவுதான்."

கண்ணன்: "ஓ! அப்போது தண்டகாரண்யம், நைமிசாரண்யம் போன்ற காடுகளுக்குச் சென்றீர்களோ? காட்டில் வசிப்பது 'வாநப்ரஸ்தம்' (துறவு) போன்றது அல்லவா? உடலை வருத்திச் செய்யும் தர்மம் உங்களிடம் தெரிகிறதே?"

பத்மா: "அங்கேதான் நீ தப்பு கணக்கு போடுகிறாய் கோவிந்தா! காட்டில் முனிவர்கள் ஆசைகளைத் துறந்து, மோட்சத்திற்காகத் தவம் புரிந்து வாழ்ந்தார்கள். நாங்களோ அங்கே போனது உடல் வளர்ப்பதற்காக மட்டும்தான். அந்தப் பசுக்களை எதற்குப் பராமரிக்கிறோம்? அதுகள் போலவே கேவலமாகச் சாப்பிட்டுத் திரிவதைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது."

கண்ணன்: "பசுக்களைப் பராமரிப்பது உயர்ந்த வைசிய தர்மம் ஆகுமே!"

ஆண்டாள்: "கோவிந்தா! இங்கேயும் நீ மீண்டும் தப்பு செய்கிறாய்! நாங்கள் எருதுகளையோ, கறவாத மாடுகளையோ மேய்க்கவில்லை. அப்படி மேய்த்தால் அது 'வைசிய தர்மம்' என்று சொல்லலாம். நாங்கள் எங்களுக்காகப் பால் கறந்து குடிக்க வேண்டும் என்பதற்காகவே 'கறவைப் பசுக்கள்' எங்கு எல்லாம் போகிறதோ அதன் பின்னால் அலைகிறோம். இது சுயநலம் மிகுந்த செயல்; தர்மம் அல்ல!"

கண்ணன்: "சரி கோதை! கானகம் சென்று என்னதான் செய்வீர்கள்?"

ஆண்டாள்: "வேறு என்ன செய்வோம்? கறவைகள் பின் செல்வோம், பசிக்கும், உணவு உண்போம்!"

கண்ணன்: "பசித்தால் சாப்பிட வேண்டியதுதான். நியமத்தோடு இருப்பவர்கள் கூட பசித்தால் சாப்பிட்டு தானே ஆக வேண்டும்!"

சுகந்தா: "எங்களுக்கு ஒரு நியமமும் தெரியாது கோவிந்தா! 'குளித்துவிட்டு உண்' என்பார்கள்; நாங்கள் குளிக்காமல் உண்போம். 'கிழக்கே பார்த்து அமர்ந்து உண்' என்பார்கள்; பசுக்கள் எங்கே நிற்கிறதோ அங்கே நின்று உண்போம். 'அதிதிகளுக்குக் கொடுத்து உண்' என்பார்கள்; நாங்கள் மட்டும் தின்போம். பசுக்கள் நடந்தால் நடந்துகொண்டே உண்போம், நின்றால் நின்றபடி உண்போம். பழைய சோறு, எச்சில் சோறு, மயிர் விழுந்த சோறு, புழுத்த சோறு என்றெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை; எது கிடைத்தாலும் உண்போம். வயிற்றை நிரப்புவதே எங்கள் கர்ம யோகம்!"

கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! சரி, நீங்கள் கர்ம யோகம் செய்யவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் முற்பிறவிகளில் நீங்கள் செய்த புண்ணியத்தால் இப்போது 'ஞான யோகத்தில்' சிறந்தவர்களாக இருக்கலாம் அல்லவா? இறைச்சி விற்ற 'தர்மவியாதன்' மிகப்பெரிய ஞானியாக இருந்தான். காட்டில் வாழ்ந்த விதுரனும், ஜடபரதனும் ஞானிகளாக இருந்தார்களே! உங்களைப் போன்ற பெண்களான மைத்ரேயி, சபரி போன்றோரும் சிறந்த ஞானிகளாக இருந்திருக்கிறார்களே! நீங்களும் அப்படி ஏதாவது...?"

