Skip to main content

ஆண்டாளும் தோழிகளும் - அன்று இவ்வுலகம் அளந்தாய் - (பாசுரம் 24)

ஆண்டாளும் தோழிகளும் - அன்று இவ்வுலகம் அளந்தாய் - (பாசுரம் 24)




(சூழல்: ஆண்டாளும் தோழிகளும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கண்ணன் தன் பள்ளியறையிலிருந்து சிங்கம் போல் கம்பீரமாக நான்கு வகை நடைகளையும் நடந்து வந்து, நப்பின்னையுடன் அந்தச் சீரிய சிங்காசனத்தில் அமர்கிறான். கண்ணன் சிங்காசனத்தில் ஒரு காலை மடக்கியும், ஒரு காலைத் தொங்கப் போட்டும் அமர்ந்திருக்கும் அந்த அழகைக் கண்டு ஆண்டாளும் தோழிகளும் மெய்மறந்து நிற்கிறார்கள்.)

ஆண்டாள்: "கண்ணா! இந்த ஆயர் சிறுமியர்கள் கேட்டார்கள் என்று நீ நடந்து வந்தாயே!"

கண்ணன்: "அன்று பாரதப் போரில், இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டு போய் நிறுத்து என்று அர்ஜுனன் ஒருவன் சொன்ன போது நான் நிறுத்தினேன். இன்று, அன்புமிக்க ஐந்து லட்சம் ஆயர் சிறுமியர்கள் இவ்வளவு தூரம் வந்து அன்பாகக் கேட்கும்போது, நான் எப்படித் தட்ட முடியும்?"

(ஆண்டாளும், தோழிகளும் ஒவ்வொருவராகச் சென்று கண்ணன் திருவடிகளைத் தொட்டு வணங்குகிறார்கள். பெரியாழ்வார் பெற்றெடுத்த ஆண்டாள், தோழிகளை எல்லாம் முன்னே அனுப்பிவிட்டு, தான் கடைசியாகப் போகிறாள். கண்ணன் திருவடியைத் தொட்டுச் சேவித்துவிட்டுப் பார்க்கும் போது, கண்ணனின் மென்மையான பாதங்கள் சிவந்து போயிருக்கின்றன.)

ஆண்டாள்: "கண்ணா! உன் பிஞ்சுத் திருவடி இப்படிச் சிவந்து போயிருக்கிறதே!"

நப்பின்னை: "பள்ளியறையிலிருந்து நடந்து வந்ததால் சிவந்திருக்கும் கோதை. அழகிற்கு எல்லையான பெரிய பிராட்டியாரும், பொறுமைக்கு இலக்கணமான பூமிப் பிராட்டியாரும் கூட, மலரைக் கையாள்வது போல மிகவும் மென்மையாக வருடிப் பிடிக்கும் திருவடிகள் அன்றோ இவை! அவை தரையில் பட்டால் நோகாதா?"

[அன்று இவ் உலகம் அளந்தாய்! அடி போற்றி!]

ஆண்டாள்: "ஐயோ! நாங்கள் என்ன காரியம் செய்தோம்! உன்னை இப்படி நடக்க வைத்துவிட்டோமே! கண்ணா! இன்று நான்கு அடி நடந்து வந்ததற்கே உன் திருவடி இப்படிக் கனிந்துவிட்டதே! அன்று நீ உன் மெல்லடிகளைக் கொண்டு வெவ்விய காடு மேடெல்லாம் நடந்தாயே! அன்று மகாபலியிடமிருந்து நீ பூமியை மீட்டது போல, இன்று உன் நடையழகைக் காட்டி எங்களைப் பிரிவுத் துயரிலிருந்து மீட்டுக் கொண்டாய்!

புல்லகலிகா: “கண்ணா! நாங்கள் கேட்டுக் கொண்டவுடனேயே, உன் மென்மையான திருவடிகளை நோகச் செய்து நடந்து வந்தாயே, அந்த அருளை எண்ணி உன் திருவடிகளுக்கு 'பல்லாண்டு' பாடுகிறோம். அன்று உலகளந்த போது நீ வைத்தது இரண்டு அடிகள்; இன்று எங்களைக் காண நீ எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் அந்த உலகளந்த அடிகளாகவே நாங்கள் கருதுகிறோம். உன் திருவடிகளுக்கு பல்லாண்டு!"