ஆண்டாள்: "கோவிந்தா! அந்தப் பேச்சிற்கே இடமில்லை! நாங்கள் சொன்னதில் உனக்கு என்ன சந்தேகம்? நாங்கள் 'அறிவொன்றும் இல்லாதவர்கள்'. ஞான யோகம் இருப்பதற்கு முதலில் அடிப்படை அறிவு வேண்டுமே! இடது கை எது, வலது கை எது என்று கூடத் தெரியாத எங்களுக்கு 'ஞான யோகத்திற்கும்' சம்பந்தமே இல்லை."

கண்ணன்: "கோதை! பெரியோர்களான நம்மாழ்வாரும் தங்களை 'நோற்ற நோன்பிலேன்' என்றெல்லாம் தாழ்மையாகச் சொல்லிக்கொண்டார்களே? ஒருவேளை நீங்களும் அவர்களைப் போலத்தான் சொல்லுகிறீர்களோ? 'எங்களுக்கு அறிவு இல்லை' என்று சொல்லுவதற்கே அறிவு வேண்டுமே!"

ஆண்டாள்: "கோவிந்தா! உனக்கு இன்னுமா புரியவில்லை? அங்கேதான் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் மிகுந்த அறிவுடையவர்கள், பக்தியில் திளைத்தவர்கள்; ஆனால் உன்னுடைய மேன்மையைப் பார்த்தவுடன், தங்கள் அறிவை ஒரு பொருட்டாக நினைக்காமல் தங்களைத் தாழ்த்திச் சொல்லிக்கொண்டார்கள் (நைச்சியாநுசந்தானம்). அது அவர்களுடைய ஆழ்ந்த பக்தியைக் காட்டுகிறது!"

கண்ணன்: "கோதை! என்னை அடைய வேண்டும் என்று நீங்கள் துடித்துக்கொண்டிருக்கிறீர்களே, இந்தத் துடிப்புதானே பக்தி?"

ஆண்டாள்: "கோவிந்தா! ஒரு மீனைத் தண்ணீரிலிருந்து எடுத்து மண்ணில் போட்டால் அது துடிக்கும்; அது இயற்கை, அதனுடைய சொரூபம். ஒருவன் செல்வம் வேண்டி யாகம் செய்கிறான்; செல்வத்தின் மீது உள்ள ஆசையால் அவன் யாகம் செய்கிறான். செல்வம் வேண்டி யாகம் செய்வது 'உபாயம்', ஆனால் செல்வத்தின் மீது அவன் வைத்துள்ள ஆசை 'உபாயம்' ஆகாதே! உன் மீது நாங்கள் வைத்த ஆசை எப்படி உபாயம் ஆகும்? எங்களுக்கு இயற்கையாகவே அறிவு கிடையாது நம்பு!"

கண்ணன்: "ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

ஆண்டாள்: "உனக்குத் தெரியாதா? நாங்கள் 'ஆய்க்குலத்தவர்'. எங்களைப் பார்த்தால் யாருக்காவது 'அறிவு இருக்கும்' என்று சந்தேகம் வருமா?"

கண்ணன்: "இப்போது இல்லை என்றாலும், பிறகு என்றாவது ஒருநாள் ஏற்படலாம் அல்லவா? அப்போது நீங்கள் என்னிடம் வந்து கேளுங்களேன்?"

ஆண்டாள்: "கோவிந்தா! கோவிந்தா! எங்கள் குலத்தைப் பார்த்தால் எப்பொழுதாவது அறிவு உண்டாகும் என்று உனக்குத் தோன்றுகிறதா? நாங்கள் 'ஆய்க்குலம்' என்றாலே 'அறிவில்லாதவர்கள்' என்றுதானே பொருள்! எங்களுக்கு அறிவு இல்லை (ஞான யோகம் இல்லை), அறிவொன்று இல்லை (பக்தி யோகம் இல்லை), அறிவு ஒன்றும் இல்லை (இவற்றுக்குத் தேவையான அடிப்படை அறிவும் இல்லை). அறிவின்மைக்கு அடையாளமாகவே இருக்கும் எங்களிடம் அறிவை எதிர்பார்க்கும் உனக்குத்தான் அறிவு இல்லை!"

கண்ணன்: "எதுவுமே இல்லாத நீங்கள், இயற்கையாகவே அறிவு இல்லாத நீங்கள், உபாயம் செய்ய எந்தத் தகுதியும் இல்லாத, செய்யத் தெரியாத நீங்கள், பலனுக்கு வேண்டிய எந்தப் புண்ணியமும் இல்லையென்றால்... தகுதியே இல்லாத உங்களை நான் கைவிட வேண்டியதுதான்!"

ஹேமலதா: "கோவிந்தா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? வசிஷ்டர், வியாசர், வால்மீகி போன்ற புண்ணியம் செய்தவர்கள் என்றாவது உனக்கு இத்துனூண்டு வெண்ணெய் கொடுத்திருக்கிறார்களா? 'புண்ணியத்திற்கே புண்ணியமானவன்' என்று போற்றப்படும் உனக்கே, பாலும் சோறும் ஊட்டி வளர்க்கும் பாக்கியம் பெற்ற இந்த ஆய்க்குலப் பெண்களுக்குப் புண்ணியம் இல்லை என்று நீ எப்படிச் சொல்லலாம்? உன்னையே நீ பார்த்துக்கொள், எங்கள் பாலும், தயிரும், வெண்ணெய்யும் சாப்பிட்டு எப்படி கொழுத்திருக்கிறாய் என்று!"

புல்லகலிகா: "ஒருவனுக்குத் தான் சம்பாதித்த சொத்து இல்லாவிட்டாலும், அவனது தந்தையின் சொத்து இருக்குமல்லவா? அதுபோல, நாங்கள் தேடிச் செய்த புண்ணியம் இல்லாவிட்டாலும், புண்ணியனான நீ எங்களோடு வந்து பிறந்தாயே... அந்த புண்ணிய சொத்து எங்களிடம் ஏராளமாக இருக்கிறதே!"

ஆண்டாள்: "பகலில் பிறந்து, சூரிய குலத்திற்கே பகல் விளக்காய் உதித்த ராமனைப் போலல்லாமல், இருட்டான ஓர் இரவில், ஆயர்குலத்தில் பிறந்து இங்குள்ள சட்டிப் பானைகளுக்குக்கூட ஒளி தரும் குலவிளக்காய் எங்களைத் தேடி வந்து பிறந்திருக்கிறாய்! உன்னை எங்கள் குலத்தில் பெற்றிருப்பதே நாங்கள் செய்த மகா புண்ணியம் அன்றோ!"

கண்ணன்: "கோதை! ஒரு பக்கம் 'அறிவொன்றுமில்லை' என்கிறீர்கள், மறுபக்கம் 'பெரிய புண்ணியம் உடையோம்' என்றெல்லாம் பேசுகிறீர்கள். முரண்படுகிறதே?"

ஆண்டாள்: "குறைவொன்றுமில்லாத கோவிந்தா! இதுதான் எங்கள் அறியாமையின் லட்சணம்! ஆனால், நாங்கள் அறிவில்லாதவர்களாக இருந்தால் உனக்கென்ன? நீதான் 'குறைவொன்றுமில்லாத கோவிந்தன்' ஆயிற்றே! எங்களின் 'அறிவில்லாமை' என்கிற பள்ளத்தை, உன்னுடைய 'குறைவில்லாமை' மேடாக்கிவிடுமே! உன் பூர்த்திக்கு முன்னால் எங்கள் பூஜ்யம் ஒரு பொருட்டா?"

கண்ணன்: "சரி, நான் பூரணமானவன், நீங்கள் குறை உடையவர்கள். அதனால் நான் உங்களுக்கு உதவ வேண்டும் என்று ஏதாவது சட்டம் உண்டா?"