(ஆண்டாள் கண்ணனின் திருவடிகளை வருடித் தர, ஒவ்வொரு தோழியும் கண்ணனின் ஒவ்வொரு வீரச் செயலை நினைத்துப் போற்றிப் பாடுகிறார்கள்.)

[சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி!]

விசாகா: "கண்ணா! அன்று வாமனனாக நீ மகாபலியிடம் மூவடி நிலம் வேண்டி நடந்து சென்றாயே, அந்த எளிமையான அழகை நினைக்கும்போதே எங்கள் நெஞ்சம் உருகுகிறது. ஆனால், உன் அழகைக் கண்டு உருகத் தெரியாத கொடிய மனம் படைத்த அரக்கர்களை அழிக்க நீ தென்னிலங்கை வரை நடந்து சென்றாயே!

ராவணனின் அந்த இலங்கை, பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அது ஒரு குளவிக்கூடு போலக் கொடுமையானவர்கள் நிறைந்த இடமல்லவா? அங்கே புகுந்து உனது அடியவர்களின் எதிரிகளை நீ வேரறுத்தாயே... உன்னுடைய அந்த வீரம் எப்போதும் அழியாமல் இருக்கட்டும்... உன் வலிமைக்குப் பல்லாண்டு!."

விசாகா: "புலி பதுங்கி இருக்கும் புதருக்குள்ளேயே துணிச்சலாகச் சென்று அதைத் தட்டி எழுப்பிக் கொல்லும் வீரனைப் போல, பிராட்டியைப் பிரித்த அந்தக் கொடிய ராவணன் இருக்கும் இடத்திற்கே நீ தேடிச் சென்றாயே! நடந்து போகும் வழியெங்கும் கரன், தூஷணன், விராதன் என்று எத்தனை அரக்கர்கள்? அவர்களை எல்லாம் அழித்த உன் ஆற்றல் நிலைத்திருக்கப் பல்லாண்டு!"

ஆண்டாள்: "கற்கள் நிறைந்த காடுகளிலே, உன் மென்மையான தாமரைத் திருவடிகள் குருதி வழியும்படி நீ நடந்து சென்றதை நினைக்கும்போது எங்கள் வயிறு எரிகிறது! 'என் ராமனே, அந்தக் காட்டில் எப்படித்தான் நடந்தாயோ?' என்று உன் தந்தை தசரதச் சக்கரவர்த்தி அன்று புலம்பியதைப்போல, இன்று உன் திருவடிகளைக் கண்டு நாங்கள் துடிக்கிறோம். இப்படி உன் வருத்தத்தைக் கண்டு நோவதுதான் எங்கள் குலத்திற்கு என் தந்தை பட்டர்பிரான் ஊட்டிய பக்தி!"

[பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!]

சுகந்தா: "கண்ணா! ராவணனைப் போல நேருக்கு நேர் பகைவனாக வராமல், நீ சின்னக் குழந்தையாக இருந்த போது, ஒரு வண்டி (சகடம்) போல வடிவெடுத்து மறைமுகமாக உன்னைக் கொல்ல வந்தானே அந்தச் சகடாசுரன்! அந்த 'கள்ளச் சகடத்தை' நீ முன்னதாகவே அறிந்து அழித்தாயே, அந்த உன் சமயோசித புத்திக்கு இன்று பல்லாண்டு பாடுகிறோம்!."

[கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!]

சொர்ணலேகா: "அன்று ராமன் மாரீசனையும் சூர்ப்பணகையையும் குற்றுயிராக விட்டுப் பின்னால் அவர்கள் மீண்டும் தொல்லை தர வழிவகுத்தது போலச் செய்யாமல், பசியினால் நீ உதைத்த அந்தச் சின்னஞ்சிறு திருவடிகளுக்கு இரையாகிப் போனான் அந்த அரக்கன். இந்தச் சகடாசுரனை மீண்டும் எழ முடியாதபடி உடல் சிதைந்து உருமாறும்படி உதைத்து அழித்தாய். ஐயோ! உன் திருவடிகளில் இந்தச் சகடத்தை உதைத்த தழும்புகள் அழியாமல் இருக்கின்றனவே! ஒரு சிறு பிள்ளையாக உன்னை நீயே காத்துக்கொண்டாயே, அந்தத் தனிப்பெரும் புகழுக்குப் பல்லாண்டு!"