ஆண்டாள்: "கோவிந்தா! உன் பெருமை ஒரு பக்கம் இருக்கட்டும், நம்மிடையே உள்ள பந்தத்தை உன்னால் பிரிக்க முடியாது, எங்களாலும் பிரிக்க முடியாது. இங்கே சட்டம் வேலைக்காகாது. நீ அப்படிக் கூறி தப்பிக்கவும் முடியாது! இந்த உறவு என்ன தலையில் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி முழுக்குப் போட்டு அறுத்துக்கொள்ளும் உலகத்து உறவு என்று நினைத்தாயா? உனக்கும் எங்களுக்குமான உறவு எங்களாலும் அழிக்க முடியாது, உன்னாலும் முடியாது; நாம் இருவரும் சேர்ந்து முடிவு செய்தாலும் இதை ஒழிக்க முடியாது."

பத்மா: "எங்களுக்கும் உனக்கும் தந்தை-மகன், காப்பவன்-காக்கப்படுபவன், சேஷி-சேஷன் (எஜமான்-அடிமை), கணவன்-மனைவி, ஞானம் அளிப்பவன்-பெறுபவன், உடையவன்-உடைமை, தங்குமிடம்-தங்குபவன், சரீரம்-ஆத்மா, அனுபவிப்பவன்-அனுபவிக்கப்படுபவன் என்ற சம்பந்தம் (உறவுகள்) எல்லாம் இருப்பதை நீ மறந்துவிட்டாயா? இது அநாதிகாலமாக, எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாத உறவன்றோ?"

சுகந்தா: "நீயும் நித்தியமானவன், எங்கள் ஆத்மாவுக்கும் அழிவில்லை. ஆக நீயும் நாங்களும் நித்தியமானவர்கள்; அறிவொன்றுமில்லாத எங்களுக்குக் குறைவொன்றுமில்லாத உறவாயிற்றே!"

கண்ணன்: "என்னை பூர்ணன் என்று சொல்லிவிட்டீர்கள், உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் கொடுக்கிறேன்."

ஆண்டாள்: "கோவிந்தா! இதையெல்லாம் நீ பரமபதத்தில் சுதந்திரனாக இருக்கும்போது வைத்துக்கொள். இங்கே ஆய்ப்பாடிக்கு வந்து எங்களோடு பழகி, எங்கள் கையால் நல்ல வெண்ணெய் வாங்கிச் சாப்பிட்டு, எங்கள் காலைப் பிடித்து நீயாக ஏற்படுத்திக்கொண்ட இந்த 'கோவிந்த' உறவை உன்னால் எப்படி உதற முடியும்? நீயே எங்களுக்குத் தந்தை, தாய், சகோதரன், நண்பன், கணவன் என எல்லாமுமாய் இருக்கிறாய்!"

தனநிஷ்டா: "கோவிந்தா! குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தபோது கோபப்பட்டாயா? மறந்துவிட்டதா?"

கண்ணன்: "அப்படியா? எனக்கு நினைவில்லையே!"

தனநிஷ்டா: "நீ கோவர்தனத்தைத் தூக்கிப் பிடித்து எங்களைக் காத்த பொழுது, 'இந்தச் சிறுவனால் எப்படி இதைச் செய்ய முடிந்தது? இவன் யக்ஷனோ, தேவனோ?' என்று ஊரார் சந்தேகப்பட்டனர். அப்போது உனக்கு ஒரு பொய்க் கோபம் வந்ததே, அது எங்களுக்குத் தெரியாதா? அந்தக் கோபத்திற்குக் காரணம், நீ ஆயர்குலத்தில் ஒருவனாகப் பிறந்து அவர்களுள் ஒருவனாய் பழகிப் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் உன்னை அந்நியப்படுத்தி உயர்ந்தவனாகப் பேசியதால்தானே உனக்கு அந்தக் கோபம் வந்தது!"

சொர்ணலேகா: "அப்போது நீ சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது! 'இடையர்களே! என்னை உங்கள் உறவினன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருக்கிறதா? ஏன் என்னை உங்களிடமிருந்து பிரித்துப் பார்க்கிறீர்கள்? நான் உங்களில் ஒருவன்' என்றாயே!"

கண்ணன்: "ஆயர் சிறுமியர்களே! நன்றாக வாய்கிழியப் பேசுகிறீர்கள்! என்னை உங்களில் ஒருவன், 'குறைவொன்றும் இல்லாத கோவிந்தன்', 'கூடாரை வெல்லும் கோவிந்தன்' என்று எனக்குப் பெருமை தரும் பெயர்களைச் சொல்லி கூப்பிடத் தெரிந்த உங்களுக்கு, முன்பு என்னை என்ன சொல்லி அழைத்தீர்கள்?"

ஆண்டாள்: "நாராயணன்!"

கண்ணன்: "கோதை! 'நாராயணன்' என்று ஒரு முறைக்கு மூன்று முறை! அதற்கு பிறகு ‘பரமன்’, ஊழிமுதல்வன்’ ’பற்பநாபன்’, ‘தேவாதிதேவன்’ பரத்துவத்தை சொல்லும் தகாத பெயரைச் சொல்லி என்னை அழைத்து, என் மேன்மையை நினைவூட்டி என்னை மீண்டும் அந்நியப்படுத்தியது தகுமா? அதை நினைத்தால் எனக்குக் கோபமாக வருகிறது!"

ஆண்டாள்: "குறையொன்றும் இல்லாத கோவிந்தா! அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அல்லவா? என் தந்தை பட்டர்பிரான் 'தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன்' என்று சொல்லியிருக்கிறாரே!

உன்மேல் அளவு கடந்த அன்பினால், பித்து பிடித்து அப்படிப் பிதற்றினோம் அந்தப் பிதற்றலை நீ பெரிய குற்றமாக எடுத்துக்கொள்ளலாமா? உன் உள்ளத்தைப் புண்படுத்தும் நோக்கம் அல்ல அது; அன்பின் உரிமையால், அன்பின் மிகுதியால் உன்னை அப்படிச் சிறுபேர் சொல்லி அழைத்துவிட்டோம்.

அன்று அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசித்து விஸ்வரூபத்தைக் காட்டியபோது அவன் பயந்து, இவ்வளவு நாள் உன்னை எளியவன் என்று நினைத்ததற்கு மன்னிப்புக் கேட்டான். அதுபோல இன்று நாங்கள் உன்னை எளியவன் என்று சொல்லாமல், உன் மேன்மையை கூறினோம்.

குறையொன்றும் இல்லாத கோவிந்தா! அறிவொன்றும் இல்லாத இந்தச் சிறுபிள்ளைகள் உன்னைச் சிறுபேர் சொல்லி அழைத்ததை நீ சீற்றம் கொள்ளாமல் பொறுத்தருள வேண்டும்!"

கண்ணன்: "சரி கோதை! நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டேன். எதைக் கொடுக்க வேண்டும் என்று நப்பின்னையிடம் கேட்டால், அவள் 'அவர்கள் கேட்பதை ஆராய்ந்து நீயே கொடு' என்று என்னிடமே விட்டுவிட்டாள்!"

ஆண்டாள்: "கோவிந்தா! நப்பின்னைப் பிராட்டி ஒரு அடியவனுக்காக உன்னிடம் பரிந்துரை செய்யும் தன் கடமையைச் செய்துவிட்டாள். இனி பலன் தர வேண்டியது உனது பொறுப்பு. நீ எங்களுக்குப் பறை தருவது எங்களுக்குச் செய்யும் உபகாரம் மட்டுமல்ல, உன்னுடைய சேஷித்துவத்தை (எஜமானத் தன்மையை) நீயே நிலைநிறுத்திக்கொள்ள ஒரு உனக்கு ஒரு வாய்ப்பு. அதனால் நீ, நாங்கள் கேட்கும் அந்தப் பறையைத் தந்தருள வேண்டும்!"

சிற்றம்.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
12.1.2025
பிகு: எழுத்தாளர் சுஜாதா என் திருமணத்துக்கு வந்த போது, ‘எனக்கும் தேசிகனுக்கும் உள்ள உறவு ஆண்டாள் கூறுவதைப் போல ஒழிக்க ஒழியாத உறவு’ என்றார். இந்தப் பாசுரம் சேவிக்கும் போது இது என் நினவில் வரும்.

Comments