ஹேமலதா: "கண்ணா! உனது மழலை வயதில் நீ செய்த அந்தச் செயலை ஏதோ தெரியாமல் செய்த விளையாட்டு என்று விட்டுவிடலாம். ஆனால், விவரம் தெரிந்த பருவத்தில் நீ அன்று செய்த இந்தச் செயல்களை நினைத்தால் இன்றும் எங்களுக்குப் பதறுகிறது.

சுலோச்சனா: ”அன்று ஒரு அரக்கன் கன்றாக (வத்ஸாசுரன்) வந்தான், இன்னொருவன் விளாமரமாக (கபித்தாசுரன்) நின்றான். முள்ளைக் கொண்டு முள்ளைக் களைவது போல, ஒரு பகைவனையே கருவியாகக் கொண்டு இன்னொரு பகைவனை வீழ்த்தினாயே! கன்றாய் வந்தவனைச் சுழற்றி, விளாமரமாய் நின்றவன் மேல் எறிந்தாயே! அதை என்னவென்று சொல்லுவது!

ஹேமலதா: ”ஓர் அசுரனைக் கொண்டு இன்னொருவனை எறிந்தபோது, அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து உன் மேல் விழுந்திருந்தால் உனக்கு என்ன ஆகியிருக்கும்? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது கண்ணா! உன் தாய் யசோதை கூட, 'என் பிள்ளைக்குத் தீங்கு செய்பவர்கள் அழிந்து போவார்கள்' என்று உனக்குத் திருஷ்டி கழிப்பாரே, அதே கவலையோடு தான் நாங்கள் உன் வீரக்கழல் அணிந்த திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுகிறோம்... ."

ஆண்டாள்: ”கன்றாய் நின்ற வத்ஸாசுரனை எறிதடியாகக்கொண்டு வீசி எறியும் போது மடக்கி நின்ற உன் கழல் அணிந்த திருவடி என்ன அழகு, அதற்கு பல்லாண்டு! ”

(இதைக் கேட்ட ஆண்டாளின் தோழி, வேகமாக ஓடிச் சென்று பள்ளியறையிலிருந்து கண்ணனின் திருவடி நிலைகளை தன் தலையில் வைத்துக்கொண்டு ஓடி வருகிறாள். அதை ஆண்டாளிடம் கொடுக்கிறாள்).

ஆண்டாள்: "கண்ணா! அந்தக் கழல் அணிந்த திருவடிக்கு இந்தத் திருவடி நிலைகளை அணிந்துகொள். பாதுகாதேவியே உனக்குப் பாதுகாப்பு!" (என்று ஆண்டாள் அந்தத் திருவடி நிலைகளைக் கண்ணனின் திருவடிகளில் சாத்தி விடுகிறாள்).

[குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!]

தனநிஷ்டா: "கண்ணா! இவர்கள் எல்லாம் உனக்கு விரோதிகள். ஆனால் அன்று இந்திரனுக்காக நீ உன் திருவடியைத் தூக்கி அளந்தாய். ஆனால் கூட இருந்தே குழிபறிப்பவன் போல், அன்று உனக்கு வேண்டியவனாக இருந்த இதே இந்திரன் தான், பிறகு உன் மேல் கோபம் கொண்டு ஏழு நாட்கள் விடாமல் மழையைப் பொழிந்தான். அசுரர்களோ தேவர்களோ, உனக்குச் சொந்தமான பொருளைத் தங்களுடையது என்று நினைக்கும்போது இருவருமே ஒன்றுதான்."

பூர்ணா: "ஆனாலும், அந்த இந்திரன் செய்த தீமைக்காக நீ அவனை அழித்திருக்க முடியும்; ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை. 'அவனுக்கு கொடுக்க வேண்டிய உணவை நாம் தடுத்தோம், அதனால் இப்போது அவன் உயிரை எடுப்பது தர்மம் அல்ல; அவன் கை சோர்ந்து தானாகவே அடங்குவான்' என்று நினைத்து, மழையிலிருந்து எங்களைக் காக்க அந்த கோவர்த்தன மலையையே குடையாகப் பிடித்தாயே! அடியவர் மீதான அந்தப் பெரும் கருணை குணத்துக்குப் பல்லாண்டு! ."

[வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!]

புல்லகலிகா: "கண்ணா! பகைவர்களை வென்று அழிக்கும் உன் கையில் இருக்கும் அந்த வேல் இருக்கிறதே... அதற்குப் பல்லாண்டு! உண்மையில், இந்த வேலை நீ எதிரிகள் மீது ஏவவே வேண்டாம். உன் திருக்கைகளால் அதை நீ பிடித்திருக்கும் அந்தப் பிடியைப் பார்த்தாலே, உன்னை விரும்பாதவர்கள் நிலைகுலைந்து அழிந்து போவார்கள்."

ஆண்டாள்: "அடி போற்றி', 'திறல் போற்றி', 'புகழ் போற்றி', 'கழல் போற்றி', 'குணம் போற்றி' என்கிறோம். இவ்வளவு போற்றி என்று உனக்குப் பல்லாண்டு பாடினோம். இதைக் கண்டே உனக்குத் திருஷ்டி பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறோம். அதனால்தான் உன்னை நேரடியாகப் புகழாமல், என் தந்தை பட்டர்பிரான் ‘அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்று பாடியது போல, உன் கையில் இருக்கும் வேலுக்கும் பல்லாண்டு பாடுகிறோம்!"

கண்ணன்: "கோதை! என் உள்ளம் குளிர்ந்தது. உங்களுக்கு என்ன வேண்டும்?"

[என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*]

ஆண்டாள்: "என் தந்தை பட்டர்பிரான் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்று தொடங்கி ‘சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே’ என்று முடித்தார் அன்றோ! அது போல, உன் திருவடிக்கு ஒரு போற்றி, உன் வீரத்திற்கு ஒரு போற்றி, உன் கீர்த்திக்கு ஒரு போற்றி, நீ அசுரர்களை அழித்த கால்களுக்கு ஒரு போற்றி, உன் கருணைக்கு ஒரு போற்றி, உன் கையில் உள்ள வேலுக்கு ஒரு போற்றி... என இந்த ஆறு 'போற்றிகளும்' எங்கள் நாவிற்கு நீ இட்ட அறுசுவை விருந்தல்லவா? இதை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதைக் காட்டிலும் எங்களுக்கு வேறு என்ன பயன் வேண்டும்?"

கண்ணன்: "சரி கோதை! இவ்வளவு நேரம் என்னைப் புகழ்ந்தாயிற்று. எதற்கு இங்கே வந்தீர்கள்? அதைச் சொல்லவில்லையே?"

[இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்]

ஆண்டாள்: "கண்ணா! இதோ பார், நாங்கள் உன்னைத் தேடி 'இன்று' வந்திருக்கிறோம் . இந்த 'இன்று' எங்களுக்கு எவ்வளவு விசேஷமானது தெரியுமா? நேற்று வரை இந்த ஊரார் எங்களைத் தடுத்தார்கள், எங்களால் வர முடியவில்லை. நாளை அவர்கள் எங்களை விடுவார்களோ மாட்டார்களோ தெரியாது. ஆனால் 'இன்று' ஊரே இசைந்து எங்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறது.

அதைவிட முக்கியமாக, காலங்காலமாக உனக்கு அடிபணிய மறுத்த எங்கள் மனம் மாறி, உன்னையே தஞ்சமெனக் கொண்ட 'இசைவு' பிறந்திருக்கும் நன்னாள் இன்று! நீ நிம்மதியாக உறங்க, உன்னை நினைத்து நாங்கள் உறங்காமல் தவித்த இந்த 'இன்று', நீ எங்களுக்கு நோன்புக்கு வேண்டிய பறையைப் பெற்றுக்கொள்ள நாங்கள் வந்திருக்கிறோம்! நீ எங்களைப் பார்த்து மனமிரங்கி கருணை காட்ட வேண்டும்!"

ஒருத்தி.. தொடரும்..
-சுஜாதா தேசிகன்
8.1.2026

Comments